Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (29.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: மணல் விற்பனை வாயிலாகத் தமிழக அரசுக்கு 36 கோடி ரூபாய் வருவாய் காட்டப்பட்டுள்ளது, ஆனால் தமிழகக் குவாரிகளில் நடந்த மணல் திருட்டால் மாநில அரசுக்கு 4,730 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி-க்குத் தகவல் அனுப்பி இருக்கிறதே?


பதில்:
'பெரியார் மண்'ணுக்கு மதிப்புத் தராதவர்கள் ஒன்றை உணரவேண்டும். அந்த மண்ணை அவ்விதம் நேசிப்பவர்களுக்கு அதன் மதிப்பு எவ்வளவு என்று தெரியும். அமலாக்கத்துறை கூட முழுக்க அளவிட முடியாதது அது.

 

 

2. கேள்வி: அதிமுக-வில் பல வருடங்கள் முன்னணித் தலைவராக இருந்து, அக்கட்சியின் தற்போதைய தலைமையுடன் முரண்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர் கே. ஏ. செங்கோட்டையன். பின்னர் அவர் தவெக-வில் சேர்ந்து, "வழி தெரியாமல் நின்ற எனக்கு வழி காட்டியவர் விஜய். என் உடலில் ஓடும் ரத்தம் விஜய்க்காகத் தான்" என்று பேசி இருக்கிறாரே?


பதில்:
செங்கோட்டையன், திராவிட அரசியலில் நீண்ட அனுபவசாலி. விஜய்யும் திராவிட வாசனை கொண்ட அரசியல் தலைவர். எப்படிப் பேசினால் விஜய்யின் மனம் குளிரும் என்று சரியாக ஊகித்துப் பேசியிருக்கிறார், செங்கோட்டையன். குனியாமலே தலைவர் காலைத் தொடுவதும் திராவிட அரசியல் கலை.

 

 

3. கேள்வி: மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி, ஶ்ரீநகரில் பத்திரிகையாளர்கள் முன்பு தனது பிரதேச காஷ்மீரி மொழியில் பேசினார். அப்போது ஒரு பத்திரிகையாளர் அவரை உருது மொழியில் பேசச் சொல்ல, "மாநில மொழிக்கு மதிப்புத் தரவேண்டும். என்னைக் கேட்ட மாதிரி தமிழக முதல்வர் ஸ்டாலினை உருது மொழியில் பேசச் சொல்வீர்களா?" என்று கோபமாகக் கேட்டிருக்கிறாரே?


பதில்:
பாவம், விவரம் புரியாதவர் மெஹபூபா முப்தி. பாஜக-வை எதிர்க்கவும் வேறு சுயலாபத்திற்காகவும் குட்டிக்கரணம் அடித்து சிறுபான்மையினரைத் தாஜா செய்து வருகிறார் ஸ்டாலின். மெஹபூபாவின் பேச்சால், இனி ஸ்டாலின் தானாகவே உருதுவில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசித் தமிழகத்தின் ஒரு சிறுபான்மையினரில் உருது பேசுபவர்களைத் தாஜா செய்ய முனையலாம். "தமிழ் வாழ்க! உருது உயர்க!" என்ற கோஷமும் அவரிடமிருந்து வரலாம் காஷ்மீர் மாடல் வேறு, திராவிட மாடல் வேறு.

 

 

4. கேள்வி: தமிழகத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேரத் தேர்வு எழுதியவர்களில் 36 சதவிகிதம் பேர், அதாவது 85,000த்துக்கு அதிகமானோர், தமிழ்ப் பாடத்தில் 40 சதவிகித மார்க் கூட எடுக்காமல் பெயில் ஆகி இருக்கிறார்களே - அவர்களின் தாய்மொழி தமிழாக இருந்தும்?


