Sunday, 18 January 2026

கேள்வி-பதில் (18.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: வேறு சில இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்குத் தமிழக அரசு சார்பில் தேசிய அளவிலான விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரே?

 

பதில்: இது திராவிட மாடல் ஆட்சியின் இயல்புக்கு மாறான எதிர்பாராத அறிவிப்பு. ஆனால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உரம் சேர்க்கக் கூடியது, வரவேற்கத் தக்கது. சரி, இந்தியாவின் மற்ற மாநில மொழிகளில் சிறந்த புத்தகங்களைத் தேடிப் பரிசளிக்க அரசுக்கு மனம் இருக்கும்போது, அந்த மொழிகளில் மாணவர்கள் விரும்பும் ஒன்றைப் பள்ளியில் ஒரு பாடமாக அவர்கள் பயில உதவும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஸ்டாலின் அரசு எதிர்க்க வேண்டும்? அந்த எதிர்ப்பு திமுக-வுக்கு உளமானதா, அல்லது இந்த அறிவிப்பு அக்கட்சிக்கு உளமானதா?

 

 

2. கேள்வி: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு வாக்குறுதியாக, 'குலவிளக்கு திட்டம்' என்று ஒன்றை அதிமுக அறிவித்து, அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பப் தலைவியின் வங்கிக் கணக்கிலும் அரசு மாதம் 2,000 ரூபாய் செலுத்தும் என்று அந்தக் கட்சி சொல்லி இருக்கிறதே?

 

பதில்: அரசியல் கட்சிகள்  நடத்தும் இலவசக் கூத்து எங்கு போய் முடியுமோ? அதிமுக-வுக்குப் போட்டியாக இன்னொரு கட்சி, 'குல இரட்டை விளக்கு திட்டம்' என்று ஒன்றை அறிவித்து, அதன் கீழ் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் அகல் விளக்குத் தொகை ரூபாய் 2,000, குடும்பத் தலைவனுக்கு லாந்தர் விளக்குத் தொகை ரூபாய் 2,000 - ஆக மொத்தம் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூபாய் 4,000 - என்று ஒரு தேர்தல் வாக்குறுதி அளிக்க நினைக்கலாம். அரசு இலவசங்களில் நியாயமானவை சொற்பம், நியாயமற்றவை அதிகம்.

 

 

3. கேள்வி: "கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசின் சார்பில் இடம் வாங்கி வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் கட்டி இலவசமாக வழங்கப்படும்" என்று அதிமுக ஒரு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியை இப்போது அளித்திருக்கிறதே?

 

பதில்: "மக்கள் வேலை செய்து தங்கள் சம்பாத்தியத்தில் வீடு வாங்கும்படி செய்ய, மாநிலத்தில் தொழில்வளத்தைப் பெருக்கவேண்டும், வேலைவாய்பைக் கூட்டவேண்டும். தமிழகத்தில் இரண்டையும் செய்ய எங்களுக்குத் திராணி இல்லை. எங்களால் முடிவது, திமுக-வை மிஞ்சி அரசு கஜானாவை அதிவிரைவில் ஓட்டாண்டி ஆக்குவோம்" என நேரடியாகச் சொல்லக் கூச்சப் படுகிறது அதிமுக.

 

 

4. கேள்வி: ராணுவத்தை அனுப்பியாவது கிரீன்லேண்டைக் கைப்பற்றி அமெரிக்காவோடு இணைக்கத் துடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பைத் தடுக்க வழியே இல்லையா?

 

பதில்: இருக்கிறது. டிரம்ப் ராணுவ நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்து, கிரீன்லேண்ட் இணைப்புத் திட்டத்தையும் கைவிட்டால், டிரம்ப் தொடங்கவிருந்த போரை அவரே நிறுத்தியவர் என்ற பெருமை அவரைச் சேரும், அது அவர் தடுத்து நிறுத்தும் 9-வது போராகும், ஆகையால் அவருக்கு அமைதிக்கான 2026ம் வருட நோபல் பரிசு அளிக்கப்படும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் கிரீன்லேண்ட் தப்பிக்கலாம்.

 


5. கேள்வி: சிலர் பார்த்தும் பார்க்காதது போல் இருப்பதாக, அல்லது கேட்டும் கேட்காதது போல் இருப்பதாக, வழக்கில் சொல்கிறோம். யாரும் பேசியும் பேசாதது போல் இருப்பதாக நாம் வழக்கில் சொல்வதில்லையே?

 

பதில்: நாம் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அது உண்டு. பலதைப் பேசியும் பேசாதது போல் இருப்பது அரசியல். பேசியது என்னவென்றால்: (1) தேர்தல் வாக்குறுதிகள்; (2) முன்பு எதிரிக் கட்சியில் இருந்தபோது, தற்போது தஞ்சம் அடைந்துள்ள கட்சியின் தலைவரை நார்  நாராகக் கிழித்தது.


பகுதி 40 // 18.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

 

 

 


No comments:

Post a Comment