|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: சீமான், விஜய், எடப்பாடி
பழனிசாமி, ஸ்டாலின், அண்ணாமலை - இந்த
ஐவர் இன்று மேடையில் நின்று அரசியல் பேசுவதற்கு உறுதுணையாக இருப்பது என்ன?
பதில்: சீமான், தொண்டைத் தண்ணி; விஜய், நடிப்புப்
பயிற்சி; ஸ்டாலின், மக்கள் மறதி;
எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் சிறைவாசம்;
அண்ணாமலை, அறச் சீற்றம். |
|
2. கேள்வி: "உங்க கனவை சொல்லுங்க" என்று தமிழக அரசு சார்பில் பொதுமக்களிடம்
கேட்கப்படுகிறது. உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்? பதில்: உணவு, உடை மற்றும்
இருப்பிடம் என் வருமானத்தில் கிடைப்பதற்கான வேலை வாய்ப்பு; அதோடு தரமான சாலைகள், பஸ் வசதி, சுத்தமான குடிநீர், சிறந்த அரசுப் பள்ளிகள்
மற்றும் அரசு மருத்துவ சேவைகள் - இவை அனைத்தும் மக்களுக்குக் கிடைக்கும் வகையில்,
வீடு வீடாகச் சென்று சர்வே எடுக்காமல், தன்
பொறுப்பை உணர்ந்து வேலை செய்யும் மாநில அரசு என் கனவு. |
|
3. கேள்வி: தவெக
தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், சென்ஸார் போர்டு சான்றிதழ் தொடர்பான சிக்கலால் திரைக்கு வருவது
தாமதமாகிறது. அதனால் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்து - அதனால் விஜய்
படத்துக்கு ஆதரவாக - குரல் கொடுத்திருக்கிறாரே? பதில்: ஒன்று:
திமுக-வில் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பார்கள், ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். இரண்டு:
திமுக-விற்கு, தவெக மற்றும் பாஜக இரண்டும் எதிரிகள். ஆனால்
தவெக போல் அல்லாமல், பாஜக பழம் தின்று கொட்டை போட்ட கட்சி,
நிலையான கட்சி, லாலு பிரசாத் மற்றும் உத்தவ்
தாக்கரே கட்சிகளை அடக்கியது போல் பாஜக திமுக-வின் பலத்தைக் குறைக்க அரசியல்
நகர்வுகள் செய்ய வல்லது. மூன்று: ஜனநாயகன்
விஷயத்தில் பாஜக-வைத் திமுக ஒரு இடி இடித்தால், திமுக-வில் இருக்கும் பல விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுஜன விஜய்
ஆதரவாளர்கள் பலர், விஜய்க்காகக் குரல் கொடுத்த
திமுக-விற்கு ஓட்டுப் போடலாம் என்பது ஸ்டாலினின் நப்பாசை - அரசியலில் இது இயல்பு. |
|
4. கேள்வி: "எனக்கு நிதி நிலைமை பற்றித் தெரியவில்லை. ஆனால், நான்
முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் மகளிர் உரிமைத் தொகையாக, மாதம் ஆயிரத்துக்குப் பதிலாக 2,000 ரூபாய்
நிச்சயமாகக் கொடுப்பேன்" என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம்
கூறியிருக்கிறாரே? பதில்: அரசின் நிதி நிலைமை பற்றித்
தெரியாவிட்டாலும் அவர் முதல்வராக இருந்தால் மகளிருக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய்
உரிமைத் தொகையாக வழங்குவாரா? கார்த்தியின் உரிமைப் பிதற்றல். |
|
5. கேள்வி: ஆண்களிடம்
பெண்கள் நல்ல பெயர் எடுப்பது கடினமா, பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் எடுப்பது கடினமா? பதில்: இரண்டையும்
விட, ஆண்கள் ஆண்களிடம் நல்ல பெயர் எடுப்பதும்,
பெண்கள் பெண்களிடம் நல்ல பெயர் எடுப்பதும் கடினம். பாம்பின் கால்
பாம்பறியும். |
|
பகுதி 37 // 11.01.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment