Thursday, 15 January 2026

கேள்வி-பதில் (04.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: போதைப் பொருட்களுக்கு எதிராக மதிமுக பொதுச் செயலர் வைகோ மேற்கொள்ளும் நடைப் பயணத்தைத் துவக்கி வைத்த முதல்வர், "பெற்றெடுத்த பிள்ளைகள் போதையின் பாதையில் செல்லாமல் இருக்க, அவர்களைப் பெற்றோர்தான் கண்காணிக்க வேண்டும்" என்று ஒரு தீர்வைச் சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: டாஸ்மாக் கடைகளின் பெயர்ப் பலகைகளில் "மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு" என்று எழுதித் தமிழகத்தில் மது விற்கப் படுகிறது. மதுவிலக்கைக் கொண்டுவந்து டாஸ்மாக் பெயர்ப்பலகை அறிவிக்கும் கேட்டை உடனே நிறுத்த ஸ்டாலினுக்கு மனமில்லை. கஞ்சாவை ஒழிக்க மட்டும் தமிழகப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தினமும் கண்காணிக்க வேண்டுமா?

 

பித்தலாட்டத்தில் வைகோ மற்றும் ஸ்டாலின் ஒருவரை ஒருவர் மிஞ்சி ஆடுகிறார்கள். சபாஷ்! சரியான ஆட்டம்!

 

 

2. கேள்வி: 2026 சட்டமன்றத் தேர்தலுக்காகத் தேர்தல் அறிக்கை தயாரிக்க, ஒரு 12-நபர் குழுவைத் திமுக அமைத்திருக்கிறது. இந்தக் குழு அனைத்து மக்களிடமும் பல வகையில் கருத்து கேட்பதற்கான ஒரு வசதியை ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளாரே?

 

பதில்: குழுவே வேண்டாம். வேலையை எளிதாக்க திமுக இப்படி அறிவிக்கலாம்: "2021 தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிகளில் செயல்படுத்தாமல் விடுபட்டவை நிறைய இருப்பதால், விடுபட்ட அவைகளே திமுகவின் 2026 தேர்தல் வாக்குறுதிகள்."

 

 

3. கேள்வி: "குற்றங்களைத் தடுக்க உங்கள் இரும்புக் கரங்களைப் பயன்படுத்துங்கள். புகார் அளிக்க வருவோரிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்" என்று போலீஸ் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளாரே?

 

பதில்: ஒரு அரசுக்குப் பின்புலம், அதை நடத்தும் கட்சி. அந்தக் கட்சி என்ன எதிர்பார்க்கிறதோ, என்ன சமிக்ஞை தருகிறதோ, அதைப் போலீஸ் துறை நடத்திக் கொடுக்கவேண்டியது நடைமுறைக் கட்டாயம். இல்லாவிட்டால் போலீஸ் அதிகாரிகளின் பாடு திண்டாட்டம். மற்றபடி தமிழக முதல்வர் போலீஸ் அதிகாரிகளை நோக்கிப் பொதுநலனில் அலங்காரமாகப் பேசுகிற வார்த்தைகள் பத்திரிகைச் செய்திக்காக, நமக்காக அல்ல, நாம் நமது கட்டாயங்களுக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும், என்று அந்த அதிகாரிகளுக்குத் தெரியும்.

 

 

4. கேள்வி: "ஒரு சிலரின் சுயநலத்துக்காக, தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது" என்று கரூர் காங்கிரஸ் எம். பி. ஜோதிமணி தனது X தள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளாரே?

 

பதில்: தனது குற்றச்சாட்டைக் கட்சி வழியாகத் தலைவர் ராகுல் காந்தியின் கவனத்திற்குக் கொண்டுசென்றாலும் அவர் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று ஜோதிமணிக்குத் தெரியும். ஆகையால் தனது எண்ணத்தை அவர் பகிரங்கமாக X தளத்தில் வெளியிட்டார். ஜோதிமணியின் செய்கை, ஊரறிய ராகுல் காந்தியின் மானத்தை வாங்குவது போல் இருக்கிறது - ஆனால் அந்த அளவுக்கு ராகுல் காந்திக்குப் புரியாது என்று ஜோதிமணி நினைத்தால் தப்பில்லை.

 


5. கேள்வி: அடிக்கடி சண்டையிடும் இருவரை 'நாயும் பூனையுமாக' இருக்கிறார்கள் என்று சொல்கிறோம். ஆனால் ஒரே வீட்டில் வளரும் நாய்களும் பூனைகளும் ஒன்றுக்கொன்று சிநேகமாக இருக்கின்றனவே?

 

பதில்: நாயும் பூனையும் மனிதர்கள் மாதிரி அல்ல. மனிதர்கள் வேறு ரகம்: வீட்டுக்கு வெளியில் சிநேகமாகத் தெரிவார்கள், வீட்டுக்குள் சண்டையை வைத்துக் கொள்வார்கள்.


பகுதி 34  // 04.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 


No comments:

Post a Comment