Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (19.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "நான் மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை" என்று டிரம்ப் பேசி இருக்கிறார். காரணம் டிரம்பின் திமிரா பெருந்தன்மையா?


பதில்:
பித்துக்குளித்தனம்.

 

 

 

2. கேள்வி: தந்தையிடம் அரசியல் கற்கும் நிலையில் ஸ்டாலின் எப்படி இருந்தார், உதயநிதி எப்படி இருக்கிறார்?


பதில்: ஸ்டாலினிடம் இருந்தது அடக்கம். உதயநிதியுடன் இருப்பது ஆட்டம். இரண்டிற்கும் முக்கிய காரணம், மகன் மீதான தந்தையின் பிடி முன்னே பின்னே இருப்பது.

 

 

 

3. கேள்வி: சுந்தர் பிச்சைக்கும் ஶ்ரீதர் வேம்புவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?


பதில்:
தான் அமெரிக்கர்களுக்கு நிகர் என்று முக்கியமாக அமெரிக்கர்களிடம் நிரூபித்தவர் சுந்தர் பிச்சை. தான் அமெரிக்கர்களுக்கு நிகர் என்று முக்கியமாக இந்தியர்களிடம் காண்பிப்பவர் ஶ்ரீதர் வேம்பு.

 

 

 

4. கேள்வி: மக்களிடம் பிரதமர் மோடி பேசும் வானொலி நிகழ்ச்சியின் பெயர், 'மனதின் குரல்'. சில எதிர்க் கட்சித் தலைவர்கள் தங்கள் பாணியில் அவ்வாறு உரையாற்றினால் அதற்கு நீங்கள் என்ன பெயர் தருவீர்கள்?

 
பதில்:
ராகுல் காந்தி: மனதின் கடுப்பு.

 

மன்மோகன் சிங்: என் குரலில் சோனியாஜி மனது.

 

மு.க. ஸ்டாலின்: திராவிட மாடல் மனது.

 

கமல் ஹாசன்: மனதின் மனதில் மனதோ மனது.

 

 

 

5. கேள்வி: "சமத்துவத்தை உண்டாக்க அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கினோம்" என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். சரியா?


பதில்:
அவர் இன்னும் ஒரு படி மேலே செல்லலாம். அனைத்து ஜாதியினரையும் ஒவ்வொருவராக வருடா வருடம் தனது கட்சியின் தலைவராக்கி, இன்னும் சிலரை ஆறு ஆறு மாதங்களுக்குத் தனது ஆட்சியில் துணை முதலமைச்சராகவும் ஆக்கினால் சமத்துவம் உயர்ந்த நிலையைச் சென்றடையுமே!

 

 

 

6. கேள்வி: "திமுக-வை கண்மூடித்தனமாக எதிர்க்கும் பிராமணர்களை நான் எதிர்க்கிறேன்" என்று நடிகர் எஸ். வி.சேகர் சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: திமுக-வை கண்மூடித்தனமாக  ஆதரிக்கும் ஒருவர் தன்னை மறைக்கப் பார்க்கிறார்.

 

 

 

7. கேள்வி: "சுதந்திரமாக,  விஞ்ஞான ரீதியாக, சிந்திப்பது என்ற எண்ணமே இந்தியாவில் பெரிதாக எதிர்க்கப்படுகிறது" என்று சிலி நாட்டிற்குச் சென்ற ராகுல் காந்தி, மாணவர்கள் மத்தியில் மோடி அரசைக் குற்றம் சாட்டிப் பேசி இருக்கிறாரே?

 

பதில்: ராகுல் காந்தியிடம் சிந்தனா சக்தி குறைவு. அந்த உண்மையைத் திசை திருப்ப, 'மக்கள் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு மோடி அரசு முட்டுக்கட்டை போடுகிறது' என்று ஆரம்பித்து, தனது சிந்தனைக் குறைவுக்கான பழியை மோடி மீது தள்ளிவிடப் பார்க்கிறார் ராகுல் காந்தி. கில்லாடி!

 

 

பகுதி 3 // 19 .10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment