Monday, 19 July 2021

நாயுடன் நான் 20 நாட்கள்

         -- ஆர். வி. ஆர் 



ஆக்ஸிஸ். அதுதான் அவன் பெயர். என் வீட்டருகில் அந்தப் பெயர் கொண்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம் அறை இருக்கிறது. அதுவே அந்தத் தெரு நாயின் இளைப்பாறும் இடமானதால் அந்த வங்கியின் பெயரை அவனுக்குச் சூட்டினோம். தடியான தேகம், களையான முகம் உடையவன்.

 

பக்கத்துக் காலனிவாசி ஒருவர் ஆக்ஸிஸை இரண்டு வயது வரை வீட்டில் பராமரித்துப் பின் ஊர் மாறியபோது எங்கள் தெருவில் விட்டு நழுவினார். கைவிட்ட அரக்கரை மன்னித்து அக்கம் பக்கத்தினருடன் சிநேகம் காட்டி அந்த ஏ.டி.எம்-மின் ஏ.சி குளிர்நிலையில் தினமும் பலமணி  நேரம் சுகித்து வளர்ந்தான் ஆக்ஸிஸ்.  இப்போது அவன் வயது  எட்டோ ஒன்பதோ.  

 

எனது குடியிருப்புக் கட்டிடத்தின் எதிர்ப்புறத்தில் சற்றுத் தள்ளி இருக்கிறது அந்த ஏ.டி.எம். அதனுள் ஆக்ஸிஸ் போக நினைத்தால்முதலில் அதன் கண்ணாடிக் கதவு  ஓரத்தைச் சற்று மூக்கால் தள்ளுவான். கிடைத்த இடைவெளியில் முகத்தைச் சொருகி வழியை அகலப்படுத்தி உடலையும் நுழைத்தெடுத்து ஓரமாகப் படுப்பான். பின்னர் வெளியேறுகிற எண்ணம் வந்தால், உள்ளே வந்த ஒருவர் கதவை இழுத்து வெளியே செல்கையில் அவரை நாசூக்காகத் தொடர்வான். ஏ.டி.எம்-மில் அவன் இருக்கும்போது அங்கு நுழைபவர் அவனைப் பார்த்து அஞ்சாதிருக்க, வருகின்ற மனிதரைத் துளியும் ஏறெடுத்துப் பார்க்காமல் ஒரு துணிமூட்டை மாதிரிப் பாவமாகக் கிடப்பான் ஆக்ஸிஸ். காலப் போக்கில் அந்த ஏ.டி.எம் கஸ்டமர்களுக்கு அவன் இருப்பது பழகிவிட்டது. நம்பர் ஒன்று இரண்டு என்ற செயல்களை ஏ.டி.எம்-மிற்குள் நிகழ்த்தாமல் அவன் சமர்த்தாகவும் இருப்பான்.  ஜென்டில்மேன்!

 

தெருவில் வந்து போகிற எவரும் தன்னைக் கவனித்தால், அதுவும் கருணையுடன் பார்த்தால், அவரைச் சரியாகக் குறிப்பான் ஆக்ஸிஸ். அவர் அருகே சென்று வாலாட்டி நட்பு காட்டி அவரிடம் பரிதாபம் ஊறவைப்பான். அதன் மூலம் அவர் பிஸ்கட்டோ வேறு உணவோ வாங்கித் தரத் தூண்டுவான். அருகில் உள்ள போட்டோ கடைக்காரரை வசியம் செய்து, அவர் தினமும் இரவு கடை அடைத்த பின் ஒரு பாக்கெட் பிஸ்கட்டை அவனுக்கு தானம் செய்யும் புனிதக் கடமையை அவருக்கு ஏற்படுத்தினான் ஆக்ஸிஸ்.

 

எனது குடியிருப்புக் கட்டிடத்தின் வாட்ச்மேனுக்கும் ஆக்ஸிஸ் தோஸ்த் ஆகி அவ்வப்போது சாப்பாடு பெற்றான்.  பிராணிகளை விரும்பும் என் மனைவியிடமும் அவனுக்கு எப்போதும் பிஸ்கட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒருவர் கொடுத்தால் போதும் என்று மனிதத்தனமாக நினைத்து நான் அவனுக்குத் தனியாகத் தீனி கொடுக்காமல் இருந்தேன் – ஆனால் என் லாஜிக் அவனிடம் எடுபடவில்லை. 

   

பல சமயம் எங்கள் காம்பவுண்டில் உள்ள கார்ப் பாதையில் ஆக்ஸிஸ் அமர்ந்திருப்பான். ஆனால் எங்கள் கட்டிடத்திற்குள் அவன் வருவதில்லை - எங்கள் வாட்ச்மேனும் அதை அனுமதித்ததில்லை. நான் வந்துபோகும்போது ஆக்ஸிஸை வாஞ்சையுடன் பார்ப்பதை அறிந்து, நான் அவனுக்குத் தீனி கொடுக்காத அதர்மத்தை நானே உணரும்படி செய்தான்.  நான் எனது காரில் ஏறும்போதோ, அல்லது திரும்பி வந்து இறங்கும்போதோ, அருகில் வந்து என் கால்களில்  உரசி அன்பாகக் குரைத்து என்னை உருக்கி  வழிப்படுத்தினான் ஆக்ஸிஸ். பிறகு நானும் அவனுக்கு பிஸ்கட் தோழன் ஆனேன். கில்லாடிப் பயல்!

 

ஒரு நாள் எங்கள்  வாட்ச்மேன் வேலையை விட்டான். வாரக் கணக்கில் வேறு வாட்ச்மேனும் கிடைக்கவில்லை. அப்போது பல சமயங்களில் எங்கள் மெயின் கேட்டும்  கட்டிடத்தின் பாதுகாப்புக் கதவும் திறந்திருக்க, ஆக்ஸிஸ் கட்டிடத்திற்குள் வந்து படியேறி மூன்றாவது மாடியில் உள்ள எனது குடியிருப்பின் வாசலில் அமர்ந்துவிட்டான்.  அவ்வப்போது வெளியே சென்றும் வருவான். இரண்டு நாட்கள் கழித்து, மேல் மாடி வீட்டுக் காரர் அவனைக் கட்டிடத்தில் இருந்து  விரட்ட எண்ணி ஒரு பிரம்பால் அடிக்க,  அவன் தற்காப்பில் பலமாக உறுமியும் குரைத்தும் அவரைப் பயமுறுத்தினான். சத்தம் கேட்டு வீட்டுக் கதவைத் திறந்த என் மனைவி திடுக்கிட்டு, இருவருக்கும் சமாதானம் சொல்லி ஆக்ஸிஸை எங்கள் வீட்டிற்குள் கூட்டி வந்தாள். அன்றிலிருந்து இருபது நாட்கள் அவனுடன் நாங்கள் வாழ்ந்தோம்.  

 

தெருவில் இல்லாத அரவணைப்பும் பாதுகாப்பும் என் வீட்டில் கிடைத்ததை உணர்ந்தான் ஆக்ஸிஸ். அதை எனக்கும் நன்றாக உணர்த்தினான். சிறுசக்கரங்கள் பொருத்திய நாற்காலியில் அமர்ந்து நான் என் அறைக்குள் வேலை செய்யும் போது, என் நாற்காலிக்கு மிகப் பின்னால் அனாயாசமாகப் பக்கவாட்டில் படுத்து உறங்குவான். அவனது மூக்கோ காலோ எனது நாற்காலிச் சக்கரத்தைத் தொட்டிருந்தாலும், நான் மூடத்தனமாக நாற்காலியைப் பின்நகர்த்தி  அவனது உடல் உறுப்புகள் எதையும் காயப்படுத்த மாட்டேன் என்று நம்பினான் – நான்தான் அப்படி நம்பவில்லை.

 

பல நேரங்கள் நான் நாற்காலியில் இருந்து வெளிவந்து, அருகில் கண்மூடிப் படுத்திருக்கும் ஆக்ஸிஸின் உடலை அரிசி மூட்டையைத் தள்ளுவது மாதிரி தரையிலேயே இரண்டடி தள்ளி நகர்த்தினாலும், கண்ணைத் திறக்காமல் அப்படியே கிடப்பான். சாலையில் ஒரு வண்டி தூரத்தில் வந்தாலே பாதுகாப்பாக விலகும் அவன், வீட்டிற்குள் என்னால் அவனுக்கு ஒரு தீங்கும் வராது என்று நம்பிவிட்டான். அவனது நம்பிக்கையைச் சோதிக்க, கண்மூடிக் கால்கள் நீட்டி அவன் பக்கவாட்டில் படுத்திருக்கும்போது அவன் உடல்மீது நான் எனது உள்ளங்காலை வைத்தாலும், அது நான் என்று தெரிந்து அசைய மாட்டான்.  மிக லேசாக என் காலை அவன் மீது அழுத்தினாலும் அப்படியே கிடப்பான்.  அடுத்து என் காலை அவன் கழுத்தின் மீது – அதாவது குரல்வளையின் மேல் - மெதுவாக வைத்துப் பார்த்தாலும், “இந்த ஆள் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறானே!” என்று அதையும் பொறுத்துக் கண் திறக்காமல் சுவாசிப்பான். ஒரு ஜீவன் உங்கள் மீது பூரண நம்பிக்கையும் நேசமும் வைத்து அதைத் தன் முகத்திலும் உடல் மொழியிலும் காட்டுவது உங்களுக்கு உன்னத அனுபவம்.

 

கழுத்துப் பட்டை, பிடி கயிறுடன் ஆக்ஸிஸை தினமும் இரண்டு வேளை வீதியில் கூட்டிச் சென்றேன். முன்பு அநாதையாகத் திரிந்த வருடங்களில் அவன் ஈர்த்த பழவண்டிக்காரன், கோவில் பக்கமான பூக்காரி, காற்று வாங்க உலாத்தும் வெப் டிசைனர், இன்னும் சிலர் இப்போது எதிர்ப்பட்டு அவனைத் தட்டி நலம் விசாரித்தனர். பிறகு அவனுடன் நான் வீட்டில் இருக்கையில் அவன் முதுகை வருடுவது,  கழுத்தைத் தடவிக் கொடுப்பது, அவனிடம் செல்லப் பேச்சுகள் பேசுவது என்பதாக எனக்கு நாட்கள் கழிந்தன. அவனது தெரு வாசத்தில் கடந்த சில வருடங்களாக அவனுக்கு மிகவும் பழக்கமாகி உணவும் அளித்து வந்த ஒரு பெண்மணி, இனிமேல் அவனைத் தனது வீட்டில் வைத்துப் பராமரிக்க விரும்பினார். நடைமுறை நன்மைகளுக்காக நானும் மனைவியும் அவனுக்கு விடைகொடுக்கச் சம்மதித்தோம்.    

 

இப்போது ஆக்ஸிஸ் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுவிட்டான். அந்தக் குடும்பத்தினருக்கும் மகிழ்வைக் கொடுத்துத் தனது மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்கிறான் என்று தெரிந்தது. நமது வாழ்விலும் நாம் மகிழ்ச்சி காண்பதற்கான ஒரு பாதையை ஆக்ஸிஸ் வாழ்ந்து காட்டுகிறானோ?

 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021

 

 

 

11 comments:

  1. ஆஹா அருமை.. நல்வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  2. Just imagine. If humans were to live among the majority of animals, we would not match even one hundredth of their ability to accept life as they do.

    ReplyDelete
  3. அச்சு நம்மை நம்பிய தைப் போலவே யாரையும் நம்ப முடியுமா? நான் உங்கள் விளக்கக்காட்சியை அனுபவித்தேன்.

    ReplyDelete
  4. அருமையான சித்தரிப்பு. மனதைத் தொடுகிற நிகழ்வு. இப்பவும் ஆக்ஸிஸ் உங்கள் வீட்டுக்கு வந்து போகிறான் என நம்புகிறேன்.

    ReplyDelete
  5. விலங்குகளிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். நல்ல தொகுப்புக் கட்டுரை.

    ReplyDelete
  6. மிகவும் அருமை
    புதுமையான அனுகுமுறை
    நாயுணர்வு புரிந்து நடந்த மனிதாபிமானம்
    தங்கள் எழுத்து நடை
    Pandemic நேரத்தில் செய்த ஜீவகாருண்ய செயல்,நாயின் பிரிவு நாய்க்கும் உள்ளறியும், தாங்களும் அறியக்கூடும் axis absences, dasan GOPALA Desikan medavakkam Chennai

    ReplyDelete
  7. Yes Sir, I have seen that intelligent dog whenever I visit Axis ATM... Very touching experience you had...

    ReplyDelete
  8. Superb sir..as a pet parent myself, I can feel - not to limit to say understand - each and every word have written. Many times, while sleeping I put my leg on her, nudge her but she will not get hurt..she knows that we are sleeping and not doing it on purpose.

    Animals are greater than human beings in many ways.

    ReplyDelete
  9. Very Interesting Narration, Sir! I felt as if I was watching all those proceedings.
    I like to see Axis and give him some food.

    Chittanandam

    ReplyDelete
  10. நாயுடன் நட்பு பாராட்டியது அன்பு உள்லோருக்கு அகிலமும் நட்பு ஆகி விடும் என்று புரிய வைத்து வீட்டர்கள் . உங்கள் நடையின் யதார்த்தம் கண்களை ஈரமாக்கி விட்டது. இயல்பான வார்த்த்களில் ஒரு மனிதம் என்கிற மானாசீக வேள்வி நடத்தி இருக்கிறீர்கள.

    சொந்தம் என்பது உறவுகள் மட்டுமே இல்லை. அது ஒரு உன்னதமான உணர்வு .. உங்கள் அனுபவம் நெஞ்சை தொடும் ஒரு பாடம் . அருமை

    ReplyDelete