Saturday, 17 January 2026

கேள்வி-பதில் (17.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: முந்தைய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பெருமைப்படுத்தும் புதிய திரைப்படம், பராசக்தி. முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து, திமுக தரப்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோகம் செய்திருக்கும் படம். தமிழகத்தில் அதற்கு ஏன் பெரிதாக வரவேற்பில்லை?

 

பதில்: இன்றையத் தமிழ்நாடு, ஹிந்தி எதிர்ப்பை உள்ளூர எதிர்க்கிறது. அன்றைய ஹிந்தி எதிர்ப்பைப் பெருமையாகக் காண்பித்து, இன்றையத் தமிழ் மக்களுக்கும் ஹிந்தி எதிர்ப்பைப் புகட்ட முனையும் படம் பராசக்தி. படத்தின் இந்த அம்சம் முன்கூட்டியே பரப்பப்பட்டு, அது அனைவராலும் உணரப்பட்டது.  அதனால் பெருவாரியான மக்களுக்கும் பராசக்தி முன்கூட்டியே ரசிக்காமல் போய்விட்டது என்று நினைக்கிறேன்.

 

 

2. கேள்வி: ஹிந்துக்கள் சூரியனை வழிபடும் விழா, பொங்கல் திருவிழா. அதற்குச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு, பொங்கல் சமைத்து உண்ணும் விழாவாக மட்டும் அதைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி இருக்கிறார். ஹிந்துக்கள் தொடர்பான வேறு எந்த தினத்தைத் திமுக சமத்துவப் படுத்தலாம்?

 

பதில்: ஹிந்து உணர்வுகளை உதாசீனப்படுத்தி, திமுக எந்த அக்கிரமத்தையும், எந்த அசட்டுத்தனத்தையும், கோணல் சிந்தனையுடன் செய்யும். ஆகையால் இப்போதய திராவிட மாடல் அரசு, சந்திரன் தொடர்பான அமாவாசை தினத்தை "சந்திரன் மறையும் அமாவாசை அனைவருக்கும் பொதுவானது. இனி தமிழகத்தில் அந்த தினம் சமத்துவ அமாவாசை என அழைக்கப்படும்" என்று அறிவித்து, அரிசி கார்டு வைத்திருக்கும் எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அமாவாசைக்கு அமாவாசை இருநூற்றி ஐம்பது ரூபாயை 'அமாவாசை அன்பளிப்பாக' தமிழக அரசு வழங்கும் என்று அறிவித்தால் ஆச்சரியம் இல்லை. சட்டமன்றத் தேர்தலும் வரப் போகிறது.

 

 

3. கேள்வி: வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாதோ, அமைதிக்காகத் தனக்குக் கிடைத்த 2025 நோபல் பரிசுப் பதக்கத்தை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்ட டிரம்ப் "நான் ஆற்றிய பணிக்காக மச்சாதோ அந்தப் பதக்கத்தை என்னிடம் கொடுத்தார்" என்று சொல்லி மச்சாதோவைப் பாராட்டி இருக்கிறாரே?

 

பதில்:  அமைதிக்கான அந்த நோபல் பரிசு அறிவிக்கப்படும் முன், அது தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று குதித்தவர் டிரம்ப். தான் பெற்ற நோபல் பதக்கத்தை இப்போது பித்துக்குளி டிரம்பிடம் மச்சாதோ கொடுத்திருப்பது ஒரு மதியூகமாக இருக்கும். இனி அந்தப் பதக்கத்திற்காக டிரம்ப்பின் ராணுவம் தன்னைக் கைது செய்து நாடுகடத்தி வழக்குப் போட்டுத் தன்னைத் துன்புறுத்தாது என்ற நிம்மதி மச்சாதோவுக்கு   வந்திருக்குமே!

 

 

4. கேள்வி: மஹாராஷ்டிராவில் மொத்தம் 29 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில், 25ஐ பாஜக கூட்டணி கைப்பற்றும் நிலையைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. யாரால், அல்லது எதனால், பாஜக கூட்டணிக்கு இந்த அபார வெற்றி கிடைத்திருக்கிறது?

 

பதில்: மோடியினால், அவர் ஈர்த்த சிறந்த மனிதர்களால்.

 

தூய சிந்தனை கொண்ட பேராற்றல் மிக்க தலைவர், பிரதமர் மோடி. அவர் நாட்டின் பல பகுதிகளில் ஆற்றலும்  அர்பணிப்பும் கொண்ட பிரதேசத் தலைவர்களை ஈர்த்து, தனது உதாரணத்தால் அவர்களுக்கு உத்வேகம் அளித்து, அந்த அந்தப் பிரதேசங்களில் அவர்களின் வளர்ச்சிக்கும் தேர்தல் வெற்றிகளுக்கும் மறைமுக வித்தாக இருக்கிறார். சில பிரதேசங்களில் இந்த நிகழ்வு ஏற்பட நாள் பிடிக்கும்.

 

 

5. கேள்வி: "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்பது பழமொழி. காற்று இருக்கும்போது மட்டும்தான் தூற்ற வேண்டுமா?

 

பதில்: கட்சி மாறினாலும் தூற்றலாம். வெளியேறிய, அல்லது வெளியே அனுப்பிய, கட்சியின்  தலைவரைத் தூற்றினால், புதிதாகச் சேர்ந்த கட்சியின் தலைவர் மகிழ்வார்.

 

பகுதி 39 // 17.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 


No comments:

Post a Comment