-- ஆர். வி. ஆர்
தமிழக
பாஜக-வில் தற்போது நடந்த மாநிலத் தலைவர் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. போட்டியிட்ட
ஒரே வேட்பாளரான நயினார் நாகேந்திரன் ஏக மனதாக அக் கட்சியின் புதிய மாநிலத் தலைவர் ஆகியிருக்கிறார்.
அண்ணாமலை
மாநிலத் தலைவராக இல்லாத தமிழக பாஜக-வின் வலிமை குறையுமா? இந்தக் கேள்வி பல சாதாரண
பாஜக ஆதரவாளர்களிடம் இருப்பது வியப்பல்ல. அதற்குக்
காரணம் இருக்கிறது.
தமிழகத்தில்
ஓட்டு வாங்கும் சக்தியை வைத்துப் பார்த்தால், திமுக மற்றும் அதிமுக பெரிய கட்சிகள்.
அவற்றுக்கு அடுத்த நிலைக்குத் தனது இளம் வயதில்,
மூன்றே முக்கால் வருடங்களில், பாஜக உயரப் பெரும் பங்களிப்பு செய்தது, கட்சியின் முந்தைய
மாநிலத் தலைவர் அண்ணாமலை.
திமுக
எப்படியான கட்சி? அராஜகம், அடாவடி, ஆட்சியில் முறைகேடுகள், ஹிந்து மத துவேஷம், இலைமறை
காயாக இருக்கும் பிரிவினைப் போக்கு, ஆகியவை திமுக-வின் பல முகங்கள்.
தமிழகத்தில்
மாறி மாறி வரும் ஆட்சிகளின் அவலங்களிலிருந்து தங்களை மீட்கும் ஒரு நம்பிக்கை முகத்தைத்
தமிழக மக்கள் ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் உலகில் பார்க்க முடியவில்லை
– ஒரு சில தலைவர்களிடம் அவர்கள் முன்பு பற்று வைத்தாலும். இந்தச் சூழ்நிலையில், அத்தகைய
புதிய நம்பிக்கை முகமாகப் பலருக்கும் அண்ணாமலை தெரிய ஆரம்பித்தார். அதுதான் குறுகிய
காலத்தில் தமிழக பாஜக-வை சாதாரண மக்களிடையே பெரிய அளவில் பிரபலப் படுத்தியது.
இத்தகைய
அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவராக வரவில்லை என்றால், அவரால் ஈர்க்கப்
பட்ட மக்கள் பலரும் பாஜக மீது சற்று அதிருப்தி கொள்வது இயற்கை. ஆனால் உண்மையில் அண்ணாமலையின்
அபிமானிகளுக்கு இருக்கும் அச்சமும் கவலையும் தேவையற்றது – இது நாளுக்கு நாள் தெளிவாகிறது.
சமீபத்தில்
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலை பாஜக-விற்கு அளித்த மகத்தான
பங்களிப்பை எழுத்து மூலம் வெளிப்படுத்தினார். தனது முதல் பதவிக் காலம் முடிந்தவுடன்
ஒரு மாநிலத் தலைவர் – அதுவும் திமுக கோலோச்சும் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் – பாஜக-வின்
தேசியத் தலைமையிடமிருந்து தனது இளம் வயதில் இத்தகைய பாராட்டைப் பெறுவது நினைத்துப்
பார்க்க முடியாதது. பாஜக-வில் அண்ணாமலைக்கான முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
அண்ணாமலை இனி மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் முன்பு போல் மக்களிடம் நேரடியாகப் பேச முடியும், திமுக-வின் பிரதான எதிர்ப்பாளராகத் தமிழக பாஜக-வில் தொடர முடியும், அதில் சந்தேகம் வேண்டாம், என்கிற செய்தி நயினார் நாகேந்திரனின் வார்த்தைகளிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. பாஜக-வின் தேசியத் தலைமையும் அதே சமிக்ஞையைக் காண்பிக்கிறது. இவை அனைத்தும் அண்ணாமலை அபிமானிகளுக்கு இருக்கக் கூடிய சந்தேகத்தை முற்றிலும் போக்க வல்லவை.
இப்போது
அமித் ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்திருக்கிறது.
2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் அந்த இரண்டு கட்சிகளும் அதிமுக தலைமையில் ஒரே கூட்டணியாகப்
போட்டியிடப் போகின்றன. இந்த நேரத்தில், பாஜக-வின் தமிழக மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை
அடுத்து நயினார் நாகேந்திரன் தேர்வாகி இருக்கிறார்.
அதிமுக
தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று
அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவராகத் தொடராமல் வேறு ஒருவர் அப்பதவிக்கு
வந்திருக்கலாமோ என்ற சந்தேகம், அண்ணாமலை ஆதரவாளர்கள் பலருக்கு வரலாம். இந்த விஷயத்தை
நாம் இப்படிப் புரிந்து கொள்வது சரியாக இருக்கும்.
அதிமுக
தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே முன்பு வார்த்தைப் போர்கள் இருந்தன..
அவரவர் கட்சி நலன் என்று கருதி அவர்கள் அப்படிப் பேசி இருப்பார்கள். ஆனால் தேர்தலில்
போட்டியிட்டு ஜெயித்து ஆட்சிக்கு வராமல், மக்கள் நலனுக்குப் பெரிதாக இரண்டு கட்சிகளும்
ஒன்றும் செய்யமுடியாது, அவைகள் வளரவும் முடியாது. 2026 தேர்தல் மூலம் இன்னும் வளர வேண்டியது தமிழக
பாஜக-வுக்கு மிக அவசியம்.
தேர்தல்
விளையாட்டும் தேர்தல் கணக்குகளும் தனியானவை. ஒரு கிரிக்கெட் உதாரணத்தை வைத்து – அதாவது,
கற்பனையான ஒரு ‘தேர்தல் கிரிக்கெட்’ உதாரணத்தின் மூலமாக – இதை விளக்கலாம்.
திமுக-வின் தேர்தல் கிரிக்கெட் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்த பதினோரு வீரர்கள் கூட்டாக, ஒரு கூட்டணியாக, இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். திமுக அணியில் சேராத மற்ற வீரர்கள், ஆறு பேர் மற்றும் ஐந்து பேர் ஒன்றாக ஒரே எதிர் அணியில் கூட மறுக்கிறார்கள். இருந்தாலும் தேர்தல் கிரிக்கெட் விதிகள் படி, அந்த ஆறு மற்றும் ஐந்து வீரர்கள் தனித்தனி அணிகளாக, களத்திற்கு வந்து திமுக கூட்டணியை எதிர்த்து தேர்தல் கிரிக்கெட் விளையாடலாம், அவர்கள் அப்படி ஆடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.
திமுக அணி பேட்டிங் செய்கிறது. எதிர்ப்புறம் இரண்டு பிரிவு வீரர்களும் பந்து வீசுகிறார்கள். திமுக அணியின் பதினோரு வீரர்கள் கூட்டாக 250 ரன்கள் எடுக்கிறார்கள். அந்த 250 ரன்களும் திமுக அணியின் கணக்கில் சேர்கிறது. எதிர் அணியில் உள்ள ஆறு வீரர் பிரிவு 150 ரன்கள் எடுக்க, ஐந்து வீரர் பிரிவு 125 ரன்கள் எடுக்கிறார்கள். அவர்கள் ஒற்றை அணியாக, ஒரு கூட்டணியாக, விளையாடி இருந்தால் அவர்கள் கணக்கிற்கு மொத்தமாக 275 ரன்கள் சேர்ந்து, அந்த எதிர் அணியின் பதினோரு வீரர்களும் ஜெயித்த அணியாக விளங்குவார்கள், திமுக அணி தோற்கும்.
திமுக அணியை எதிர்த்த வீரர்கள் இரண்டு பிரிவாக ஆடியதால், அந்த இரு பிரிவுகள் அவரவர் கணக்கிற்கு எடுத்த ரன்கள் (150 மற்றும் 125) தனித் தனியாக திமுக அணியின் 250-ஐ விடக் குறைவு என்பதால், அந்த இரு பிரிவினரும் தோற்றார்கள், திமுக அணி ஜெயித்தது என்றாகும். இதுதான் தேர்தல் கிரிக்கெட் விதிகள். இப்படித்தான் தேர்தல் கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தை ஆட முடியும். இதனால் தான் அதிமுக மற்றும் பாஜக ஒரு கூட்டணியாகச் சேர்ந்து, இன்னும் சில கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு, திமுக கூட்டணியை வலுவாகத் தேர்தலில் எதிர்கொள்ள வேண்டும்.
அண்ணாமலை
ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டிய இன்னும் ஒன்று இருக்கிறது.
அண்ணாமலை
பாஜக-வின் மாநிலத் தலைவராக இல்லாமல் போவதை அதிமுக தலைவர் பழனிசாமி விரும்புகிறார் என்றே
இருக்கட்டும். அது பாஜக-வுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இப்போது பொருட்டல்ல. எது முக்கியம்
என்றால், அண்ணாமலை நினைப்பதைத் தேர்தல் கிரிக்கெட்டில் திமுக அணிக்கு எதிராக முயன்று
பார்க்க முடியும் – கேப்டனாக இல்லாவிட்டாலும் சச்சின் டெண்டுல்கர் அடித்து ஆடி இந்திய
அணிக்கு ரன்கள் சேர்த்த மாதிரி. கூட்டணி சேர்ந்ததால்
அதிமுக-வோடு பாஜக-வும் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. மற்ற அனைத்தும் இப்போது இரண்டாம்
பட்சம். அது அதற்குக் காலம் உண்டு.
என்ன
ஆனாலும் அதிமுக-பாஜக கூட்டணியால் 2026 தேர்தலுக்குப் பின் தமிழக பாஜக-வுக்கு அதிக எம்.எல்.ஏ-க்கள்
கிடைக்கும் வாய்ப்பு பிரகாசம், அரசியலில் அதிக வெளிச்சமும் கிடைக்கும். அண்ணாமலையின்
சக்தியும் அதிகரிக்கும்.
கட்சித்
தலைவர் என்ற பதவியில் இல்லாமல் எப்படி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தேசிய அளவில் மதிப்பும்
மரியாதையும் உள்ளதோ, அதேபோல் அண்ணாமலைக்கும்
தமிழக அளவில் தனி மதிப்புக் கூடி வருகிறது. வரும் வருடங்களில் அது பலப்படும். இதில்
அவருக்குத் துணையாக பாஜக-வின் தேசியத் தலைமையும் இருக்கிறது.
அண்ணாமலை
முன்பு முன்னிருந்து செய்ததை, இப்போது பக்கவாட்டிலிருந்து செய்யப் போகிறார். அதை முற்றிலும்
உணர்ந்துதான், அவரே புதிய மாநிலத் தலைவர் நயினார்
நாகேந்திரனுக்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார். நயினார் நாகேந்திரனை வாழ்த்தி, அண்ணாமலையின்
அபிமானிகள் தொடர்ந்து பாஜக-வுக்கு ஆதரவு தரவேண்டும். பாஜக மூலமாகத் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறக்கும்
நேரம் வந்து கொண்டிருக்கிறது. வேறென்ன வேண்டும்?
* * * * *
Author: R. Veera
Raghavan, Advocate, Chennai