-- ஆர்.
வி. ஆர்
எழுத்தாளர்
பாலகுமாரன் ஒரு சமயம் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேயிடம் ஒரு கட்டுரை
எழுதித்தரக் கேட்டார். பாலகுமாரனே தன்னிடம் கேட்டது, தனக்கு
எவ்வளவு உத்வேகம் தந்தது என்று பாண்டே ஒரு மேடையில் சொல்கிறார். அதுபோல் எனக்கும்
ஒரு உத்வேகம் அளித்தவர், 'துக்ளக்' ஆசிரியர்
சோ. அது நிகழ்ந்தது 1988 வாக்கில் - அப்போது துக்ளக், மாதம்
இருமுறை.
அன்றைய
ரங்கராஜ் பாண்டே அளவு கூட நான் அறியப்படாத நாளில், நான்
எழுதிய சில அரசியல் கட்டுரைகளைத் துக்ளக்கிற்காக அந்தப் பத்திரிகையின்
அலுவலகத்தில் கொடுத்திருந்தேன். அவற்றைப் படித்த சோ, அடுத்த
முறை இன்னொரு கட்டுரையுடன் நான் துக்ளக் அலுவலகம் சென்றபோது என்னை மேலே வரச்
சொன்னார். எதற்கு என்ற ஆவலுடன் படியேறி அவர் அறைக்குச் சென்ற என்னிடம், என் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன, ஆனால்
துக்ளக்கில் பக்கங்கள் இல்லை என்று அவர் சொன்னார். என் எழுத்தைப் பற்றிய
நல்வார்த்தையை அவரிடம் நேர்முகமாகக் கேட்டபோது, உற்சாகத்தில்
சடாரென்று என் நாற்காலியில் நான் காற்றாகிப் போனேன். அப்போது சோ இன்னும் ஒருபடி
மேலே போய், "So please excuse me" என்றும் சொல்லி
என்னை உருக்கி என் எழுத்தின் மீது எனக்கிருந்த நம்பிக்கையைக் காலத்திற்கும் கெட்டிப் படுத்தினார்.
எனது
ஒரு கட்டுரையைச் சோ துக்ளக்கில் பிரசுரித்துவிட்டு, என்னைக்
கூப்பிட்டுப் பேச அவசியம் இல்லை என்று நினைத்திருந்தால் ('அதான்
ஒரு கட்டுரை போட்டாயிற்றே! எல்லாக் கட்டுரைகளையும் போட முடியுமா?') எனக்கு அவரிடமிருந்து ஒரு வாழ்நாள் டானிக் கிடைத்திருக்காது. அது
மட்டுமல்ல. ஒரு எழுத்தாளனின் பெருந்தன்மையையும் அன்று எனக்கு தரிசனம்
செய்துவைத்தார் சோ.
15.01.2026
No comments:
Post a Comment