|
கேள்வி-பதில் |
|
1.
கேள்வி: 2026 திமுக தேர்தல் அறிக்கையில்
வாக்குறுதிகளைச் சேர்க்கும் நோக்கில், பொதுமக்களின் நேரடி கருத்துகளைப் பெற முதல்வர் ஸ்டாலின் ஒரு மொபைல் போன்
செயலியை அறிமுகம் செய்திருக்கிறாரே? பதில்: போதிய
உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை மக்களுக்குச்
சாத்தியமாக்குவது அரசின் கடமை. இதில் கால் பகுதி கூட நிறைவேறாமல் நமது அப்பாவி
மக்கள், வழி தவறிய குழந்தைகள் மாதிரி நடுரோட்டில்
நிற்கிறார்கள். அப்போது, பிள்ளை பிடிக்கும் ஒருவர்
அவர்களிடையே வந்து புதிதாக ஒரு கிளுகிளுப்பையை ஆட்டுகிறார் - அதுதான் ஸ்டாலின்
அறிமுகப் படுத்தும் மொபைல் போன் செயலி. |
|
2.
கேள்வி: "தமிழகத்தில் ஏதாவது பணி
செய்யவேண்டும் என்றால் 'முதலில் 20 சதவீதம்
கமிஷன் கொடுங்கள்' என்கிறார்கள்" என்று மத்திய
உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வந்து பேசி இருக்கிறாரே? பதில்: தமிழகத்தில் கமிஷன் வாங்கப்படுகிறது
என்பது, பகுதி
உண்மை. அதைக் குறிப்பிட்டு, கமிஷன் சதவீதம் எவ்வளவு
என்பதையும் அமித் ஷா சொல்லியிருக்கிறார். அந்தக் கமிஷன் சதவீதத்தை யார்
நிர்ணயித்துக் கறாராக வசூல் நடைபெறச் செய்கிறார் என்பது, இன்னொரு
பகுதி உண்மை. அமித் ஷா அதைச் சொல்லவில்லை. அது அனைவரும் அறிந்த உண்மை. |
|
3.
கேள்வி: எண்ணை வளம் மிக்க வெனிசுலா நாட்டைத்
தாக்கி அந்நாட்டு அதிபரைக் கைது செய்து அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து, அவர்மீது அமெரிக்க நீதிமன்றத்தில்
போதைப் பொருள் கடத்தல் வழக்கை அமெரிக்கா நடத்தும் என்கிறார் டிரம்ப். இது சரியா? பதில்: வெனிசுலாவின்
எண்ணை வளத்தை அபகரிக்க அராஜகம் செய்கிறார் டிரம்ப். 'இன்னொரு நாடு எங்கள் நாட்டுக்குள் போதைப் பொருட்களைக் கடத்துகிறது'
என்ற சாக்கில், உலகில் வேறு எந்த நாடும்
அமெரிக்கா போல மற்றொரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க முடியாது. முன்பு டிரம்பே
வெட்கமில்லாமல் கேட்டாலும், அமைதிக்கான
நோபல் பரிசை அவருக்கு வழங்காமல் தனது மானம் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டது
நோபல் கமிட்டி. |
|
4.
கேள்வி: 20 லட்சம் அரசு கல்லூரி மாணவ
மாணவியருக்குத் தமிழக அரசு இலவச லேப்டாப் தரும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்
தொடங்கி வைத்திருக்கிறார். இது பயன் தருமா? பதில்: பொதுவாகத் தமிழக அரசுக்
கல்லூரிகளில் மேன்மையான ஆசிரியர்களோ, மாநிலத்தில் சிறந்த கல்விச் சூழலோ இல்லை.
நமது கல்லூரி மாணவர்களின் கல்வி ஆர்வமும் அதை ஒட்டி இருக்கிறது. ஆகையால் இலவச
லேப்டாப்கள் பெறுகின்ற மாணவர்களில் 1 சதவீதம் பேருக்கு மட்டும் அதில் கல்விப்
பயன் கிடைக்கலாம். மீதி 99 சதவீத மாணவர்களுக்கும் இன்றோ நாளையோ ஓட்டு உள்ளதால்,
இலவச லேப்டாப் திட்டத்தை எந்தக் கட்சியும் எதிர்க்க முடியாது.
செலவுக்கேற்ற பயனில்லாமல் நாம் மேலும் வரி அழவேண்டும். அரசு லேப்டாப்கள் தங்களுக்கு 20 லட்சம் ஓட்டுகளைக் கொண்டு
வரும் என்று திமுக எதிர்பார்க்கும். அதுவும் 1 சதவீதம் நிறைவேறலாம். |
|
5.
கேள்வி: கையெழுத்து, தலையெழுத்து. இரண்டிற்கும் ஒற்றுமை,
வேற்றுமை என்ன? பதில்: ஒற்றுமை:
இரண்டையும் புரிந்துகொள்வது கடினம். வேற்றுமை: நீங்கள் உங்களின் பெயரை
மாற்றிவைத்துக் கையெழுத்தை எப்படியும் மாற்றலாம். தலையெழுத்திடம் அந்தப் பாச்சா
பலிக்காது. |
|
பகுதி 35 // 06.01.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment