Friday, 30 January 2026

கேள்வி-பதில் (30.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-வினர் எப்போதும் இஸ்லாமியர்கள் பக்கம் நிற்பவர்கள்" என்று கும்பகோணத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: 'திமுக இன்னார் பக்கம் நிற்காது' என்று ஸ்டாலின் ஒருபகுதி மக்களை நினைத்து சூசகமாக இப்படிச் சொல்கிறார். அந்த மற்ற மக்களிடம், 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற மாதிரி திமுக சொல்வது: "நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரியல்ல".

 

நீங்கள் ஒருவரின் எதிரி என்றால் அவரை அடித்து உதைத்துதான் நீங்கள் அவருடைய எதிரி என்று காண்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரிடம் பாராமுகமாக இருப்பது, அவருக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்காமல் இருப்பது (ஆனால் பிறருக்கு, விழுந்து விழுந்து வழங்குவது), அவர் வணங்கும் கடவுளை மட்டும் நிராகரிப்பது, நிந்திப்பது, கேலி பேசுவது, அவர் வழிபடும் தெய்வங்களைப் பழித்தவரைப் போற்றுவது, அவருக்கு வாழ்த்து சொல்லவேண்டிய நாட்களில் மவுனம் காப்பது, என்று பல திராவிட மாடல் வழிகளில் நீங்கள் யாருக்கு எதிரி என்பதைக் காட்டலாம்.

 

 

2. கேள்வி: கும்பகோணத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக-தான் சிறுபான்மை இன மக்களைக் காக்கக் கூடிய காவல் அரண்" என்று பேசி இருக்கிறார். அதற்கு என்ன பொருள்?

 

பதில்: யாரிடமிருந்து தமிழக சிறுபான்மையின மக்கள் காக்கப்பட வேண்டியவர்கள் என்று முதல்வர் சொல்ல வருகிறார்? பெரும்பான்மை மக்களிடம் இருந்தா? அந்த அர்த்தம் அவர் பேச்சில் கணிசமாக உள்ளடங்கி இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை ஹிந்துக்களிடம் இருந்து தாங்கள் காக்கப்பட வேண்டும் என்று தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் சிறுபான்மை மக்களே நினைப்பதில்லை.

 

நமது நாட்டில் சிறுபான்மையான முஸ்லிம் மக்கள், பாகிஸ்தானில் அசுரப் பெரும்பான்மை (96-97 சதவிகிதம்). இந்தியாவில் சமாதானத்தை விரும்பும் அனைத்து ஹிந்துக்களும், அரசின் போலீசாரும், முஸ்லிம்களைக் காப்பது போல் பாகிஸ்தானில் சாதாரண முஸ்லிம்களுக்கே பாதுகாப்பு இல்லை. அந்த நாட்டில் மெஜாரிட்டி சமூக மக்களின் வாழ்க்கையைக் காக்க பாகிஸ்தான் தலைவர்கள் முனைவதில்லை. தமிழகத்தில் மெஜாரிட்டி சமூக மக்களின் உணர்வுகளை மதிக்க ஸ்டாலின் முனைவதில்லை.

 

 

3. கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்ப் மாதிரி வினோதமான தலைவர் வேறு ஒருவர் உண்டா?

 

பதில்: ஜெயலலிதாவின் ஆணவ-அதிகார மனப்பான்மை, ராகுல் காந்தியின் பித்துக்குளிப் பேச்சு, சீமானின் அடாவடி அணுகுமுறை, இவை மூன்றும் கலந்து செய்த கலவை, டிரம்ப். அவ்வப்போது அவற்றில் எது அதிகம் தலைதூக்குகிறதோ அதன்படி அவர் பேசுவார், நடந்துகொள்வார்.

 

 

4. கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இவர்களில் யார் மற்ற அனைவரையும் விடச் சிறந்த தலைவர், ஏன்?

 

பதில்: மோடி.

 

தனது நாட்டை நிர்வகிக்கும் தலைவரை அபாண்டமாக, கேவலமாக விமர்சித்து, சர்வதேச அளவில் தனது நாட்டின் செல்வாக்கு சரிந்து அதன் மூலமாகவும் அந்தத் தலைவர் மதிப்பிழக்கட்டும் என்று கீழ்த்தரமாகச் செயல்படும் உள்நாட்டு எதிர்க்கட்சிகள் இந்தியாவில் உண்டு, மற்ற நான்கு நாடுகளில் இல்லை. அப்படியும் நிர்வாகத்தில் ஜெயிக்கும் கில்லி, பிரதமர் மோடி. அதோடு, அந்த நான்கு நாடுகளின் தலைவர்களும் வியக்கும் உலகத் தலைவர், மோடி. பித்துக்குளி டிரம்ப் உதார்ப் பேச்சு பேசுவது வேறு விஷயம் ("நான் மோடியின் அரசியல் வாழ்வை நாசம் செய்ய விரும்பவில்லை").

 

 

5. கேள்வி: "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்" என்று மகாகவி பாரதி அன்று பாடினார். இன்றைக்கு வளமான இந்தியாவை எண்ணி எப்படிப் பாடலாம்?

 

பதில்: 'பாரத தேசம்' பாடலில் வளமான பாரதம் உருவாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் பாரதி. இருந்தாலும், ராஜதந்திரம் மிக்க அரசியல் தலைமை தேவைப்படும் இன்றைய இந்தியாவில், தற்போதைய ஏஐ காலத்தில், நாம் இந்த வரிகளை எண்ணிப் பார்க்கலாம்.

 

ஏஐ கற்போம் பொருள் சேவைகள் விற்போம்;

 

தேவை தீர நாம் பெரும் வேலைகள் செய்வோம்;

 

செம்புலத்து நீர்போல் வாழ்வில் எம்-மோடி-ருக்கும் சக்தி போற்றி.

 

பகுதி 45 // 30.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment