Friday 30 July 2021

ஜார்ஜ் பொன்னையா: "பிச்சை ஓட்டின் பெருமை எமதே!"

-- ஆர். வி. ஆர்


கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. சமீபத்தில் அங்கு ஒரு கண்டனக் கூட்டத்தில் அவர் பேசிய வீடியோக் காட்சி பலரது மொபைல் போன்களில்  தெரிந்தது. அவரது சில வார்த்தைகள்:

 

“திமுக-வினரே, நீங்க உங்களோட திறமையை வச்சு ஓட்டு வாங்கி தேர்தல்ல ஜெயிக்கலை. அது கிறிஸ்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் உங்களுக்குப் போட்ட பிச்சை.”

 

“எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ, செருப்புப் போடமாட்டார். ஏன்னா பூமாதேவியை  செருப்பால மிதிக்கமாட்டாராம். நாங்க ஏன் ஷூ போடறோம்னா, பாரத மாதாவோட அசிங்கம் நம்மகிட்ட தொத்திரக் கூடாதுன்னு. அதுனால நமக்கு சொறி சிரங்கு வந்துரக் கூடாதுன்னு ......”

 

"நாங்க நாப்பத்திரண்டு சதவிகிதம் இருந்தோம். இப்ப அறுபத்திரண்டு சதவிகிதம் தாண்டியாச்சு. இன்னும் கொஞ்சம் நாள்ள எழுபது சதவிகிதம் ஆயிருவோம்.  நாங்க வளர்றதை தடுக்க முடியாது.....”

 

          திமுக-வின் சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கான காரணம் குறித்துப் பொன்னையா பேசியதை அந்தக் கட்சி அதிகாரபூர்வமாக ஆட்சேபிக்கவில்லை. பொன்னையா வெளியிட்டது  பொய்யான கருத்தா அல்லது கசப்பான உண்மையா? எது சரி என்பதை நீங்களே ஊகிக்க முடியும். உங்கள் சரியான ஊகத்தை ஊர்ஜிதம் செய்ய இரண்டு காட்சிகளை நீங்கள் மனக்கண்ணில் பாருங்கள்.   

 

நல்ல உடம்புள்ள ஒருவன் தலை சொறிந்து பல்லிளித்து உங்களிடம் அடிக்கடி பிச்சை எடுத்து வந்தால் உங்களுக்கு அவன்மீது இளக்காரம் வரும். கோபத்தில் அவனைப்  “பிச்சைக்காரப் பயலே” என்று நீங்கள் திட்டினாலும் அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டான். ‘எல்லாரும் கேக்கறபடி அவர் என்னைத் திட்டியிருக்க வேண்டாமே’ என்று அவன் நினைத்தாலும், உங்களிடம் கையேந்துவதை நிறுத்த மாட்டான்.  

 

   அதே சமயம்,  ராமகிருஷ்ண மடம்  போன்ற ஒரு தொண்டு நிறுவனத்தால் நீங்கள் ஈர்க்கப்பட்டு அதற்கு ஒரு பெரிய தொகையை அவ்வப்போது நன்கொடையாக வழங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பிச்சை அளிப்பது என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள். உங்களுக்கு மன நிறைவு தருகிற ஒரு நல்ல காரியமாகத்தான் பார்ப்பீர்கள். அந்த நிறுவனமும் தங்களின் சமுதாய நலப் பணிகளுக்காகப்  பெறும் நன்கொடைகளைப் பிச்சை வாங்குவது என்று நினைக்காது. இப்படி இருக்கையில், உங்களுக்குக் கிறுக்குப் பிடித்து அந்தத் தொண்டு நிறுவனத்தைப் பார்த்து ‘பிச்சை எடுக்கிறவர்களே!’ என்று நீங்கள் இழித்துப் பேசினால், பிறகு அவர்கள் உங்களிடம் நன்கொடை பெறமாட்டார்கள். அதற்கான மானம் மரியாதை அவர்களிடம் உண்டு.  

 

இந்த இரண்டு உதாரணங்கள் மூலமே பொன்னையாவின் எண்ணமும் திமுக-வின் நிலையும் பளிச்சென்று தெரியும்.

 

‘ஓட்டுப் போடுவது குடிமக்களின் ஜனநாயகக் கடமையும் பொறுப்பும். அதன் மூலம் நல்லாட்சி தரும் ஒரு கட்சியைத் தேர்ந்தடுப்பது, நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது’ என்று பொன்னையா நினைத்தாரா? இல்லை. ‘நம்மைத் கும்பிட்டு நம் ஸ்தாபன காரியங்களுக்கு உதவுகிற ஒரு விசுவாசமான வேலைக்காரன் அரசாங்கத்தைப் பிடிக்க, நம் சமூகத்து ஓட்டுக்களை அவனுக்குப் பிச்சையாக அளிக்கச் செய்வோம்’ என்கிற யுக்தியைத்தான் பொன்னையா வெளிப்படையாகப் பேசிவிட்டார்.  இருவரின் போக்கும் நம் தேசத்திற்கு நல்லதல்ல.

 

ஹிந்துக்களின் கௌரவத்தையும் உரிமைகளையும் பா.ஜ.க. பாரபட்சமின்றிப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் 2014-லிருந்து அதிகமான ஹிந்துக்கள் அந்தக் கட்சிக்கு நாடெங்கும் ஆதரவு தருகிறார்கள். அது நமது கடமை, அது நமக்கும்  நமது தேசத்திற்கும் அதன் பாரம்பரியத்திற்கும்  நல்லது என்ற நினைப்போடு அப்படி ஆதரவு அளிக்கிறார்கள். தாங்கள் பா.ஜ.க-விற்கு ஓட்டளிப்பது அந்தக் கட்சிக்குப் போடும் பிச்சை என்று ஹிந்துக்களோ ஹிந்து மதத் தலைவர்களோ நினைப்பதில்லை. ஆனால் ஜார்ஜ் பொன்னையா மாதிரியான கிறிஸ்தவப் பாதிரியார்களும் வேறு சில சிறுபான்மை மதத் தலைவர்கள் மட்டும் தாங்கள் அளித்து வரும் திமுக ஆதரவை ஏன் அவர்கள் இடும் பிச்சை என்று எண்ணுகிறார்கள்? காரணம் இருக்கிறது.

 

தங்களின் பேச்சு, செயல்களின் மூலம் ஹிந்துக்களை, ஹிந்து உணர்வுகளை உதாசீனம் செய்யும் கட்சியாகத் திமுக பல சமயம் தோற்றம் அளிக்கிறது.  விவரம் தெரிந்த நிறைய ஹிந்துக்களும் அப்படி உணர்கிறார்கள். ஹிந்து உணர்வுகளைப் புறம் தள்ளாமல் மதிக்கும் கட்சியாக பா.ஜ.க  தலையெடுத்து விட்டதால், தன்னைப் பா.ஜ.க-வின் எதிரி என்று காட்டிக் கொள்ள திமுக தனது ஒரிஜினல் குணாதிசயத்தை இன்னும் வலுவாக நிலைநிறுத்த முனைகிறது. அதற்கு ஒரு வழி, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத அமைப்புகளிடம் பாசம், நேசம், பவ்யத்தை அதிகம் காட்டி தேர்தல் வெற்றிக்காக  அவர்களின் ஆதரவைத் தொடர்ந்து வேண்டி நிற்பது.  அந்த மத அமைப்புகளின் சில தலைவர்களுக்கும் திமுக-வின் இந்தப் போக்கு உதவுகிறது. இருந்தாலும் தங்கள் கட்சியின், தங்கள் கட்சித் தலைவர்களின் வசதி வளர்ச்சிக்காக ஒரு கட்சி இப்படிப் பணிந்து வந்தால், அதற்குத் துணை செய்யும் அந்த மதத் தலைவர்கள் தாங்கள் செய்யும் உதவியைப் பிச்சை என்று கருதுவது இயற்கை.

 

ஆனால் ஒன்று. திமுக-விற்கு ஓட்டளிக்கும் சாதாரண சிறுபான்மை மக்கள் யாரும் தாங்கள் அந்தக் கட்சிக்குப் பிச்சை எதுவும் போடுவதாக நினைப்பதில்லை.  அப்படியெல்லாம் நினைக்க அவர்களுக்குத் திராணியும் இல்லை, ஒரு பலனும் இல்லை. அவர்களே பாவம், அவர்களின் மதத் தலைவர்கள் பலரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.  சாதாரண சிறுபான்மை மனிதர் யாராவது ‘பாரத மாதாவின் மீது என் கால் பட்டால் சொறி சிரங்கு வரும்’ என்று தீர்மானித்து, பாரத மாதாவைக் குறிப்பாக அப்படி நினைத்தா செருப்பு அணிவார்? பொன்னையா மாதிரி குரூர ஹிந்து-விரோத எண்ணம் கொண்ட ஒரு மதத் தலைவர்தான் அப்படி எண்ணவும்  பேசவும்  முடியும்.  

 

   ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் தங்கள் எண்ணிக்கை எழுபது சதவிகிதம் எட்டப் போகிறது என்று ஹிந்துக்களைக் கீழ்நோக்கும் இறுமாப்புடன் கொக்கரித்தார் பொன்னையா. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில், ஹிந்துக்களின் உயர்ந்த நேசத்தைப் பெற்று அரசியல் சட்டம் வழியாக சில பிரத்தியேக உரிமைகளையும் பெற்றவர்கள் இந்திய சிறுபான்மையினர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் ஹிந்துக்களுக்கு அதே மாதிரியான விசேஷ உரிமைகள் தரப்பட வேண்டும் என்று இந்தியாவின் சிறுபான்மை மதத் தலைவர்கள் குரல் கொடுப்பதில்லை. அதைக்கூட ஒதுக்கலாம், அதனால் பாதகமில்லை. ஆனால் இந்தியாவிற்குள்ளேயே ஹிந்துக்களின் சகிப்புத் தன்மையையும் தோழமை உணர்வையும் சிறுபான்மை மதத் தலைவர்கள் பலர் ஒரு பலவீனமாகக் கருதுகிறார்கள். ஜார்ஜ் பொன்னையா அதன் வெளிப்பாடு. இந்தப் போக்கு நிதானமாக, ஆனால் உறுதியாக, களையப்பட வேண்டும். ஹிந்துக்கள் பொறுத்திருக்கட்டும். ஆனால் விழித்திருக்கட்டும்.


* * * * *


Copyright © R. Veera Raghavan 2021


3 comments:

  1. கீழ்கண்ட தங்களது கணிப்பு சபாஷ்.
    இந்தியாவிற்குள்ளேயே ஹிந்துக்களின் சகிப்புத் தன்மையையும் தோழமை உணர்வையும் சிறுபான்மை மதத் தலைவர்கள் பலர் ஒரு பலவீனமாகக் கருதுகிறார்கள். ஜார்ஜ் பொன்னையா அதன் வெளிப்பாடு. இந்தப் போக்கு நிதானமாக, ஆனால் உறுதியாக, களையப்பட வேண்டும். ஹிந்துக்கள் பொறுத்திருக்கட்டும். ஆனால் விழித்திருக்கட்டும்.

    ReplyDelete
  2. இந்த ஜார்ஜ் பொன்னைய்யாவின் ஆணவப்பேச்சு குறித்தும், தமிழ்நாட்டின் எதிர் நடவடிக்கை பற்றியும்,நம் தற்போதைய முதல்வரின் தேர்தல் வெற்றி ரகசியம் பற்றியும்,நேர்த்தியாக தங்கள் பதிவு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ரசனையோடு ,சிந்திக்கவைக்ஙிறது,இந்துக்கள் பொறுமை பற்றி சொல்லியவிதம். உண்மை இந்துக்கள் ஒற்றுமையோடு விழிப்புணர்வோடு, துணிவோடு களம் இறங்கி சீறவாவது வேண்டும். இந்துக்கள் உட்பிரிவு தனி தனியாக போனால் வேட்டைகாரன் காட்டில் மழை தான், தங்கள் பதிவு பல இந்துக்களை தூண்டிவிட்டிருக்கும். இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்களையும் அசர வைத்திருக்கும்.
    வாழ்க பாரதம்,வெல்க தமிழ்,
    கோபால தேசிகன் மேடவாக்கம் சென்னை வணக்கம் தாஸன்

    ReplyDelete