Sunday, 9 October 2022

பாவம் ராஜராஜ சோழன்!

 -- ஆர். வி. ஆர்

 

அன்று மேடையில் நின்று பேசியவர் திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன். அருகில் அமர்ந்து ஆவரை ஆர்வத்துடன் கவனித்தவர் விடுதலைக் கட்சித் தலைவர் திருமாவளவன். பேசும்போது வெற்றி மாறன் குழம்பினார். மற்றவர்களையும் குழப்பினார். அதோடு, “நாம தெளிவோட இருக்கணும்” என்றும் தான் பேசியதற்கு மாறாகச் சொன்னார்.  குதர்க்கத்திற்கும் குழப்பத்திற்கும் பெயர் போன திருமாவளவன், இதைக் கேட்டு மகிழ்ந்திருப்பார். இது ஒரு வாரத்திற்கு முன் இந்தச் சூழ்நிலையில் நிகழ்ந்தது. 

 

சோழ மன்னன் ராஜ ராஜன் இடம் பெறும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பிரும்மாண்ட சினிமாவாக செப்டம்பர் 30-ம் தேதி வெளிவந்தது. மறு நாள், விசிக தலைவர் திருமாவளவனுக்கு அவரது மணிவிழாவை ஒட்டி ஒரு  சினிமாத் துறை அமைப்பு சென்னையில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தியது. அதற்கான மேடையில் திருமாவளவன் அமர்ந்திருக்க, அப்போதுதான் வெற்றி மாறன் இப்படிப் பேசினார்:

 

“தொடர்ந்து  நமது அடையாளங்களை நம்ம கிட்டேர்ந்து எடுக்கறாங்க. வள்ளுவருக்குக் காவி உடை குடுக்கறதா இருக்கட்டும், ராஜ ராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்கறதா இருக்கட்டும்,  இப்படித் தொடர்ந்து  நடந்துட்டிருக்கு.  இது சினிமாவுலயும்  நடக்கும்.  இந்த அடையாளங்களை நாம காப்பாத்திக்கணும். நம்முடைய விடுதலைக்காக நாம போராடணும்னா நாம அரசியல் தெளிவோட இருக்கணும். ...................”

 

ராஜ ராஜ சோழன் ஹிந்து அல்ல என்ற அர்த்தத்தில் வெற்றி மாறன் பேசியதைப் பின்னர் திருமாவளவன் ட்விட்டரில் ஆமோதித்தார்.  “ராஜ ராஜன் காலத்தில் சைவம் வேறு. வைணவம் வேறு ........ அக்காலத்தில் ஏது இந்து? ...... லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் ராஜ ராஜன் மீது இன்றைய இந்து அடையாளத்தைத் திணிப்பது சரியா?” என்று கேட்டுவிட்டு, வெற்றி மாறனின் கூற்றுக்காக அவரைப் “பெரியாரின் பேரன்” என்று புகழ்ந்தார். 

 

சைவம் என்பது சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்கும் சம்பிரதாயமாக ஒரு காலத்தில் பரவலாக இருந்தது. ஈ.வெ.ரா பெரியாரோ கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி” என்று வசை பாடியவர். அப்படியென்றால், லிங்க வடிவில் சிவனுக்குக் கோவில் எழுப்பி அக் கடவுளின் கீரத்தியைப் பரப்பி, அந்தக் கடவுளை வணங்கியதால் ராஜ ராஜ சோழனும் ஒரு அயோக்கியன், ஒரு காட்டுமிராண்டி” என்பாரா பெரியாரின் மைந்தர் திருமாவளவன்?  

 

திருமாவளவன் “பெரியார் பேரன்” என்று  வாயாரப்  பாராட்டிய வெற்றி மாறனும் தனது பேச்சின் மூலம் இதையா சொல்ல வருகிறார்? அதாவது: 


“ராஜ ராஜன் என்ற தமிழ் அரசன் ஹிந்து இல்லை. சைவ மதத்தவன் என்ற அடையாளயம்தான் அவனுக்கு இருந்தது. அதைத்தான் நாம் தற்காலத்தில் காப்பாற்ற வேண்டும். இருந்தாலும், ராஜ ராஜன் ஒரு பெரும் சிவ பக்தனாக வாழ்ந்ததால், நாங்கள் போற்றும் ஈ.வெ.ரா பெரியார் பார்வையில் அவன் ஒரு மஹா அயோக்கியனாக, வெறும் காட்டுமிராண்டியாகத் திகழ்ந்தான் என்பதையும் ஏற்கிறோம். அதுவும் அவனது பெருமையான அடையாளம்.”


என்று சொல்கிறாரா வெற்றி மாறன்? அதுதானே அவர் பேச்சின் அர்த்தம்? குழப்பத்தின் உச்சம் தொட்ட பிதற்றல் அல்லவா அவரது பேச்சும் அதன் அர்த்தமும்?

 

‘ஹிந்து மதத்தை எதிர்த்து ஏதாவது சொல்லவேண்டும், அதே சமயம் தமிழ் மன்னன் ராஜ ராஜனையும் தூக்கிப் பிடிக்க வேண்டும். இரண்டையும் சேர்த்துச் சொல்லும்போது, தஞ்சைப் பெரிய கோவில் எழுப்பியதற்காக ராஜ ராஜனை இகழக் கூடாது. அதற்கு ஒரே வழி ராஜ ராஜனை ஹிந்து மதத்திலிருந்து பிரித்து, அவன் ஹிந்துவே இல்லை, அவன் கட்டிய கோவிலில் உள்ள சிவனும் ஹிந்துக் கடவுளே இல்லை என்று ஒரே போடாகப் போட வேண்டும். அப்போதுதான் ஹிந்து மதத்தை மட்டும் சங்கடம் இல்லாமல் எதிர்க்கலாம்'.  இதுதான் ஹிந்து மத எதிர்ப்பாளர்களின் மன ஓட்டம். ஆனால் பெரியார் வைத்த வேட்டு, சிவ பெருமானை வணங்கிய ராஜ ராஜனுக்கும் சேர்த்துத்தான் என்ற உண்மை ஹிந்து மத எதிர்ப்பாளர்களுக்கு உறைக்காமல் போய்விட்டது. சிந்தையில் நேர்மையும் மனதில் நல்லெண்ணமும் இல்லாமல் போனதால் இந்த ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் குழம்பிப் போய்த் தாங்கள் வைத்த பொறியில் தாங்களே அகப்பட்டனர். 

 

அடுத்தது திருவள்ளுவர். அவருக்குக் காவி உடை சார்த்தி விட்டார்கள் என்பது பெரியார் பேரனுக்கு இன்னொரு ஆதங்கம். திருக்குறளின் முதல் அதிகாரத்தின் தலைப்பே “கடவுள் வாழ்த்து”. அந்த அதிகாரத்தில் “இறைவனடி சேராதார்” என்று ஒரு குறளும் முடிகிறது. கடவுளைப் போற்றிய, பரப்பிய, வணங்கிய திருவள்ளுவருக்கும் பெரியார் பார்வையில் ராஜ ராஜன் கதிதான். வெற்றி மாறன் என்ன சொல்லப் போகிறார்? “திருவள்ளுவர் காவிக்குப் பதில் வெள்ளை உடை தரித்துப்   படங்களில் இருக்கட்டும். பிறகு என் தாத்தா பெரியார் கணிப்பில் அவர் அயோக்கியர், காட்டுமிராண்டி என்று பெயர் பெறட்டும். அது திருவள்ளுவருக்குப் பாதகமில்லை. ஆனால் அவரது உருவம் காவி உடையில் யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது. அதுதான் தமிழர்களுக்குப் பெரிய இழுக்கு. குறளாசிறியரைக் காவி உடையில் காண்பித்தால்தான்  தமிழர்களின் அடையாளம் எங்கோ போய்விடும் – வள்ளுவருக்கு அயோக்கியன், காட்டுமிராண்டி என்ற பட்டங்கள்  கிடைப்பதால் அல்ல” என்பாரா வெற்றி மாறன்?

 

தமிழகத்தில் பெருவாரியான தமிழர்கள் பின்பற்றும் ஹிந்து மதம் முன் காலத்திய சைவத்தையும் உள்ளடக்கியதுதான் என்ற சாதாரண உண்மை வெற்றி மாறன் போன்ற ஒரு நல்ல சினிமா இயக்குனருக்கு உண்மையிலேயே புரியாதா என்ன?  புரியும்.  இருந்தாலும் எந்தத் துறையிலும் சில நடைமுறை சங்கடங்கள், அதன் பாதிப்புகள் இருக்கலாம்.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை, வேண்டும் என்றே மக்களிடையே ஒரு பிரச்சனையைப் பெரிதாகக் கிளப்பி மறியல், போராட்டம் என்று ஏற்படுத்தும் சக்தி படைத்த அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பாததை, அவர்களுக்குப் பிடிக்காததைச் செய்தால், சினிமாவில் பெரிய அளவில் ஜெயிப்பதில் பல சொல்லமுடியாத இடைஞ்சல்கள் உண்டு. விலகி நிற்பதை விடவும், அந்த அரசியல் தலைவர்களைப் புகழ்ந்து, அவர்களுக்குப் பிடித்த மாதிரி அவ்வப்போது நடந்து கொண்டால், அல்லது பேசினால், திரைத் துறையில் வாய்ப்புக்கும் வளர்ச்சிக்கும் செயற்கைத் தடைகள் வராது – திறமை உதவுவது என்பது வேறு விஷயம். அந்த நிலையில் பயனாளி ஒருவருக்கு வாலி பலம் கூடக் கிட்டும். தமிழகத்  திரைத் துறையில் பலருக்கும் இது மனரீதியான ஒரு நிர்பந்தம். அதனால் அவர்களில் பலர் அந்த மாதிரியான சில அரசியல் தலைவர்களின் ரசிகர்களாகவும் ஆகிறார்கள். இதெல்லாம் அவரவர் மனநிலை, சக்தி, சூழ்நிலைகளைப் பொறுத்த விஷயம்.

 

நல்ல சினிமா எடுக்கப்படும் பல மேலை நாடுகளில் சினிமாத் துறையினர் – அதில் திறமையானவர்கள் கூட - இப்படி அரசியல் தலைவர்களை அண்டியும்  கட்டியும்  நிற்பது உண்டா?  கிடையாது. ஏனென்றால், சீரழிந்த தமிழக அரசியல்  ஏற்படுத்தும் மறைமுக நிர்பந்தங்கள் அந்த  நாட்டுத் திரைத்துறையினருக்கு இல்லை.  

 

ஆனாலும் பாவம், திராவிடக் கட்சித் தமிழர்களிடம் சிக்கித் தவிக்கும் ராஜராஜனும் வள்ளுவரும்! அந்த இருவருக்காகவும் நமக்காகவும் இப்போது நம்மால் முடிந்தது ஒன்றுதான். "தமிழக அரசியலை சிவபெருமான் மீட்டுக் காப்பாற்ற வேண்டும்" என்று நாம் வேண்டிக் கொள்ளலாம்.  துன்பம் நேர்கையில்  இப்படி சிவபெருமானை வேண்டுவது நம் தமிழர்களின் அடையாளம் என்பதையாவது திருமாவும் வெற்றி மாறனும் ஒப்புக் கொள்வார்களே?


* * * * *


Copyright © R. Veera Raghavan 2022

Monday, 3 October 2022

ஓசியில் உளறிய அமைச்சர் பொன்முடி

 

-- ஆர். வி. ஆர்

 

தமிழக அமைச்சர் க.பொன்முடி சமீபத்தில் மேடையிலிருந்து பேசும்போது இரண்டு விஷயங்களில் முத்தாக உளறினார். அவரது கட்சியின் தலைவர், திமுக அரசின் முதல் அமைச்சர், மு. க. ஸ்டாலினை ‘நிரந்தர முதல்வர்‘ என்று ஓங்கிய குரலில் அப்போது பிரகடனம் செய்தார். பிறகு உடனே தமிழக முதல்வரை மேலும் மகிழ்விக்க எண்ணினாரோ என்னவோ, அவரைக் குறித்துத் தன் முன்னால் அமர்ந்திருந்த வாக்காளப் பெண்களைப் பார்த்து இப்படிப் பேசினார்:

 

உங்க குடும்பக் கார்டுக்கு நாலாயிரம் ரூபா கொடுத்தாரா இல்லையா? வாங்குனீங்களாவாயைத் திறங்க...! நாலாயிரம் ரூபா வாங்குனீங்களா.....? ம்ம்ம்.  இப்ப பஸ்ஸுல எப்படிப் போறீங்க? இங்க இருந்து கோயம்பேடு போணும்னாலும், வேற எங்க போணும்னாலும் ...... எல்லாம் ஓசி! ஓசி பஸ்ஸுல போறீங்க!” என்று சொல்லித் தலையாட்டி இளக்காரமாகப் புன்னகைத்தார்.  

 

பொன்முடி பேசிய வீடியோவைப் பார்க்கிறவார்கள் அவரது இளக்கார தோரணையை உணரலாம். அதன் பின்னால் ஒன்றிரண்டு சோகமான உண்மைகள் இருக்கின்றன.

 

தமிழ்நாட்டில் கடந்த சுமார் ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக மாறி மாறித் திமுக-வும் அதிமுக-வும் ஆட்சி செய்கின்றன. ஒரு உள்ளூர் பஸ் டிக்கட்டைக்  கூட சொந்தக் காசில் வாங்குவது சிரமம்தான், அதையும் அரசாங்கம் இலவசமாகக் கொடுத்தால் நல்லது என்று எண்ணும் நிலையில் ஒரு பிரிவு சாதாரண மக்களை – அதாவது சாதாரணப் பெண்களை – வைத்திருப்பது ஒரு அரசுக்கு எவ்வளவு இழுக்கு? இது கேவலம் அல்லவா?

 

இந்தக் கேவலத்தை எத்தகைய மக்கள் சகிப்பார்கள்? மிகச் சுமாரான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வருமானம் உள்ள மக்கள்தான் தலைவிதியே என்று ஏற்பார்கள். பல பத்தாண்டுகளாக அவர்களைக் கையாலாகாதவர்களாக வைத்திருந்து, “இந்தா வாங்கிக்கோ நாலாயிரம் ரூபாய். அது மட்டுமில்லை. இந்தா ஓசி பஸ் டிக்கட்டையும் வாங்கிக்கோ” என்று சொன்னால் பாவப்பட்ட மக்கள் என்ன செய்ய முடியும்? வாங்கத்தான் செய்வார்கள்.  அதற்கெல்லாம் அரசாங்கம் கணக்கு சொல்லலாம். ஆனால் கோடி கோடியாக அரசாங்க கஜானாவுக்குப் போகவேண்டிய பணத்தை சிலர் ஓசியாக எடுத்துக் கொண்டால் அது கணக்கில் வராது, அதற்குக் கேள்வியும்  கிடையாது.  

 

தமிழகத்தில் பெருவாரியான மக்களை அவர்களின்  அடிப்படைத் தேவைகளுக்காக சொந்தக் காலில் நிற்க வைக்காமல் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திராவிடக் கட்சிகள் ஆட்சி நடத்துகின்றன. அது அந்த மக்களின் காலில் ஊனம் செய்து வைப்பதற்குச் சமம். பிறகு “நீங்கள் ஆடாமல் நடப்பதற்கு எங்கள் ஆட்சி இலவசக் கைத்தடிகள் கொடுத்ததே? எங்கள் ஆட்சியில் கைத்தடிகள் வாங்கினீர்களா இல்லையா? வாயைத் திறந்து சொல்லுங்கள்” என்று ஒரு அமைச்சர் பெருமையுடன் அந்த மக்களைப் பார்த்துக் கேட்டால் என்ன அர்த்தம்?

 

தங்களது கால்களில் ஊனம் செய்வித்தது யார் என்பதைக் கூடச் சரியாக அறியாதவர்கள் அந்த மக்கள். கால் ஊனத்தோடு தங்கள் சொற்ப சுய மரியாதையிலும் அவர்கள் பொன்முடியிடம் இப்படி ஒரு உதை வாங்க வேண்டி இருக்கிறது. அதற்கும் தயாரானவர்கள் தானே வேலை இல்லாமல் அமைச்சர் பேசுவதைக் கேட்க வருகிறார்கள்? பாவம், அதிலும் அவர்களுக்கு ஏதாவது கிடைக்கலாம்.

 

தங்களை ஊனம் செய்தவர்களுக்கு ஏன் சாதாரண மக்கள் திரும்பத் திரும்ப, அல்லது மாறி மாறி,  ஓட்டுப் போடுகிறார்கள் என்ற கேள்வியில் மனிதாபிமானம் குறைவானது. நல்ல எண்ணமும் சகிப்புத் தன்மையும்  கொண்ட நமது சாதாரண மக்களை வைத்து ஜனநாயக நாடகம் நடத்தி செழிப்பது நமது அரசியல்வாதிகளுக்கு மிக எளிது. கிடைத்த அரசியல்வாதிகளை வைத்து நல்ல ஆட்சிக்கு வழி வகுத்துக் கொள்வது நமது மக்களுக்கு நூறு மடங்கு கடினம். தங்கள் தலையின் மீது நடக்க விரும்பாத உன்னதத் தலைவன் கிடைக்க அவர்கள் காத்திருக்க வேண்டும். பிறகு காலப்போக்கில் நமது ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்த பின்தான் மக்கள் தலையை மிதித்து நடப்பது எளிதல்ல என்று மற்ற கட்சித் தலைவர்கள் உணர்வார்கள்.

 

இப்போதைக்கு இன்னொரு விஷயம். நல்ல ஆரம்பக் கல்வி என்பது சிறந்த பண்புகளையும் சேர்ந்து போதிப்பது. பெற்றோர்கள் தவிர, கல்விக் கூடத்திலும் நல்ல ஆசிரியர்கள் மூலமாக நாம் நற்பண்புகளைக் கற்கிறோம். அப்படியும் பயன் அடையாதவர்கள் இருப்பார்கள் என்பது வேறு விஷயம். அமைச்சர் பொன்முடியைப் பொறுத்தவரை, தன் முன் கூடி இருந்த  பாவப்பட்ட பெண்களைப் பார்த்து அவர் அப்படிப் பேசியது சரியல்ல, நல்ல பண்பல்ல. இதை அழுத்திச் சொல்லவேண்டும். ஏனென்றால் தற்போதய திராவிட மாடல் மாநில அரசில் பொன்முடிதான் உயர் கல்வித் துறை அமைச்சர்.

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

Sunday, 3 July 2022

Nupur Sharma in the Supreme Court: Enlighten Us More, My Lords!

 -- RVR

 

Hon'ble Judges,


Two days ago, you heard Nupur Sharma's request in the Supreme Court. That was her plea to club at least nine FIR's filed against her in police stations across four States, with the one at Delhi. My Lords, I am a law-abiding citizen wanting to speak for ordinary people. Please enlighten us more on what you said in open court to Nupur's lawyer.


Nupur Sharma was facing threats to her life from hardcore Muslims. That was because, while speaking in a TV debate
a few weeks ago she made some statements about Prophet Mohammed that were factually correct and acknowledged in Islam as facts. Equally important, she spoke so on being provoked in that debate by a Muslim participant who made cheap remarks about a Hindu God. As judges who see more and hear more - but should speak less - you would know this was what happened in that TV debate. My Lords, please enlighten us more on what you said in court.


If Nupur Sharma felt she was exposing herself to violent physical attacks by visiting magistrates' courts across States to answer those FIR's, that would be natural. Three days before you heard her lawyer in court a tailor in Udaipur, Kanhaiya Lal, who shared his support to Nupur Sharma on social media had been killed in a knife attack by two hardcore Muslims in retaliation, with one of them making a video of the gruesome event – which he later circulated. If Nupur Sharma were my sister I would deeply feel for her on her apprehension about her safety. Would you not feel likewise My Lords, if she were your sister?


Oh, sorry My Lords. We understand that judges must discharge their functions fairly according to law, without personally or unreasonably feeling for Nupur Sharma - or of course for the other side. So the court may accept or decline her request for clubbing of FIR’s as it  considers right. That is not the issue now. What My Lords said in open court against her is what we wish to understand. Some quotes of what My Lords said that day, as found in newspapers, are here:


“She has threat or she has become security threat? The way she has ignited emotions across the country, this lady is single-handedly responsible for what is happening in the country.”

 

“It is so disturbing …… The outcome is what happened at Udaipur…… Please do not compel us to open our mouth …..”

 

"The petition smacks of her arrogance, that the Magistrates of the country are too small for her."

 

“She should have gone to the TV and apologised to the nation."


Look at it this way, My Lords.


Imagine that Nupur Sharma kept silent in the TV debate without reacting to the cheap remarks made by a Muslim about a Hindu God.


Also assume that another Muslim man had tweeted his support for those hurting remarks on TV and then two Hindus, wielding knives, killed that man for his tweet.

Now, should we expect that My Lords will likewise severely criticise in open court the Muslim who spoke so ill of a Hindu God on TV, and seemingly suggest – in this imaginary story – that the dastardly crime of the two Hindu killers was caused by that culprit mocking a Hindu God on TV?


What do we understand, My Lords, in your strong condemnation of Nupur Sharma? Especially in the background of the horrific Udaipur murder?


Should we believe that Nupur had no provocation from a Muslim in a TV debate to say instantly what she said?


In any case, is it not true that Nupur's statement is acknowledged in Islam as a historical fact?


Should we believe that two men with knives may be fairly provoked enough to kill a person who merely voiced his support to Nupur Sharma?

 

Should we believe that the real villains here are not the man who first spoke basely about a Hindu God on TV drawing Nupur Sharma’s instant reaction, and perhaps not also the two Udaipur killers, but that Nupur Sharma is the villain?


And finally, if a judge of a district court or high court - not the supreme court - had expressed himself likewise in open court, should we believe that the supreme court will stand by that?


Sure, My Lords, minorities may be passionate about their religion. Sure also, My Lords, that the majority too could be passionate about their religion.  But neither should be allowed to intimidate or subdue the other, that too abusing any special rights law may give them – right or wrong?


And may we know: If the contempt law protects judges against individuals who act in disrespect or denigration of judges – no doubt, judges need such protection - is there protection for an individual from a judge who overspeaks?


My Lords, we are so confused. Please pardon us for any limited understanding. And for wanting to understand more on happenings that trouble our hearts and minds to a limit when we cannot hide our aches. So we speak out – that’s perhaps our safety valve.


We must say this too. We are anguished that the most outstanding defender and saviour of our democracy has to face some questions now. We hope time is a corrective and a healer


Most Respectfully,


A law-abiding citizen


* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

Friday, 27 May 2022

ஒரு பேரறிவாளன். ஒரு பேரபாயம்

-- ஆர். வி. ஆர் 


 

பேரறிவாளன் யார்? ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப் பட்டவர்களில் ஒருவர். அந்த வழக்கில், இவர் உட்பட நான்கு குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் முதலில் மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்தது - அதோடு வேறு மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 

தம் தேசத்தைப் பெருமிதமாக நினைக்கும் இந்தியர்கள், தமது முன்னாள் பிரதமரைக் கொடூரமாகக் கொலை செய்யும் சதியில் ஈடுபட்ட அந்தக் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ உச்ச நீதிமன்றத்தில் கிடைத்தது பொருத்தம் என்று திருப்தி அடைந்திருப்பார்கள். ஆனால் பிற்பாடு அவர்களின் திருப்தி சட்டத்தில் மெள்ள மெள்ளக் கரைந்து கொண்டிருக்கிறது. அது எப்படி?

 

முதலில் - ஒரு வருடத்திற்குள் - அந்த நான்கு மரண தண்டனைக் குற்றவாளிகளில் ஒருவரான நளினிக்கு, தமிழக அரசின் சிபாரிசால் அவரது தண்டனையைத் தமிழக ஆளுநர் ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்ற மூவரின் மரண தண்டனையைக் குறைப்பதற்காக  அவர்கள் போட்டிருந்த  கருணை மனுக்கள் ஆளுநர், ஜனாதிபதி, அரசாங்கம் என்று அங்கும் இங்கும் அல்லாட, அதனால் மட்டும் அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேறுவது சுமார் 11 வருடங்கள் தாமதமானது.

 

அந்த மூவரின் தூக்கு தண்டனை வருடக்கணக்கில் நிறுத்தி வைக்கப்படஅந்த நாட்களில் 'நாம் பிழைப்போமா, அல்லது நமது கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்டு நாம் கடைசியில் தூக்கு மேடையில் உயிர் துறப்போமா' என்ற மன உளைச்சலுக்கு அந்த மூன்று குற்றவாளிகளும் ஆளானார்கள், விளக்கம் சொல்லமுடியாத அந்தக் கால தாமதமே அவர்களுக்கு நேர்ந்த “சித்திரவதை” (torture) என்று உச்ச நீதிமன்றமும் கருதியது. அப்படியான "சித்திரவதை" அந்தக் குற்றவாளிகளுக்கு நீடிக்கக் கூடாது என்பதற்காக, நாட்டின் முன்னாள் பிரதமரைத் தீர்த்துக்கட்ட சதி செய்த அவர்களின் மரண தண்டனையை நமது உச்ச நீதிமன்றமே ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. ஆகவே அந்த மூவரும் ஆயுள் தண்டனைக் கைதிகள் ஆனார்கள் - பேரறிவாளன் உட்பட. 

 

நீதிமன்றம் தண்டித்த எந்தக் கிரிமினல் குற்றவாளிக்கும், கருணை அடிப்படையில் தண்டனைக் குறைப்போ அல்லது விடுதலையோ அளிக்க ஜனாதிபதிக்கும் மாநில ஆளுநர்களுக்கும் நமது அரசியல் சட்டத்தில் அதிகாரம் இருக்கிறது. இப்படி ஒரு அதிகாரம் அளிக்கப் பட்டிருப்பது, கொள்கை அளவில் சரிதான். இது போன்ற சட்டம் பல நாடுகளிலும் உண்டு. ஆனால் எந்தக் குற்றவாளிக்காக, எத்தகைய குற்றத்திற்கு, இந்த ஷரத்தை உபயோகித்து ஒரு அரசாங்கம் தண்டனக் குறைப்பு செய்ய முன்வரலாம், நீதி மன்றமும் அதை ஆமோதிக்கலாம் என்பதை அரசியல் சட்டம் சொல்லவில்லை. எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்கு சட்டம் வழி வகுக்கலாம்.  ஒருவன் வயிறு முட்ட எவ்வளவு சாப்பிடலாம் என்பதையும் சட்டமா சொல்லும்?

 

    நீதிமன்றம் தண்டனை அளித்த ஒரு குற்றவாளிக்கு, அரசாங்கம் பின்னர் மன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் அதிகாரத்திற்கான அடிப்படை என்ன? இதை அழகாக விளக்குகிறார் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் ஹோம்ஸ். இவை அவரது வார்த்தைகள்: “மன்னிப்பு வழங்கப்பட்டால், நீதிமன்றத் தீர்ப்பு அளித்த தண்டனையைக் குறைத்து வைப்பது பொது நலனுக்கு மேலும் உகந்தது என்று உயர்மட்ட அதிகாரத்தில் உள்ளவர் முடிவு செய்கிறார் என்று பொருள்”.  

 

ஒரு குற்றவளிக்கு அரசாங்க மன்னிப்பு வழங்குவதில் பொது நலன் உயர்ந்து இருக்கவேண்டும், அதுதான் ஒரு அரசாங்கம் வழங்கும் மன்னிப்பின் அடிப்படை, அதுதான் சட்டத்தின் தாத்பரியம் என்ற மேலான எண்ணத்தை வெளிப்படுத்துகிறார் ஜஸ்டிஸ் ஹோம்ஸ்.  சர்வதேச அளவில் சட்ட வல்லுனர்கள் மத்தியில் ஜஸ்டிஸ் ஹோம்ஸ் ஏன் பெரிதும் மதிக்கப் படுகிறார் என்பதற்கு அவரது இந்த விளக்கம் ஒரு உதாரணம்.

 

      சரி, ஜஸ்டிஸ் ஹோம்ஸ் சொன்ன வார்த்தைகளை  இந்திய உச்ச நீதிமன்றம் ஆமோதிக்கிறதா? ஆம், ஆமோதித்து அவரது வார்த்தைகளை ஒரு தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருக்கிறது. எந்த சந்தர்ப்பத்தில் நமது உச்ச நீதிமன்றம் அவ்வாறு ஆமோதித்தது என்பதும் சுவாரசியமானது.

 

பேரறிவாளனின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும் தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு மாதம் முன்னர், இந்திய உச்ச நீதிமன்றம் வேறு வழக்கில் ஒரு தீர்ப்பு எழுதியது.  பல மாநிலங்களில் உள்ள மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் காரணமில்லாமல் நீண்ட வருடங்கள் ஆளுநரிடமும் ஜனாதிபதியிடமும் நிலுவையில் இருந்ததால் அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது அந்த முந்தையத் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பில்தான், ஜஸ்டிஸ் ஹோம்ஸ் எழுதிய விளக்கத்தையும் ஆமோதித்து மேற்கோள் காட்டினார் அத் தீர்ப்பை எழுதிய நீதியரசர் திரு. பி. சதாசிவம் - அமர்வில் இருந்த மற்ற இரு நீதிபதிகள் அந்தத் தீர்ப்போடு உடன் பட்டார்கள்.


ஜஸ்டிஸ் ஹோம்ஸின் வார்த்தைகள் அர்த்தம் மிகுந்தவை. அதைத் தமது தீர்ப்பில் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நாம் சல்யூட் வைக்கலாம். ஆனால் ஜஸ்டிஸ் ஹோம்ஸ் சொன்ன விளக்கத்தின் சாரத்தை நமது உச்ச நீதிமன்றம் முழுதாக ஏற்று சம்பந்தப்பட்ட வழக்குகளில் தங்கள் தீர்ப்பை வழங்கியதா என்ற கேள்விக்கு, நமக்குத் திருப்தியான விடை கிடைக்காது. 

 

பல மாநிலங்களின் மரண தண்டனைக் குற்றவாளிகளுக்கு அந்த முந்தைய தீர்ப்பு தண்டனைக் குறைப்பு செய்து ஆயுள் தண்டனை வழங்கியதே, அதில் தனது குடும்பத்தினர் 13 பேர்களைக் கொன்ற குற்றவாளியும் பயன் அடைந்தார்.  அதே தீர்ப்பில், கருணை மனுக்கள் போட்டு வருடக் கணக்கில் காத்திருக்கும் மரண தண்டனைக் கைதிகள் எளிதாக நிவாரணம் பெறுவதற்காக, நமது உச்ச நீதிமன்றம் இப்படிச் சொல்கிறது: “குற்றத்தின் தீவிரத் தன்மை, அதிலுள்ள அசாதாரணக் கொடுமை அல்லது சமூகத்திற்கு அந்தக் குற்றம் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகள் ஆகியவை (அதாவது, தண்டனைக் குறைப்பு செய்வதற்கு) ஒரு பொருட்டல்ல” [“Considerations such as gravity of the crime, extraordinary cruelty involved therein or some horrible consequences for society caused by the offence are not relevant” – Shatrughan Chauhan v.  Union of India, 2014 (3) SCC 1, para 64].

 

மேலே உள்ள வார்த்தைகள், நமது உச்ச நீதிமன்றத்தின் கண்ணோட்டம். ஆனால், அரசாங்கத்திடம் உள்ள மன்னிப்பு-வழங்கும் அதிகாரத்தின் தாத்பரியத்தை அமெரிக்க நீதிபதி ஜஸ்டிஸ் ஹோம்ஸ் எப்படித் தொலைநோக்குடன் சிறப்பாக விளக்கினார் பாருங்கள். அது, “நீதிமன்றத் தீர்ப்பு அளித்த தண்டனையைக் குறைத்து வைப்பது பொது நலனுக்கு மேலும் உகந்தது என்று உயர்மட்ட அதிகாரத்தில் உள்ளவர் முடிவு செய்கிறார் என்று பொருள்” என்கிறார். ஒரு இந்தியராக நீங்கள் இப்போது பெருமூச்சு விட்டால் அது இயற்கை.    

 

குறைக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு மாறிய பேரறிவாளனை, பத்து நாட்கள் முன்பாக (18.05.2022) நமது உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டு அவர் வெளிவந்தார். அதற்குக் காரணம்: அவருக்குக் குறைக்கப் பட்ட ஆயுள் தண்டனையை இன்னும் குறைத்து அவரை உடனே விடுதலை செய்ய முந்தைய தமிழக அரசு ஆளுநருக்குச் சிபாரிசு செய்தது, ஆனால் அந்த சிபாரிசுக்கு சட்டப்படி கட்டுப்பட்ட ஆளுநர் அதை ஏற்றுக் கையெழுத்திடாமல், இரண்டரை ஆண்டுகளாகக் கால தாமதம் செய்தார், ஆகையால் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அந்த வழக்கில் உச்சநீதிமன்றமும் – சில முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையிலும், தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தியும்  – பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்தது.

 

வெளிவந்த பேரறிவாளனைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆரத் தழுவி சால்வை போத்தி வரவேற்றார். பின்னர் அவரை அழைத்து அவரோடு ஆற அமர உட்கார்ந்து குசலம் விசாரித்து தேநீர் குடித்து மகிழ்ந்தார். 


கூட்டிக் கழித்துப் பார்த்தால், என்ன நடக்கிறது? தேசத்தின் முன்னாள் பிரதமரைப் படுகொலை செய்யும் சதியில் ஈடுபட்ட சிலரின் மரண தண்டனையை நமது உச்ச நீதிமன்றமே ஒரு காரணம் சொல்லி ஆயுள் தண்டனையாகக் குறைக்கிறது. பின்னர், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் அந்த அத்தனை சதிகாரர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டின் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக் கேட்கின்றன. அதன் விளைவாக ஒரு சதிகாரர் இப்போது வெளிவந்தவுடன் இந்நாள் தமிழக முதல்வர் அந்தக் குற்றவாளியை - ஒரு முன்னாள் பிரதமரைத் தீர்த்துக் கட்ட சதி செய்தவரை - கட்டித் தழுவி வரவேற்கிறார். இந்த ஓட்டுமொத்தக் காட்சியிலும் ஒரு அபத்தம், ஒரு கேவலம் இல்லையா? எந்த முதிர்ச்சியான ஜனநாயகத்திலாவது நீங்கள் இது போன்ற ஒரு காட்சியைக் காண முடியுமா? 

 

திராவிடக் கட்சித் தலைவர் ஒருவரைத் தீர்த்துக் கட்டும் சதியில் பேரறிவாளன்  ஈடுபட்டு ஆயுள் தண்டனை பெற்றிருந்தால், அந்தக் கட்சியினர் பேரறிவாளனின் முன்-கூட்டிய விடுதலைக்காகக் குரல் கொடுத்திருப்பார்களா என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேட்கிறார்கள். இதற்கு அந்தக் கட்சியினர் நேர்மையாக பதில் சொல்ல முடியாது. ஆனால் இதற்கு மேலும்  ஒன்று இருக்கிறது.

 

நமது உச்ச நீதி மன்றம் தெளிவாக்கிய சட்ட நிலை என்ன? ஒரு மரண தண்டனைக் குற்றவாளியின் கருணை மனுவை  ஆளுநர் மற்றும் ஜனாதிபதி பைசல் செய்ய நீண்ட காலம் ஏற்பட்டு, அந்தக் கால தாமதத்திற்கு சரியான விளக்கம் இல்லை என்றால்,  அந்தக் குற்றவாளி “சித்திரவதை”க்கு (torture) ஆளானதாக அர்த்தம், அந்தக் கால தாமதத்தின் காரணமாகவே அவரது மரண தண்டனை குறைக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் படவேண்டும், என்பதாகும். இந்த தண்டனைக் குறைப்பிற்கு, அந்தக் குற்றவாளி நிகழ்த்திய  குற்றத்தின் தீவிரத் தன்மை, அதன் கொடூரம்,  அது சமூகத்தில் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகள் ஆகியவை ஒரு தடையல்ல என்பதும் உச்ச நீதிமன்றத்தின் பார்வையாக இருக்கிறது.

 

உச்ச நீதிமன்றத்தின் இந்த சட்ட விளக்கம் சரியானதா, பொது நன்மைக்கு உகந்ததா என்று பார்க்க, நாம் ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்து ஒரு கேள்வி கேட்டுப் பார்க்கலாம்.  

 

ஒரு இந்திய நீதிமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் குண்டுகள்  வெடிக்கச் செய்து பல நீதிபதிகள் உயிர் இழக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கொலைக் குற்றத்திற்காக அந்தத் தீவிரவாதிகள் மரண தண்டனை பெற்று அவர்கள் ஜனாதிபதிக்குக் கருணை மனுக்களும் அனுப்புகிறார்கள், ஆனால் காரணமே இல்லாமல் அந்தக் கருணை மனுக்கள் வருடக்கணக்கில் நிலுவையிலேயே இருக்கின்றன, அதனால் அவர்களின் தூக்கு தண்டனையும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது உச்ச நீதிமன்றம் அந்தக் குற்றவாளிகளை எப்படிப் பார்க்கும்?

 

அப்போதும் உச்ச நீதிமன்றம் “கருணை மனுக்கள் மீதான காலதாமதத்தால் இவர்கள் மனதளவில் சித்திரவதை அனுபவித்தவர்கள், ஆகவே இவர்களின் மரண தண்டனையைக் குறைத்து இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.  அதற்கு, இந்தத் தீவிரவாதிகள்  நிகழ்த்திய  குற்றத்தின் தீவிரத் தன்மை, அதன் கொடூரம், அது சமூகத்தில் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகள் ஆகியவை தடையல்ல” என்று தீர்ப்பளிக்குமா என்ன? இல்லை என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் அது நடக்குமானால், அப்படியான குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையையும் குறைத்து அவர்களை உடனே சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும்  என்று ஒரு அரசு ஆளுநருக்கோ ஜனாதிபதிக்கோ சிபாரிசு செய்து அந்தப் பாதகர்களை வெளியே கொண்டு வரலாம். இப்படித்தானே பேரறிவாளன் சிறையிலிருந்து வெளியே வந்தார், பின்னர் தமிழக முதல்வரால் ஆரத் தழுவி வரவேற்கப்பட்டார்?

 

 ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் தண்டனைக் குறைப்பு அதிகாரம், மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்படும்  கால தாமதத்தால் அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் கோர்ட்டின் அதிகாரம் ஆகியவை பற்றி, இப்போதுள்ள சட்ட நிலையின் ஒரு பக்கத்தை  சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்வது அவசியம். அதாவது, குற்றவாளிகளுக்கு அளிக்கப் படும் இந்தச் சலுகைகள் அவர்கள்  புரிந்த குற்றத்தின் தீவிரத் தன்மை, அதன் கொடூரம்,  அது சமூகத்தில் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டுதான் அளிக்கத் தக்கவை, அந்த அளவுக்குத்தான் ஜனாதிபதிக்கோ, ஆளுநருக்கோ, கோர்ட்டுக்கோ அதிகாரம் உண்டு - பொதுநலன் காத்தல் மட்டும் இதற்கு விதி விலக்கு - என்ற வகையில் சட்டம் தெளிவாக்கப் படுவது நல்லது. அப்படி ஏற்பட்டால் யாருக்கு நஷ்டம்? சட்டத்தின் மாண்பு, தேசத்தின் கௌரவம், இரண்டையும் உள்ளுக்குள் எள்ளி நகையாடி டீ குடிப்பவர்களுக்குத்தானே நஷ்டம்?

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

 

 

Tuesday, 12 April 2022

தமிழே வணக்கம்


-- ஆர். வி. ஆர்

 

  

 

தமிழே வணக்கம்
(பாடல்) 

 

தமிழே தீந்தமிழே

தாய்த் தமிழே வணக்கம்

தமிழே தீந்தமிழே

தொன் மொழியே வணக்கம்

 

 

உலகை நா செவியில்

உணரச் செய்தாய் வணக்கம்

 

 

லழள என்றழகாய்

எழுத்துடையாய் வணக்கம்

 

 

வல் மெல் இடையினத்தில்

வீற்றிருப்பாய் வணக்கம்

 

 

கல் ஓலையில் ஊர்ந்து

கணினி வந்தாய் வணக்கம் 

 

 

தமிழே தீந்தமிழே

தாய்த் தமிழே வணக்கம்

தமிழே தீந்தமிழே

தொன் மொழியே வணக்கம்

 

 

முச்சங்கத்தில் மூழ்கி

முத்தெடுத்தாய்  வணக்கம்

 

 

வள்ளுவன் கம்பனுக்கும்

வரம் அளித்தாய் வணக்கம்

 

 

நேராய் ஔவை மொழியினிலே

நீதி சொன்னாய் வணக்கம் 

 

 

பாரதி சொல்லில் புதிதாய்

பொலிவடைந்தாய்  வணக்கம்

 

 

தமிழே தீந்தமிழே

தாய்த் தமிழே வணக்கம்

தமிழே தீந்தமிழே

தொன் மொழியே வணக்கம்

 

 

சேரன் சோழன் பாண்டியனின்

சீர் சிறப்பே வணக்கம் 

 

 

இயலிசை நாடகமே

இன்னமுதே வணக்கம்

 

 

பிற மொழிகள் பிறந்த

பயிர் நிலமே வணக்கம்

 

 

இறை சிந்தை உயிராய்

இணைந்தவளே வணக்கம்

 

 

தமிழே தீந்தமிழே

தாய்த் தமிழே வணக்கம்

தமிழே தீந்தமிழே

தொன் மொழியே வணக்கம்

 

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022