Saturday, 29 October 2022

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: கேஜ்ரிவாலின் கோஷம் - "நோட்டுல சாமியைப் பாத்து, போடுங்கம்மா ஓட்டு!"

 

- ஆர். வி. ஆர்

 

 

ஜாம் ஜாம்னு இன்னிக்கு டெல்லி முதல் மந்திரியா இருக்கார் கேஜ்ரிவால். அவர் தொடங்கின கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி. அந்தக் கட்சியோட தேர்தல் சின்னம் தெரியுமில்லையா? அதான், விளக்குமாறு.

 

கேஜ்ரிவாலுக்கு பளிச்னு வெளில சொல்ல முடியாத ஒரு பெரிய ஆசை இருக்கு. என்னன்னா, அவர் சீக்கிரமா நம்ம நாட்டு பிரதம மந்திரி ஆயிடணும். அந்த மாதிரி ஆசை மம்தா பானர்ஜிக்கும் இருக்கு, ராகுல் காந்திக்கும் இருக்கு. நித்திஷ் குமாரும் ஓரக் கண்ணுல அப்பிடி ஆசைப் படறார். ஆனா கேஜ்ரிவால் தான் இதுல ராட்சஸ ஆசை வச்சிண்டிருக்கார். அது அவருக்கே தெரியாம மறைமுகமா வெளிப் பட்டுடுத்து. எப்பிடின்னு தெரிஞ்சா சிரிப்பேள். ஏற்கனவே சிரிச்சிருப்பேளே!

 

        இன்னும் ரெண்டு மாசத்துல குஜராத் சட்டசபைத் தேர்தல் நடக்கப் போறது. கேஜ்ரிவால் அங்க போய் அவர் கட்சிக்காக பிரதமர் மோடியை எதிர்த்தும் பிரசாரம் பண்ணிண்டிருக்கார்.  இந்த சமயத்துல, திடீர்னு அவர் மோடிக்கு ஒரு ஐடியாவைச் சொல்லிருக்கார். இனிமே இந்திய ரூபாய் நோட்டுகள்ள ஒரு மாறுதல் பண்ணணும்னார். "ரூபா நோட்டுல ஒரு பக்கம் வழக்கம் போல காந்தி படம் இருக்கட்டும். மறு பக்கத்துல லட்சுமி, விநாயகர்னு சாமி படமா போடுங்கோ. லட்சுமி வளமைக்கு அதிபதி. விநாயகர் தடங்கல்களை நீக்குவார். அவா உருவம் நம்ம ரூபா நோட்டுல இருந்தா நம்ம பொருளாதாரம் முன்னேறும்"னு பத்திரிகையாளர்கள் முன்னாடி பேசிருக்கார், மூணு நாள் முன்னாடி. சிரிக்க முடியறவா சிரிக்கலாம். முடியாதவா அழலாம்.

 

கேஜ்ரிவால் அப்பிடிப் பேசினதுக்கு அவரோட இந்த நினைப்புதான் அடிப்படையா இருக்கணும்:  

 

‘ஹிந்துக்களோட ஓட்டு மோடியோட பா.ஜ.க-வுக்கு நிறையப் போறது. அதுக்கு ஒரு காரணம், மோடிக்கு ஹிந்து மதத்துல இயற்கையாவே பற்று இருக்கு, ஹிந்துக் கோவில்களுக்குப் போறார், சாமி கும்பிடறார், அது நாடு பூரா டிவி-ல தெரியறது. அந்தக் காட்சி ஹிந்துக்களுக்குப் பிடிக்கறது. அப்பழுக்கில்லாத நேர்மை, அசாதாரண  தலைமைப் பண்பு, அபாரமான மேடைப் பேச்சு, அவரோட மத்த சாதனைகள், எல்லாத்தோடயும் அவரோட ஹிந்து மதப் பற்றும்  சேர்ந்துண்டு ஹிந்துக்களை அதிகமா இறுக்கமா அவர்கிட்ட இழுக்கறது. இப்படிப் போயிண்டே இருந்தா நான் என்னிக்குப் பிரதம மந்திரி ஆறது?’

 

‘மோடியோட வெளிப்படையான அரசியல் நேர்மை, தலைமைப் பண்பு, சாதனை சரித்திரம், இதெல்லாம் எனக்குக் கிடையாது, வரவும் வராது. அப்ப ஒண்ணு பண்றேன். எண்பது பெர்சன்ட் ஹிந்துக்களை ஒரே ஐடியாவுல தெய்வத்தை நினைச்சு உருக வைச்சு என் பக்கம் இழுக்கறேன். இனிமே அச்சடிக்கிற ரூபா நோட்டுக்கள்ள ஒரு பக்கம் லட்சுமி, விநாயகர் அப்பிடின்னு ரெண்டு ஹிந்து தெய்வங்கள் உருவத்தைப் போடுங்கோன்னு மோடிக்கு பப்ளிக்கா ஒரு யோஜனை சொல்றேன். அது நடந்தா,  தினம் தன் கைக்கு வர ரூபா நோட்டுல லட்சுமி, விநாயகர் உருவங்களைப் பாத்து ஹிந்து ஜனங்கள் கண்ணுல ஒத்திப்பா. அப்பறம் நாடு பூரா லட்சோப லட்ச ஹிந்துக்கள் லோக் சபா தேர்தல்ல மோடியை ஒதுக்கி வைச்சு என்னோட விளக்குமாத்து சின்னத்துக்கு ஓட்டுப் போடுவா. சிறுபான்மை மக்களை வேற விதமா தாஜா பண்ணி அவா ஓட்டையும் வாங்கப் பாக்கறேன்.'


'இந்தப் பிளான்ல போனா என் கட்சிக்குத்தான் மெஜாரிட்டி கிடைக்கும். நான் பிரதமர் ஆயிடலாமே?’

 

    'ஆனா என்னோட யோஜனைக்கு உண்மையான காரணம் என்னன்னு நான் அசட்டுத் தனமா வெளில சொல்ல முடியுமா? பொருளாதாரத்தோட காசு பணம் சம்பத்தப் பட்டது. அதுனால, லட்சுமி விநாயகர் உருவங்களை ரூபா நோட்டுல சேர்த்தா நாட்டுப் பொருளாதாரம் உயரும், முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது, எல்லா மனுஷாளும் சீக்கிறமே சுபிட்சமா இருப்பா, நம்ம பிரயத்தனத்துக்கு மேல தெய்வ அனுக்கிரகமும் நமக்கு வேணும் அப்படிங்கற மாதிரி சொல்லிட்டுப் போறேன். இதை நம்புவோம், இல்லாட்டி தெய்வக் குத்தமா ஆகும்னு நிறைய ஹிந்துக்கள் நினைப்பாளே?’

 

‘ஒருவேளை என யோஜனையை மோடி செயல் படுத்தலைன்னா? ரூபா நோட்டுல லட்சுமி விநாயகர் தெய்வங்களை நாம பாக்க முடியாம பண்ணினவர் மோடிதான்னு நினைச்சு ஹிந்துக்கள் அவர் மேல கோபப் படட்டும். இந்தியப் பொருளாதாரம் பெரிசா முன்னேறாததுக்குக் காரணம், ரூபா நோட்டு டிசைனை நான் சொன்னபடி மாத்தலை, அதான் காரணம்னு அப்ப சொல்றேன். மோடி ஓட்டுக்கள் என் பக்கம் நிறையத் திரும்புமே?’

 

கேஜ்ரிவால் தலைக்குள்ள இந்த மாதிரி எண்ணங்கள் ஏன் தறி கெட்டு ஓடும்னா,  அவர் கிட்ட குயுக்தி நிறைய இருக்கு.  அவர் கெட்டிக்காரர் தான். ஆனா தகாத எண்ணம், கெட்ட எண்ணம், இதுகளோட சேர்ந்த கெட்டிக்காரத்தனம் இருக்கே, அதுக்குப் பேர்தான் குயுக்தி.

 

மதத்தை நம்பறது, தெய்வத்தை நம்பறது, இதெல்லாம் அடிப்படைல என்னங்கறேள்? சங்கடங்கள் நிறைஞ்ச நம்ம வாழ்க்கைல ஒரு சமாதானம், அமைதி தேடறதுக்கு அவா அவா ஏத்துண்ட, நம்பிக்கை வச்சிருக்கற, ஒரு மார்க்கம். அதுக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் விஞ்ஞானத் தத்துவங்களுக்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியமில்லை.  ஐ.ஐ.டில எஞ்சினீரிங் படிச்ச கேஜ்ரிவாலுக்கு இது நன்னாத் தெரியும். ஆனா அவரோட பிரதம மந்திரி ஆசையும் அவர் குயுக்தியும் ஒண்ணா கலந்து அவரை அசட்டுத்  தனமா பேச வச்சிருக்கு.

 

கேட்டா, இந்தோனீஷியா நாட்டுல ரெண்டு பெர்சன்ட்டுக்கு குறைவாதான் ஹிந்துக்கள், எண்பத்தி ஐந்து பெர்சன்ட்டுக்கு மேல முஸ்லிம்கள், அந்த நாட்டு நாணய நோட்டுல விநாயகர் படம் இருக்கேன்னு விதண்டாவாதம் பண்றார் கேஜ்ரிவால். நம்ம நாட்டுல இப்ப இருக்கற அரசியல் சமூக நிலைமை என்னன்னு பாக்காம ‘இன்னொரு நாட்டுல அப்படி இருக்கேன்னு’ குழந்தைத் தனமாவா ஒரு முதல் மந்திரி பேசுவார்? அது மட்டும் இல்லை. வினாயகர் படம் போட்ட இந்தோனீஷிய 2,000 ரூபாய் நோட்டுக்கள்  பதினாலு வருஷத்துக்கு முன்னாலயே புழக்கத்துலேர்ந்து  அந்த நாடு எடுத்தாச்சு, இப்ப விநாயகர் படம் போட்ட நோட்டு அங்க இல்லைன்னு இன்டர்நெட் சொல்றது.    

 

சரி, இப்பிடியும் நினைச்சுப் பாக்கலாம். ‘ஹிந்து ஓட்டுக்களை ஈஸியா வாங்கணும்னு கேஜ்ரிவால் நினைக்கலை. தான் சொன்னது நிஜமாவே நாட்டுக்கு நல்லது, அதுனால நம்ம பொருளாதாரத்துக்கும் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்னுதான் கேஜ்ரிவால் அப்படிப் பேசினார்னு  ஒரு பேச்சுக்கு வைச்சுக்கலாம்.  இவர் பேசினதை, இவருக்குப் பதிலா மோடி பேசினார்னு நினைச்சுப் பாருங்கோ. அப்ப முதல்ல மோடி மேல பாயற ஆசாமிகள்ள கேஜ்ரிவாலும் இருப்பார். உண்டா இல்லையா? அப்பறம் எப்பிடி கேஜ்ரிவால் நல்லெண்ணத்தோட மோடிக்கு யோஜனை சொன்னார்னு நினைக்க முடியும்?  


மோடி ஐடியா சொல்லி லட்சுமி விநாயகர் படங்களை  நம்ம ரூபா நோட்டுல போட்டா அந்த தெய்வங்கள் நாட்டுக்கு அனுக்கிரகம் பண்ணாது, அது நாட்டைப் பிளக்கற ஹிந்துத்வா, ஆனா தான் சொல்லி அது நடந்தா அந்த தெய்வங்கள் நமக்கு அனுக்கிரகம் பண்ணும்னு கேஜ்ரிவால் நினைக்கிறவர். ஏன்னா, பிரதமர் ஆகறதுக்கு வேற உருப்படியான வழி அவருக்குத் தெரியலை.

 

இப்பிடிப் பித்துக்குளி யோஜனை சொல்ற கேஜ்ரிவாலைத் திருத்தவே முடியாதான்னு கேட்டா, அதுக்கு ஒரே பதில்தான்: அதெல்லாம் நம்மளால ஆகற காரியமில்லை. லட்சுமி விநாயகர் தெய்வங்கள் நினைச்சா நடக்குமோ என்னவோ?

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

1 comment:

  1. AK is very clever and he has floated this idea of printing laksmi and Ganesha on currency notes with lots of calculation. It is just like asking have you stopped beating your wife! One can't answer with.an easy yes or no to such tricky question . Similarly, he has tried to put BJP in a spot. It is advisable for BJP not to answer this. This issue is like double edged sword. It may cut AK also. We can hope that let this sword cuts him to size.

    ReplyDelete