Friday, 30 July 2021

ஜார்ஜ் பொன்னையா: "பிச்சை ஓட்டின் பெருமை எமதே!"

-- ஆர். வி. ஆர்


கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. சமீபத்தில் அங்கு ஒரு கண்டனக் கூட்டத்தில் அவர் பேசிய வீடியோக் காட்சி பலரது மொபைல் போன்களில்  தெரிந்தது. அவரது சில வார்த்தைகள்:

 

“திமுக-வினரே, நீங்க உங்களோட திறமையை வச்சு ஓட்டு வாங்கி தேர்தல்ல ஜெயிக்கலை. அது கிறிஸ்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் உங்களுக்குப் போட்ட பிச்சை.”

 

“எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ, செருப்புப் போடமாட்டார். ஏன்னா பூமாதேவியை  செருப்பால மிதிக்கமாட்டாராம். நாங்க ஏன் ஷூ போடறோம்னா, பாரத மாதாவோட அசிங்கம் நம்மகிட்ட தொத்திரக் கூடாதுன்னு. அதுனால நமக்கு சொறி சிரங்கு வந்துரக் கூடாதுன்னு ......”

 

"நாங்க நாப்பத்திரண்டு சதவிகிதம் இருந்தோம். இப்ப அறுபத்திரண்டு சதவிகிதம் தாண்டியாச்சு. இன்னும் கொஞ்சம் நாள்ள எழுபது சதவிகிதம் ஆயிருவோம்.  நாங்க வளர்றதை தடுக்க முடியாது.....”

 

          திமுக-வின் சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கான காரணம் குறித்துப் பொன்னையா பேசியதை அந்தக் கட்சி அதிகாரபூர்வமாக ஆட்சேபிக்கவில்லை. பொன்னையா வெளியிட்டது  பொய்யான கருத்தா அல்லது கசப்பான உண்மையா? எது சரி என்பதை நீங்களே ஊகிக்க முடியும். உங்கள் சரியான ஊகத்தை ஊர்ஜிதம் செய்ய இரண்டு காட்சிகளை நீங்கள் மனக்கண்ணில் பாருங்கள்.   

 

நல்ல உடம்புள்ள ஒருவன் தலை சொறிந்து பல்லிளித்து உங்களிடம் அடிக்கடி பிச்சை எடுத்து வந்தால் உங்களுக்கு அவன்மீது இளக்காரம் வரும். கோபத்தில் அவனைப்  “பிச்சைக்காரப் பயலே” என்று நீங்கள் திட்டினாலும் அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டான். ‘எல்லாரும் கேக்கறபடி அவர் என்னைத் திட்டியிருக்க வேண்டாமே’ என்று அவன் நினைத்தாலும், உங்களிடம் கையேந்துவதை நிறுத்த மாட்டான்.  

 

   அதே சமயம்,  ராமகிருஷ்ண மடம்  போன்ற ஒரு தொண்டு நிறுவனத்தால் நீங்கள் ஈர்க்கப்பட்டு அதற்கு ஒரு பெரிய தொகையை அவ்வப்போது நன்கொடையாக வழங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பிச்சை அளிப்பது என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள். உங்களுக்கு மன நிறைவு தருகிற ஒரு நல்ல காரியமாகத்தான் பார்ப்பீர்கள். அந்த நிறுவனமும் தங்களின் சமுதாய நலப் பணிகளுக்காகப்  பெறும் நன்கொடைகளைப் பிச்சை வாங்குவது என்று நினைக்காது. இப்படி இருக்கையில், உங்களுக்குக் கிறுக்குப் பிடித்து அந்தத் தொண்டு நிறுவனத்தைப் பார்த்து ‘பிச்சை எடுக்கிறவர்களே!’ என்று நீங்கள் இழித்துப் பேசினால், பிறகு அவர்கள் உங்களிடம் நன்கொடை பெறமாட்டார்கள். அதற்கான மானம் மரியாதை அவர்களிடம் உண்டு.  

 

இந்த இரண்டு உதாரணங்கள் மூலமே பொன்னையாவின் எண்ணமும் திமுக-வின் நிலையும் பளிச்சென்று தெரியும்.

 

‘ஓட்டுப் போடுவது குடிமக்களின் ஜனநாயகக் கடமையும் பொறுப்பும். அதன் மூலம் நல்லாட்சி தரும் ஒரு கட்சியைத் தேர்ந்தடுப்பது, நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது’ என்று பொன்னையா நினைத்தாரா? இல்லை. ‘நம்மைத் கும்பிட்டு நம் ஸ்தாபன காரியங்களுக்கு உதவுகிற ஒரு விசுவாசமான வேலைக்காரன் அரசாங்கத்தைப் பிடிக்க, நம் சமூகத்து ஓட்டுக்களை அவனுக்குப் பிச்சையாக அளிக்கச் செய்வோம்’ என்கிற யுக்தியைத்தான் பொன்னையா வெளிப்படையாகப் பேசிவிட்டார்.  இருவரின் போக்கும் நம் தேசத்திற்கு நல்லதல்ல.

 

ஹிந்துக்களின் கௌரவத்தையும் உரிமைகளையும் பா.ஜ.க. பாரபட்சமின்றிப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் 2014-லிருந்து அதிகமான ஹிந்துக்கள் அந்தக் கட்சிக்கு நாடெங்கும் ஆதரவு தருகிறார்கள். அது நமது கடமை, அது நமக்கும்  நமது தேசத்திற்கும் அதன் பாரம்பரியத்திற்கும்  நல்லது என்ற நினைப்போடு அப்படி ஆதரவு அளிக்கிறார்கள். தாங்கள் பா.ஜ.க-விற்கு ஓட்டளிப்பது அந்தக் கட்சிக்குப் போடும் பிச்சை என்று ஹிந்துக்களோ ஹிந்து மதத் தலைவர்களோ நினைப்பதில்லை. ஆனால் ஜார்ஜ் பொன்னையா மாதிரியான கிறிஸ்தவப் பாதிரியார்களும் வேறு சில சிறுபான்மை மதத் தலைவர்கள் மட்டும் தாங்கள் அளித்து வரும் திமுக ஆதரவை ஏன் அவர்கள் இடும் பிச்சை என்று எண்ணுகிறார்கள்? காரணம் இருக்கிறது.

 

தங்களின் பேச்சு, செயல்களின் மூலம் ஹிந்துக்களை, ஹிந்து உணர்வுகளை உதாசீனம் செய்யும் கட்சியாகத் திமுக பல சமயம் தோற்றம் அளிக்கிறது.  விவரம் தெரிந்த நிறைய ஹிந்துக்களும் அப்படி உணர்கிறார்கள். ஹிந்து உணர்வுகளைப் புறம் தள்ளாமல் மதிக்கும் கட்சியாக பா.ஜ.க  தலையெடுத்து விட்டதால், தன்னைப் பா.ஜ.க-வின் எதிரி என்று காட்டிக் கொள்ள திமுக தனது ஒரிஜினல் குணாதிசயத்தை இன்னும் வலுவாக நிலைநிறுத்த முனைகிறது. அதற்கு ஒரு வழி, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத அமைப்புகளிடம் பாசம், நேசம், பவ்யத்தை அதிகம் காட்டி தேர்தல் வெற்றிக்காக  அவர்களின் ஆதரவைத் தொடர்ந்து வேண்டி நிற்பது.  அந்த மத அமைப்புகளின் சில தலைவர்களுக்கும் திமுக-வின் இந்தப் போக்கு உதவுகிறது. இருந்தாலும் தங்கள் கட்சியின், தங்கள் கட்சித் தலைவர்களின் வசதி வளர்ச்சிக்காக ஒரு கட்சி இப்படிப் பணிந்து வந்தால், அதற்குத் துணை செய்யும் அந்த மதத் தலைவர்கள் தாங்கள் செய்யும் உதவியைப் பிச்சை என்று கருதுவது இயற்கை.

 

ஆனால் ஒன்று. திமுக-விற்கு ஓட்டளிக்கும் சாதாரண சிறுபான்மை மக்கள் யாரும் தாங்கள் அந்தக் கட்சிக்குப் பிச்சை எதுவும் போடுவதாக நினைப்பதில்லை.  அப்படியெல்லாம் நினைக்க அவர்களுக்குத் திராணியும் இல்லை, ஒரு பலனும் இல்லை. அவர்களே பாவம், அவர்களின் மதத் தலைவர்கள் பலரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.  சாதாரண சிறுபான்மை மனிதர் யாராவது ‘பாரத மாதாவின் மீது என் கால் பட்டால் சொறி சிரங்கு வரும்’ என்று தீர்மானித்து, பாரத மாதாவைக் குறிப்பாக அப்படி நினைத்தா செருப்பு அணிவார்? பொன்னையா மாதிரி குரூர ஹிந்து-விரோத எண்ணம் கொண்ட ஒரு மதத் தலைவர்தான் அப்படி எண்ணவும்  பேசவும்  முடியும்.  

 

   ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் தங்கள் எண்ணிக்கை எழுபது சதவிகிதம் எட்டப் போகிறது என்று ஹிந்துக்களைக் கீழ்நோக்கும் இறுமாப்புடன் கொக்கரித்தார் பொன்னையா. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில், ஹிந்துக்களின் உயர்ந்த நேசத்தைப் பெற்று அரசியல் சட்டம் வழியாக சில பிரத்தியேக உரிமைகளையும் பெற்றவர்கள் இந்திய சிறுபான்மையினர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் ஹிந்துக்களுக்கு அதே மாதிரியான விசேஷ உரிமைகள் தரப்பட வேண்டும் என்று இந்தியாவின் சிறுபான்மை மதத் தலைவர்கள் குரல் கொடுப்பதில்லை. அதைக்கூட ஒதுக்கலாம், அதனால் பாதகமில்லை. ஆனால் இந்தியாவிற்குள்ளேயே ஹிந்துக்களின் சகிப்புத் தன்மையையும் தோழமை உணர்வையும் சிறுபான்மை மதத் தலைவர்கள் பலர் ஒரு பலவீனமாகக் கருதுகிறார்கள். ஜார்ஜ் பொன்னையா அதன் வெளிப்பாடு. இந்தப் போக்கு நிதானமாக, ஆனால் உறுதியாக, களையப்பட வேண்டும். ஹிந்துக்கள் பொறுத்திருக்கட்டும். ஆனால் விழித்திருக்கட்டும்.


* * * * *


Copyright © R. Veera Raghavan 2021


Monday, 19 July 2021

நாயுடன் நான் 20 நாட்கள்

         -- ஆர். வி. ஆர் 



ஆக்ஸிஸ். அதுதான் அவன் பெயர். என் வீட்டருகில் அந்தப் பெயர் கொண்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம் அறை இருக்கிறது. அதுவே அந்தத் தெரு நாயின் இளைப்பாறும் இடமானதால் அந்த வங்கியின் பெயரை அவனுக்குச் சூட்டினோம். தடியான தேகம், களையான முகம் உடையவன்.

 

பக்கத்துக் காலனிவாசி ஒருவர் ஆக்ஸிஸை இரண்டு வயது வரை வீட்டில் பராமரித்துப் பின் ஊர் மாறியபோது எங்கள் தெருவில் விட்டு நழுவினார். கைவிட்ட அரக்கரை மன்னித்து அக்கம் பக்கத்தினருடன் சிநேகம் காட்டி அந்த ஏ.டி.எம்-மின் ஏ.சி குளிர்நிலையில் தினமும் பலமணி  நேரம் சுகித்து வளர்ந்தான் ஆக்ஸிஸ்.  இப்போது அவன் வயது  எட்டோ ஒன்பதோ.  

 

எனது குடியிருப்புக் கட்டிடத்தின் எதிர்ப்புறத்தில் சற்றுத் தள்ளி இருக்கிறது அந்த ஏ.டி.எம். அதனுள் ஆக்ஸிஸ் போக நினைத்தால்முதலில் அதன் கண்ணாடிக் கதவு  ஓரத்தைச் சற்று மூக்கால் தள்ளுவான். கிடைத்த இடைவெளியில் முகத்தைச் சொருகி வழியை அகலப்படுத்தி உடலையும் நுழைத்தெடுத்து ஓரமாகப் படுப்பான். பின்னர் வெளியேறுகிற எண்ணம் வந்தால், உள்ளே வந்த ஒருவர் கதவை இழுத்து வெளியே செல்கையில் அவரை நாசூக்காகத் தொடர்வான். ஏ.டி.எம்-மில் அவன் இருக்கும்போது அங்கு நுழைபவர் அவனைப் பார்த்து அஞ்சாதிருக்க, வருகின்ற மனிதரைத் துளியும் ஏறெடுத்துப் பார்க்காமல் ஒரு துணிமூட்டை மாதிரிப் பாவமாகக் கிடப்பான் ஆக்ஸிஸ். காலப் போக்கில் அந்த ஏ.டி.எம் கஸ்டமர்களுக்கு அவன் இருப்பது பழகிவிட்டது. நம்பர் ஒன்று இரண்டு என்ற செயல்களை ஏ.டி.எம்-மிற்குள் நிகழ்த்தாமல் அவன் சமர்த்தாகவும் இருப்பான்.  ஜென்டில்மேன்!

 

தெருவில் வந்து போகிற எவரும் தன்னைக் கவனித்தால், அதுவும் கருணையுடன் பார்த்தால், அவரைச் சரியாகக் குறிப்பான் ஆக்ஸிஸ். அவர் அருகே சென்று வாலாட்டி நட்பு காட்டி அவரிடம் பரிதாபம் ஊறவைப்பான். அதன் மூலம் அவர் பிஸ்கட்டோ வேறு உணவோ வாங்கித் தரத் தூண்டுவான். அருகில் உள்ள போட்டோ கடைக்காரரை வசியம் செய்து, அவர் தினமும் இரவு கடை அடைத்த பின் ஒரு பாக்கெட் பிஸ்கட்டை அவனுக்கு தானம் செய்யும் புனிதக் கடமையை அவருக்கு ஏற்படுத்தினான் ஆக்ஸிஸ்.

 

எனது குடியிருப்புக் கட்டிடத்தின் வாட்ச்மேனுக்கும் ஆக்ஸிஸ் தோஸ்த் ஆகி அவ்வப்போது சாப்பாடு பெற்றான்.  பிராணிகளை விரும்பும் என் மனைவியிடமும் அவனுக்கு எப்போதும் பிஸ்கட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒருவர் கொடுத்தால் போதும் என்று மனிதத்தனமாக நினைத்து நான் அவனுக்குத் தனியாகத் தீனி கொடுக்காமல் இருந்தேன் – ஆனால் என் லாஜிக் அவனிடம் எடுபடவில்லை. 

   

பல சமயம் எங்கள் காம்பவுண்டில் உள்ள கார்ப் பாதையில் ஆக்ஸிஸ் அமர்ந்திருப்பான். ஆனால் எங்கள் கட்டிடத்திற்குள் அவன் வருவதில்லை - எங்கள் வாட்ச்மேனும் அதை அனுமதித்ததில்லை. நான் வந்துபோகும்போது ஆக்ஸிஸை வாஞ்சையுடன் பார்ப்பதை அறிந்து, நான் அவனுக்குத் தீனி கொடுக்காத அதர்மத்தை நானே உணரும்படி செய்தான்.  நான் எனது காரில் ஏறும்போதோ, அல்லது திரும்பி வந்து இறங்கும்போதோ, அருகில் வந்து என் கால்களில்  உரசி அன்பாகக் குரைத்து என்னை உருக்கி  வழிப்படுத்தினான் ஆக்ஸிஸ். பிறகு நானும் அவனுக்கு பிஸ்கட் தோழன் ஆனேன். கில்லாடிப் பயல்!

 

ஒரு நாள் எங்கள்  வாட்ச்மேன் வேலையை விட்டான். வாரக் கணக்கில் வேறு வாட்ச்மேனும் கிடைக்கவில்லை. அப்போது பல சமயங்களில் எங்கள் மெயின் கேட்டும்  கட்டிடத்தின் பாதுகாப்புக் கதவும் திறந்திருக்க, ஆக்ஸிஸ் கட்டிடத்திற்குள் வந்து படியேறி மூன்றாவது மாடியில் உள்ள எனது குடியிருப்பின் வாசலில் அமர்ந்துவிட்டான்.  அவ்வப்போது வெளியே சென்றும் வருவான். இரண்டு நாட்கள் கழித்து, மேல் மாடி வீட்டுக் காரர் அவனைக் கட்டிடத்தில் இருந்து  விரட்ட எண்ணி ஒரு பிரம்பால் அடிக்க,  அவன் தற்காப்பில் பலமாக உறுமியும் குரைத்தும் அவரைப் பயமுறுத்தினான். சத்தம் கேட்டு வீட்டுக் கதவைத் திறந்த என் மனைவி திடுக்கிட்டு, இருவருக்கும் சமாதானம் சொல்லி ஆக்ஸிஸை எங்கள் வீட்டிற்குள் கூட்டி வந்தாள். அன்றிலிருந்து இருபது நாட்கள் அவனுடன் நாங்கள் வாழ்ந்தோம்.  

 

தெருவில் இல்லாத அரவணைப்பும் பாதுகாப்பும் என் வீட்டில் கிடைத்ததை உணர்ந்தான் ஆக்ஸிஸ். அதை எனக்கும் நன்றாக உணர்த்தினான். சிறுசக்கரங்கள் பொருத்திய நாற்காலியில் அமர்ந்து நான் என் அறைக்குள் வேலை செய்யும் போது, என் நாற்காலிக்கு மிகப் பின்னால் அனாயாசமாகப் பக்கவாட்டில் படுத்து உறங்குவான். அவனது மூக்கோ காலோ எனது நாற்காலிச் சக்கரத்தைத் தொட்டிருந்தாலும், நான் மூடத்தனமாக நாற்காலியைப் பின்நகர்த்தி  அவனது உடல் உறுப்புகள் எதையும் காயப்படுத்த மாட்டேன் என்று நம்பினான் – நான்தான் அப்படி நம்பவில்லை.

 

பல நேரங்கள் நான் நாற்காலியில் இருந்து வெளிவந்து, அருகில் கண்மூடிப் படுத்திருக்கும் ஆக்ஸிஸின் உடலை அரிசி மூட்டையைத் தள்ளுவது மாதிரி தரையிலேயே இரண்டடி தள்ளி நகர்த்தினாலும், கண்ணைத் திறக்காமல் அப்படியே கிடப்பான். சாலையில் ஒரு வண்டி தூரத்தில் வந்தாலே பாதுகாப்பாக விலகும் அவன், வீட்டிற்குள் என்னால் அவனுக்கு ஒரு தீங்கும் வராது என்று நம்பிவிட்டான். அவனது நம்பிக்கையைச் சோதிக்க, கண்மூடிக் கால்கள் நீட்டி அவன் பக்கவாட்டில் படுத்திருக்கும்போது அவன் உடல்மீது நான் எனது உள்ளங்காலை வைத்தாலும், அது நான் என்று தெரிந்து அசைய மாட்டான்.  மிக லேசாக என் காலை அவன் மீது அழுத்தினாலும் அப்படியே கிடப்பான்.  அடுத்து என் காலை அவன் கழுத்தின் மீது – அதாவது குரல்வளையின் மேல் - மெதுவாக வைத்துப் பார்த்தாலும், “இந்த ஆள் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறானே!” என்று அதையும் பொறுத்துக் கண் திறக்காமல் சுவாசிப்பான். ஒரு ஜீவன் உங்கள் மீது பூரண நம்பிக்கையும் நேசமும் வைத்து அதைத் தன் முகத்திலும் உடல் மொழியிலும் காட்டுவது உங்களுக்கு உன்னத அனுபவம்.

 

கழுத்துப் பட்டை, பிடி கயிறுடன் ஆக்ஸிஸை தினமும் இரண்டு வேளை வீதியில் கூட்டிச் சென்றேன். முன்பு அநாதையாகத் திரிந்த வருடங்களில் அவன் ஈர்த்த பழவண்டிக்காரன், கோவில் பக்கமான பூக்காரி, காற்று வாங்க உலாத்தும் வெப் டிசைனர், இன்னும் சிலர் இப்போது எதிர்ப்பட்டு அவனைத் தட்டி நலம் விசாரித்தனர். பிறகு அவனுடன் நான் வீட்டில் இருக்கையில் அவன் முதுகை வருடுவது,  கழுத்தைத் தடவிக் கொடுப்பது, அவனிடம் செல்லப் பேச்சுகள் பேசுவது என்பதாக எனக்கு நாட்கள் கழிந்தன. அவனது தெரு வாசத்தில் கடந்த சில வருடங்களாக அவனுக்கு மிகவும் பழக்கமாகி உணவும் அளித்து வந்த ஒரு பெண்மணி, இனிமேல் அவனைத் தனது வீட்டில் வைத்துப் பராமரிக்க விரும்பினார். நடைமுறை நன்மைகளுக்காக நானும் மனைவியும் அவனுக்கு விடைகொடுக்கச் சம்மதித்தோம்.    

 

இப்போது ஆக்ஸிஸ் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுவிட்டான். அந்தக் குடும்பத்தினருக்கும் மகிழ்வைக் கொடுத்துத் தனது மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்கிறான் என்று தெரிந்தது. நமது வாழ்விலும் நாம் மகிழ்ச்சி காண்பதற்கான ஒரு பாதையை ஆக்ஸிஸ் வாழ்ந்து காட்டுகிறானோ?

 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021

 

 

 

Sunday, 13 June 2021

ஊரடங்கு வீதியில் ஒரு பெண் வக்கீல் போலீஸுடன் லடாய்.

          - ஆர்.வி.ஆர்


இது போன வாரம் சென்னையின் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்தது. அந்த நிகழ்வின் வீடியோவை வாட்ஸ்-அப் உங்களுக்குக் காட்டியிருக்கும். 

 

காட்சியின் மத்திய நபர் ஆக்ரோஷத்தில் இருக்கும் ஒரு பெண் வக்கீல். அருகிலேயே வக்கீலுக்குப் படிக்கும் அவரது இள வயதுப் பெண். அவர்களுக்கு எதிரே போக்குவரத்துப் போலீஸ்காரர்கள் மூன்று நான்கு பேர். ஒரு போலீஸ்காரர் அந்த இளம் பெண் ஓட்டிவந்த காரை சேத்துப்பட்டில் நிறுத்தி, கொரோனா ஊரடங்கு நேரத்தில் அவர் வெளிவந்த காரணம், அவர் இ-பதிவு செய்தாரா என்று விசாரித்து அவருக்குச் சலான் வழங்க, அங்கிருந்தே அந்தப் பெண் தனது வக்கீல் தாயிடம் தகவல் சொல்ல அவரும் தனது சொகுசுக் காரில் ஸ்தலத்துக்கு விரைந்திருக்கிறார். வந்து போலீஸாரை நோக்கி வெடித்துப் பேசும் அந்தப் பெண் வக்கீலின் சுடு சொற்கள் சில:

 

"என்னைப் பாத்து யாருங்கறயா? இப்பக் காட்டட்டா? மவனே உன் யூனிபார்ம் கழட்டிருவேன்.  நான் அட்வகேட்."

 

(தெருவில் போகும் சில கார்களைக் காட்டி) "இதோ இந்தக் காரை நிறுத்து. அந்தக் காரை நிறுத்து. எல்லாக் காரையும் நிறுத்துரா"

 

"நான் எக்ஸ்டார்ஷன் போடட்டா?"

 

"மவனே சாவடிச்சுருவேன்."

 

(அவர் முகக் கவசம் அணியுமாறு ஒரு போலீஸ்காரர் சொன்னபோது)  "போடா!" 

 

போலீஸிடம் பேசுவதற்காக அவர் ஒரு விலை உயர்ந்த காரில் வந்திறங்கினார்.  அவர் ஒரு வக்கீல், அதுவும் பெண் வக்கீல்.  யாருக்காக வாதாட வந்தாரோ, அந்த நபர் பேச வந்தவரின் மகள், ஒரு இளம் பெண்ணும் கூட.  பகல் நேரம். தெருவில் வாகனங்கள் மற்றும் ஜனங்கள் உண்டு. போலீஸார் எச்சரிக்கையாக நடந்து கொள்ள இதற்கு மேல் ஒரு சூழ்நிலை வேண்டாம். அந்தப் பெண்ணிடம் போலீஸார் பேசிய வார்த்தைகள் - அதாவது முடிந்த அளவிற்குப் பேசியது - தவறில்லாதவை. அவர்களின் தொனியும் நிதானமானவை. அதற்கு நேர் மாறாக இருந்தது அந்தப் பெண்ணின் வீதிமணம் கமழும் உக்கிரப் பேச்சு. வீடியோ எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது. 

 

தொழில் புரிபவர்கள் வக்கீல், டாக்டர், சார்டர்டு அக்கவுண்டன்ட் இப்படிப் பல துறைகளில் இருக்கலாம். ஒரு டாக்டரோ ஒரு சார்டர்டு அக்கௌண்டன்டோ தெருவில் நின்றுகொண்டு அந்த வீடியோக் காட்சி நபர் மாதிரி போலீஸ்காரர்களிடம் பேசுவதை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா?  அது நிஜத்தில் நடக்காது. காரணம், வக்கீல் தொழிலை விட மற்றவர்களின் தொழில் கடினமானது, கண்ணியமானது என்பதல்ல. 

 

பிற தொழில்களை விட கண்ணியம் குறைந்ததல்ல வக்கீல் உத்தியோகம். அவர்கள் படிக்கவேண்டியது ஏராளம்.  அதற்கு மேல் ஓட்டமும் நடையும் நிறைந்தது அவர்கள் வாழ்க்கை. நீதிபதியிடம் பணிவு காட்டி, கோர்ட்டில் நிதானமாக சாமர்த்தியமாகப் பேச வேண்டியவர்கள் வக்கீல்கள். வழக்குக்காக கட்சிக்காரர்களிடம் பேசுவதற்கே அவர்களுக்கு நேரம் போதாது. முழு விவரங்கள் கிடைக்காமல், பல அர்த்தங்கள் சொல்லும் சட்டத்திற்கு நடுவில் நீதிபதிக்குத் தங்கள் கட்சியை விளக்கி வாதாட வேண்டிய வக்கீல்களின் வேலை கடினமானது. எல்லாவற்றையும் வைத்தே அவர்களின் பணிக்கு "மேன்மையான தொழில்" (noble profession) என்ற பெயர் கொடுக்கப் பட்டது

 

சரி, அப்படியானால் இன்று பொதுமக்கள் மனதில் வக்கீல்களுக்கு ஏன் உயர்ந்த மதிப்பு இல்லை? அதை ஊர்ஜிதம் செய்கிற மாதிரி ஒரு பெண் வக்கீல் கூட போலீஸாரிடம் நடந்து கொள்கிறாரே? இதற்கும் காரணம் உண்டு.

 

வக்கீல்கள் அர்ப்பணிப்புடன் பணி புரிந்து சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட காலம் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தின் முன்னணியில் பல வக்கீல்கள் இருந்தார்கள். உதாரணம்: மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், சித்தரஞ்சன் தாஸ், ராஜாஜி மற்றும் தீரர் சத்தியமூர்த்தி. பிரிடிஷ் ஆட்சியின் போது அந்த வக்கீல்களுக்கும் மற்றவர்களுக்கும் அரசியல் என்பது தேச விடுதலைக்காகக் கூடுவதும் உழைப்புதும்தான்.  அவர்களின் விடுதலை உணர்வினால் அந்த வக்கீல்களுக்கு மக்கள் மதிப்பு அதிகரித்தது.  

 

சுதந்திரத்திற்குப் பிறகும் வக்கீல்களின் அரசியல் பங்கு இன்றுவரை தொடர்கிறது - இந்தக் கால அரசியலுக்கு ஏற்ப. இன்றைய இந்தியாவில் வக்கீல்கள் கணிசமாகத் திசை மாறியது, தடம் புரண்டது, நமது சீரழிந்த அரசியல் தளத்திலும் அதன் தொடராகவும்தான். 

 

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அரசியல் தலைவர்கள் நேராகவும் சுயநலம் அற்றவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஈர்த்த வக்கீல்களும் மற்றவர்களும் ஒரு பொதுக் காரியத்துக்கான அர்ப்பணிப்புடன் காணப்பட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின் - அதுவும் பிரதமர் சாஸ்திரிக்குப் பின் - அரசியலில் அர்ப்பணிப்பும் நேர்மையும் குறைந்து கயமையும் ஊழலும் படிப் படியாக வளர்ந்து இன்று பல அரசியல் கட்சிகளின் தலைமைப் பீடத்தில் அமர்ந்திருக்கின்றன.  சட்டத்தினால் மட்டும் அந்தத் தலைவர்களை, அவர்களின் கொட்டத்தை, ஒடுக்க முடியாது.  அவர்களோடு இணைந்து சில முக்கிய கட்சிகளின் அங்கமாக அரசியல் செய்யும் பெரிய வக்கீல்கள் இந்தியாவெங்கும் உண்டு. 

 

சில கட்சிகளின் தலைவர்களும் சில பெரிய வக்கீல்களும் தங்களின் சுய நலன்களுக்காக ஒருவரை ஒருவர் காப்பாற்றி புத்திசாலி அரசியல் செய்கிறார்கள்.  அந்தப் பெரிய வக்கீல்களைப் பார்த்து, அடுத்த அடுத்த மட்டத்தில் இருக்கும் சில வக்கீல்களும்  தங்கள் நிலைக்கு ஏற்ற பல அரசியல் கட்சித் தலைவர்களிடம் நெருக்கம் காட்டி அந்த அளவிற்கான தப்பு அரசியல் செய்கிறார்கள்.  கட்சித் தலைவர்களின் கண்ணசைவில் வக்கீல்களுக்கு அங்கே இங்கே சில பதவிகளும் கிடைக்கின்றன. 


அனைத்து விதமான அரசியல்வாதிகளோடு சேரும்போது, அப்படியான வக்கீல்களுக்குள்ளும் பந்தா, சவால், சவடால்,  அநாகரிகப் பேச்சு என்ற அரசியல் கல்யாண குணங்கள் ஊறுகின்றன.  அவர்களைக் கவனித்து, தாங்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் சுய கட்டுப்பாடில்லாத மற்ற வக்கீல்களுக்கும் இந்த குணங்கள் ஒட்டிக் கொள்கின்றன.  இதன் எதிரொலிதான் அந்தப் பெண் வக்கீல் நடுத்தெருவில் தன் நிலை இழந்து போலீஸாரிடம் காண்பித்த ஆட்டம்.  டாக்டர்கள், சார்டர்டு அக்கௌண்டன்டுகள், மற்ற தொழில் செய்பவர்கள் யாரும் அனேகமாக அரசியலுக்கே வருவதில்லை என்பதால் அவர்கள் மாசுபடவில்லை, தங்கள் கௌரவத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.  இருந்தாலும் பொறுப்பான கௌரவமான வக்கீல்கள் பலரை இன்றும் எல்லா ஊர்களிலும் காணலாம் என்பதும் உண்மை.  

 

பிரச்சனை தலைக் காவிரியில் – அதாவது அரசியல் தலைவர்களிடம் – இருக்கிறது.   அதுவே மிகக் கலங்கி அழுக்கைப் பிரவாகமாகக் கீழே அனுப்புகிறது. அதை வக்கீல்கள் தூய்மைப் படுத்த முடியாது. தலைக் காவிரியே தானாகத் தெளிந்தால்தான் உண்டு. அந்தப் பெரு நதியோடு ஒரு உப நதியாகச் சேராமல் இருந்தால் வக்கீல்கள் தங்கள்  தொழில் குடும்பத்தைச் சீர் செய்து தங்களின் பழைய பெருமையைப் பெருமளவு மீட்க முடியும்.  அதுவோ இதுவோ நடக்கிற காரியமா? 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021

 


Thursday, 27 May 2021

பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஒரு ஆசிரியர். வெளியே சில முதலைகள்?

ஆர்.வி. ஆர்

 

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) ஒரு பெயர் பெற்ற பள்ளிக்கூடம். அங்கு ஆசிரியராக வேலை பார்க்கும் ஒரு ஆண், அந்தப் பள்ளியில் படிக்கும் சில மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாகப் பேசினார், நடந்துகொண்டார் என்ற புகார்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. பள்ளிக்கு யாரிடமிருந்தும் நேரடியாக ஒரு புகாரும் வரவில்லை. இருந்தாலும், தனது நற்பெயரையும் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, பள்ளி நிர்வாகம் தானாகவே அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியாக ஆராய்கிறது.

 

கிரிமினல் சட்டப்படி தமிழக அரசும் அந்த ஆசிரியர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டால் அந்த ஆசிரியருக்குத் தக்க தண்டனை கிடைக்கவேண்டும். பள்ளி நிர்வாகமும் அரசும் இதில் மும்முரமாக செயல்படுவது அவசியம். அது நடக்கிறது என்பதும் தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

சரி, இப்போதைக்கு வேறென்ன? வேறு விஷயமும் இருக்கிறது. தமிழ் நாடாயிற்றே! 

 

மற்ற விஷயம் சற்று சிக்கலானது. தெளிவான விஷயங்களைக் கூடத் திசை திருப்பி அதில் தனிப்பட்ட  ஆதாயங்கள் தேடுகிறவர்கள் அரசியல்வாதிகள். ஏற்கனவே அவர்கள் சிக்கலாக்கி வைத்திருக்கும் ஒரு விஷயத்தை  பிஎஸ்பிபி  விவகாரத்தில் குயுக்தியாகக் கையாண்டால் ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த ஆசை இருந்தால், அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா? அவர்கள் மாநில அரசாங்கத்தையும் நடத்துபவர்கள், அவர்கள் கட்டுபாட்டில் ஒரு டிவி செய்திச் சேனலும் இருக்கிறது என்றால் விடுவார்களா? அவர்கள் திமுக-வினர் என்றால் கேட்க வேண்டுமா?  

 

இந்த சிக்கலான விஷயத்தைப் பேசும்போது எச்சரிக்கை தேவை. எப்படி என்றால், பிஎஸ்பிபி  விவகாரத்தில் திமுக அரசு சம்பத்தப்பட்ட ஆசிரியர் மீதான சட்ட நடவடிக்கையை ஆரம்பித்தது நல்லதுதான். ஆனால் அந்த விவகாரத்தைப் பற்றி சில திமுக தலைவர்கள் பேசும் தொனியும் காண்பிக்கும் சமிக்ஞைகளும் அதை  சன் நியூஸ் தொலைக்காட்சி  அடிக்கடி ஒளிபரப்பும் விதமும் திமுக-வின் கெட்ட நோக்கத்தைக் காண்பிக்கின்றான. அது என்ன கெட்ட நோக்கம்?

 

பிஎஸ்பிபி கல்வி நிறுவனம் 60 வருடங்களுக்கு மேலாக இயங்குகிறது. சென்னையிலும் அதன் சுற்றத்திலும் உள்ள அதன் பள்ளிகளில் தற்போது சுமார் 8,000 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். சென்னையின் முதன்மையான பள்ளிகள் அவை. வெளியூர்களிலும் அந்த நிறுவனத்தின் பள்ளிகள் உண்டு.

 

சென்னையில் பிஎஸ்பிபி-யை நிறுவியது ஒரு ஹிந்து, ஒரு பிராமணர். இன்றும் அவரது குடும்ப உறுப்பினர் அதன் நிர்வாகத்தைக் கவனிக்கிறார். சென்னையில் மற்றவர்கள், சிறுபான்மை மதத்தினர், நடத்தி வரும் சிறந்த பள்ளிகளும் உண்டு.    

 

திமுக-வின் பல புராணக் கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒன்று: “இந்து என்றால் திருடன் என்ற அர்த்தம் உண்டு” என்று திமுக தலைவர் கருணாநிதி முன்னர் பேசியதாகவும் அவரைப் போலீஸ் விசாரணை செய்து வழக்குத் தொடர உத்தரவிட வேண்டும் என்று கேட்டும்   சென்னை ஹை கோர்ட்டில் ஒருவர் வழக்குப் போட்டார். அப்போது கருணாநிதி கோர்ட்டுக்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா? “உள்ளம் கவர்ந்த கள்வன்” என்ற அர்த்தத்தில்தான் பேசினேன்” என்று அவர் பதில் அளித்தார்.  சிரிப்பு வருகிறதா? அடக்கிக் கொள்ளுங்கள்.

 

சென்ற வருட மத்தியில் கந்த சஷ்டி கவசத்தை இழித்தும் பழித்தும் ‘கருப்பர் கூட்டம்’ என்ற அமைப்பினர் பொது வெளியில் ஆபாசமாகப் பேசினார்கள். அப்போது, திமுக-வின் “உள்ளம் கவர்ந்த கள்வர்களான” ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்திய கருப்பர் கூட்டத்தின் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க திமுக கேட்கவில்லை.  சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் வரும் என்ற நிலையில் அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரைப் பழித்து பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று பேட்டி கொடுத்து சுருக்கமாக முடித்துக் கொண்டார். அந்த அநாகரிகத்தைக் கண்டிக்கவில்லை என்ற பெயர் திமுக-விற்கு வராமல் இருக்க, ஹிந்துக்களைப் புண்படுத்திய செயலை லேசாகத் தலையில் தட்டிவிட்டு மறைந்துவிட்டார் அதன் அமைப்புச் செயலாளர்.  கருப்பர் கூட்டத்தின் பெயரைக் குறிப்பிட்டுக்கூட அவர் கண்டிக்கவில்லை (பார்க்க: nakkheran.in, 18.7.2020).

 

சர்க்கஸில் பார்வையாளர்கள் முன்பாக ஒரு கோமாளி இன்னொரு கோமாளியின் கன்னத்தில் அறைவான். திரைக்குப் பின்னால் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து சினேகமாக இருப்பார்கள். இது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.     

 

ஹிந்துக்கள் மீதான அலட்சியமும் அவமதிப்பான போக்கும், ஆனால் மற்ற மதத்தினர் மீதான போற்றுதலும் வணக்க சிந்தனையும், திமுக-விற்கு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். மற்ற மதத்தினர் அப்படியான போக்கை திமுக-விடம் எதிரபார்க்கிறார்கள் என்பதில்லை. அப்படியான நிலையை, அப்படியான எண்ணத்தை சூசகமாகவும் அவ்வப்போது வெளிப்படையாகவும் காட்டினால், சிறுபான்மை மதத்தின் சில தலைவர்கள் அதை விரும்பலாம், அதன் மூலம் அவர்களைத் திருப்தி செய்து அந்த சமுதாய மக்களின் ஓட்டுக்களைக் கொத்தாக அள்ளலாம் என்பது திமுக-வின் எதிர்பார்ப்பாக இருக்கும். திமுக-வின் இந்தப் போக்கு ஹிந்துக்களை அவமானம் செய்வதாகும், அவர்கள் மனதைப் புண்படுத்துவதாகும். இது போக இன்னொரு விஷயமும் உண்டு.

 

ஹிந்துக்களின் ஒரு ஜாதியினராகிய பிராமணர்களிடம் திக மற்றும் திமுக தலைவர்களுக்குத் தனியான “அலட்சியம்” (பல அர்த்தங்களில்) உண்டு.  இது ஊர் உலகம் அறிந்தது.  ஆகையால், இப்போது பிஎஸ்பிபி விவகாரம் ஒரு தனிப்பட்ட ஆசிரியரின் தவறாக, குற்றமாக இருக்கலாம் என்று அதை சட்டப்படி விசாரித்து மேல் நடவடிக்கை எடுப்பதோடு  நிற்க வேண்டாம் என்று திமுக தலைவர்கள் சிலர் எண்ணுகிறார்கள்.  ஹிந்து மதத்தினர் நிறுவி, அதுவும் ஒரு பிராமணர் தோற்றுவித்து அவர் குடும்பத்தால் நடத்தப்படும், புகழ் பெற்ற ஒரு கல்வி ஸ்தாபனத்தை அவமானப்படுத்தி அதன் மூலம் ஒழுகும் பலவிதமான ஆதாயங்களை அடையலாம் என்பது அவர்களின் கணக்கு என்று ஹிந்துக்கள், அதுவும் பிராமணர்கள், நினைக்க இடம் இருக்கிறது. ஹிந்துக்களின், பிராமணர்களின், நிலை தமிழ்நாட்டில் அப்படி. முக்கிய திமுக தலைவர்களும் அப்படி.   ஹிந்துக்களின் இந்தக் கணிப்பு  சமூக வலைத்தளங்களில் விரிவாகப் பகிரப்படுகிறது.  

 

தங்கள் கவலையை, தங்கள் உணர்வை, இப்போது வெளிப்படுத்தும் ஹிந்துக்களும் பிராமணர்களும் ஒன்றைக் கவனத்தில் வைக்க வேண்டும். அதாவது, “மற்ற மதத்தினர் நடத்தும் கல்வி நிலையங்களில் இது போன்ற  குற்றச்சாட்டுகள் எழும் போது, சில கட்சிக்காரர்கள் அந்தக் குற்றவாளிகளைக் கண்டும் காணாமல் இருக்கிறார்களே, அதே போல் பிஎஸ்பிபி விவகாரத்திலும் அந்தக் கட்சிக்காரர்கள் பாராமுகமாக இருக்கலாமே” என்று ஹிந்துக்கள் ஆசைப்படுகிறார்களோ – என்று பிறருக்குத் தோன்றாமல் கவனமாகப் பேசவேண்டும். பொதுவாக ஹிந்துக்கள் அப்படியான கவனத்துடன்தான் இந்த விஷயம் பற்றி விவாதிக்கிறார்கள். இது அவர்களுக்கும் நல்லது, சமூகத்திற்கும் நல்லது. தங்களின் உழைப்பால், சிறப்பால், தங்கள் கல்வி நிறுவனத்திற்குப் பேர் வாங்கிய பிஎஸ்பிபி நிர்வாகமும், தங்கள் பள்ளிகளில் எங்காவது தவறு நடந்தால் அதை முறையாகக் களைந்தால்தான் தங்களது பேரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்  என்று  உணர்கிறது.

 

ஆனாலும் ஒன்று. ‘திமுக தலைவர்களோ வேறு கட்சித் தலைவர்களோ மற்ற மதத்தினரின் கல்வி நிலையங்கள் அல்லது வழிபாட்டு நிலையங்களில் நடக்கும் எந்த ஒரு பாலியல் குற்றச்சாட்டையும் வன்மையாகக் கண்டிக்காமல் இருப்பது பற்றி ஹிந்துக்கள் இப்போது பேசக் கூடாது. பிஎஸ்பிபி  பள்ளி ஆசிரியரை மட்டும்தான் இந்த நேரத்தில் கண்டிக்கவேண்டும்’ என்ற ஒரு குரலும் அங்கங்கே கேட்கிறது. இது சாதாரண மனித இயல்பைப் புரிந்து கொள்ளாத குரல். நான் செலுத்த வேண்டிய வீட்டு வரி நிலுவையில் இருக்கிறது என்பதால் அரசாங்கம் நோட்டீஸ் கொடுத்து என்னிடம் வசூலிப்பது சரிதான், நியாயம் தான். ஆனால் என் பக்கத்து வீட்டிற்கும் எதிர்த்த வீட்டிற்கும் அரசு வேண்டும் என்றே  வீட்டு வரி வசூல் செய்யாமல் இருந்தால், அந்த வீட்டுக்காரர்களிடம் ஏன் வீட்டு வரி வசூல் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று நான் அரசைக் கேட்பது தவறா?  இல்லையே?

    

பிஎஸ்பிபி விவகாரத்தில், ஒரு மதத்தினர் - அதில் ஒரு பிரிவினர் - வெற்றிகரமாக நடத்தும் கல்வி நிலையம் என்பதால் இதில் நுழைந்த அரசியல் நெடி தூக்கலாக இருக்கிறது. இருந்தாலும் அந்தப் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு எதுவும் வந்தால் அது முறையாக விசாரிக்கப்படவேண்டும். அது நடக்கட்டும். மற்றபடி தங்கள் மதம், தங்கள் மதத்தவர்கள் பற்றி ஹிந்துக்கள் தைரியம் கொள்ளலாம். முகலாய ராஜ்ஜியத்தைத் தாண்டி இந்தியாவில் ஹிந்து சமூகம் தழைத்திருக்கிறது. நமது அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு மாநில அரசியல் கட்சியான திமுக-வையும் கடந்து ஹிந்து சமூகம் தமிழகத்தில் தொடரும், வளரும். இந்த விஷயத்தில் கருணாநிதியிடம் இருந்த வீரியம் ஸ்டாலினிடம் இல்லை. ஏதோ அப்பா மாதிரி காண்பித்துக் கொள்ளவேண்டும் என்று ஸ்டாலின் முனைகிறார். ஆனால் பாதிக்குப் பாதி வெத்து வேட்டாகத்தான் வெளிப்படுகிறார். உதயநிதி இன்னும் மென்மையாக இருப்பார். ஹிந்துக்கள் கல்வித் துறையிலும் பிற துறைகளிலும் தொடர்ந்து நேர்மையாக, அர்ப்பணிப்புடன் செய்யலாற்றிப் பேர் வாங்கலாம்.  போறுமே?  


* * * * * 

Copyright © R. Veera Raghavan 2021