பதில்:
சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் முறைகேடான ஆட்சிக்கு வித்திட்டு உரமிட்டு வளர்த்த ஒரு கட்சி, இந்த அவலத்திற்குப் பெரும் பொறுப்பேற்க வேண்டும். வன்முறையிலும் வருமானத்திலும் பெரும் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள், மொழிப் பாதுகாப்பிலும் மொழி வளர்ச்சியிலும் அக்கறை காட்ட முடியாது. அவர்களின் ஆட்சி, ஆற்று மணலோடு அடிப்படைத் தமிழறிவையும் மறையச் செய்யும்.

 

 

5. கேள்வி: 'வாய்மையே வெல்லும்' என்ற சொற்கள் தமிழ்நாடு அரசு சின்னத்தின் அங்கம். ஆனால் அரசியல் உலகில் 'வாய் மெய்யை வெல்லும்' என்பது விதி என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள். சரி, 'பொய்மை' யைப் பற்றிய அரசியல் விதி என்ன?

பதில்:
"பொய் மையை வெல்லும்". எப்படியென்றால்:

 

தேர்தலில் ஒரு வாக்காளர் ஓட்டுப் போடுவதின் அடையாளம், ஓட்டுச் சாவடியில் அவர் கைவிரலில் வைக்கப் படும் மை. அந்த மை, தங்களுக்கு ஓட்டளிக்கும் அதிக வாக்காளர்களின் விரல்களில் காணப்படவேண்டும் என்பதற்காக அநேக அரசியல்வாதிகள் கூசாமல் மக்களிடம் பொய் சொல்கிறார்கள், பொய் வாக்குறுதிகள் தருகிறார்கள், நினைத்தபடி தேர்தலில் வெற்றி அடைகிறார்கள். ஆகையால், பொய் மையை வெல்லும்.

 

வாய் மெய்யை வெல்லும்;

பொய் மையை வெல்லும்.

 

பகுதி 32 // 29.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

கேள்வி-பதில் (27.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: தனது ஆட்சிக் காலத்தில் தமிழகம் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்ல வந்த முதல்வர் ஸ்டாலின், "இந்தியாவில் தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா" என்று பேசி இருக்கிறாரே?


பதில்:
ஏதோ வெற்றி வசனம் பேச விரும்பிய முதல்வர், 'காட்டு ராஜா' என்று தன்னை, தனது ஆட்சியை, விவரித்து மகிழ்கிறார். 'தனிக்காட்டு ராஜா' என்ற வார்த்தை, நியாய அநியாயம் பற்றி நினைக்காமல், 'என்னை யார் கேட்பது' என்று தன்னிச்சையாக இயங்கிச் சுயநலம் பேணுவதில் குறியாக இருப்பவரைக் குறிக்கும். இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் தனிமைப் படுத்த ஆசைப்படும் திமுக-வின் போக்கும் இதில் தொனிக்கிறது. அறியாமல் சரியாகப் பேசுகிறார் ஸ்டாலின்.

 

 

 

2. கேள்வி: பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 2024-ல் மாணவர்கள் எழுச்சியால் அந்த நாட்டுக்கு "இரண்டாவது முறை விடுதலை கிடைத்துள்ளது" என்று கூறியிருக்கிறாரே?

பதில்:
பங்களாதேஷ் முதலில் 1971-ஆம் வருடம் பெற்றது, முதல் தர விடுதலை - அடக்குமுறை பாகிஸ்தானிடமிருந்து விடுபட்டதால். இரண்டாவதாக 2024-ல் கிடைத்ததாகச் சொல்லப்படுவது, இரண்டாம் தர விடுதலை - பங்களாதேஷ் தறிகெட்டு இந்தியாவை விரோதிக்கும் மனப்பான்மையுடன் பாகிஸ்தான் பாணிக்கு மாறி வருவதால்.

 

 

 

3. கேள்வி: "நான் பிராமணர்களை எதிர்க்கவேண்டுமெனில், அதற்குக் காரணம் அவர்கள் பிராமணர்களாக இருப்பதற்கு அல்ல; பிராமணத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்ப்பேன்" என்று ஜெயகாந்தன் திருச்சியில் ஒருமுறை பேசியிருக்கிறார். பிராமணர்களைப் பற்றிய இந்த வகைக் கருத்து சரியா?


