Monday, 15 May 2023

ராகுல் காந்தியைப் போற்றிப் புகழும் கமல் ஹாசன். காக்கா வேஷத்தில் கலக்குகிறார்!

  

-- ஆர். வி. ஆர்

 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், திரையில் பல வேஷங்களில் தோன்றித் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தியவர். இப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் குஷிப்படுத்த காக்கா வேஷத்தில் வந்து, "கா கா" என்று கரைந்து தள்ளி விட்டார் கமல். என்ன இயல்பான நடிப்பு!

 

நடந்து முடிந்த கர்நாடக மாநிலத் தேர்தலுக்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியும் சிறந்த வெற்றி பெற்று, இப்போது அங்கு ஆட்சி அமைக்கப் போகிறது. பார்த்தார் கமல் ஹாசன். 2024-ம்  வருடம் நடக்கப் போகும் லோக் சபா தேர்தலில் தனது கட்சிக்கு கௌரவமாக ஒன்றிரண்டு கூட்டணி சீட் வேண்டும் என்றால், திமுக திரும்பிப் பார்க்குமோ இல்லையோ, காங்கிரஸின் தயவு அதற்குக் கிடைக்கும் போலிருக்கிறது. அந்தத் தயவை உறுதியாக்கிக் கொள்ள, இப்போதைய கர்நாடக தேர்தல் வெற்றிக்கு ராகுல் காந்திதான் மிகப் பெரிய காரணம் என்று பாராட்ட விரும்பினார் கமல் ஹாசன். அந்த நோக்கத்துடன் ராகுல் காந்தியை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் புகழ்ந்திருக்கிறார் மனிதர். இரண்டு நாட்கள் முன்பு, தேர்தல் முடிவுகள் வெளியான தினமே,  ராகுலைக் காக்கா பிடித்து "கா கா" என்று ட்விட்டரில் கரைந்து தள்ளி விட்டார் கமல்.  

 

ட்விட்டரில் கமல் ஹாசன் எழுதி இருக்கும் வார்த்தைகள் இவை:

 

“ராகுல் காந்தி அவர்களே, இந்த முக்கிய வெற்றிக்காக எனது உளம் கனிந்த பாராட்டுக்கள்.”

 

“காந்திஜி மாதிரி, நீங்களும் நடந்தபடி மக்கள்  மனதிற்குள் நுழைந்து விட்டீர்கள். அவர் மாதிரியே, அன்பு மற்றும் பணிவின் வழியாக  நீங்களும் உலகின் சக்திகளை உங்கள் மென்மையான போக்கில் அசைக்க முடியும் என்று காட்டினீர்கள்”

 

இந்த வார்த்தைகளோடு, ட்விட்டரில் ஒரு போட்டோவையும் வெளியிட்டார் கமல் ஹாசன். அது, நாட்டின் பல பகுதிகளில் ராகுல் காந்தி சமீபத்தில் நிகழ்த்திய 'பாரத் ஜோடோ யாத்ரா' நடைப் பயணத்தின் போது தில்லியில் அவர் ஆதரவாளர்கள் சூழ நடக்கும் படம் - கமல் ஹாசனும் அருகில் இருக்கிறார். ‘ராகுல் காந்தியின் நடைப் பயணம், சுதந்திரத்திற்காக காந்திஜி மேற்கொண்ட நடைப் பயணங்களை நினைவு படுத்துகிறது. காந்திஜி சென்ற வழியில் ராகுலும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்’  என்று சொல்ல வருகிறார் கமல் ஹாசன்.


நேரு, படேல், ராஜாஜி, ஜெயபிரகாஷ் நாராயண், காமராஜ், போன்றவர்கள் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பெரும் தலைவர்களாக இருந்தவர்கள். கமல் ஹாசன் அவர்களை எல்லாம் விட்டார். அந்தத் தலைவர்களுக்கும் தலைவராக, நாட்டின் அனைத்து மக்களுக்கும் தலைவராக, இருந்தவர் மகாத்மா காந்தி.  நேராக மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லி, ராகுல் காந்தியும் அவர் மாதிரியானவர், அவரைப் போல் இந்திய மக்களின் மனதைப் பிடித்தவர்,  என்று ஒரே போடாகப் போட்டார் கமல்.  அதோடு அவர் நிறுத்தவில்லை. மகாத்மா காந்தி மாதிரி “அன்பு மற்றும் பணிவை”க் காட்டுபவராம் ராகுல். அப்படிக் காண்பித்து, “உலகின் சக்திகளை அசைத்து” விட்டாராம் ராகுல். என்ன ஒரு நவரச நகைச்சுவைக் காக்கா!

 

ராகுல் காந்தி பணிவானவர் என்று காங்கிரஸ்காரர்களே நம்ப மாட்டார்கள்.  பணிவுக்கும் அவருக்கும் வெகு தூரம் என்று அவர் நடையும், உடல் மொழியும், பேச்சும், செய்கையும் நன்றாக உணர்த்தும்.  

 

2013-ம் வருடம், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஜனாதிபதியின் கையெழுத்துக்கு அனுப்பப் பட்டிருந்த ஒரு அவசரச் சட்ட நகலைப் பொது வெளியில் ராகுல் காந்தி கிழித்துப் போட்டுத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார் – பிறகு அவரது பணிவான செய்கையால் அந்த அவசரச் சட்டம் கைவிடப்பட்டது.  2019-ம் வருடம் மேடையில் பேசும்போது, “ஏன் எல்லாத் திருடர்களின் பெயர்களும் மோடி என்ற பெயரில் முடிக்கின்றன? நீராவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்பதாக?” என்று பணிவின் சிகரமாகப்  பேசியவரும் ராகுல் காந்திதான்.

 

பணிவு இலாதவரிடம் அன்பும் இருக்காது. இருந்தாலும் ராகுல் காந்தி காங்கிரஸில் மதிக்கப் படுகிறவர், துதிக்கப் படுகிறவர். ஏனென்றால் காங்கிரஸ் இப்போது ஒரு பண்ணைக் கட்சி. அதில் பெரிய பண்ணை சோனியா காந்தி. சின்னப் பண்ணை அவரது மகன் ராகுல் காந்தி – பெரிய பண்ணையே அபரிதமான தாய்ப் பாசத்தால் சின்னப் பண்ணைக்கு வழி விடக் காத்திருக்கிறார், பின்னவரும் அப்படியே நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டார். அப்புறம், ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி குட்டிப் பண்ணையாக வலம் வருக்கிறவர். பண்ணை செருக்கு, அதிகாரம் தவிர இவர்களுக்கு வேறு தலைமைப் பண்புகள் இல்லை. இப்படியான ராகுல் காந்தியை மகாத்மா காந்திக்கு ஒப்பிட்ட கமல் ஹாசனை கோட்ஸேவுக்கு அடுத்த இடத்தில் வைக்க வேண்டும்.

 

அன்பு, பணிவு, தவிர ராகுல் காந்தியிடம் யாரும் காணாத ஒரு புதிய பெருமையைக் கண்டிருக்கிறார் கமல் ஹாசன். அதாவது, தனது பணிவாலும் அன்பாலும், காந்திஜியைப் போல   “உலக சக்திகளை அசைக்க முடிகிற”வர் அண்ணல் ராகுல் காந்தி என்கிறார் கமல் ஹாசன் (கமல், ராகுலிடம் ட்விட்டரில் சொன்ன ஆங்கில வரிகள்: “As Gandhiji did, ….. you have demonstrated that in your gentle way you can shake the powers of the world – with love and humility”).  கல கல காக்கா!


 தனக்குத் துளியும் பொருந்தாத புகழ் மாலைகளை ஒரு தலைவர் ஏற்கிறார், மறுக்காமல் அவற்றை நினைத்து ரசிக்கிறார், என்றால் அவர் மனதளவில் கோழையானவர் என்று அர்த்தம். அவரைச் சுற்றி இருப்பவர்கள் தங்களுக்குத் தேவைபடும்போது அவரைப் புகழ்ந்து, அவருடன் உள்ள நெருக்கத்தை துஷ்பிரயோகம் செய்து, தங்களை, தங்கள்  சுய நலன்களை பெரிதாக வளர்ப்பார்கள். அப்படியான தலைவருக்கு, அவரது  கோழைத்தனத்தால், அவரது சிறுபிள்ளைக் குணத்தால், அவரது  கட்சியின் பெயர் சரிகிறது  என்பதை உணர முடியாது. அத்தகைய தலைவர் ஆட்சி நடத்தினால், அரசும், அரசு நலனும், அரசு கஜனாவும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும்.


கோழையாக இருப்பவர்கள் வெளியில் வீராப்பாகப் பேசுவார்களா? பேசுவார்கள். இந்த உண்மையைத் திரையில் மிகைப்படுத்தி நடிகர் வடிவேலு நன்றாக உணர்த்தி இருக்கிறார். ஆகையால் சில தலைவர்கள் வீராப்பாக  வெளியில் பேசினாலும் மனதளவில் அவர்கள் கோழைகள்.   

 

 ராகுல் காந்தியைப் போல, தகுதி இல்லாத புகழையும் பாராட்டையும் நன்றாக ரசிப்பவர், தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின். செப்டம்பர் 2021-ல் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே மேடையில் பேசிய மூத்த அமைச்சர் துரை முருகன், “கலைஞர் பல்லாண்டுகளில் பெற்ற புகழை, 100 நாட்களில் பெற்றவர் முதல்வர் மு. க ஸ்டாலின்” என்று கரைந்தார்.  ஸ்டாலினும் அதை ரசித்தார்.

 

இத்தகைய தலைவர்கள் எப்படிக் கட்சியின் தலைவர்கள் ஆகிறார்கள்? அப்பாவி மக்கள் அதிகமான இந்தியாவில் இது சாத்தியம் என்பதுதான் எளிதான பதில்.  நமது நாட்டில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, வழியில் வம்சாவளித் தலைமையை ஏற்ற, அல்லது ஏற்கப் போகும், கட்சித் தலைவர்கள் இப்படி முன்னுக்கு வர வாய்ப்பு அதிகம். சந்தேகம் உள்ளவர்கள் உதயநிதி ஸ்டாலினையும் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.  பிறகு என்ன? துரை முருகன், கமல் ஹாசன் போன்ற தலைவர்களுக்குக் கொண்டாட்டம்தான். இவர்கள் தவிர, பெரிய தலைவர்களைக் கமுக்கமாகப் பயன்படுத்தி, பல வழிகளில் அவர்களுக்குப் பிரதி உபகாரம் செய்து, தன் நலம் வளர்த்து முன்னேறும் இரண்டாம் மட்ட தலைவர்கள் பல கட்சிகளில் உண்டு.

 

தூய சிந்தனை பெரிதாக இல்லாமல் வெற்றுப் புகழுக்கு மயங்கி இணங்கும் தலைவர்கள் உள்ளதாகப் பெரிய கட்சிகளே  இருந்தால், அவர்கள் அரசாங்கம் நடத்தினால்,  நாடு என்னாவது என்று கேட்கிறீர்களா? அதற்கும் பதில் வைத்திருப்பார்கள் நமது அரசியல்வாதிகள். தேசத்தின் உண்மை நிலை எப்படி இருந்தாலும், “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு” என்று போலிப் பெருமையுடன் அப்போதும் முழங்கினால் போயிற்று! இல்லை, ஒரு படி மேலே சென்று “திக்கெட்டும் புகழ் எட்டும் திராவிட மாடல்” என்று கர்ஜனை செய்தால் ஆயிற்று!

 

* * * * *


Saturday, 6 May 2023

பொய்மை, பொறுப்பின்மை, பித்தலாட்டம் - இதுதான் திராவிட மாடல் கொள்கையா?

-- ஆர். வி. ஆர்

 

தமிழக அரசு மதுவை மாநிலத்தில் எங்கும் கிடைக்கச் செய்வது, மது குடிக்கும் சாதாரணத் தமிழர்களுக்கு அப்பட்டமான கேடு விளைவிக்கிறது. அதாவது, அரசின் செயல் பெருவாரியான மக்களுக்குத் தீமை செய்கிறது. ஆனால் இந்த நேரடி விளைவை மறுத்து, தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்கள் மத்தியில் அனாயாசமாக அபத்தமாகப் பேசி இருக்கிறார். 

 

அவர் நினைத்தது இது. அதாவது, தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் நடத்தி, மது விற்று, பெரிய வருமானம் ஈட்டுவதை நியாயப் படுத்த வேண்டும். அதே சமயம், மாநிலத்தில் சாதாரண மக்கள் பலர் மேலும் மேலும்  குடித்துச் சீரழிவதற்கு, அவர்கள் குடும்ப நலன் கெடுவதற்கு, மதுவை மக்களுக்கு விற்கும் அரசு சிறிதும் பழி ஏற்கக் கூடாது. 

 

அபத்தமாகப் பேசினால்தான் இந்த இரண்டு நிலைகளையும் எடுப்பது சாத்தியம். அதை திராவிட மாடல் ஸ்டைலில் செய்து காட்டி இருக்கிறார் அமைச்சர். 

 

மா. சுப்பிரமணியனின் ஒரு சமீபத்திய பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் இருக்கிறது. நிருபர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும்போது அவர் இப்படிப் பேசுகிறார்: 

 

“மதுபானக் கடை இருக்குதுங்கறதால எல்லாரும் போய் குடிக்கறதில்லயே? அதைக் குடிக்கறவங்கதான். அதைக் குடிக்கிறவங்களைப் போய் ‘நீ முழு நேரமும் குடிக்காத’ன்னு நாம அட்வைசும் பண்ணலை. பண்ணினாலும் நல்லதுதான் ......”

 

என்னது? இதைப் படித்த உடன் கை விரல்களால் நெற்றியின் இரண்டு பக்கத்தையும் கெட்டியாகப் பிடித்தீர்களா? தலை சுற்றத்தான் செய்யும். இப்போது ஸ்டெடியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்த பின் அமைச்சர் அடுத்து பேசியதையும் கேளுங்கள்.

 

“மதுக் கடை திறந்து இருந்தா மக்கள் போவாங்களே?”என்று ஒரு நிருபர் யாருக்கும் தோன்றுவதைக் கேட்டுவிட, அமைச்சர் விர்ரென்று திராவிட மாடலின் சிகரத்துக்கே போய் விட்டார்.  அங்கிருந்து அந்த நிருபருக்கு இப்படிப் பதில் சொன்னார்:

 

“நீங்க போறீங்களா டெய்லி? எனக்கு அறுபத்து மூணு வயசு ஆகுது. இது வரை வெத்தலை பாக்கு போட்டதில்லை, பீடி சிகரெட் தொட்டதில்லை.  எந்த மது பானக் கடைக்கும் போய் பாட்டிலை எட்டிப் பாத்ததில்லை. அது மாதிரி நீங்களும் இருங்களேன். யார் வேணாங்கறது?

 

மா.சுப்பிரமணியன் பேசிய அபத்தத்தை விஸ்தாரமாக விளக்க வேண்டும் என்றால் இப்படிக் கேட்கலாம். 

 

அதிக மாணவர்களை எப்படி ஆரம்பக் கல்வியோ உயர்கல்வியோ கற்க வைக்க முடியும்? எல்லா ஊர்களிலும், எல்லாப் பகுதிகளிலும், அதிக பள்ளிக் கூடங்கள் ஆரம்பித்து நடத்தினால் தானே அது சாத்தியம்? ஆனால் இந்த அடிப்படை உண்மைக்கு மாறாக ஒருவர் பேச ஆரம்பித்து, “பள்ளிக் கூடம் இருக்குதுங்கறதால எல்லாரும் போய் படிக்கறதில்லயே? படிப்பை படிக்கறவங்கதான்.......” என்று பிதற்றினால் அதை என்ன சொல்வது? திராவிட மாடல் உளறல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

 

இன்னொன்று. பொதுவாக, தீயதை மனது தானாக நாடும். ஆனால் நல்லதை நம் மனதுக்கு மெனக்கெட்டு பயிற்றுவிக்க வேண்டும், தக்கவைக்க வேண்டும் - அப்போதுதான் சமூகம் ஒரு கட்டுப்பாட்டில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக ஒரு ஒழுங்குடன் முன்னேற முடியும். என்ன இருந்தாலும், சாதாரண மக்களுக்கு – அதுவும் படிப்பறிவு பெருகாத ஏழ்மையான மக்களுக்கு – குடிப்பழக்கம் தீயதுதான்.  “அரசு எல்லா இடத்திலும் மதுக் கடை வைத்தால் நீ குடிக்காமல் இருக்க வேண்டியதுதானே?” என்று மக்களைப் பார்த்து ஒருவர் கேட்டால், அதுவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கேட்டால், அது வெறும் அபத்தம் அல்ல. மனிதாபிமானம் அற்ற அரக்கத்தனம்.

 

மா.சுப்பிரமணியன் பேசியது கலப்பில்லாத அபத்தம் என்பது அவருக்குத் தெரிந்துதான் இருக்கும். இதில் சந்தேகமே வேண்டாம். ஒரு பொய்யைச் சொல்கிறார். ஒரு அரசின் சார்பாக பொறுப்பில்லாமல் பேசுகிறார். ஒரு அரசின் நிர்வாக இயலாமையை மறைக்க, பல பெருந்தலைகளின் மது ஆலைகளைக் காப்பாற்ற, தன் தலைவரைத் திருப்தி செய்து தனது அமைச்சர் பதவியைத் தக்க வைக்க, பித்தலாட்டம் செய்கிறார். சுருக்கமாக, திராவிட மாடலுக்கு இவரும் மாடலிங் செய்கிறார்.

 

இன்றைய தேதியில், தனது அறுபத்து மூன்று வயது வரை அவர் மதுக் கடைக்குச் சென்றதே இல்லை என்பதை மா. சுப்பிரமணியன் மார் தட்டிச் சொல்ல முடிகிறது.  ஏனென்றால், பல சாதாரண மக்களைப் போல் மது அருந்த ஆரம்பித்துப் பின்னர் மதுவுக்கு அவர் அடிமையாகவில்லை, அதனால் அவரது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளவில்லை, மது அருந்தி வாகனம் ஓட்டி அவர் விபத்துக்கு உள்ளாகவில்லை, அவர் தனது வருமானத்தை மதுவில் இழக்கவில்லை, அதனால் அவரது குடும்பத்தை அலட்சியம் செய்து குடும்பத்தினருக்கும் கேடு விளைவிக்கவில்லை என்பதில் அவர் நியாயமாகப் பெருமை காண்கிறார். ஆனால் பெரும்பாலான சாதாரண மக்கள், எழை மக்களின் நிலை மாறானது - இது தெரிந்தேதான் அவர் அபத்தம் பேசினார்.

 

1971-ல் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியிலிருந்து தமிழகத்தில் மதுக் கடைகளை அரசு திறந்து விட்டிருக்கிறது. நடுவில் அதிமுக ஆட்சிக் காலத்திலும் மதுக் கடைகள் உண்டு. இத்தனை காலமாக, சாதாரண மனிதர்கள் எல்லாரும் மா.சுப்பிரமணியன் போல் ‘மதுவின் பக்கமே போகமாட்டேன்’ என்றா இருக்கிறார்கள்? அவர்களின் அவலத்தால், அறியாமையால், வறுமையிலும் அவர்கள் மதுவை வாங்கிக் குடிப்பார்கள் என்று தெரிந்துதான் இரண்டு திராவிடக் கட்சி முக்கியஸ்தர்கள், அவர்களுக்கு நெருங்கியவர்கள் ஆகியோர் முதலீடு செய்து மதுபான ஆலைகள் நடத்துகிறார்கள், அரசும் மதுவை அனைவருக்கும் அனுமதிக்கிறது.  அந்த ஆலைகள் செழிக்கின்றன, தமிழக அரசின் மது வருமானம் வளர்கிறது. ஆனால் மதுவினால் தொடர்ந்து அதிகரிக்கும் சாதாரண மக்கள் வாழ்வின் அவதியைக் குறிக்க எண்கள் இல்லை.

 

மதுவினால் சாதாரண மக்கள், ஏழைகள், எக்கேடு கெட்டாலும், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கவனிப்பற்றுப் போனாலும், அவர்கள் குடும்பம் சீரழிந்தாலும், தமிழக அரசுக்கும், அதைச் சார்ந்து அரசியல் நடத்தும் மா.சுப்பிரமணியன் போன்றவர்களுக்கும் கவலை இல்லை. அவர்கள் பதவி,  அவர்கள் சுகம், அவர்களின் என்ன என்னவோ, ஆகியவை மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதற்காக அபத்தமாகப் பேச நேர்ந்தால் பேசித்தான் ஆகவேண்டும். அதைப் பார்த்தால் அரசியல் செய்ய முடியுமா என்ன?

 

ஆனால் ஒன்று. நமது அன்றாட வாழ்விலும், நாட்டின் பொது வாழ்விலும், மா.சுப்பிரமணியன் ஒரு உதாரணம், அவ்வளவுதான்.  தனக்கு, தன் காரியத்துக்கு, தன் ஈகோவிற்கு, தன் குடும்பத்திற்கு, பொருளாதார ரீதியிலும் பிற வகையிலும் நல்லது எது, சுகம் தருவது எது, லாபம் எது என்று தெரிந்து அதன்படி மட்டும் செயல்படும் புத்திசாலிகள் பலர் எங்கும் உண்டு. அதைக் கணக்கிட்டுத்தான் அவர்கள் எது சரி, எது தப்பு என்று நீள நீளமாகப் பேசுவார்கள். மா.சுப்பிரமணியன் மாதிரி சத்தமாக வெட்கமில்லாமல் கூடப் பேசுவார்கள். அல்லது, அதில் மட்டும் கூச்சப்படும் சிலர் தாங்கள் ஆதரிக்கும் அநீதியான விளைவுகளைப் பற்றிக் கூடியவரை பெரிதாகப் பேசாமல் இருப்பார்கள். இவர்கள் ஆபீசில் வேலை பார்ப்பவர்களாக, வக்கீல்களாக, கவிஞர்களாக, எழுத்தாளர்களாக, மேடைப் பேச்சாளர்களாக, அரசியல்வாதிகளாக, என்னவாகவும் இருக்கலாம் – அதெல்லாம் வேறு விஷயம்.

 

புத்திசாலிகளாக இருப்பவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நியாயமானவர்கள், நேரானவர்கள், என்பது நிச்சயமல்ல. அதீத புத்திசாலிகள் விஷயத்திலும் அது நிச்சயமல்ல. நியாய உணர்வு மற்றும் நேர் சிந்தை இல்லாத புத்திசாலிகளின் அதிகாரத்தின் கீழ் வாழ்க்கை நடத்தும் சாதாரண மக்களுக்கு, பணவசதி குறைந்தவர்களுக்கு, நல்ல தலைவர்களும் நல்ல ஆட்சியும் கிடைக்க அதிர்ஷ்டம் வேண்டும். தமிழக மக்களுக்கு  அவை என்று கிடைக்குமோ?

 

* * * * *

Monday, 1 May 2023

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: சூடான் நாட்டின் அவலம், நமக்கும் சேதி சொல்லும்.


         -- ஆர். வி. ஆர் 


 

ஆப்பிரிக்கா கண்டம் தெரியுமில்லையா?

 

சூடான் நாடு அங்கதான் இருக்கு.  அந்த நாட்டுல பாதி, சஹாரா பாலைவனத்துல இருக்கு. முழு நாடும் ஏழ்மைல,  அவலத்துல இருக்கு. இப்ப கொஞ்ச நாளா அங்க உள்நாட்டுப் போர் வேற.  அந்த நாட்டுத் தலைநகர் கார்ட்டூம்-ல இப்ப நடந்த ஒரு நிகழ்ச்சி வீடியோவா இன்டெர்நெட்ல வந்திருக்கே, பாத்தேளா?

 

கார்ட்டூம் நகரத்துல ஒரு பகல் நேரம். சாதாரண ஜனங்கள் பல பேர் ஒரு பாங்க் உள்ள வேக வேகமா நுழையறா.  வேக வேகமா உள்ளேர்ந்து வெளில வந்து ஓடறா. வெளில வர்றவா கிட்ட, கை நிறைய கத்தை கத்தையா பணம் இருக்கு. ஒண்ணு ரண்டு பேர், விவரமா கைல ஒரு காலிப் பையோட உள்ள போய் பணத்தை ரொப்பி எடுத்துண்டு வெளில வரா, ஓடறா –  ஏதோ ரோட்டுலேர்ந்து எலந்தப் பழம் பொறுக்கிண்டு வர மாதிரி.  விஷயம் இதான். உள்நாட்டுச் சண்டையால, பாங்கை பொது ஜனங்களே கொள்ளை அடிக்கறதும் அந்த நாட்டுல சுலபம்னு ஆயிடுத்து. அதைத்தான் வீடியோ காட்டறது.

 

ஆனா இந்த வீடியோ நிகழ்ச்சில, நம்ம நாட்டுக்கும் ஒரு சேதி இருக்கு. என்னன்னு சொல்றேன்.

 

‘தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்’-ங்கற  மாதிரி, ‘தன் வயித்துக்கு அப்பறம்தான் நேர்மையும் நற்பண்பும்’ அப்படின்னு தான் ஏழ்மையான ஒரு மனுஷக் கூட்டம் இருக்கும்.  ஒரு பாங்க்-க்கு காவலும் இல்லாம, தடுக்க போலீசும் இல்லாம,  சாதாரண ஜனங்களுக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கே உத்தரவாதமும் இல்லன்னா,  அவா பாட்டுக்கு பாங்க் உள்ள போய் கிடைச்ச பணத்தை எடுத்துண்டுதான போவா?  தண்ணீர் இல்லாதவா, கிடைச்ச இடத்துல  தண்ணீர் பிடிக்க ஓடறா  மாதிரி?

 

இப்ப இந்தியாவுக்கு வரேன். 

 

நாப்பது அம்பது வருஷத்துக்கு முன்னால இருந்த ஏழ்மை அளவுகோல் வேற, இப்ப அதுக்கான அளவுகோல் வேற. சாதாரண ஜனங்க அவா அப்பா அம்மாவை விட இப்ப அதிகம்  சம்பாதிக்கறா. ஆனா, நம்ம தேவைகள் இந்தக் காலத்துல அதிகமா போயிடுத்து. அதுனால, இப்ப வருமானம் பெருகின அளவுக்கு  சாதாரண ஜனங்களுக்கு ஏழ்மை குறையல – கொஞ்சம் வசதி கூடினாலும். அதுனால, பொறுப்புள்ள ஒரு அரசாங்கம் என்ன செய்யணும்னா,  சாதாரண மக்களுக்கு நல்ல படிப்பை சுலபமாக் குடுத்து, பொது வசதிகளை எல்லார்க்கும் கூட்டி, சாதாரண மக்கள் கொஞ்சம் சவுகரியமா வாழ அவாளுக்கு வேணும்கற பணத்தை அவாளே சம்பாதிக்கற மாதிரி  தொழில் வளத்தையும் வேலை வாய்ப்பையும் பெருக்கி வைக்கணும்.  நம்ம நாட்டுல அநேக மாநிலங்கள் இதைப் பண்றதா? இல்லை.   

 

இப்ப என்னன்னா, சாதாரண மக்களுக்கு அவா முக்கியத் தேவைகளை அவா சம்பாத்தியத்துல பூர்த்தி பணணிக்க முடியலை. அதுனால, அவா அரசாங்கத்தை எப்பவும் ‘ஆ’ன்னு பாத்துண்டிருக்கா.  இலவசமா அரசாங்கம் வேட்டி, சட்டை, புடவை,  சைக்கிள், லேப்டாப்னு குடுத்தா கியூல நின்னு வாங்கிக்கறா.  தாலிக்கு தங்கம், பொங்கலுக்கு கரும்பு வெல்லக் கட்டின்னு குடுத்தாலும் வாங்கிக்கறா. சாதாரண ஜனங்களை ஏழ்மைலயே வச்சிருந்தா, அப்படித்தான் வாங்கிப்பா, அது தப்பில்லை.  ஆனா அந்த அப்பாவி ஜனங்கள் படிச்சு முன்னேறி நல்ல வேலையும்  கிடைச்சு நன்னா சம்பாதிக்க விடாம வச்சிருக்காளே நம்ம தலைவர்கள்,  அவாதான் மனுஷ ரூபத்துல இருக்கற ராட்சஸா.

 

திரும்பவும் இப்ப சூடானைப் பாக்கலாம், அப்படியே நம்ம நாட்டையும் பாக்கலாம்.   சூடான்ல உள் நாட்டுப் போர் நடக்கறது ஒரு புறம் இருக்கட்டும்.  அந்த ஜனங்கள் இருக்கற நித்திய ஏழ்மைல, அவா அரசாங்கமே எல்லா குடும்பத்துக்கும் மாசம் மூவாயிரம் நாலாயிரம்னு இலவசமா பணத்தைக் குடுத்தா மனுஷா வேண்டாம்னு சொல்லுவாளா? சொல்ல மாட்டா. ஜனங்கள் அந்தப் பணத்தை சந்தோஷமா வாங்கிப்பா.  


நம்ம நாட்டு மக்களோட கதியையும் புரிஞ்சுண்டுதான், தமிழக அரசாங்கம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாசம் ஆயிரம் ரூபா இனாமா தரப் போறேன்னு சொல்றது – இப்ப அரசாங்கம் நடத்தற கட்சி தன்னோட தேர்தல் அறிக்கைலயே அது மாதிரி ஒரு வாக்குறுதியை எல்லாக் குடும்பத் தலைவிகளுக்கும்  குடுத்தது.  

 

இன்னொரு கட்சி, இன்னொரு மாநிலத்துல, இதை விடப் பெரிசா பண்றது. பத்து நாள்ள கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நடக்கப் போறது. அதுக்கான பிரச்சாரத்துல, “குடும்பத் தலைவிகளுக்கு மாசம் ரண்டாயிரம் ரூபா, எல்லா வீட்டுக்கும் இருநூறு யூனிட் மின்சாரம், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ரண்டு வருஷத்துக்கு மாசம் மூவாயிரம் ரூபான்னு நாங்க பதவிக்கு வந்தா இலவசமா குடுப்போம்”னு காங்கிரஸ் கட்சி சொல்றது. இதெல்லாம் என்னங்கறேள்? ஒரு ரூட்டுல ரண்டு தனியார் கம்பெனி பஸ் விட்டா, ஒரு கம்பெனி பஸ்ஸை ஓவர்டேக் பண்றதுக்கு இன்னொண்ணு படு வேகமா போகும். அடுத்தவன் சம்பாதிக்கறதை அவனுக்கு முன்னாடி நாம சம்பாதிக்கணும், அதான?  

 

மக்களோட தினப்படி  செலவை அரசாங்கமே பெரிய அளவுக்கு ஏத்துக்கற மாதிரி பணக்கார அரசாங்கமா நமக்கு இருக்கு? அது இல்லை.  ஆனா இந்த இலவசத்தை  எல்லாம் எந்த அரசாங்கம் குடுத்தாலும் வாங்கிக்கற நிலமைல நம்ம மக்கள் இருக்கா. அதுதான் நம்ம ஜனநாயகம்.  அப்படித்தான் நம்ம நாட்டை அரசியல்வாதிகள் வச்சிருக்கா.  

 

அரசாங்க கஜானாவைப் பொறுத்த வரை, அரசாங்கமே அடிக்கடி இலவசமா எல்லாருக்கும் பணமோ பொருளோ கட்டுப்பாடு இல்லாம குடுக்கறதும் ஒண்ணுதான், எல்லா ஜனங்களும் அப்பப்ப பாங்க் – அதுவும் பொதுத்துறை பாங்க் – உள்ள போய் முடியற பணத்தை அள்ளி எடுத்துண்டு வந்து தங்களுக்காக செலவு பண்ணிக்கறதும் ஒண்ணுதான். இதுக்குப் பின்னால இருக்கற வியாதியும் ஒண்ணுதான். 

 

அந்த வியாதி என்னன்னு கேக்கறேளா? தன்னை, தன் குடும்பத்தை, தனக்கு ஜால்ரா போட்டு நமஸ்காரம் பணறவாளை மட்டும் முன்னேற விட்டு, சாதாரண ஜனங்களை எப்பவும் சொற்ப சம்பாத்தியத்துக்கே அலைய விடற அரசியல்வாதிகள் ஆட்சி பண்றதுதான் அந்த வியாதி.  நம்ம நாட்டுல, பல மாநிலங்கள்ள பல பத்தாண்டுகளா இதுதான நடக்கறது?

 

சூடானை விட நம்ம நாடு பெரிய நாடு.  நம்ம நாட்டுல இயற்கை வளமும் ஜாஸ்தி.  அதுனால,  மரம், மலை, மண்ணுன்னு எதையும் அனுமதி இல்லாம ஒரு தாதா வெட்டி எடுத்துண்டு போய் கசாக்கலாம், அதுல மத்தவா கமிஷன் பாக்கலாம். இங்க எப்படில்லாமோ சம்பாதிச்சதை அரசல் புரசலா வெளி நாட்டுக்கு அனுப்பி, அங்கேர்ந்து ‘ஏதோ காக்கா குருவி எங்களுக்கு அனுப்பிச்சது’ன்னு சொல்லி நம்ம நாட்டுக்கே கொண்டு வரலாம்.  சம்பாதிச்ச செல்வத்துல கொஞ்சம் கிள்ளி எடுத்து, தேர்தல் சமயத்துல அப்பாவி ஜனங்களுக்கு விநியோகம் பண்ணி அவா ஓட்டை வாங்கிப் பதவியைப் பிடிக்கலாம். ஆட்சிக்கு வந்து, அரசாங்கப் பணத்துலேர்ந்து அந்த ஜனங்களுக்கு இலவசங்களை அள்ளி வீசி அவா எப்பவும் அரசியல்வாதிகளை கும்பிடறா மாதிரியே இருக்கப் பண்ணலாம். அப்பறம் அரசாங்கத்துல இன்னும் ஏதேதோ பண்ணலாம். கிடக்கறது நாடு!

 

சூடான்ல இல்லாத தனி மனிதத் திறமைகள் நம்மகிட்ட ஏராளம். ஆனா இந்தியாவுல அது பெரிசா பரவலா பிரயாஜானப் படாது, இங்க அதை வளர விட மாட்டான்னு அந்தத் திறமை வண்டி வண்டியா அமெரிக்காவுக்கு பறக்கறதே? அதெல்லாம் நம்ம நாட்டுக்கு ஒழுங்கா முழுசா பிரயோஜனப் பட்டிருந்தா நம்ம நாடும் மக்களும் எப்பவோ பல மடங்கு பெரிசா முன்னேறி இருக்கலாமே? இன்னும் நம்ம ஜப்பானையும் சிங்கப்பூரையும் பாத்து மூக்கு மேல விரலை வைக்க வேண்டாமே?

 

இப்ப சொல்லுங்கோ. ஜனங்களே பாங்க் உள்ள புகுந்து கொள்ளை அடிக்கறதுக்கும், அது நடக்காம ஒரு அரசாங்கமே கஜானாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, மக்களுக்கு ஒரு கணக்கோ கட்டுப்பாடோ இல்லாம பணம் பொருள் இலவசமா விநியோகம் பண்றதுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?  மிலிட்டரி உடையைப் போட்டுண்டு, முறைப்பா முகத்தை  வச்சுண்டு, சூடான்ல சில பேர் ராஜாங்கம் பண்ணி அவா மட்டும்  அனுபவிக்கறா. நம்ம நாட்டுல வெள்ளை டிரஸ் போட்டுண்டு, சிரிச்ச முகத்தோட சிலர் ராஜாங்கம் பண்ணி ஓகோன்னு இருக்கா. ஜனங்களுக்குக் கிடைக்க வேண்டிய முன்னேற்றத்துல பத்து பர்சன்ட் கிடைச்சாலே பெரிசு. வேற பர்சன்ட் வேற எங்கயோ போறதே!

 

நாட்டுக்காக பிரார்தனை பண்ணுங்கோ. ஏற்கனவே நிறைய பண்ணிருப்பேள். கொஞ்ச வருஷமா பலன் தெரியறது, இல்லையா?  

 

* * * * *

Friday, 21 April 2023

Atiq Ahmed Was a Rakshasa to Common People in UP - They Will Rejoice at His Killing.

  

-        RVR

 

You will have seen the visuals of a recent killing in Prayagraj of Uttar Pradesh, right in front of policemen.

 

UP's gangster-turned politician Atiq Ahmed and his younger brother Ashraf Ahmed were shot dead at point blank range by a gang of three youngsters, on 15th April.  Atiq was 60 and Ashraf, 49.

 

The two victims, hand-cuffed and closely surrounded by policemen, were walking next to each other towards a hospital in Prayagraj for a medical check. Suddenly a youngster holding a gun came touching close to Atiq from the side, shot the prisoner on the head and felled him. As policemen got back in shock, in a jiffy the gunman and his two accomplices fired more shots on Atiq and his brother, ending both lives. Then the killers were overpowered.  An investigation is under way.

 

No doubt, it was a dastardly crime. It happened when the victims were in the protective ring of policemen. With or without policemen nearby, if the victims were some local merchants or tourists carrying cash, or women wearing jewellery, and it was murder for gain, the whole of Prayagraj, and the State of UP itself, and India too, would be aghast and angry. Also, if the assailants had shot at and killed two escorting policemen alone, freed the two prisoners and escaped with them, the whole country will be shocked and furious.  But now, there is quiet general acceptance, and some relief too, among ordinary people everywhere. Why?

 

Atiq Ahmed was no ordinary politician. He was a dreaded don. He had more than 100 criminal cases, including kidnapping, murder and extortion registered against him, and he was accused of murder when he was just 17. He was recently sentenced to life imprisonment in a kidnapping case.

 

Atiq contested for the legislative assembly of UP and was elected an MLA for five consecutive terms, one of them on the ticket of Samajwadi Party.  For that party he had also won the Phulpur Lok Sabha seat in 2004, a constituency won by Jawaharlal Nehru three times in a row from 1952. Atiq had fought some of his elections from jail.

 

Atiq’s younger brother Ashraf had more than 50 criminal cases against him – including land grabbing, kidnapping, extortion and murder. He was a former MLA of the Samajwadi Party.


In 2004, Raju Pal of the Bahujan Samaj Party won against Ashraf in an election to the UP legislative assembly, from Allahabad West.  The next year, Raju Pal was murdered. Obviously, he paid the price for opposing Ashraf in elections, that too from a political stronghold of Atiq. A key witness to that crime was Umesh Pal. And what happened to Umesh Pal? He was gruesomely murdered in Feb.2023, along with his two police security guards.  So, he too paid the price for daring to be a witness in a judicial proceeding against gangsters. Atiq's teen-age son Asad was named among the main suspects in that killing.

 

Victories of Atiq and Ashraf in elections did not mean people willingly voted for criminals, sweetly switching from a great democrat like Nehru to terrorising dons. In the half-baked ill-informed Indian democracy, ordinary people would also vote out of fright and on whatever choices were thrust on them by crafty politicians. Atiq and his brother were democratically elected, in a satirical way.  

 

You know the story of Hiranyakashipu. He was a rakshasa king, a demon, uncontrollable and unconquerable, and he caused havoc all over. As the Puranas tell us, Lord Vishnu took the form of Narasimha and killed Hiranyakashipu, employing some strategy that overcame a few immunities the rakshasa enjoyed. The annihilation of Hiranyakashipu tells us that demons tormenting innocent humans must be and will be vanquished with the help of God and that the fall of a demon, in whatever way it occurs, will be celebrated by ordinary people. Most ordinary Indians of today are just as hapless as the people of Hiranyakashipu’s times.

 

Atiq Ahmed was as powerful, and as lawless, as a rakshasa ruler of ancient times. When Atiq died, the general population he held in fear would feel relieved, and people elsewhere would empathise with the people who dreaded him.  This does not mean that any don, gangster, or suspected serious criminal should be done to death in cold blood, especially when he is in police custody - let us be clear on this. The lesson we have is different.

 

If a system of courts, laws, law enforcers, lawyers and political rulers work badly or too slowly, and hardened criminals roam free and prosper, and enter legislative assemblies and parliament enjoying more privileges, unmindful of over one hundred serious criminal cases against them, ordinary people will believe the law has failed – though men and women involved in that well-intended system may reckon that the law is still working at its best. In this background, if such a criminal meets his end suddenly, by cardiac arrest, by drowning, in a road accident or at the hands of a killer, ordinary people will just believe that a rakshasa has vanished, and will celebrate quietly.  This is small consolation for our choiceless and voiceless people who are meant to be the focal point of our democracy. 

 

All said and done, do you think that the manner and circumstance of the killing of Atiq and Ashraf pooh-pooh law and legal procedure? You would be right if you feel so.  But don’t ask this question to the ordinary people of Prayagraj. If they ask you, “All said and done, does the law work for us?” you won’t have an answer.

 

* * * * *

Saturday, 15 April 2023

அண்ணாமலை அதிமுக-வையும் எதிர்க்க வேண்டும். அது ஏன் நல்லது?

          - ஆர். வி. ஆர் 

 

'2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அதிமுக தலைவர்களின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவேன்' என்ற அர்த்தத்தில் அண்ணாமலை பேசி இருக்கிறார். இது, பலரும் எதிர்பாராத அசாத்தியத் துணிவு, அசாதாரண அரசியல் நேர்மை. அவர் பேசியதன் பொருள்: திமுக-வோடு சேர்த்து அதிமுக-வையும் பாஜக எதிர்க்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.   

 

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு? திமுக தலைவர்கள் அவ்வப்போது இந்து மதத்தை இகழ்வார்கள். தப்பாட்சி செய்து தன்னலம் வளர்ப்பார்கள். அதிமுக தலைவர்கள் விபூதி குங்குமம் இட்டுக் கொள்வார்கள்.  மற்றபடி ஆட்சி செய்வதிலும் செழிப்பதிலும் அவர்களும் திமுக-வினர் மாதிரித்தான். மக்கள் நலன் என்பது அந்த இரு கட்சிகளுக்குமே பெரும் பாசாங்கு.  இது போக, திமுக-வைத் தடுத்துவிட்டு, தனது கட்சி மாநில ஆட்சிக்கு வருவதற்காக பாஜக-வுடன் தேர்தல் கூட்டு வைக்க அதிமுக விரும்பும், அந்த அளவுக்கு மட்டும் அது பாஜக-வை சகிக்கும்.  

 

பாஜக மக்கள் செல்வாக்கைப் பெரிதளவில் நேரடியாகப் பெற முடியவில்லை என்றால், அந்தக் கட்சி அதிமுக-வுடன் கூட்டு வைத்து முதலில் திமுக-வைத் தோற்கடிக்க வேண்டும், பிறகு படிப்படியாக  அதிமுக-வையும் எதிர்த்துத் தேர்தலில் வெல்ல வேண்டும் -  அவ்வாறு தமிழகத்தில் திராவிடக் கட்சிகளே தலை தூக்காத ஆட்சியை அமைக்க வேண்டும் – என்ற தொடர் நிகழ்வுகள் சாத்தியமா? அவை சாத்தியம் என்று பேராசையுடன் எண்ணிப் பார்த்தாலும் அதற்கு முப்பது நாற்பது ஆண்டுகள் ஆகுமே? அரசியலில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கே துளியும் மாறாத திட்டங்கள் இல்லை. ஆகையால் முதலில் அதிமுக-வின் துணையுடன் திமுக-வை வென்றுவிட்டுப் பின்னர் பாஜக தனியாக அதிமுக-வையும் தோற்கடிப்பது என்பது வெறும் கனவு.

 

ஒன்றைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம். ‘திராவிடக் கட்சிகள்’ என்று குறிப்பிட்டால் ஏதோ தமிழையும் தமிழர் பண்பாட்டையும் அவர்கள் நலனையும்  முதன்மையாகப் பேணும் கட்சிகள் என்று அர்த்தமல்ல.  அந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழகத்தைத் தனிமைப் படுத்தி, நமது இந்திய முகத்தை மறைத்து, பதவியில் அமர்ந்து, பூகோள விஞ்ஞான முறைகேடுகள் புரிந்து, உச்சபட்ச சுயநலம் வளர்க்கச் செயல்படும் தமிழகக் கட்சிகள் அவை என்று அர்த்தம்.  பாஜக தமிழகத்தில் ஒரு திராவிடக் கட்சி இல்லை என்றாலும் தமிழ், தமிழகம், தமிழர்கள் என்பதை மனதில் வைத்துப் போற்றி, இந்தியாவையும்  வணங்கி நிற்கும் ஒரு கட்சி.

 

2024 லோக் சபா தேர்தலில், அதிமுக-வுடன் அணி சேருவதால் கிடைக்கும் தமிழக எம்.பி-க்கள் எண்ணிக்கை (பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள்) மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மிக அவசியம், திமுக மற்றும்  அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒரு சேர எதிர்த்தால் தமிழகத்தில் போதிய எம்.பி-க்கள் எண்ணிக்கை பாஜக-விற்குக் கிடைக்காது, அதனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க முடியாமால் போகலாம் என்று ஒரு கணக்கு இருக்கிறது.  அதன் படித்தான்,  பாஜக இப்போது அதிமுக ஆட்சி முறைகேடுகளைப் பற்றி ஒன்றும் பேசாமல் பூசி மெழுகி, அதிமுக-வோடு உறவும் கூட்டும் வைத்து, திமுக-வை மட்டும் எதிர்க்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. இப்படியான கணக்கு சிக்கலானது, இது தப்பாகப் போவதும் அதிக சாத்தியம்.  

 

2024 தேர்தலில் பாஜக-விற்கு, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, மற்ற மாநிலங்களில் கிடைக்கும் எம்.பி-க்களே  மத்தியில் ஆட்சி அமைக்கப் போதுமானது என்ற வலுவான கணக்கும் சேர்ந்து இருந்தால், அண்ணாமலையின் தலைமையில் பாஜக தமிழகத்தில் அதிமுக-வையும் எதிர்க்கலாம். பயனற்ற ஆட்சிக்கு, ஊழலுக்கு, ஆட்சி முறைகேடுகளுக்கு மாற்றாக பாஜக-வை ஆதரிக்க நினைக்கும் சாதாரண மக்கள், திமுக தரப்பில் இருந்து மட்டும் இன்றி, அதிமுக தரப்பில் இருந்தும் வரலாமே? 


திமுக-வை முன்பு ஆதரித்த சாதாரண மக்களில் பலர், கருணாநிதியின் மகன் ஸ்டாலின் இப்போது முதல் அமைச்சராக இருக்கும் போதே அண்ணாமலையால் பாஜக-விற்கு ஈர்க்கப் படலாம். அது சாத்தியம் என்றால், ஜெயலலிதா இல்லாத அதிமுக-வின் பொம்மைத் தலைவர்களிடம் இருந்து சாதாரண மக்கள் பலர் விலகி வந்து, உயிர்ப்பான அண்ணாமலையின் பாஜக-விற்கு  ஓட்டளிக்க வாய்ப்பும் அதிகம்.  

 

எந்தப் பெரிய காரியத்தைக் கையில் எடுப்பதற்கு முன்னும் வெற்றி நிச்சயம் என்றில்லை. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்ப்பது மிகப் பெரிய காரியம்தான். இந்தி புரியாத தமிழகத்தில் மோடியும் அமித் ஷாவும் மக்கள் செல்வாக்கை நேரடியாக அதிகம் பெறுவது நடக்காது. தமிழகத்தில் மோடியை முன்னிறுத்த (அதைவிட, பாஜக-வை சாதாரண மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு செல்ல) மோடியின் நம்பிக்கையைப் பெற்ற அண்ணாமலை மாதிரியான ஒரு ஒளிமிக்க தமிழகத் தலைவர் அவசியம்.

 

இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதற்கான காலம் இதுதான். அதற்கான தமிழக பாஜக தலைவர் கிடைத்திருப்பதும் இப்போதுதான். அந்தச் செயலை ஆதரிக்கக் கூடிய வலுமிக்க மத்தியத் தலைவர்கள் பாஜக-வில் இருப்பதும் இப்போதுதான் – இது போகப் போக நிச்சயமாகும். அண்ணாமலையின் வீரத் தலைமையில் - அவருக்கு இருக்கும் திறமையான அர்ப்பணிப்புள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களின் துணையோடு -  இந்தப் பெரிய காரியம் இப்பொது முயற்சிக்கப் படாவிட்டால் பின்னால் சாத்தியம் ஆவது இன்னும் கடினம். நரேந்திர மோடி நல்ல ஆரோக்கியத்துடன் உச்சத்தில் இப்போது இருக்கும்போது, அண்ணாமலை இதை முயற்சிக்கவும் அதில் பலன் காணவும் வாய்ப்புகள் அதிகம். அதனால் காலம் தன்னைக் காதில் அழைப்பதாக அண்ணாமலை இப்போது உணர்கிறார்.

 

இந்த முயற்சி இன்று தோற்றாலும், அதற்கான உத்வேகமும் அடித்தளமும் தமிழகத்தில் வலுவாக அமைக்கப் படும் - அண்ணாமலையின் இந்த இளம் வயதிலேயே.  மத்தியில் மோடியின் தலைமை பாஜக-விற்கும் நாட்டுக்கும் எவ்வளவு முக்கியம் வாயந்ததோ, அதற்கு ஈடானது அண்ணாமலையின் தலைமை தமிழ்நாட்டு பாஜக-விற்கும் தமிழ்நாட்டிற்கும்.

 

சரி, ஓரமாக ஒரு விஷயத்தையும் பார்க்கலாம். ‘நாம் தமிழர் கட்சி’த் தலைவர் சீமான் திமுக-வையும் அதிமுக-வையும் ஒரு சேரப் பொதுவெளியிலும் தேர்தல்களில் எதிர்க்கிறார். சென்ற 2021 தமிழக சட்டசபைத் தேர்தலில் அவர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றது.   அவர் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளைத் தொடர்ந்து எதிர்ப்பதற்கும்,  அண்ணாமலையின் தலைமையில் பாஜக அந்த இரு கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்யும் காட்சிக்கும் வேறுபாடு இருக்கிறதா? இருக்கிறது.

 

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மூன்றுமே விரும்பத் தகாதவர்கள் என்பதை டக்கென்று எடுத்துக் காட்ட ஒரு உதாரணம் சொல்லலாம். இரண்டு நெடுநாள் கொள்ளைக் காரர்களை அம்பலப் படுத்த முனைபவர்கள் இரண்டு வகை. ஒருவர், அந்த இருவரைத் தாண்டி அவர்களின்  இடத்தைப் பிடிக்கக் காத்திருக்கும் தந்திரமான மூன்றாவது கொள்ளைக் காரர்.  இரண்டாமவர்,  அந்த இருவரையும் அப்புறப் படுத்தி அமைதியை நிலைநாட்ட முனைபவர். அந்த இரண்டாமவர் அதற்குச் சரியான நபராக இருந்தாலும், அவர் துணிந்து முன்னுக்கு வந்து தனது முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டால்தான் மக்கள் அவரை அடையாளம் கொண்டு ஆதரிப்பார்கள்.  இல்லாவிட்டால் சோர்ந்து கிடக்கும் மக்களிடம் அந்த முதலாமவர் இன்னும் அதிக ஓட்டுக்கள் பெறுவார்.  

 

அண்ணாமலையின் எண்ணம்  முயற்சிக்கப் படுவது சரிதானே?

 

* * * * *

(யாரும் பகிரலாம்)