|
கேள்வி-பதில் |
|
1.
கேள்வி: இந்தியா வந்த அமீரக அதிபருக்கு, பிரதமர் மோடி ஒரு குஜராத் ஊஞ்சலைப்
பரிசாக அளித்திருக்கிறார். நமது பிரதமர், லோக்சபா எதிர்க்
கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஏதாவது பரிசு தர நினைத்தால் என்ன பொருளைத்
தரலாம்? பதில்:
தொட்டில். |
|
2.
கேள்வி: புதுச்சேரியில் மாதாமாதம் குடும்பத்
தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் உதவித் தொகை ஆயிரத்திலிருந்து, இரண்டாயிரத்து ஐநூறாக உயர்த்தப்
படுவதாக அம்மாநில முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருக்கிறாரே? பதில்:
தேர்தலுக்கு
முன்பாக அரசியல் தலைவர்கள் பலரும் இப்படி 2,000, 3,000
என்று வரப்போகும் அரசின் சார்பில் பண விநியோகத்தை அறிவிப்பது, ஓடியாடும் விளையாட்டில் ஸ்கோர் எடுப்பது மாதிரி. இந்த ஸ்கோர்களை
முன்கூட்டியே அறிவிப்பது மட்டும் இந்தத் தலைவர்கள் செய்வது. இவர்களில் ஒருவரின்
கட்சி, தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால் அப்போதைய
நோஞ்சான் அரசு அந்தத் தலைவருக்காக வேர்க்க விறுவிறுக்க நாக்குத் தள்ள ஓடி அவர்
அறிவித்த ஸ்கோரை எட்ட வேண்டும். அதில் அந்த நோஞ்சான் நிலைகுலைந்து
உட்கார்ந்தாலும் உட்கார்ந்ததுதான். தலைவர் நலுங்காமல் குலுங்காமல் தனது வருமானத்தைப்
பெறுவார். ஆட்சியில் அமர்ந்திருக்கும் தீய கட்சியை அகற்றி நல்லாட்சி தர
விரும்பும் வேறொரு கட்சியும் இந்த நோயை ஏற்று, முள்ளை
முள்ளால் எடுக்கவேண்டி இருக்கிறது. ஆட்சிக்கு வரும் கட்சி சிறப்பாக நிர்வாகம்
செய்து அதன் தலைவர்கள் பணம் சேர்க்காமல் இருந்தால் மற்றது சரி என்று போகவேண்டிய
காலம் இது. |
|
3.
கேள்வி: "கர்நாடகா, தெலுங்கானா, கேரளா
மாநிலங்களைப் போல், தமிழகத்தில் ஏன் காங்கிரஸை
வளர்க்கவில்லை?" என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம்
ராகுல் காந்தி கேள்வி கேட்க, அவர்கள் பதில்
அளிக்கமுடியாமல் திணறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது, என்று
தினமலர் பத்திரிகை சொல்கிறதே? பதில்:
இந்தச் செய்தி நூற்றுக்கு நூறு நம்பகத் தன்மை கொண்டதா என்று
நமக்குத் தெரியாது. ஆனால் ராகுல் காந்தியின் நிலையில், இப்படி அசட்டுத்தனமாகக் கேள்வி கேட்கக் கூடியவர் அவர். 2013-க்குப் பிறகு, டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கோட்டை விட்டுக் கொண்டே
வருகிறதே, 2014-லிருந்து லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ்
கேவலமாகத் தோற்கிறதே, என்று கேட்டால் ராகுல் காந்தி
திணறாமல் பதில் சொல்வாரா? 'ஓட்டுத் திருட்டு' பதிலைக் கேட்டால் காங்கிரஸ் தலைமையக பியூன் கூடச் சிரிப்பான். இந்திரா காந்தி
குடும்பத்துக்குச் சலாம் போட்டுப் பொழுதுபோக்கும் மாநில நிர்வாகிகள் தான்
பெரும்பாலும் காங்கிரஸுக்குக் கிடைப்பார்கள். |
|
4.
கேள்வி: "நான் எட்டுக்கும் மேற்பட்ட
போர்களை நிறுத்தியதற்காக உங்கள் நாடு எனக்கு
அமைதிக்கான நோபல் பரிசைத் தரவில்லை. எனவே,
இனி அமைதி பற்றி மட்டுமே நான் சிந்திக்கத் தேவையில்லை" என்று
அமெரிக்க அதிபர் டிரம்ப், நார்வே நாட்டுப் பிரதமருக்கு
அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாரே? பதில்:
உலகில் அமைதிக்காக
அதிபர் டிரம்ப் அதிகப் பங்களிப்பு செய்தவர் என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்
கொள்வோம். இருந்தாலும், அவர் தன் கடிதத்தில் எழுதிய சொற்களின் ஆணவத்தை,
கிறுக்குத்தனத்தை, இவ்விதம்
புரிந்துகொள்ளலாம். ஒரு கர்நாடக இசைப் பாடகர் அவருடைய துறை சார்ந்த உயர்ந்த விருதை
எதிர்பார்க்கிறார், ஆனால் அது அவருக்கு வழங்கப்படவில்லை என்றால்,
அந்தப் பாடகர் "எனக்கு அந்த விருது கிடைக்காதபோது, இனிமேல் நான் அபஸ்வரமாகவும் பாடுவேன்" என்று அறிவிக்கலாமா? |
|
5.
கேள்வி: புலி வாலைப் பிடித்தவன் கதை என்பது என்ன? பதில்: எலி வாலைக் கூட, எலி செத்த
பின்புதான் பிடிக்க முடியும். புலி வாலை ஒருவன் பிடித்தால் அவன் கதை அந்த நொடியே
முடிந்தது. பிறகு ஏது கதை அவனுக்கு? |
|
பகுதி 41 // 20.01.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment