Thursday 5 August 2021

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: வாட்ஸ்-அப் வேதாந்தம்

 

        -- ஆர். வி. ஆர்

 

வாட்ஸ்-அப்பே பொழுதுபோக்கு, இதுல என்ன வேதாந்தம்னு  கேக்கறேளா?

 

எங்கயுமே பாருங்கோ, பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருக்க வழி தெரிஞ்சா, அதை வேதாந்தம்னு  உசத்தியா நினைக்கலாம். இப்ப நீங்களும் ஏதாவது ஒரு வாட்ஸ்-அப் குரூப்ல இருப்பேள் – ரண்டு மூணு குரூப்லயும் இருப்பேள். அதுல ஒருத்தருக்கொருத்தர் மாறுபட்ட கருத்து சொல்றது, முறைச்சுக்கறது, ஒருத்தர் கோச்சுண்டு விலகறதுன்னு நடந்திருக்குமே?  இதுக்குத்தான் வாட்ஸ்-அப் வேதாந்தம் நிவாரணமா இருக்கும்னு சொல்றேன்.

 

நீங்க எந்த மாதிரியான குரூப்ல இருக்கேள்? முதல்ல சொந்தக்காரா குரூப்லதான் எல்லாரும் சேருவா. கூடப் பிறந்தவா, அதை சேர்த்து அப்பா சைடு மனுஷான்னு ஒரு குரூப் இருக்கும். அடுத்தது, கூடப் பிறந்தவா, அதை சேர்த்து அம்மா சைடு மனுஷான்னு ஒரு குரூப் இருக்கும். பொண்கள்னா, அதிகமா ஒண்ணு ரண்டு குரூப்பும் அமையும் - ஆத்துக்காரரோட சேர்ந்து அவருக்கு அம்மா சைடு, அப்பா சைடுன்னு கூடலாம்.  நம்ம ஜனங்கள் மாதிரி வாட்ஸ்-அப் கம்பெனிக்கு இவ்வளவு பிரபல்யம்  யார் குடுக்க முடியும்?

 

சொந்தக்காரா உங்களுக்கு அமையறதுதான். கூடப் பிறந்தவாளுக்கு அடுத்த ஸ்தானத்துல இருக்கறவாளைப் பாத்தா, “எப்பிடி இருக்க? அம்மா அப்பா சௌக்கியமா?”ன்னு கேட்டு தொடர்பு வைச்சுக்கறது முதல் படி. அடுத்த படிக்கும் போய் அவாகிட்ட அன்னியோன்னியம் வச்சுக்கறது அந்த அந்த மனுஷாளைப் பொறுத்தது. மத்தபடி சொந்தக்காராட்ட சம்பிரதாய தொடர்பு வைச்சுக்க, நல்லது கெட்டது விஷயம் சொல்றதுக்கு வாட்ஸ்-அப் ஒரு வழி, அவ்வளவுதான்.

 

சொந்தக்காரா குரூப்ல உறவுக்கு உதவறதைப் பேசிண்டு, துக்கடா விஷயங்களைப் பகிர்ந்துண்டு, அபிப்பிராய பேதம் எதையும் வாட்ஸ்-அப்புல காட்டிக்காம நீங்க போயிண்டே இருக்கணும். நேரப் பாத்தா ஜாக்கிரதையா பேசிச் சிரிச்சுண்டே போறமே, அதுமாதிரி குரூப்லயும் இருக்கணும்.  நாலு விரல் மடக்கி கட்டை விரலை நிமித்திக் காட்டறது, கை தட்டறது, சிரிக்கற மூஞ்சி, சிரிசரின்னு சிரிக்கற மூஞ்சின்னு பொம்மைச் சித்திரங்கள் இருக்கே, அதுகளைப் போட்டுண்டே இருங்கோ. அதை விட்டுட்டு, ரகசிய கோப தாபங்களை முன்னுக்குக் கொண்டு வந்து “நான் ரைட்டு, நீ தப்பு”ங்கற தொனில எந்த விஷயத்தையும் நீங்க வாட்ஸ்-அப்புல சொந்தக்காரா கிட்ட விவாதம் பண்ண வேண்டாம். இதை மீறி நீங்க வார்த்தைகளை விட்டா, ஒருத்தர் ரண்டு பேர் திடீர்னு குரூப்லேர்ந்து விலகிப்பா. விலகினவாளுக்கு நெருங்கினவாளும் உங்களை விரோதமா பார்ப்பா. சம்பத்தப் பட்டவா அப்பறம் நேர்ல பாத்துண்டா உள்ளுக்குள்ள நெளிய வேண்டிருக்கும். பாருங்கோ, வாட்ஸ்-அப் ஆரம்பிச்ச நோக்கமே இங்க பழுதாப் போறது. இது வேண்டாமே?

 

இப்ப வயசான பலபேர், ஸ்கூல் காலேஜ் ஒண்ணா முடிச்ச பிரண்ட்ஸை தேடிப் பிடிச்சு வாட்ஸ்-அப் குரூப் வச்சுக்கறா. அந்த நண்பர்களோட பேசினாலே, நாம படிச்ச கால அளவுக்கு வயசு குறைஞ்ச மாதிரி ஜில்லுன்னு ஒரு உணர்வு இருக்கும். இதான், இந்த குரூப்போட பெரிய பிரயோஜனம். இந்த குரூப்ல யாரும் அரசியல் பேசாம இருந்தாதான், இது ஆரோக்கியமா இருக்கும். இல்லாட்டி மக்கர் பண்ணும். வெளில போன ஒருத்தரை மத்தவா தாஜா பண்ணி கட்டி இழுத்துண்டு வரணும். சொந்தக்காரா மாதிரி இவா தொடர்பும் நமக்கு அவசியம். அசட்டுப் பேச்சு பேசி நம்மளா அதைக் கெடுத்துக்கப் படாது.  

 

சிலபேர் வேற வகைல தெரிஞ்சவாளா அறிமுகம் ஆகி, அதுல ஒருத்தர் வாட்ஸ்-அப் குரூப் ஆரம்பிச்சு மத்தவாளை சேர்த்துக்கறா. அதுல முக்கியமா பொது விஷயங்களை பகிர்ந்துப்பா. பொது விஷயம்னா, அரசியல் விமரிசனங்கள் அதுல முக்கியமா வரும். அதுபோக சமூக விஷயங்கள் பத்தின கருத்துக்களும் அதுல எட்டிப் பாக்கும். இந்தமாதிரி குரூப்ல சூடா ஏதாவது கொதிச்சுண்டே இருக்கும். மனசுக்கு சேதாரம் இல்லாம இதுல நீங்க சேர்ந்து தங்கணும்னா ரண்டு விஷயம் இருக்கு. முதல்ல, இந்த குரூப்போட அரசியல் எண்ணம், சமூகப் பார்வை என்னவோ, அதுக்கு நீங்க உடன்படணும் – அது பொருந்தி வந்துதான் உங்களை அந்த குரூப்ல சேர்த்திருப்பா. அடுத்தது, குரூப்ல வர்ற சில விமரிசனங்கள் உங்களுக்கு சரின்னு படலையா, அதைப் பத்தி அட்மின்னு ஒருத்தர் இருக்காரே அவர் முடிவு எடுக்கட்டும்னு விட்டுடுங்கோ. இந்த மாதிரி ‘தெரிஞ்சவா குரூப்’ல அட்மின் முடிவெடுக்க விட்டாதான் ஒரு ஒழுங்கு இருக்கும். குரூப்ல இருக்கறவர் அட்மினுக்கு எதிராவே கச்சை கட்டினா சரிப்படாது. இன்னொண்ணு, தெரிஞ்சவா மத்தில அபிப்பிராயங்கள் முன்ன பின்னதான் இருக்கும். எல்லாத்துக்கும் பிலுபிலுன்னு சண்டை போடணும்னு இல்லை. நீங்க பேசாம இருந்தா மத்தவா சொன்னதை அப்படியே ஏத்துக்கறேள்னு அர்த்தமும் இல்லை. சரி, அட்மின் அனுமதிக்கற சில விஷயங்கள் சகிக்கலை, மகா தப்புன்னு நீங்க நினைச்சா குரூப்புக்கு அமைதியா டாட்டா காட்டிட்டு மத்த வேலையைப் பாருங்கோ.   தினம் உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும்.

 

இதெல்லாம் தாண்டி நீங்க வேற கட்சியாவும் இருக்கலாம். அதாவது, “வாட்ஸ்-அப்பே தொந்தரவா இருக்கு. அதுல சேர்ந்தா, தினம் அம்பது நூறுன்னு மெசேஜ் வநதுண்டே இருக்கு.  ஒவ்வொண்ணும் தந்தி மாதிரி எப்ப வேணும்னாலும்  வரது. டிங் டிங்னு ஃபோன்ல  சத்தம் வேற. ஒரு வீடியோவைத் திறந்தாத்தான் அது எதைப் பத்தின்னு தெரியறது, அதுவும் மியூசிக், கிராபிக்ஸ்லாம் முடிஞ்சதுக்கு அப்பறம்தான் என்ன சமாசாரம்னே புரிய ஆரம்பிக்கறது. எக்கச்சக்க மெசேஜ் வந்தா, நேத்திக்கு என்ன பாத்தேன்னு இன்னிக்கு ஞாபகம் இல்லை. நாளானா ஃபோனும் அடைஞ்சு போய் அதுல குப்பைய நீக்கிண்டே இருக்கணும். இதுனால நல்ல புஸ்தகங்கள் படிக்க முடியலை. முக்கிய வேலைகளும் தடைப் படறது. இனிமே வாட்ஸ்-அப்பே வேண்டாம்”னு சொல்றேளா? அப்படின்னா நீங்க சாதாரண வேதாந்தி இல்லை. மகரிஷி. குருவே நமஹ.

 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021

3 comments:

  1. Very interesting gossip.Thanks to Patti.

    ReplyDelete
  2. நீங்க சொல்றது ரொம்ப சரி. கூடிய சீக்கிரம் மகரிஷியாய்டுவா எல்லாருமே!

    ReplyDelete