பதில்:
முன்காலத்தில் பிராமணர்கள் ஹிந்து மதத்தின் முழுநேர ஆன்மீகச் சேனையாக இருந்தார்கள். அரசர்கள் குலம் அந்தச் சேனைக்கு ஆதரவும் பராமரிப்பும் அளித்தது. அதனால் அன்றைய சமூகத்தில் பிராமணர்களின் மதிப்பும் முக்கியத்துவமும் கூடுதலாக உறுதிப் பட்டது. அரசர்கள் நலிந்து ஒழிந்த பின் அந்தச் சேனையும் மெள்ள மெள்ள அப்படி ஆயிற்று.

 

ஆற்காடு இளவரசர் இன்று எப்படிப் பெயரில் மட்டும் இளவரசரோ, அதைப் போல் இன்றைய பிராமணர்கள் பெயரில் மட்டும் பிராமணர்கள். ஆதி நாளில் அவர்கள் பிரதானமாகத் தெய்வ காரியங்களில் ஈடுபட்டு வந்ததால் - அனைத்து வர்ணத்தவரும் தெய்வத்தை வணங்குவதால் - அவர்களின் வழிவந்தவர்களுக்கு ஒரு பெயர் அடையாளம் மட்டும் இன்று நீடிக்கிறது.

 

காலச் சக்கரம் அரசர்களையும் பிராமணர்களையும் - ஏன், நான்கு வர்ணத்தினரையும் - அரைத்து ஒதுக்கிச் சுழல்கிறது. இதில் பிராமணர்கள் மட்டும் பிராமணத்தைத் தானாக இழந்தார்கள் என்று குறை காண இடமில்லை.

 

 

 

4. கேள்வி: "சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான், பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கையில் கூறி இருக்கிறாரே?


பதில்:
'பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் வசிக்கும் மைனாரிடி ஹிந்துக்கள் துன்பத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகிறார்கள், அவர்களின் எண்ணிக்கை அங்கு குறைந்து வருகிறது, அவர்களை அந்த நாடுகளின் பெரும்பான்மையினர் வாட்டுகிறார்கள். இந்தியாவின் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர், இங்கு அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, இந்தியப் பெரும்பான்மையினரின் குணம் போற்றத் தக்கது' என்கிற உண்மை நிலையைச் சூசகமாக அறிவிக்கிறார் ஸ்டாலின். அவர் தைரியத்திற்கு சபாஷ்!

 

 

 

5. கேள்வி: ஒருவர் எச்சில் கையால் காக்கா ஓட்டாதவர் என்றால், அவர் கஞ்சன் என்று அர்த்தமா?

 

பதில்: கருணை மிக்கவர் என்றும் அர்த்தமாகலாம். எச்சில் கையுடன் அவர் கை வீசினால் ஒரு பருக்கை பறந்து காக்கையின் கண்ணில் பட்டால் அதற்குக் கண் வலிக்குமே!

 

 

பகுதி 31 // 27.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (25.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "திமுக கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்றினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்" என்று விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாகப் பேசி இருக்கிறாரே?


பதில்:
கூட்டணியில் தன் கட்சிக்கு அதிக சட்டமன்றத் தொகுதிகள் கிடைக்க அதன் தலைவர் எதிர்பார்ப்பு, வேண்டுகோள், கோரிக்கை, மிரட்டல் என்று தலைமைக் கட்சியை நோக்கி நான்கு வழிகளில் நகரலாம் (சாம, தான, பேத, தண்டம் மாதிரி). அந்த வழிகளை அவர் அதே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாகப் பின்பற்ற அவசியமில்லை. முதல் வழியான எதிர்பார்ப்பில் சிறிது தூரம் சென்றதில் திருமாவளவனுக்குப் பலன் தெரியவில்லை. திடீர் டர்ன் அடித்து நான்காவது வழியான மிரட்டலில் செல்கிறார். பின்னர் வேண்டுகோள் அல்லது கோரிக்கையைத் தனிமையில் முன்வைப்பது நல்ல யுக்தி என்று அவர் நினைக்கலாம்.

