Friday 27 May 2022

ஒரு பேரறிவாளன். ஒரு பேரபாயம்

-- ஆர். வி. ஆர் 


 

பேரறிவாளன் யார்? ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப் பட்டவர்களில் ஒருவர். அந்த வழக்கில், இவர் உட்பட நான்கு குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் முதலில் மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்தது - அதோடு வேறு மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 

தம் தேசத்தைப் பெருமிதமாக நினைக்கும் இந்தியர்கள், தமது முன்னாள் பிரதமரைக் கொடூரமாகக் கொலை செய்யும் சதியில் ஈடுபட்ட அந்தக் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ உச்ச நீதிமன்றத்தில் கிடைத்தது பொருத்தம் என்று திருப்தி அடைந்திருப்பார்கள். ஆனால் பிற்பாடு அவர்களின் திருப்தி சட்டத்தில் மெள்ள மெள்ளக் கரைந்து கொண்டிருக்கிறது. அது எப்படி?

 

முதலில் - ஒரு வருடத்திற்குள் - அந்த நான்கு மரண தண்டனைக் குற்றவாளிகளில் ஒருவரான நளினிக்கு, தமிழக அரசின் சிபாரிசால் அவரது தண்டனையைத் தமிழக ஆளுநர் ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்ற மூவரின் மரண தண்டனையைக் குறைப்பதற்காக  அவர்கள் போட்டிருந்த  கருணை மனுக்கள் ஆளுநர், ஜனாதிபதி, அரசாங்கம் என்று அங்கும் இங்கும் அல்லாட, அதனால் மட்டும் அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேறுவது சுமார் 11 வருடங்கள் தாமதமானது.

 

அந்த மூவரின் தூக்கு தண்டனை வருடக்கணக்கில் நிறுத்தி வைக்கப்படஅந்த நாட்களில் 'நாம் பிழைப்போமா, அல்லது நமது கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்டு நாம் கடைசியில் தூக்கு மேடையில் உயிர் துறப்போமா' என்ற மன உளைச்சலுக்கு அந்த மூன்று குற்றவாளிகளும் ஆளானார்கள், விளக்கம் சொல்லமுடியாத அந்தக் கால தாமதமே அவர்களுக்கு நேர்ந்த “சித்திரவதை” (torture) என்று உச்ச நீதிமன்றமும் கருதியது. அப்படியான "சித்திரவதை" அந்தக் குற்றவாளிகளுக்கு நீடிக்கக் கூடாது என்பதற்காக, நாட்டின் முன்னாள் பிரதமரைத் தீர்த்துக்கட்ட சதி செய்த அவர்களின் மரண தண்டனையை நமது உச்ச நீதிமன்றமே ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. ஆகவே அந்த மூவரும் ஆயுள் தண்டனைக் கைதிகள் ஆனார்கள் - பேரறிவாளன் உட்பட. 

 

நீதிமன்றம் தண்டித்த எந்தக் கிரிமினல் குற்றவாளிக்கும், கருணை அடிப்படையில் தண்டனைக் குறைப்போ அல்லது விடுதலையோ அளிக்க ஜனாதிபதிக்கும் மாநில ஆளுநர்களுக்கும் நமது அரசியல் சட்டத்தில் அதிகாரம் இருக்கிறது. இப்படி ஒரு அதிகாரம் அளிக்கப் பட்டிருப்பது, கொள்கை அளவில் சரிதான். இது போன்ற சட்டம் பல நாடுகளிலும் உண்டு. ஆனால் எந்தக் குற்றவாளிக்காக, எத்தகைய குற்றத்திற்கு, இந்த ஷரத்தை உபயோகித்து ஒரு அரசாங்கம் தண்டனக் குறைப்பு செய்ய முன்வரலாம், நீதி மன்றமும் அதை ஆமோதிக்கலாம் என்பதை அரசியல் சட்டம் சொல்லவில்லை. எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்கு சட்டம் வழி வகுக்கலாம்.  ஒருவன் வயிறு முட்ட எவ்வளவு சாப்பிடலாம் என்பதையும் சட்டமா சொல்லும்?

 

    நீதிமன்றம் தண்டனை அளித்த ஒரு குற்றவாளிக்கு, அரசாங்கம் பின்னர் மன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் அதிகாரத்திற்கான அடிப்படை என்ன? இதை அழகாக விளக்குகிறார் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் ஹோம்ஸ். இவை அவரது வார்த்தைகள்: “மன்னிப்பு வழங்கப்பட்டால், நீதிமன்றத் தீர்ப்பு அளித்த தண்டனையைக் குறைத்து வைப்பது பொது நலனுக்கு மேலும் உகந்தது என்று உயர்மட்ட அதிகாரத்தில் உள்ளவர் முடிவு செய்கிறார் என்று பொருள்”.  

 

ஒரு குற்றவளிக்கு அரசாங்க மன்னிப்பு வழங்குவதில் பொது நலன் உயர்ந்து இருக்கவேண்டும், அதுதான் ஒரு அரசாங்கம் வழங்கும் மன்னிப்பின் அடிப்படை, அதுதான் சட்டத்தின் தாத்பரியம் என்ற மேலான எண்ணத்தை வெளிப்படுத்துகிறார் ஜஸ்டிஸ் ஹோம்ஸ்.  சர்வதேச அளவில் சட்ட வல்லுனர்கள் மத்தியில் ஜஸ்டிஸ் ஹோம்ஸ் ஏன் பெரிதும் மதிக்கப் படுகிறார் என்பதற்கு அவரது இந்த விளக்கம் ஒரு உதாரணம்.

 

      சரி, ஜஸ்டிஸ் ஹோம்ஸ் சொன்ன வார்த்தைகளை  இந்திய உச்ச நீதிமன்றம் ஆமோதிக்கிறதா? ஆம், ஆமோதித்து அவரது வார்த்தைகளை ஒரு தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருக்கிறது. எந்த சந்தர்ப்பத்தில் நமது உச்ச நீதிமன்றம் அவ்வாறு ஆமோதித்தது என்பதும் சுவாரசியமானது.

 

பேரறிவாளனின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும் தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு மாதம் முன்னர், இந்திய உச்ச நீதிமன்றம் வேறு வழக்கில் ஒரு தீர்ப்பு எழுதியது.  பல மாநிலங்களில் உள்ள மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் காரணமில்லாமல் நீண்ட வருடங்கள் ஆளுநரிடமும் ஜனாதிபதியிடமும் நிலுவையில் இருந்ததால் அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது அந்த முந்தையத் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பில்தான், ஜஸ்டிஸ் ஹோம்ஸ் எழுதிய விளக்கத்தையும் ஆமோதித்து மேற்கோள் காட்டினார் அத் தீர்ப்பை எழுதிய நீதியரசர் திரு. பி. சதாசிவம் - அமர்வில் இருந்த மற்ற இரு நீதிபதிகள் அந்தத் தீர்ப்போடு உடன் பட்டார்கள்.


ஜஸ்டிஸ் ஹோம்ஸின் வார்த்தைகள் அர்த்தம் மிகுந்தவை. அதைத் தமது தீர்ப்பில் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நாம் சல்யூட் வைக்கலாம். ஆனால் ஜஸ்டிஸ் ஹோம்ஸ் சொன்ன விளக்கத்தின் சாரத்தை நமது உச்ச நீதிமன்றம் முழுதாக ஏற்று சம்பந்தப்பட்ட வழக்குகளில் தங்கள் தீர்ப்பை வழங்கியதா என்ற கேள்விக்கு, நமக்குத் திருப்தியான விடை கிடைக்காது. 

 

பல மாநிலங்களின் மரண தண்டனைக் குற்றவாளிகளுக்கு அந்த முந்தைய தீர்ப்பு தண்டனைக் குறைப்பு செய்து ஆயுள் தண்டனை வழங்கியதே, அதில் தனது குடும்பத்தினர் 13 பேர்களைக் கொன்ற குற்றவாளியும் பயன் அடைந்தார்.  அதே தீர்ப்பில், கருணை மனுக்கள் போட்டு வருடக் கணக்கில் காத்திருக்கும் மரண தண்டனைக் கைதிகள் எளிதாக நிவாரணம் பெறுவதற்காக, நமது உச்ச நீதிமன்றம் இப்படிச் சொல்கிறது: “குற்றத்தின் தீவிரத் தன்மை, அதிலுள்ள அசாதாரணக் கொடுமை அல்லது சமூகத்திற்கு அந்தக் குற்றம் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகள் ஆகியவை (அதாவது, தண்டனைக் குறைப்பு செய்வதற்கு) ஒரு பொருட்டல்ல” [“Considerations such as gravity of the crime, extraordinary cruelty involved therein or some horrible consequences for society caused by the offence are not relevant” – Shatrughan Chauhan v.  Union of India, 2014 (3) SCC 1, para 64].

 

மேலே உள்ள வார்த்தைகள், நமது உச்ச நீதிமன்றத்தின் கண்ணோட்டம். ஆனால், அரசாங்கத்திடம் உள்ள மன்னிப்பு-வழங்கும் அதிகாரத்தின் தாத்பரியத்தை அமெரிக்க நீதிபதி ஜஸ்டிஸ் ஹோம்ஸ் எப்படித் தொலைநோக்குடன் சிறப்பாக விளக்கினார் பாருங்கள். அது, “நீதிமன்றத் தீர்ப்பு அளித்த தண்டனையைக் குறைத்து வைப்பது பொது நலனுக்கு மேலும் உகந்தது என்று உயர்மட்ட அதிகாரத்தில் உள்ளவர் முடிவு செய்கிறார் என்று பொருள்” என்கிறார். ஒரு இந்தியராக நீங்கள் இப்போது பெருமூச்சு விட்டால் அது இயற்கை.    

 

குறைக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு மாறிய பேரறிவாளனை, பத்து நாட்கள் முன்பாக (18.05.2022) நமது உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டு அவர் வெளிவந்தார். அதற்குக் காரணம்: அவருக்குக் குறைக்கப் பட்ட ஆயுள் தண்டனையை இன்னும் குறைத்து அவரை உடனே விடுதலை செய்ய முந்தைய தமிழக அரசு ஆளுநருக்குச் சிபாரிசு செய்தது, ஆனால் அந்த சிபாரிசுக்கு சட்டப்படி கட்டுப்பட்ட ஆளுநர் அதை ஏற்றுக் கையெழுத்திடாமல், இரண்டரை ஆண்டுகளாகக் கால தாமதம் செய்தார், ஆகையால் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அந்த வழக்கில் உச்சநீதிமன்றமும் – சில முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையிலும், தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தியும்  – பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்தது.

 

வெளிவந்த பேரறிவாளனைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆரத் தழுவி சால்வை போத்தி வரவேற்றார். பின்னர் அவரை அழைத்து அவரோடு ஆற அமர உட்கார்ந்து குசலம் விசாரித்து தேநீர் குடித்து மகிழ்ந்தார். 


கூட்டிக் கழித்துப் பார்த்தால், என்ன நடக்கிறது? தேசத்தின் முன்னாள் பிரதமரைப் படுகொலை செய்யும் சதியில் ஈடுபட்ட சிலரின் மரண தண்டனையை நமது உச்ச நீதிமன்றமே ஒரு காரணம் சொல்லி ஆயுள் தண்டனையாகக் குறைக்கிறது. பின்னர், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் அந்த அத்தனை சதிகாரர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டின் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக் கேட்கின்றன. அதன் விளைவாக ஒரு சதிகாரர் இப்போது வெளிவந்தவுடன் இந்நாள் தமிழக முதல்வர் அந்தக் குற்றவாளியை - ஒரு முன்னாள் பிரதமரைத் தீர்த்துக் கட்ட சதி செய்தவரை - கட்டித் தழுவி வரவேற்கிறார். இந்த ஓட்டுமொத்தக் காட்சியிலும் ஒரு அபத்தம், ஒரு கேவலம் இல்லையா? எந்த முதிர்ச்சியான ஜனநாயகத்திலாவது நீங்கள் இது போன்ற ஒரு காட்சியைக் காண முடியுமா? 

 

திராவிடக் கட்சித் தலைவர் ஒருவரைத் தீர்த்துக் கட்டும் சதியில் பேரறிவாளன்  ஈடுபட்டு ஆயுள் தண்டனை பெற்றிருந்தால், அந்தக் கட்சியினர் பேரறிவாளனின் முன்-கூட்டிய விடுதலைக்காகக் குரல் கொடுத்திருப்பார்களா என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேட்கிறார்கள். இதற்கு அந்தக் கட்சியினர் நேர்மையாக பதில் சொல்ல முடியாது. ஆனால் இதற்கு மேலும்  ஒன்று இருக்கிறது.

 

நமது உச்ச நீதி மன்றம் தெளிவாக்கிய சட்ட நிலை என்ன? ஒரு மரண தண்டனைக் குற்றவாளியின் கருணை மனுவை  ஆளுநர் மற்றும் ஜனாதிபதி பைசல் செய்ய நீண்ட காலம் ஏற்பட்டு, அந்தக் கால தாமதத்திற்கு சரியான விளக்கம் இல்லை என்றால்,  அந்தக் குற்றவாளி “சித்திரவதை”க்கு (torture) ஆளானதாக அர்த்தம், அந்தக் கால தாமதத்தின் காரணமாகவே அவரது மரண தண்டனை குறைக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் படவேண்டும், என்பதாகும். இந்த தண்டனைக் குறைப்பிற்கு, அந்தக் குற்றவாளி நிகழ்த்திய  குற்றத்தின் தீவிரத் தன்மை, அதன் கொடூரம்,  அது சமூகத்தில் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகள் ஆகியவை ஒரு தடையல்ல என்பதும் உச்ச நீதிமன்றத்தின் பார்வையாக இருக்கிறது.

 

உச்ச நீதிமன்றத்தின் இந்த சட்ட விளக்கம் சரியானதா, பொது நன்மைக்கு உகந்ததா என்று பார்க்க, நாம் ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்து ஒரு கேள்வி கேட்டுப் பார்க்கலாம்.  

 

ஒரு இந்திய நீதிமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் குண்டுகள்  வெடிக்கச் செய்து பல நீதிபதிகள் உயிர் இழக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கொலைக் குற்றத்திற்காக அந்தத் தீவிரவாதிகள் மரண தண்டனை பெற்று அவர்கள் ஜனாதிபதிக்குக் கருணை மனுக்களும் அனுப்புகிறார்கள், ஆனால் காரணமே இல்லாமல் அந்தக் கருணை மனுக்கள் வருடக்கணக்கில் நிலுவையிலேயே இருக்கின்றன, அதனால் அவர்களின் தூக்கு தண்டனையும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது உச்ச நீதிமன்றம் அந்தக் குற்றவாளிகளை எப்படிப் பார்க்கும்?

 

அப்போதும் உச்ச நீதிமன்றம் “கருணை மனுக்கள் மீதான காலதாமதத்தால் இவர்கள் மனதளவில் சித்திரவதை அனுபவித்தவர்கள், ஆகவே இவர்களின் மரண தண்டனையைக் குறைத்து இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.  அதற்கு, இந்தத் தீவிரவாதிகள்  நிகழ்த்திய  குற்றத்தின் தீவிரத் தன்மை, அதன் கொடூரம், அது சமூகத்தில் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகள் ஆகியவை தடையல்ல” என்று தீர்ப்பளிக்குமா என்ன? இல்லை என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் அது நடக்குமானால், அப்படியான குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையையும் குறைத்து அவர்களை உடனே சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும்  என்று ஒரு அரசு ஆளுநருக்கோ ஜனாதிபதிக்கோ சிபாரிசு செய்து அந்தப் பாதகர்களை வெளியே கொண்டு வரலாம். இப்படித்தானே பேரறிவாளன் சிறையிலிருந்து வெளியே வந்தார், பின்னர் தமிழக முதல்வரால் ஆரத் தழுவி வரவேற்கப்பட்டார்?

 

 ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் தண்டனைக் குறைப்பு அதிகாரம், மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்படும்  கால தாமதத்தால் அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் கோர்ட்டின் அதிகாரம் ஆகியவை பற்றி, இப்போதுள்ள சட்ட நிலையின் ஒரு பக்கத்தை  சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்வது அவசியம். அதாவது, குற்றவாளிகளுக்கு அளிக்கப் படும் இந்தச் சலுகைகள் அவர்கள்  புரிந்த குற்றத்தின் தீவிரத் தன்மை, அதன் கொடூரம்,  அது சமூகத்தில் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டுதான் அளிக்கத் தக்கவை, அந்த அளவுக்குத்தான் ஜனாதிபதிக்கோ, ஆளுநருக்கோ, கோர்ட்டுக்கோ அதிகாரம் உண்டு - பொதுநலன் காத்தல் மட்டும் இதற்கு விதி விலக்கு - என்ற வகையில் சட்டம் தெளிவாக்கப் படுவது நல்லது. அப்படி ஏற்பட்டால் யாருக்கு நஷ்டம்? சட்டத்தின் மாண்பு, தேசத்தின் கௌரவம், இரண்டையும் உள்ளுக்குள் எள்ளி நகையாடி டீ குடிப்பவர்களுக்குத்தானே நஷ்டம்?

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

 

 

10 comments:

  1. The whole case has been discussed dispassionately. These murderers should have been sent to the gallows long back. Due to political considerations they were allowed to move away from the hangman's nook and live outside the prison with honour and respect.
    Long live democracy.

    ReplyDelete
  2. அருமையான பதிவுகள் . மனம் நிறைந்த வாழததுக்கள்

    ReplyDelete
  3. It's a big shame that the country's highest judiciary has delivered such an atrocious judgement
    RVR'

    ReplyDelete
  4. நல்ல கேள்வி !. உண்மையில் நீதிபதிகள் குற்றவாளியின் மணக் குமுறலை மட்டும் கணக்கில் எடுத்து கொள்வதில் உள்ள மனிதாபிமானம் குற்றவாளியின் குற்றத்தால் அங்க ஹீனத்தில் உழன்று வாழ முடியாமல் சித்திரவதை அனுபவிப்பவர்கள் வாழ்வினை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. .வீட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தந்தை தாய் சகோதரர் சகோதரி இழந்தவர்கள் 16 பேர் குடும்பம் பட்ட மன வேதனை பொருளாதார சீர்கேடு ஆதரவற்ற முதியோர் ...பிள்ளைகள் படும் வேதனையை கருத்தில் கொண்டதா என்று தெரியவில்லை ...

    எனினும் விடுதலை செய்த செயலை விட ஏதோ அவரை தமிழன் என்று ஒரு மாநிலத்தின் ஆட்சியாளர் தந்த பாராட்டு வரவேற்பு விருந்தோம்பல் பார்க்கும் போது இன்னும் சிலர் அந்த பாரட்டதலுக்கு விளம்பர பாசத்திற்கு உந்தப்படுவார்களோ என்று பயப் பட வேண்டி உள்ளது.

    பொது நலனுக்கு ஏற்றது என்று நீதி அரசர்கள் நினைப்பதில் பரிசீலனை செய்ய வேண்டும்

    ReplyDelete
  5. பேரரறிவாளன் விடுதலை பற்றிய தங்கள் கருத்து பரிமாணம்,உச்சநீதிமன்றம் பழைய வேறு ஒரு தீர்ப்பினை கோடிட்டு காட்டி, அது போல
    காலம் கடந்த தீர்ப்பினால் கடுமையாக தண்டிக்கப்பட்டுவிட்டதாக,

    , கருணை அடிப்படையில், ஆளுநர்,ஜனாதிபதி யாரும்விடுதலை செய்யா நிலையில்பேரறிவாளனைவிடுதலை பொறுப்பு,நீதிமன்றமே எடுத்துக்கொண்டது.இதை சட்டம் ஒரு பார்வை,எதிர்கட்சிகள் ஒரு பார்வை, ஆளும்கட்சியின் பார்வை,பொதுமக்கள் ஒரு விதபார்வை, பேரறிவாளனின் குடும்பப்பார்வை இப்படி எல்லாவற்றையும் கடந்து மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, அதாவது கோர்ட்டின் தீர்ப்பே இறைவனின் தீர்ப்பு என்பதுபோல் சட்டத்தை மதித்து மிகப் பலர் வாய் மூடிக்கொண்டனர்.தர்மமே,தர்மம் தேவையே,இறைவனே நமக்கு விரைவில் புரிய வைத்து குழப்பத்தை போக்குதான்.நிச்சயம் நடக்கும், தாஸன் கோபால தேசிகன் மேடவாக்கம் சென்னை வணக்கம் தாஸன்



    ReplyDelete
  6. தர்மதேவதையே என்று திருத்தி வாசிக்கவும்

    ReplyDelete
  7. Nicely presented.... While we don't have the rights to comment on the judgements given by court, the contents of the judgements are little bit disturbing, including the recent judgement of SC w. r.t GST issue... Both judgements are diluting the Hold of Central govt and the position of Governors... Especially. when the regional parties are making so much of politics, the sovereignty is real concern!

    ReplyDelete
  8. We will move 5 Bench Petition return to jail and Hanging

    ReplyDelete
  9. What could be the political considerations that have impelled both the Kazhagams to vie with each other for releasing the murderers of a PM?

    ReplyDelete
  10. அனைவரின் மனக்குமுறல்களை விரிவாக எடுத்துரைத்தீர் வீரு.இதற்குப் பரிகாரம் தான் என்ன?

    ReplyDelete