|
கேள்வி-பதில் |
|
1.
கேள்வி: "என்னை எதிர்ப்பவர்கள் எல்லோரும்
என் எதிரிகள் அல்ல. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்தான் என் எதிரி. அந்த வகையில்
தம்பி விஜய் என் எதிரி அல்ல" என்று தவெக குறித்து சீமான் பேசியிருக்கிறாரே? பதில்: இது
ஜோராகக் காதில் ஒலிக்கிறது. ஆனால் வெத்துப் பேச்சு. 2026 தேர்தலின் போது, ஒரே தொகுதியில் நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக வேட்பாளர்கள்
போட்டியிட்டால், அங்கு பிரசாரம் செய்யும் நா.த.க வேட்பாளரோ,
சீமானோ தவெக-வை எதிர்த்து, விஜய்யை
எதிர்த்து, மூச்சே விடமாட்டார்களா? |
|
2.
கேள்வி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில்
கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற அப்பீல் கோர்ட் உத்தரவு
பிறப்பித்த உடன், "முதலில் சட்டத்தை
மீறி நீதி மன்றத்தை அவமானப்படுத்தியது போலீஸ் கமிஷனரும் கலெக்டரும்தான். குறைந்த
பட்சம் இருவரும் மன்னிப்பாவது கேட்கவேண்டும்" என்று பாஜக-வின் எச். ராஜா
சொல்லி இருக்கிறாரே? பதில்: தமிழக அரசின் பல உயர் அதிகாரிகளை
பொம்மலாட்ட பொம்மைகளாக ஆட்டுவிக்கிறது குரூர திராவிட மாடல் அரசு. அதற்கு ஏற்ப, அந்த அதிகாரிகள்
தனி நீதிபதியின் முந்தைய உத்தரவை மதிக்காமல், தீபத் தூணில்
தீபம் ஏற்றத் தடை செய்தனர். பொம்மைகள் தானாக மன்னிப்புக் கேட்பதை பொம்மலாட்டக்காரன்
எப்படி அனுமதிப்பான்? கோர்ட் அவமதிப்பு வழக்கை சந்திக்கையில், தங்கள் பொம்மை உத்தியோகம் நிலைக்க அந்த பொம்மைகள் மன்னிப்புக்
கேட்டால்தான் உண்டு. அப்போது பொம்மைகள் மீது நீதிபதி கருணை காட்டுவாரா என்று
இப்போது தெரியாது. |
|
3.
கேள்வி: "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று மதிமுக
சார்பில் தப்பித் தவறி ஒரு சொல் கூடப் பேசியது கிடையாது. நேற்று வரையிலும்
இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை; இனியும் வைக்க
மாட்டோம்" என்று திமுக-விடம் தனது கட்சியின் எதிர்பார்ப்பு குறித்து வைகோ
பேசி இருக்கிறாரே? பதில்: பாஜக
தலைவர் அமித் ஷா, 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம்' என்று சொல்கிறார். அந்தக் கூட்டணிக்குத் தமிழகத்தில் தலைமை தாங்கும்
அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்தில் அதிமுக
தனித்து ஆட்சி அமைக்கும்' என்று கூறுகிறார். அதாவது,
பாஜக-வை ஆட்சியில் சேர்க்கமாட்டோம் என்கிறார் எடப்பாடி. அந்த
மனிதரை 'பாஜக-வின் அடிமை' என்று
சொல்லி வருகிறார் ஸ்டாலின். வைகோ இப்போது
பேசியதைப் பார்த்தால், ஸ்டாலின்
அகங்காரத்துடன் வழங்கும் அடிமைப் பட்டத்திற்குத் தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி
அல்ல, அது மற்றொருவர். |
|
4.
கேள்வி: "சுடுகாடு இருக்கும் இடத்தில்தான்
பிணத்தை எரிப்பார்கள். வேறு எந்த இடத்திலும் பிணத்தை எரிக்க மாட்டார்கள்.
அதுபோல், திருப்பரங்குன்றத்தில்
தீபம் ஏற்றும் இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும். புதிய இடமான தீபத்தூணில் தீபம்
ஏற்றுவதை அனுமதிக்க முடியாது" என்று அமைச்சர் ரகுபதி பேசி இருக்கிறாரே? பதில்: ஒரு மதிப்பான இடத்தில் தகுதியான
மனிதர் இருந்தால்தான் அவரது பேச்சும் செயலும் அவர் இடத்திற்குப் பொருத்தமாக
இருக்கும். சுடுகாட்டு வெட்டியானை சங்கீத வித்வான் மேடையில் அமர்த்தினால்
அபஸ்வரம் அதிகமாகக் கேட்கும். |
|
5.
கேள்வி: நாயின் குழந்தை நாய்க் குட்டி, பூனையின் குழந்தை பூனைக் குட்டி,
ஆட்டின் குழந்தை ஆட்டுக் குட்டி. ஆனால் மாட்டின் குழந்தை மாட்டுக்
குட்டி இல்லை, கன்றுக் குட்டி. ஏன் இந்த வேறுபாடு? பதில்: இதை
ஆராய வேண்டாம். இது பெரிய விஷயமில்லை. குட்டி விஷயம்! |
|
பகுதி 36 // 09.01.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment