Friday 14 October 2022

கட்சியினரிடம் ஸ்டாலின்: நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே!

      -- ஆர். வி. ஆர்

 

சமீபத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தன் கட்சியினர் முன்பு அழாத குறையாகப் பேசிய வார்த்தைகளைக் கேட்டீர்களா? இது நடந்தது அக்டோபர் 9-ம் தேதி. 

அன்று நடந்த திமுக-வின் பொதுக்குழுவில் அவர்  மீண்டும் தலைவராகத் தேர்வானார். அங்கு பெரிதாகக் கூடி இருந்த மாநில அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், உள் கட்சித் தேர்தல்களில் சமீபத்தில் வென்றவர்கள் ஆகியோரிடம் அவர்  உரை ஆற்றினார். அவரது பேச்சின் முக்கிய பகுதிகள்: 

”ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவன் நான்.  இன்னொரு பக்கம் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என் நிலைமை. என்னை மேலும் துன்பப் படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?”

“நாள் தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்சனையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். சில சில நேரங்களில் தூங்க விடாமல் கூட ஆக்கி விடுகிறது.”

“பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும் ஏளனத்திற்கும் ஆளானது. இன்றைக்கு நம் வீட்டு பாத்ரூம் படுக்கை அறை தவிர அனைத்தும் பொது இடமாகிவிட்டது. எல்லோருக்கும் செல் போன் மூன்றாவது கண்ணாக முளைத்து விட்டது. இப்போது உங்களுடைய ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப் படுகிறது. எனவே உங்களது ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாக நீங்கள் பயன் படுத்த வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.” 

ஸ்டாலினின் இந்தப் பேச்சு டிவி, பத்திரிகைகளில் வெளிவந்தது. அதன் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் ஜிவ்வென்று பரவி விட்டது. மேலாகப் பார்த்தால், ஸ்டாலின் பேசியது ஒரு நல்ல தலைவர் செய்யக் கூடியது என்று தோன்றலாம். ஆனால் உண்மை வேறு. 

      ஒரு அரசியல் கட்சியின் எல்லாத் தொண்டர்களும் லோக்கல் பெரும் புள்ளிகளும், கட்சி நிர்வாகிகளும் எப்போதும் கண்ணியமாக கட்டுப்பாடுடன் பேசுவார்கள், செயல்படுவார்கள் என்றில்லை. சில தவறுகள், முறைகேடுகள் அங்கங்கே நடக்கலாம். ஆனால் இதில் இரண்டு மூன்று விஷயங்கள் கவனிக்கப் பட வேண்டும். 

ஒன்று, கட்சியினரிடம் அதுபோன்ற தவறுகள் அங்கங்கே மட்டும் நிகழ்ந்தாலும், கட்சித் தலைமை சம்பத்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தன் பெயரைக் காப்பாற்ற முனைகிறதா? 

அது இல்லாமல், கட்சியில் முறைகேடாக  செயல்படுபவர்கள், கண்ணியம் இல்லாமல் பேசுபவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை பெரிதாக இருக்கிறதா, அவர்களின் பேச்சும் செயலும் மக்களுக்குத் தொடர்ந்து தீங்கு  விளைவிக்கிறதா, அந்தத் தகாத பேச்சும் செயலும் அடுத்தடுத்த மேல் மட்டங்களில் ஊருக்கு ஊர் பரவலாக இருக்கிறதா – இது போக, தொடர்புடைய யார் யாரோ (மாமன் மகன், மாப்பிள்ளை உட்பட)  எப்படி எப்படியோ பணம்  சம்பாதிக்கிறார்களா? ஆம் என்றால் அந்த அவலத்திற்கான பொறுப்பைக் கட்சியின் தலைமை தான் ஏற்கவேண்டும். அந்த நிலையில் ஒரு தலைவர்  கட்சியினருக்கு கண்ணியத்தில், நன்நடத்தையில் அறிவுரை கூறினால் அது ஹாஸ்யம். பயன் தராது. 

எல்லாவற்றையும் விட இந்தக் கேள்விகள் முக்கியம்.  கட்சித் தலைமை அப்பழுக்கில்லாமல் நடந்து கொள்கிறதா? கட்சித் தலைமையின் பண்பும் நடத்தையும் வெளி உலகில் மற்றும் நான்கு சுவர்களுக்குள் எவ்வாறு இருக்கின்றன?  சட்ட ஆதாரம் வைக்காமல் எந்த ஒரு கட்சி மர்மப் பொருளாதாரம் நடத்தினாலும், கட்சியினர் அதை நுகர்வார்கள். பின்பு அவர்களும் அதற்கு ஆசைப்படுவார்கள். 

குடும்பத் தலைமை உள்ள கட்சிகளில் ஒழுங்கீனமும் சீரழிவும் அதிகமாகத் தோன்றும். காரணம், ஜனநாயகத்தில் அதன் முக்கிய அங்கமான ஒரு அரசியல் கட்சியே ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி இருப்பது, கட்சிக்குள் மற்றவர்கள் பெரிதாக வளர்வதற்குத் தடையாக அமையும். உள் கட்சி ஜனநாயகத்தைக் காற்றில் பறக்க விடும் ஒரு குடும்பத் தலைமை, தன் குடும்பம் செழிக்க ஒரு நியதி வைத்து அதற்கு நேர் மாறான நல்ல நல்ல அறிவுரைகளைக் கட்சியினருக்கு வழங்கும். கட்சித் தலைமை குடும்பத்தை ஒட்டி அல்லது குடும்ப வழியில் பல பத்தாண்டுகள் நீடிக்கலாம், அது வேறு விஷயம்.   

சரி, இதன் பக்க விளைவு இன்னும் என்னவாக இருக்கும்?   

தன் வியாபாரம் அல்லது தொழில், தன் மகன்  மகள்களின் வியாபாரம் ஆகியவை பெருக, தன் குடும்பத்தின் செல்வம் செழிக்க, கட்சியில் பல புத்திசாலிகள் கட்சித் தலைமைக்கு ராஜ விசுவாசம் காட்டி - சில கட்சிகளில் மேலே கொடுப்பதைக் கொடுத்து கீழே கிடைப்பதைப் பெற்று – வசதி   காண முயல்வார்கள். அல்லது கட்சித் தலைமை நிலைத்து நிற்க  சட்ட ரீதியாகவோ வேறு வகையிலோ பக்க பலமாக இருந்து தன் ஆதாயத்தைப்  பார்த்துக் கொளவார்கள். இதற்கு ஒரு வகையில் உதாரணம் இப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கட்சி. இன்னொரு வகையில் திமுக பிரதானம்.   

ஒரு அரசியல் கட்சியில் பெரும் தவறுகள் செய்கிற தலைமை, தனக்குக் கீழே பல மட்டத்திலும் நிர்வாகிகளாக இருப்பவர்கள் நேர் வழியில் செயல்படுவார்கள், பண்பாகப் பேசுவார்கள், முறைகேடுகள் செய்ய மாட்டார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. அது நடக்காது என்றும் அந்தத் தலைமைக்குத் தெரியும். ஆனால் என்ன, பொது வெளியில் கூடிய வரை நாசூக்காகப் பேசி, முடிந்தால் இலக்கியமும் பேசி,  விங்ஞான ரீதியில் காதும் காதும் வைத்த மாதிரிப் பல காரியங்களை நடத்திக் கொள்ளும் கலை அபூர்வமாக ஒன்றிரண்டு அரசியல் தலைவர்களுக்குத் தான் புலப்படும். பொது வெளியில் தன்னை உத்தமனாகக் காண்பிக்க அத்தகைய தலைவர்கள் கட்சிக் காரர்களுக்கு கண்ணியத்தைப் பற்றி போதிக்கலாம். அதெல்லாம் நாடகப் பேச்சு என்பது பேசுபவருக்குத் தெரியும் கேட்பவர்களுக்கும் புரியும். 

திமுக குடும்பக் கட்சிதான் என்ற உண்மையைத் தன் வாயாலேயே ஸ்டாலின் பொதுக் குழுவில் சூசகமாக உணர்த்தினார். கூடி இருந்த அனைவரும் அதைக் கைதட்டி  ஏற்றுக் கொண்டார்கள். அதாவது, ஸ்டாலின் பேசும்போது ஒரு நபரை மட்டும் குறிப்பிட்டு இப்படிப் பாராட்டினார்: “இளைஞரணியின் செயலாளர் தம்பி உதயநிதியின் முன்னெடுப்பு, பெருமையோடு சொன்னாங்களே, நாடு முழுவதும் திராவிட மாடல் பாசறைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று ..... அது பற்றி எனக்கு மிக மிக மிக மன நிறைவாக இருக்கிறது”. இதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அரங்கம் கைதட்டிக் கட்சியின் எதிர்காலத் தலைவரை வரவேற்றது.    

மத்தளம் போல் இரண்டு பக்கத்திலும் தான் அடி வாங்குவதாக அலுத்துக்  கொண்டாரே ஸ்டாலின் – கட்சியில் மற்ற ஒருவர் தலைவராக இருந்து ஒரு பக்க மத்தள அடியை வாங்கிக் கொள்ளட்டும், தான் முதல்வராக இருந்து இன்னொரு பக்க அடியை மட்டும் வாங்கலாம் என்று நினைப்பாரா?  உம்ஹூம். எல்லா அடியும் தன் மேல் விழட்டும் என்ற தியாக சிந்தனையா அவருக்கு? அல்லது குடும்பப் பாசத்தினால் எந்த வாய்ப்பையும் விட முடியவில்லையா?   

ஸ்டாலின் தன் கட்சியினருக்குச் சொன்ன அறிவுரைகளின் எதார்த்தமான அர்த்தம் இதுதான்: “உங்கள் பேச்சிலும் செயல்பாட்டிலும் எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிட்டால் உங்களை வீடியோ எடுத்து செல் போனில் உலவ விடுவார்கள். அதை நீங்களோ நானோ மறுக்க முடியாமல் போய்விடும். நீங்கள் எச்சரிக்கை தவறுவதால் நான் கடைசியில் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆகவே எனக்குப் பிரச்சனை உண்டாக்காதீர்கள்.” 

அதிகார மமதை, குடும்பப் பெருமை பீற்றல்,  மேல் ஜாதி உணர்வு, மக்களைப் பற்றிய இளக்காரம், அப்பட்டமான ஹிந்து எதிர்ப்பு போன்ற எண்ணங்களைத் தம் பேச்சுக்களில் வெளிப்படுத்திய ஆர்.எஸ்.பாரதி, பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், க. பொன்முடி, ஆ. ராசா ஆகியவர்களை ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியபோது மனதில் வைத்திருப்பார். ஆனால் “நீட் விலக்குப் பெறுவதின் ரகசியம் எங்களுக்குத் தெரியும்” என்று அச்சுப் பிச்சாகப் பேசிய உதயநிதியை நினைவில் வைத்தாரா? இல்லை, சென்ற தமிழகத் தேர்தலுக்கு முன் தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர் அணியில் இருந்த போது அவருக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை ஸ்டாலினே மக்கள் முன் வைத்தாரே, பிறகு செந்தில் பாலாஜியைத் திமுக-வில் சேர்த்து எம். எல். ஏ-வாக்கி வளமான மின் துறையில் அவருக்கு ஸ்டாலினே அமைச்சர் பதவியும் கொடுத்தாரே, அந்த கண்ணியத்தையாவது ஸ்டாலின் எண்ணிப் பார்த்தாரா? இது தொடர்பான எல்லாக் காட்சிகளையும் பொது மக்கள் செல் போனில் பார்த்தார்களே?  

 பொதுக் குழுவில் மைக் முன்னால் நின்றபோது, “உங்கள் பேச்சில், செயலில் கண்ணியத்தோடு நேர்மையும் நாணயமும் தலைதூக்கி இருக்க வேண்டும். எந்தப் பொதுப் பணத்தையும்  நீங்கள் மிகுந்த பொறுப்போடு கையாள வேண்டும். அரசாங்கத்தின் நியமனங்களில், அரசு நடவடிக்கைகளில் அல்லது ஒப்பந்தங்களில் கழகத்தவர்கள் தலையீட்டால் முறைகேடுகள் நடக்கின்றன  என்ற குற்றச் சாட்டிற்கு நாம் எள்ளளாவும் இடம் கொடுக்காமல் மக்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்”  என்றெல்லாம் ஸ்டாலின் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவரும் தினமும் நன்றாகத் தூங்கி நிம்மதியாகக் காலையில் கண் விழிக்கலாமே?

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

3 comments:

  1. தங்கள் கட்டுரையில் அனைத்து ஐஎன்எண்ணங்களும் பிரதி பலித்து இருக்கிறது, சிறு குடும்பத்தை, ஒரு தலைவராக நடத்துவதே மிகவும் சரமமாக இருக்கும் இக்காலத்தில், தமிழ் நாட்டினை மொத்த பொறுப்பையும் நடத்துவது,கூடப்பவர்களும் சிறந்த ஒத்துழைப்பது needed of hour. மற்றவர்களை தட்டி கேட்கும் துணிவு தேவை. அனைத்தும் ஆண்டவன் அருளே.

    ReplyDelete
  2. சட்ட ஆதாரம் வைக்காமல் எந்த ஒரு கட்சி மர்மப் பொருளாதாரம் நடத்தினாலும், கட்சியினர் அதை நுகர்வார்கள். பின்பு அவர்களும் அதற்கு ஆசைப்படுவார்கள். 👍

    ReplyDelete
  3. Excellent narration. 100% true. I mayike you to fo an investigation.its learnt that Central Government has allotted funds to Panchayats for various development works. Ruling party people have demanded 18% commission. When some Panchat Presidents demanded why they should poke their nose in Panchayat affairs the mater went to the Vellore minister who seems to have daid that 18% is too much and adviced the Party people to accept 12% . Why this corruption money? What quality of infrastructure could be developed?

    ReplyDelete