|
கேள்வி-பதில் |
|
1.
கேள்வி: "தடைகளை உடைக்கும் துணிவைப்
பெண்களுக்குக் கொடுத்தது திமுக அரசு" என்று திமுக-வின் துணைப் பொதுச்
செயலர் கனிமொழி பெருமை பேசி இருக்கிறாரே? பதில்:
மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வை திமுக ஏன் இன்னும் எதிர்க்கிறது?
திமுக துணிவு கொடுத்தும், தமிழக மாணவ
மாணவிகளால் உடைக்க முடியாத தடையா நீட் தேர்வு? வருடா
வருடம் நீட் தேர்வில் அவர்கள் ஜெயித்தும் வருகிறார்களே? வீண் தம்பட்டம், ஓட்டை லாஜிக் வைத்துள்ள ஒரு அமைப்புக்கு நீட் தேர்வினால் வருமான
இழப்பும் ஏற்பட்டால், அது எப்போது எப்படிப் பிதற்றும்
என்று சொல்ல முடியாது. |
|
2.
கேள்வி: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்
பொருட்கள் புழக்கத்தில் இல்லை என்று தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறை
அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகிறாரே? பதில்:
சாதாரண மனிதர்கள்
அநேகமாக கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பார்த்திருக்க மாட்டார்கள், அதன் பக்கம் போக
மாட்டார்கள், என்பதால் அமைச்சர் தாராளமாகப் புளுகுகிறார். போலீஸ் துறையை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இப்படி
நினைக்கலாம்: 'மா. சுப்பிரமணியன்
பாணியில், தமிழகத்தில் அரிவாள் கத்தி புழக்கமே இல்லை என்று
என்னால் ஒரே போடாகப் போட முடியவில்லை! அப்படிச் சொல்ல முடிந்தால், தமிழகத்தில் வெட்டுக் குத்து கொலைகள் நடக்கவில்லை, தமிழகம் அமைதிப் பூங்கா என்றாகி எனக்கு நல்ல பெயர் கிடைக்குமே!' |
|
3.
கேள்வி: டாக்டர் ராமதாஸ் தரப்பில் கூட்டிய பாமக
பொதுக்குழுவில் பேசிய அவர், "நான் என் மகன் அன்புமணியைச் சரியாக வளர்க்கவில்லை" என்று சொல்லிக்
கண்ணீர் விட்டார். பிறகு அவர் மகள் ஶ்ரீகாந்தி, தன் தம்பி
அன்புமணியை ஒருமையிலும், வாடா போடா என்றும், மைக்கில் பேசிக் கேள்வி கேட்டிருக்கிறாரே? பதில்:
டாக்டர் ராமதாஸின் உடல், மனது,
இரண்டும் நலமாக இல்லை, பலமாக இல்லை. "என் தந்தை
ஒதுங்க மறுக்கிறார். அவருக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக நான்
அவர் பக்கத்தில் இருக்கிறேன்"
என்று அவர் மகள் ஶ்ரீகாந்தி சொன்னால் அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் மேடையிலிருந்து அநாகரிகப் பேச்சை ஶ்ரீகாந்தி - ஒரு பெண்ணாக, அதுவும் ஒரு சகோதரியாக - பேச நியாயம் இல்லை, அவசியமும்
இல்லை. அவர் ஒரு கௌரவப் பெண்மணியாக இருந்தும், தறிகெட்ட
திராவிட மாடல் அரசியலின் தாக்கம் அவரை விட்டுவைக்க வில்லை. |
|
4.
கேள்வி: பாதாள சாக்கடைக்காக வெட்டப்பட்டு, 5 அடி ஆழம் நீர் நிறைந்து
பாதுகாப்பில்லாமல் விடப் பட்ட ஒரு குழியில் விழுந்து மரணம் அடைந்த சிறுவனின்
குடும்பத்திற்கு நாமக்கல் மாநகராட்சி 20 லட்ச ரூபாய் நிவாரணம் அளித்திருக்கிறதே? பதில்:
நாமக்கல் மாநகராட்சி, திமுக-வின் வசம்
உள்ளது. பொதுவாக, மனித உயிர் விலைமதிப்பற்றது. பொதுவாக,
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது அரசு அலட்சியத்தை எதிர்க்க
நினைக்கும் பொதுமக்களின் ஓட்டுகளும் விலைமதிப்பற்றவை. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு. |
|
5.
கேள்வி: தன் தோல்வி வெளிப்பட்டாலும் அதை ஒப்புக்
கொள்ளாமல் ஒருவர் ஏதோ பேசிச் சமாளித்தால், அவர் "குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலை" என்று
பேசுவதாகச் சொல்கிறோம். விழுகிறவர் பெண்ணாக இருந்தால் அவர் எப்படிப் பேசிச்
சமாளிப்பார்? பதில்:
"குப்புற விழுந்தாலும் கூந்தல் கலையலை!" |
|
பகுதி 33 // 02.01.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment