Sunday 9 October 2022

பாவம் ராஜராஜ சோழன்!

 -- ஆர். வி. ஆர்

 

அன்று மேடையில் நின்று பேசியவர் திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன். அருகில் அமர்ந்து ஆவரை ஆர்வத்துடன் கவனித்தவர் விடுதலைக் கட்சித் தலைவர் திருமாவளவன். பேசும்போது வெற்றி மாறன் குழம்பினார். மற்றவர்களையும் குழப்பினார். அதோடு, “நாம தெளிவோட இருக்கணும்” என்றும் தான் பேசியதற்கு மாறாகச் சொன்னார்.  குதர்க்கத்திற்கும் குழப்பத்திற்கும் பெயர் போன திருமாவளவன், இதைக் கேட்டு மகிழ்ந்திருப்பார். இது ஒரு வாரத்திற்கு முன் இந்தச் சூழ்நிலையில் நிகழ்ந்தது. 

 

சோழ மன்னன் ராஜ ராஜன் இடம் பெறும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பிரும்மாண்ட சினிமாவாக செப்டம்பர் 30-ம் தேதி வெளிவந்தது. மறு நாள், விசிக தலைவர் திருமாவளவனுக்கு அவரது மணிவிழாவை ஒட்டி ஒரு  சினிமாத் துறை அமைப்பு சென்னையில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தியது. அதற்கான மேடையில் திருமாவளவன் அமர்ந்திருக்க, அப்போதுதான் வெற்றி மாறன் இப்படிப் பேசினார்:

 

“தொடர்ந்து  நமது அடையாளங்களை நம்ம கிட்டேர்ந்து எடுக்கறாங்க. வள்ளுவருக்குக் காவி உடை குடுக்கறதா இருக்கட்டும், ராஜ ராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்கறதா இருக்கட்டும்,  இப்படித் தொடர்ந்து  நடந்துட்டிருக்கு.  இது சினிமாவுலயும்  நடக்கும்.  இந்த அடையாளங்களை நாம காப்பாத்திக்கணும். நம்முடைய விடுதலைக்காக நாம போராடணும்னா நாம அரசியல் தெளிவோட இருக்கணும். ...................”

 

ராஜ ராஜ சோழன் ஹிந்து அல்ல என்ற அர்த்தத்தில் வெற்றி மாறன் பேசியதைப் பின்னர் திருமாவளவன் ட்விட்டரில் ஆமோதித்தார்.  “ராஜ ராஜன் காலத்தில் சைவம் வேறு. வைணவம் வேறு ........ அக்காலத்தில் ஏது இந்து? ...... லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் ராஜ ராஜன் மீது இன்றைய இந்து அடையாளத்தைத் திணிப்பது சரியா?” என்று கேட்டுவிட்டு, வெற்றி மாறனின் கூற்றுக்காக அவரைப் “பெரியாரின் பேரன்” என்று புகழ்ந்தார். 

 

சைவம் என்பது சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்கும் சம்பிரதாயமாக ஒரு காலத்தில் பரவலாக இருந்தது. ஈ.வெ.ரா பெரியாரோ கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி” என்று வசை பாடியவர். அப்படியென்றால், லிங்க வடிவில் சிவனுக்குக் கோவில் எழுப்பி அக் கடவுளின் கீரத்தியைப் பரப்பி, அந்தக் கடவுளை வணங்கியதால் ராஜ ராஜ சோழனும் ஒரு அயோக்கியன், ஒரு காட்டுமிராண்டி” என்பாரா பெரியாரின் மைந்தர் திருமாவளவன்?  

 

திருமாவளவன் “பெரியார் பேரன்” என்று  வாயாரப்  பாராட்டிய வெற்றி மாறனும் தனது பேச்சின் மூலம் இதையா சொல்ல வருகிறார்? அதாவது: 


“ராஜ ராஜன் என்ற தமிழ் அரசன் ஹிந்து இல்லை. சைவ மதத்தவன் என்ற அடையாளயம்தான் அவனுக்கு இருந்தது. அதைத்தான் நாம் தற்காலத்தில் காப்பாற்ற வேண்டும். இருந்தாலும், ராஜ ராஜன் ஒரு பெரும் சிவ பக்தனாக வாழ்ந்ததால், நாங்கள் போற்றும் ஈ.வெ.ரா பெரியார் பார்வையில் அவன் ஒரு மஹா அயோக்கியனாக, வெறும் காட்டுமிராண்டியாகத் திகழ்ந்தான் என்பதையும் ஏற்கிறோம். அதுவும் அவனது பெருமையான அடையாளம்.”


என்று சொல்கிறாரா வெற்றி மாறன்? அதுதானே அவர் பேச்சின் அர்த்தம்? குழப்பத்தின் உச்சம் தொட்ட பிதற்றல் அல்லவா அவரது பேச்சும் அதன் அர்த்தமும்?

 

‘ஹிந்து மதத்தை எதிர்த்து ஏதாவது சொல்லவேண்டும், அதே சமயம் தமிழ் மன்னன் ராஜ ராஜனையும் தூக்கிப் பிடிக்க வேண்டும். இரண்டையும் சேர்த்துச் சொல்லும்போது, தஞ்சைப் பெரிய கோவில் எழுப்பியதற்காக ராஜ ராஜனை இகழக் கூடாது. அதற்கு ஒரே வழி ராஜ ராஜனை ஹிந்து மதத்திலிருந்து பிரித்து, அவன் ஹிந்துவே இல்லை, அவன் கட்டிய கோவிலில் உள்ள சிவனும் ஹிந்துக் கடவுளே இல்லை என்று ஒரே போடாகப் போட வேண்டும். அப்போதுதான் ஹிந்து மதத்தை மட்டும் சங்கடம் இல்லாமல் எதிர்க்கலாம்'.  இதுதான் ஹிந்து மத எதிர்ப்பாளர்களின் மன ஓட்டம். ஆனால் பெரியார் வைத்த வேட்டு, சிவ பெருமானை வணங்கிய ராஜ ராஜனுக்கும் சேர்த்துத்தான் என்ற உண்மை ஹிந்து மத எதிர்ப்பாளர்களுக்கு உறைக்காமல் போய்விட்டது. சிந்தையில் நேர்மையும் மனதில் நல்லெண்ணமும் இல்லாமல் போனதால் இந்த ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் குழம்பிப் போய்த் தாங்கள் வைத்த பொறியில் தாங்களே அகப்பட்டனர். 

 

அடுத்தது திருவள்ளுவர். அவருக்குக் காவி உடை சார்த்தி விட்டார்கள் என்பது பெரியார் பேரனுக்கு இன்னொரு ஆதங்கம். திருக்குறளின் முதல் அதிகாரத்தின் தலைப்பே “கடவுள் வாழ்த்து”. அந்த அதிகாரத்தில் “இறைவனடி சேராதார்” என்று ஒரு குறளும் முடிகிறது. கடவுளைப் போற்றிய, பரப்பிய, வணங்கிய திருவள்ளுவருக்கும் பெரியார் பார்வையில் ராஜ ராஜன் கதிதான். வெற்றி மாறன் என்ன சொல்லப் போகிறார்? “திருவள்ளுவர் காவிக்குப் பதில் வெள்ளை உடை தரித்துப்   படங்களில் இருக்கட்டும். பிறகு என் தாத்தா பெரியார் கணிப்பில் அவர் அயோக்கியர், காட்டுமிராண்டி என்று பெயர் பெறட்டும். அது திருவள்ளுவருக்குப் பாதகமில்லை. ஆனால் அவரது உருவம் காவி உடையில் யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது. அதுதான் தமிழர்களுக்குப் பெரிய இழுக்கு. குறளாசிறியரைக் காவி உடையில் காண்பித்தால்தான்  தமிழர்களின் அடையாளம் எங்கோ போய்விடும் – வள்ளுவருக்கு அயோக்கியன், காட்டுமிராண்டி என்ற பட்டங்கள்  கிடைப்பதால் அல்ல” என்பாரா வெற்றி மாறன்?

 

தமிழகத்தில் பெருவாரியான தமிழர்கள் பின்பற்றும் ஹிந்து மதம் முன் காலத்திய சைவத்தையும் உள்ளடக்கியதுதான் என்ற சாதாரண உண்மை வெற்றி மாறன் போன்ற ஒரு நல்ல சினிமா இயக்குனருக்கு உண்மையிலேயே புரியாதா என்ன?  புரியும்.  இருந்தாலும் எந்தத் துறையிலும் சில நடைமுறை சங்கடங்கள், அதன் பாதிப்புகள் இருக்கலாம்.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை, வேண்டும் என்றே மக்களிடையே ஒரு பிரச்சனையைப் பெரிதாகக் கிளப்பி மறியல், போராட்டம் என்று ஏற்படுத்தும் சக்தி படைத்த அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பாததை, அவர்களுக்குப் பிடிக்காததைச் செய்தால், சினிமாவில் பெரிய அளவில் ஜெயிப்பதில் பல சொல்லமுடியாத இடைஞ்சல்கள் உண்டு. விலகி நிற்பதை விடவும், அந்த அரசியல் தலைவர்களைப் புகழ்ந்து, அவர்களுக்குப் பிடித்த மாதிரி அவ்வப்போது நடந்து கொண்டால், அல்லது பேசினால், திரைத் துறையில் வாய்ப்புக்கும் வளர்ச்சிக்கும் செயற்கைத் தடைகள் வராது – திறமை உதவுவது என்பது வேறு விஷயம். அந்த நிலையில் பயனாளி ஒருவருக்கு வாலி பலம் கூடக் கிட்டும். தமிழகத்  திரைத் துறையில் பலருக்கும் இது மனரீதியான ஒரு நிர்பந்தம். அதனால் அவர்களில் பலர் அந்த மாதிரியான சில அரசியல் தலைவர்களின் ரசிகர்களாகவும் ஆகிறார்கள். இதெல்லாம் அவரவர் மனநிலை, சக்தி, சூழ்நிலைகளைப் பொறுத்த விஷயம்.

 

நல்ல சினிமா எடுக்கப்படும் பல மேலை நாடுகளில் சினிமாத் துறையினர் – அதில் திறமையானவர்கள் கூட - இப்படி அரசியல் தலைவர்களை அண்டியும்  கட்டியும்  நிற்பது உண்டா?  கிடையாது. ஏனென்றால், சீரழிந்த தமிழக அரசியல்  ஏற்படுத்தும் மறைமுக நிர்பந்தங்கள் அந்த  நாட்டுத் திரைத்துறையினருக்கு இல்லை.  

 

ஆனாலும் பாவம், திராவிடக் கட்சித் தமிழர்களிடம் சிக்கித் தவிக்கும் ராஜராஜனும் வள்ளுவரும்! அந்த இருவருக்காகவும் நமக்காகவும் இப்போது நம்மால் முடிந்தது ஒன்றுதான். "தமிழக அரசியலை சிவபெருமான் மீட்டுக் காப்பாற்ற வேண்டும்" என்று நாம் வேண்டிக் கொள்ளலாம்.  துன்பம் நேர்கையில்  இப்படி சிவபெருமானை வேண்டுவது நம் தமிழர்களின் அடையாளம் என்பதையாவது திருமாவும் வெற்றி மாறனும் ஒப்புக் கொள்வார்களே?


* * * * *


Copyright © R. Veera Raghavan 2022

11 comments:

  1. நாம் vena vendi கொள்ளலாம்.ஆனால் onnum பண்ண முடியாது.

    ReplyDelete
  2. அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் வாக்கியம் சத்தியமானது.

    ReplyDelete
  3. Dushyant Sridhar sir has given an apt response in Times now debate.. One sentence is enough: Ask them to read the materials before venturing out to blabber.

    ReplyDelete
  4. சார், என்னைக் கேட்டால் இவர்களை அறவே புறக்கணித்துவிட வேண்டும். இவர்களுடைய பேச்சுகளை விமர்சனம் செய்வதால் இவர்களுக்கு ஒரு வித மரியாதை கிடைத்துவிடுகிறது. அதற்கு சற்றும் தகுதியற்றவர்கள் இவர்கள்.

    ReplyDelete
  5. This is going on for the past 70 years or so. Only the intelligent tamizh folks have this fad. Other folks are probably less intelligent and so progress nicely with tradition in tact. Good analysis.

    ReplyDelete
  6. தங்கள் விளக்கமே அபாரம்,கடைசி வரியில் வருவது போல் துன்பம் நேர்கையில் யாழ்இசையில் நீ இன்பம் சேர்க்க மாட்டாயா....என்று சிவா,விஷ்ணு விடம் முறையிடுவதே சரியாக இருக்கும். தேசிகன்

    ReplyDelete
    Replies
    1. வெற்றிமாறன் சொன்னால் எனன வேத வாக்கா ஹிந்து என அவர் ஏற்கவிட்டால் எனன 80% ஹிந்துக்கள் ஏறுள்ளார்கள் அதுபோதும் இவர் கருத்தை புரம் தள்ள

      Delete
  7. வெற்றிமாறனின் அறியாமையையும் அகம்பாவத்தையும் அருமையாக விளக்கி உள்ளீர்கள். இப்படிப் பட்ட விமர்சனங்களால் தான் இந்து மதம் இன்னும் புத்துணர்வுடன் வீறு கொண்டு எழும், இன்னும் பரவும்.

    ReplyDelete
  8. Well said sir 👍🤝

    ReplyDelete