 

 

 

2. கேள்வி: ஒரு குடும்பத்தின் கையில் கட்சி, முறைகேடுகள் நிறைந்த ஆட்சி, அமோகச் செழிப்பில் அமைச்சர்கள், பல்லிளிக்கும் சட்டம் ஒழுங்கு. இவை திமுக-வை விட்டுப் பிரியவே பிரியாதா?


பதில்:
பிரியாது. இவை அனைத்திற்கும் ஒரே காரணம், திமுக தலைமையின் சிந்தனையில் ஒன்று மட்டும் துளியும் இல்லை - தேச நலன்.

 

 

 

3. கேள்வி: "இந்தியாவில் சிறுபான்மையினர் அச்ச உணர்வோடு வாழ்கின்றனர்" என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் பேசி இருக்கிறாரே?


பதில்:
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கோர்ட் உத்தரவு இருந்தும் ஹிந்துக்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தமிழக போலீஸ் தடுத்தது. ஆனாலும் அங்கு ஹிந்துக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தவில்லை. அதே மலை மீது முஸ்லிம்கள் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காகப் போலீஸ் துணையுடன் கொடியேற்றம் செய்தபோதும் ஹிந்துக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை செய்யவில்லை. தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஒரு அச்சமும் இல்லை.

 

சிறுபான்மை மக்கள் அச்சமில்லாமல் வாழ்ந்தால் ஸ்டாலினுக்கு அச்ச உணர்வு வருகிறது. பெரும்பான்மை ஹிந்துக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை நிலைநாட்ட ஒன்றுபட்டால் அப்போதும் ஸ்டாலினுக்கு அச்ச உணர்வு வருகிறது. அவரது சுயநல அச்சம் நாட்டுக்கு அச்சா, பஹுத் அச்சா!

 

 

 

4. கேள்வி: "கமல் ஹாசனை நடிகனாக மட்டும் சுருக்கிவிட முடியாது. கமல் உழைப்பை நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி இருக்கிறாரே?

பதில்: கமல் ஹாசன் புதுக் கட்சி ஆரம்பித்த பின் இரண்டு தேர்தல்களில் (2019 லோக் சபா தேர்தல், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்) திமுக-வை எதிர்த்தும் அவர் கட்சி போட்டியிட்டது. ஆனால் எங்கும் ஒரு சீட்கூட அவர் கட்சி ஜெயிக்கவில்லை. பிறகு திமுக-விடம் பவ்யமாக இருந்து வருகிறார்.

 

'இன்றைய கமல் நடிப்பில் மட்டும் பாடமல்ல; அரசியலில் திமுக-வை எதிர்த்து ஒரு நடிகர் எப்படி உழைத்தாலும் அவருக்கு என்ன நேரும் என்பதற்குக் கமலின் அத்தகைய உழைப்பும் அதன் முடிவும் ஒரு பாடம்' என்ற பொருளில் அன்பில் மகேஷ் இன்னொரு நடிகரை எச்சரித்து மகிழ்கிறார். மற்றவர்களுக்கு இதில் ஒன்றுமில்லை.

 

 

 

5. கேள்வி: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 அடி உயரம் வளர்ந்த கஞ்சா செடி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதே?

 

பதில்: காவல்துறைக்கு ஆஸ்பத்திரியில் அதிர்ச்சி வைத்தியம். குணமடையப் பிரார்த்திப்போம்.

 

 

பகுதி 30 // 25.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (23.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: தவெக சார்பில் நடந்த 'சமத்துவ கிறிஸ்துமஸ்' விழாவில் பேசும்போது ஒரு பைபிள் கதையைக் குறிப்பிட்ட விஜய், "ஒரு இளைஞர் தனக்குத் துரோகம் செய்த சகோதரர்களை வென்று தனது நாட்டுக்கே அரசனாகி, தனது எதிரிகள் உட்பட அனைத்து மக்களுக்கும் நல்லது செய்தான்" என்று அந்தக் கதையை விவரித்தார். நல்ல கதை அல்லவா?


