Sunday 13 June 2021

ஊரடங்கு வீதியில் ஒரு பெண் வக்கீல் போலீஸுடன் லடாய்.

          - ஆர்.வி.ஆர்


இது போன வாரம் சென்னையின் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்தது. அந்த நிகழ்வின் வீடியோவை வாட்ஸ்-அப் உங்களுக்குக் காட்டியிருக்கும். 

 

காட்சியின் மத்திய நபர் ஆக்ரோஷத்தில் இருக்கும் ஒரு பெண் வக்கீல். அருகிலேயே வக்கீலுக்குப் படிக்கும் அவரது இள வயதுப் பெண். அவர்களுக்கு எதிரே போக்குவரத்துப் போலீஸ்காரர்கள் மூன்று நான்கு பேர். ஒரு போலீஸ்காரர் அந்த இளம் பெண் ஓட்டிவந்த காரை சேத்துப்பட்டில் நிறுத்தி, கொரோனா ஊரடங்கு நேரத்தில் அவர் வெளிவந்த காரணம், அவர் இ-பதிவு செய்தாரா என்று விசாரித்து அவருக்குச் சலான் வழங்க, அங்கிருந்தே அந்தப் பெண் தனது வக்கீல் தாயிடம் தகவல் சொல்ல அவரும் தனது சொகுசுக் காரில் ஸ்தலத்துக்கு விரைந்திருக்கிறார். வந்து போலீஸாரை நோக்கி வெடித்துப் பேசும் அந்தப் பெண் வக்கீலின் சுடு சொற்கள் சில:

 

"என்னைப் பாத்து யாருங்கறயா? இப்பக் காட்டட்டா? மவனே உன் யூனிபார்ம் கழட்டிருவேன்.  நான் அட்வகேட்."

 

(தெருவில் போகும் சில கார்களைக் காட்டி) "இதோ இந்தக் காரை நிறுத்து. அந்தக் காரை நிறுத்து. எல்லாக் காரையும் நிறுத்துரா"

 

"நான் எக்ஸ்டார்ஷன் போடட்டா?"

 

"மவனே சாவடிச்சுருவேன்."

 

(அவர் முகக் கவசம் அணியுமாறு ஒரு போலீஸ்காரர் சொன்னபோது)  "போடா!" 

 

போலீஸிடம் பேசுவதற்காக அவர் ஒரு விலை உயர்ந்த காரில் வந்திறங்கினார்.  அவர் ஒரு வக்கீல், அதுவும் பெண் வக்கீல்.  யாருக்காக வாதாட வந்தாரோ, அந்த நபர் பேச வந்தவரின் மகள், ஒரு இளம் பெண்ணும் கூட.  பகல் நேரம். தெருவில் வாகனங்கள் மற்றும் ஜனங்கள் உண்டு. போலீஸார் எச்சரிக்கையாக நடந்து கொள்ள இதற்கு மேல் ஒரு சூழ்நிலை வேண்டாம். அந்தப் பெண்ணிடம் போலீஸார் பேசிய வார்த்தைகள் - அதாவது முடிந்த அளவிற்குப் பேசியது - தவறில்லாதவை. அவர்களின் தொனியும் நிதானமானவை. அதற்கு நேர் மாறாக இருந்தது அந்தப் பெண்ணின் வீதிமணம் கமழும் உக்கிரப் பேச்சு. வீடியோ எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது. 

 

தொழில் புரிபவர்கள் வக்கீல், டாக்டர், சார்டர்டு அக்கவுண்டன்ட் இப்படிப் பல துறைகளில் இருக்கலாம். ஒரு டாக்டரோ ஒரு சார்டர்டு அக்கௌண்டன்டோ தெருவில் நின்றுகொண்டு அந்த வீடியோக் காட்சி நபர் மாதிரி போலீஸ்காரர்களிடம் பேசுவதை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா?  அது நிஜத்தில் நடக்காது. காரணம், வக்கீல் தொழிலை விட மற்றவர்களின் தொழில் கடினமானது, கண்ணியமானது என்பதல்ல. 

 

பிற தொழில்களை விட கண்ணியம் குறைந்ததல்ல வக்கீல் உத்தியோகம். அவர்கள் படிக்கவேண்டியது ஏராளம்.  அதற்கு மேல் ஓட்டமும் நடையும் நிறைந்தது அவர்கள் வாழ்க்கை. நீதிபதியிடம் பணிவு காட்டி, கோர்ட்டில் நிதானமாக சாமர்த்தியமாகப் பேச வேண்டியவர்கள் வக்கீல்கள். வழக்குக்காக கட்சிக்காரர்களிடம் பேசுவதற்கே அவர்களுக்கு நேரம் போதாது. முழு விவரங்கள் கிடைக்காமல், பல அர்த்தங்கள் சொல்லும் சட்டத்திற்கு நடுவில் நீதிபதிக்குத் தங்கள் கட்சியை விளக்கி வாதாட வேண்டிய வக்கீல்களின் வேலை கடினமானது. எல்லாவற்றையும் வைத்தே அவர்களின் பணிக்கு "மேன்மையான தொழில்" (noble profession) என்ற பெயர் கொடுக்கப் பட்டது

 

சரி, அப்படியானால் இன்று பொதுமக்கள் மனதில் வக்கீல்களுக்கு ஏன் உயர்ந்த மதிப்பு இல்லை? அதை ஊர்ஜிதம் செய்கிற மாதிரி ஒரு பெண் வக்கீல் கூட போலீஸாரிடம் நடந்து கொள்கிறாரே? இதற்கும் காரணம் உண்டு.

 

வக்கீல்கள் அர்ப்பணிப்புடன் பணி புரிந்து சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட காலம் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தின் முன்னணியில் பல வக்கீல்கள் இருந்தார்கள். உதாரணம்: மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், சித்தரஞ்சன் தாஸ், ராஜாஜி மற்றும் தீரர் சத்தியமூர்த்தி. பிரிடிஷ் ஆட்சியின் போது அந்த வக்கீல்களுக்கும் மற்றவர்களுக்கும் அரசியல் என்பது தேச விடுதலைக்காகக் கூடுவதும் உழைப்புதும்தான்.  அவர்களின் விடுதலை உணர்வினால் அந்த வக்கீல்களுக்கு மக்கள் மதிப்பு அதிகரித்தது.  

 

சுதந்திரத்திற்குப் பிறகும் வக்கீல்களின் அரசியல் பங்கு இன்றுவரை தொடர்கிறது - இந்தக் கால அரசியலுக்கு ஏற்ப. இன்றைய இந்தியாவில் வக்கீல்கள் கணிசமாகத் திசை மாறியது, தடம் புரண்டது, நமது சீரழிந்த அரசியல் தளத்திலும் அதன் தொடராகவும்தான். 

 

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அரசியல் தலைவர்கள் நேராகவும் சுயநலம் அற்றவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஈர்த்த வக்கீல்களும் மற்றவர்களும் ஒரு பொதுக் காரியத்துக்கான அர்ப்பணிப்புடன் காணப்பட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின் - அதுவும் பிரதமர் சாஸ்திரிக்குப் பின் - அரசியலில் அர்ப்பணிப்பும் நேர்மையும் குறைந்து கயமையும் ஊழலும் படிப் படியாக வளர்ந்து இன்று பல அரசியல் கட்சிகளின் தலைமைப் பீடத்தில் அமர்ந்திருக்கின்றன.  சட்டத்தினால் மட்டும் அந்தத் தலைவர்களை, அவர்களின் கொட்டத்தை, ஒடுக்க முடியாது.  அவர்களோடு இணைந்து சில முக்கிய கட்சிகளின் அங்கமாக அரசியல் செய்யும் பெரிய வக்கீல்கள் இந்தியாவெங்கும் உண்டு. 

 

சில கட்சிகளின் தலைவர்களும் சில பெரிய வக்கீல்களும் தங்களின் சுய நலன்களுக்காக ஒருவரை ஒருவர் காப்பாற்றி புத்திசாலி அரசியல் செய்கிறார்கள்.  அந்தப் பெரிய வக்கீல்களைப் பார்த்து, அடுத்த அடுத்த மட்டத்தில் இருக்கும் சில வக்கீல்களும்  தங்கள் நிலைக்கு ஏற்ற பல அரசியல் கட்சித் தலைவர்களிடம் நெருக்கம் காட்டி அந்த அளவிற்கான தப்பு அரசியல் செய்கிறார்கள்.  கட்சித் தலைவர்களின் கண்ணசைவில் வக்கீல்களுக்கு அங்கே இங்கே சில பதவிகளும் கிடைக்கின்றன. 


அனைத்து விதமான அரசியல்வாதிகளோடு சேரும்போது, அப்படியான வக்கீல்களுக்குள்ளும் பந்தா, சவால், சவடால்,  அநாகரிகப் பேச்சு என்ற அரசியல் கல்யாண குணங்கள் ஊறுகின்றன.  அவர்களைக் கவனித்து, தாங்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் சுய கட்டுப்பாடில்லாத மற்ற வக்கீல்களுக்கும் இந்த குணங்கள் ஒட்டிக் கொள்கின்றன.  இதன் எதிரொலிதான் அந்தப் பெண் வக்கீல் நடுத்தெருவில் தன் நிலை இழந்து போலீஸாரிடம் காண்பித்த ஆட்டம்.  டாக்டர்கள், சார்டர்டு அக்கௌண்டன்டுகள், மற்ற தொழில் செய்பவர்கள் யாரும் அனேகமாக அரசியலுக்கே வருவதில்லை என்பதால் அவர்கள் மாசுபடவில்லை, தங்கள் கௌரவத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.  இருந்தாலும் பொறுப்பான கௌரவமான வக்கீல்கள் பலரை இன்றும் எல்லா ஊர்களிலும் காணலாம் என்பதும் உண்மை.  

 

பிரச்சனை தலைக் காவிரியில் – அதாவது அரசியல் தலைவர்களிடம் – இருக்கிறது.   அதுவே மிகக் கலங்கி அழுக்கைப் பிரவாகமாகக் கீழே அனுப்புகிறது. அதை வக்கீல்கள் தூய்மைப் படுத்த முடியாது. தலைக் காவிரியே தானாகத் தெளிந்தால்தான் உண்டு. அந்தப் பெரு நதியோடு ஒரு உப நதியாகச் சேராமல் இருந்தால் வக்கீல்கள் தங்கள்  தொழில் குடும்பத்தைச் சீர் செய்து தங்களின் பழைய பெருமையைப் பெருமளவு மீட்க முடியும்.  அதுவோ இதுவோ நடக்கிற காரியமா? 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021

 


5 comments:

  1. The problem starts in the law college itself where the students identify themselves with some political party. I dont know about the medical colleges which might have students union, but CAs do not have any such set up. The union tendencies continue when the advocates enter the profession and identify themselves with a political party and develop closeness with the top brass of the political parties. Some also hold important posts in the political parties which they use to their personal advantage. If you want to root out this evil then stopping unionism at the school or college level is the solution

    ReplyDelete
  2. நானும் அந்த வீடியோ பார்த்தேன். அந்த போலீசை அதிகாரி நானாக இருந்திருந்தால், வாஞ்சிநாதன் ஆகி இருப்பேன்.
    தங்கள் கட்டுரை இன்றைய தலைமுறை வக்கீல்கள், குணங்கள், நெருக்கடிகள் ஆகியவற்றை தெளிவாக எடுத்துரைக்கிறது
    தொடக்க உங்கள் பணி.

    ReplyDelete
  3. சார், தங்கள் கட்டுரை அருமை நான் கருத்து ஏதும் கூறமுடியாதபடி முடிவில் தாங்களே திருக்காவிரியின் உற்பத்தியிலேயே(அரசியல் தலைமை) கலங்கல் உள்ளது,காலம் காலமாக,குறிப்பாக சுதந்திரத்துக்கு பிறகு. காந்தி நேரு,வக்கீலுக்கும்,நற்பண்புகளுக்கும் மிகுந்த எடுத்து காட்டாக கூறி உள்ளீர்கள்,ஒன்றும் வேண்டாம்,இந்த பெண்மனி நடந்தவற்றிற்கு ஒரு வருத்தம் தெரிவித்து twit செய்தாலே போதுமே. தண்டனை இந்தியாவில் குறைவு, அதனால் தவறுகளும்,திமிர்தனங்களும்,அதிகமாஉள்ளது,முதல்வரே, காவல் துறை க்கு பச்சை கொடி காட்டி நியாயப்படி நடக்க சைகை காட்டினால் மிகுந்த மாற்றம் அடிமட்டத்திலேயே பார்க்க முடியும்.மனித உரிமை எல்லா வற்றிற்கும் தலை காட்டும், போலீஸ்க்கு ஏற்பட்ட இந்த அவமானத்துக்கு வருமா.கடவுளே வந்து ஆட்சி புரிய அருள் புரிய வேண்டும். கோபால தேசிகன் வணக்கம்

    ReplyDelete
  4. வக்கீலாக இருப்பதினால் சமாளிப்பு கட்டுரை. தவறு தவறு தான்.அந்தப்பெண் வக்கீலாக இருக்கட்டுமே.அதற்காக நொண்டிச்சாக்கு தேடுவது நடுநிலைமை இல்லை.

    ReplyDelete