பதில்:
நல்ல கதை. அடுத்த தீபாவளிக்கு முன்பாக தவெக 'சமத்துவ தீபாவளி' என்று ஒரு விழா எடுக்க வேண்டும். விழா மேடையில், "ஐந்து சகோதரர்களுக்குத் துரோகம் செய்த மற்ற நூறு சகோதரர்களை அந்த ஐவர் ஒரு அவதார புருஷரின் வழிகாட்டுதலுடன் போரில் வென்று நாட்டைக் கைப்பற்றி மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தனர்" என்ற மஹாபாரதக் கதையையும் விஜய் சொன்னால் அதுவும் நன்றாக இருக்கும். சமத்துவம் சந்தேகமில்லாமல் வெளிப்படும்.

 

 

 

2. கேள்வி: ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தின் அமைதியை எப்படிச் சீர்குலைக்கலாம் எனப் பலர் யோசிக்கின்றனர்" என்று சொல்லி இருக்கிறாரே?


பதில்:
முதல்வர் மாற்றிச் சொல்கிறார். அமைதியாக இருக்கும் பெரும்பான்மை ஹிந்துக்களின் நம்பிக்கைகளை அவமதித்தால் சிறுபான்மையினரைக் கவரலாம் என்றுதான் பல அரசியல் தலைவர்கள் யோசிக்கிறார்கள். அதில் ஸ்டாலின் முதல்வர்.

 

 

 

3. கேள்வி: உயர் நீதிமன்ற உத்தரவு இருந்தும் திருப்பரங்குன்றம் மலைமீது ஒற்றை மனிதர் சென்று கூட அங்குள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவிடாமல் போலீஸ் தடுத்தது. இந்த நிலையில், சந்தனக் கூடு விழாவுக்குக் கொடியேற்ற அதே மலை மீது நான்கு முஸ்லிம்கள் செல்ல போலீஸ் அனுமதிக்கிறதே?


பதில்:
சிறுபான்மையினரின் மத நம்பிக்கைக்கு ஆதரவாக, போலீஸால் மெஜாரிடி மக்களைக் கட்டுக்குள் வைக்க முடியும்; ஆனால் மெஜாரிடி மக்களின் மத நம்பிக்கைக்கு ஆதரவாக, கோர்ட் உத்தரவு இருந்தும் போலீஸால் சிறுபான்மை மக்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது, அப்போது தான் மதக்கலவரம் வரும் என்று போலீஸ் அபத்தமாகக் கருதுகிறதா? போலீஸை வைத்து திமுக அரசு நடத்தும் 'சிறுபான்மையினர் ஓட்டில் குறி' என்ற நாடகம் இந்தக் கட்டத்தில் ஜொலிக்கிறது.

 

 

 

4. கேள்வி: "மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?


பதில்:
சுதந்திரத்தை அடுத்த முதல் 20 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் வலுவான ஒரு பொருளாதார மற்றும் நிர்வாக அடித்தளத்தை அமைத்தது. அது அடுத்த 57 ஆண்டு காலத்தின் ஊழல் திராவிட ஆட்சியை மீறித் தமிழகத்தை இன்றும் ஒரு முன்னணி மாநிலமாக வைக்க உதவுகிறது.

 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் சீர் சிறப்புகளைப் பேசும் நேர்மை ஸ்டாலினிடம் இல்லை. அவற்றை மக்களிடம் விளக்கும் தைரியம், திமுக-விடம் சீட் பிச்சை கேட்கும் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.

 

 

 

5. கேள்வி: ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க ஆயத்தமான நீண்ட நாட்களில், தமிழருவி மணியனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். "ரஜினியுடன் மூன்று வருடம் பேசியதில் எனக்குக் கிடைத்தது மிளகு ரசம் தான்" என்று அந்த அனுபவம் பற்றித் தமிழருவி மணியன் இப்போது சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: தமிழருவி மணியனின் மேடைப் பேச்சுகளைக் கேட்பது யாருக்கும் ஒரு ரசமான அனுபவம். அவருக்கு ரசத்தையே அனுபவமாக அளித்தவர் ரஜினிகாந்த்.

 

 

பகுதி 29 // 23.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (21.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "கிறிஸ்தவக் கொள்கைக்கும் திராவிடக் கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது. ஏசுவைப் போல் வாழ்ந்தவர்கள் ஈ.வெ.ரா, அண்ணா, கருணாநிதி" என்றெல்லாம் துணை முதல்வர் உதயநிதி ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் பேசி இருக்கிறாரே?


பதில்:
தமிழக வெற்றிக் கழகத்தினால் வந்த வினை இது.

 

தவெக நிறுவனர் விஜய், கிறிஸ்தவர். அவர் கட்சிக்குக் கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் அதிகமாகப் போகலாம் என்று திமுக அஞ்சுகிறது. முன்பு கிறிஸ்தவர்களின் ஓட்டுக்காக அவர்கள் முன்னால் சாதாரண டான்ஸ் ஆடிய உதயநிதி, இப்போது உதறல் எடுத்து பயங்கர ராப் டான்ஸ் ஆடி இருக்கிறார். அதுதான் விஷயம்.

 

 

 

2. கேள்வி: ஸ்டாலினையும் உதயநிதியையும் அவர்கள் முன்னாலேயே திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பொய்யாக வானளாவப் புகழ்ந்து பேசுகிறார்கள். அது பொய் என்று அந்த இரு தலைவர்களுக்கும் புரியாதா?


பதில்:
புரியும். தங்களைப் பொய்யாகப் புகழ்கிறவர்கள் அந்த நேரத்தில் வாலைக் குழைத்து தமக்குப் பணிகிறார்கள், அந்தக் குழைவின் வெளிப்பாடு அவர்களின் பொய் என்பதை அறிந்து ரசிப்பவர்கள் ஸ்டாலினும் உதயநிதியும்.

 

 

 

3. கேள்வி: தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ், "விஜய் இப்போது நடிகர் இல்லை. அவர் ஒரு முன்னாள் நடிகர். நடிப்பை விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்" என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறாரே?


பதில்:
விஜய் சினிமாவை விட்டாரோ இல்லையோ, நடிப்பை விடவில்லை. அரசியல் மேடைகளில் தனது சினிமா பாணியில் அவர் ஆர்ப்பாட்டமாக நடிக்கிறார். ஒரு தேர்ந்த அரசியல்வாதி மாதிரி, தான் நடிக்கிறோம் என்று காண்பிக்காமல் அரசியல் மேடையில் நடிக்கும் கலையை விஜய் கற்க வேண்டும். அது நடக்காத வரை அவர் நடிகராகவே பார்க்கப் படுவார் - ரசிகர்களின் ஓட்டுக்காக அதை அவர் விரும்புவதாகத் தெரிகிறது.

 

 

 

4. கேள்வி: திராவிடர் கழகம் என்ற பெயரில் 'ர்' இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் என்பதில் 'ர்' இல்லை. திமுக-வின் பெயரில் ஏன் 'ர்' இல்லை, அதனால் என்ன வேறுபாடு?


பதில்:
நிஜத்தில் பெரிய காரணம் இல்லை, வேறுபாடும் இல்லை. இரண்டு அமைப்புகளின் தலைமைக்கும் குறுகல் பார்வை, கோணல் புத்தி, குறைவான தேசாபிமானம் இருக்கிறது.

 

புஸ்வாணத்தில் 'ஸ்' உண்டு, பூவாணத்தில் கிடையாது. இரண்டும் பட்டாசு ரகம். ஜாக்கிரதையாகத் தள்ளி இருப்பது நல்லது.

 

 

 

5. கேள்வி: குதிரையைப் படைத்த ஆண்டவன் வரிக்குதிரையைப் படைத்தார். கழுதையைப் படைத்த அவர் ஏன் வரிக்கழுதையைப் படைக்கவில்லை?


பதில்:
ஆண்டவன் கருணை மிக்கவர். அளவோடு வரி போடுவார்.

 

 

பகுதி 28 // 21.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr