ஆப்பிரிக்கா
கண்டம் தெரியுமில்லையா?
சூடான்
நாடு அங்கதான் இருக்கு. அந்த நாட்டுல பாதி,
சஹாரா பாலைவனத்துல இருக்கு. முழு நாடும் ஏழ்மைல,
அவலத்துல இருக்கு. இப்ப கொஞ்ச நாளா
அங்க உள்நாட்டுப் போர் வேற. அந்த நாட்டுத்
தலைநகர் கார்ட்டூம்-ல இப்ப நடந்த ஒரு நிகழ்ச்சி வீடியோவா இன்டெர்நெட்ல வந்திருக்கே,
பாத்தேளா?
கார்ட்டூம்
நகரத்துல ஒரு பகல் நேரம். சாதாரண ஜனங்கள் பல பேர் ஒரு பாங்க் உள்ள வேக வேகமா நுழையறா. வேக வேகமா உள்ளேர்ந்து வெளில வந்து ஓடறா. வெளில
வர்றவா கிட்ட, கை நிறைய கத்தை கத்தையா பணம் இருக்கு. ஒண்ணு ரண்டு பேர், விவரமா கைல
ஒரு காலிப் பையோட உள்ள போய் பணத்தை ரொப்பி எடுத்துண்டு வெளில வரா, ஓடறா – ஏதோ ரோட்டுலேர்ந்து எலந்தப் பழம் பொறுக்கிண்டு வர
மாதிரி. விஷயம் இதான். உள்நாட்டுச் சண்டையால, பாங்கை பொது
ஜனங்களே கொள்ளை அடிக்கறதும் அந்த நாட்டுல சுலபம்னு ஆயிடுத்து. அதைத்தான் வீடியோ காட்டறது.
ஆனா
இந்த வீடியோ நிகழ்ச்சில, நம்ம நாட்டுக்கும் ஒரு சேதி இருக்கு. என்னன்னு சொல்றேன்.
‘தனக்கு
மிஞ்சிதான் தான தர்மம்’-ங்கற மாதிரி, ‘தன்
வயித்துக்கு அப்பறம்தான் நேர்மையும் நற்பண்பும்’ அப்படின்னு தான் ஏழ்மையான ஒரு மனுஷக்
கூட்டம் இருக்கும். ஒரு பாங்க்-க்கு காவலும்
இல்லாம, தடுக்க போலீசும் இல்லாம, சாதாரண ஜனங்களுக்கு
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே உத்தரவாதமும் இல்லன்னா, அவா பாட்டுக்கு பாங்க் உள்ள போய் கிடைச்ச பணத்தை
எடுத்துண்டுதான போவா? தண்ணீர் இல்லாதவா, கிடைச்ச
இடத்துல தண்ணீர் பிடிக்க ஓடறா மாதிரி?
இப்ப
இந்தியாவுக்கு வரேன்.
நாப்பது
அம்பது வருஷத்துக்கு முன்னால இருந்த ஏழ்மை
அளவுகோல் வேற, இப்ப அதுக்கான அளவுகோல் வேற. சாதாரண ஜனங்க அவா அப்பா அம்மாவை விட இப்ப
அதிகம் சம்பாதிக்கறா. ஆனா, நம்ம தேவைகள் இந்தக்
காலத்துல அதிகமா போயிடுத்து. அதுனால, இப்ப வருமானம் பெருகின அளவுக்கு சாதாரண ஜனங்களுக்கு ஏழ்மை குறையல – கொஞ்சம் வசதி கூடினாலும். அதுனால, பொறுப்புள்ள ஒரு அரசாங்கம் என்ன செய்யணும்னா, சாதாரண மக்களுக்கு நல்ல படிப்பை சுலபமாக் குடுத்து,
பொது வசதிகளை எல்லார்க்கும் கூட்டி, சாதாரண
மக்கள் கொஞ்சம் சவுகரியமா வாழ அவாளுக்கு வேணும்கற பணத்தை அவாளே சம்பாதிக்கற மாதிரி
தொழில் வளத்தையும் வேலை வாய்ப்பையும் பெருக்கி
வைக்கணும். நம்ம நாட்டுல அநேக மாநிலங்கள் இதைப் பண்றதா? இல்லை.
இப்ப
என்னன்னா, சாதாரண மக்களுக்கு அவா முக்கியத் தேவைகளை அவா சம்பாத்தியத்துல பூர்த்தி பணணிக்க முடியலை.
அதுனால, அவா அரசாங்கத்தை எப்பவும் ‘ஆ’ன்னு பாத்துண்டிருக்கா. இலவசமா அரசாங்கம் வேட்டி, சட்டை, புடவை, சைக்கிள், லேப்டாப்னு குடுத்தா கியூல நின்னு வாங்கிக்கறா.
தாலிக்கு தங்கம், பொங்கலுக்கு கரும்பு வெல்லக்
கட்டின்னு குடுத்தாலும் வாங்கிக்கறா. சாதாரண
ஜனங்களை ஏழ்மைலயே வச்சிருந்தா, அப்படித்தான் வாங்கிப்பா, அது தப்பில்லை. ஆனா அந்த அப்பாவி ஜனங்கள் படிச்சு முன்னேறி நல்ல
வேலையும் கிடைச்சு நன்னா சம்பாதிக்க விடாம
வச்சிருக்காளே நம்ம தலைவர்கள், அவாதான் மனுஷ
ரூபத்துல இருக்கற ராட்சஸா.
திரும்பவும் இப்ப சூடானைப் பாக்கலாம், அப்படியே நம்ம நாட்டையும் பாக்கலாம். சூடான்ல உள் நாட்டுப் போர் நடக்கறது ஒரு புறம் இருக்கட்டும். அந்த ஜனங்கள் இருக்கற நித்திய ஏழ்மைல, அவா அரசாங்கமே எல்லா குடும்பத்துக்கும் மாசம் மூவாயிரம் நாலாயிரம்னு இலவசமா பணத்தைக் குடுத்தா மனுஷா வேண்டாம்னு சொல்லுவாளா? சொல்ல மாட்டா. ஜனங்கள் அந்தப் பணத்தை சந்தோஷமா வாங்கிப்பா.
நம்ம நாட்டு மக்களோட கதியையும் புரிஞ்சுண்டுதான், தமிழக அரசாங்கம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாசம் ஆயிரம் ரூபா இனாமா தரப் போறேன்னு சொல்றது – இப்ப அரசாங்கம் நடத்தற கட்சி தன்னோட தேர்தல் அறிக்கைலயே அது மாதிரி ஒரு வாக்குறுதியை எல்லாக் குடும்பத் தலைவிகளுக்கும் குடுத்தது.
இன்னொரு கட்சி, இன்னொரு மாநிலத்துல, இதை விடப் பெரிசா பண்றது. பத்து நாள்ள கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நடக்கப் போறது. அதுக்கான பிரச்சாரத்துல, “குடும்பத் தலைவிகளுக்கு மாசம் ரண்டாயிரம் ரூபா, எல்லா வீட்டுக்கும் இருநூறு யூனிட் மின்சாரம், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ரண்டு வருஷத்துக்கு மாசம் மூவாயிரம் ரூபான்னு நாங்க பதவிக்கு வந்தா இலவசமா குடுப்போம்”னு காங்கிரஸ் கட்சி சொல்றது. இதெல்லாம் என்னங்கறேள்? ஒரு ரூட்டுல ரண்டு தனியார் கம்பெனி பஸ் விட்டா, ஒரு கம்பெனி பஸ்ஸை ஓவர்டேக் பண்றதுக்கு இன்னொண்ணு படு வேகமா போகும். அடுத்தவன் சம்பாதிக்கறதை அவனுக்கு முன்னாடி நாம சம்பாதிக்கணும், அதான?
மக்களோட
தினப்படி செலவை அரசாங்கமே பெரிய அளவுக்கு ஏத்துக்கற
மாதிரி பணக்கார அரசாங்கமா நமக்கு இருக்கு? அது இல்லை. ஆனா இந்த இலவசத்தை எல்லாம் எந்த அரசாங்கம் குடுத்தாலும் வாங்கிக்கற
நிலமைல நம்ம மக்கள் இருக்கா. அதுதான் நம்ம ஜனநாயகம். அப்படித்தான் நம்ம நாட்டை அரசியல்வாதிகள் வச்சிருக்கா.
அரசாங்க கஜானாவைப் பொறுத்த வரை, அரசாங்கமே அடிக்கடி இலவசமா எல்லாருக்கும் பணமோ பொருளோ கட்டுப்பாடு இல்லாம குடுக்கறதும் ஒண்ணுதான், எல்லா ஜனங்களும் அப்பப்ப பாங்க் – அதுவும் பொதுத்துறை பாங்க் – உள்ள போய் முடியற பணத்தை அள்ளி எடுத்துண்டு வந்து தங்களுக்காக செலவு பண்ணிக்கறதும் ஒண்ணுதான். இதுக்குப் பின்னால இருக்கற வியாதியும் ஒண்ணுதான்.
அந்த
வியாதி என்னன்னு கேக்கறேளா? தன்னை, தன் குடும்பத்தை,
தனக்கு ஜால்ரா போட்டு நமஸ்காரம் பணறவாளை மட்டும் முன்னேற விட்டு, சாதாரண ஜனங்களை எப்பவும்
சொற்ப சம்பாத்தியத்துக்கே அலைய விடற அரசியல்வாதிகள் ஆட்சி பண்றதுதான் அந்த வியாதி. நம்ம நாட்டுல, பல மாநிலங்கள்ள பல பத்தாண்டுகளா இதுதான நடக்கறது?
சூடானை
விட நம்ம நாடு பெரிய நாடு. நம்ம நாட்டுல இயற்கை
வளமும் ஜாஸ்தி. அதுனால, மரம், மலை, மண்ணுன்னு எதையும் அனுமதி இல்லாம ஒரு
தாதா வெட்டி எடுத்துண்டு போய் கசாக்கலாம், அதுல மத்தவா கமிஷன் பாக்கலாம். இங்க எப்படில்லாமோ சம்பாதிச்சதை அரசல் புரசலா வெளி நாட்டுக்கு அனுப்பி,
அங்கேர்ந்து ‘ஏதோ காக்கா குருவி எங்களுக்கு
அனுப்பிச்சது’ன்னு சொல்லி நம்ம நாட்டுக்கே கொண்டு வரலாம். சம்பாதிச்ச செல்வத்துல கொஞ்சம் கிள்ளி எடுத்து, தேர்தல் சமயத்துல அப்பாவி ஜனங்களுக்கு விநியோகம்
பண்ணி அவா ஓட்டை வாங்கிப் பதவியைப் பிடிக்கலாம். ஆட்சிக்கு வந்து, அரசாங்கப் பணத்துலேர்ந்து
அந்த ஜனங்களுக்கு இலவசங்களை அள்ளி வீசி அவா எப்பவும் அரசியல்வாதிகளை கும்பிடறா மாதிரியே
இருக்கப் பண்ணலாம். அப்பறம் அரசாங்கத்துல இன்னும்
ஏதேதோ பண்ணலாம். கிடக்கறது நாடு!
சூடான்ல
இல்லாத தனி மனிதத் திறமைகள் நம்மகிட்ட ஏராளம். ஆனா இந்தியாவுல அது பெரிசா பரவலா பிரயாஜானப் படாது, இங்க அதை
வளர விட மாட்டான்னு அந்தத் திறமை வண்டி வண்டியா அமெரிக்காவுக்கு பறக்கறதே? அதெல்லாம்
நம்ம நாட்டுக்கு ஒழுங்கா முழுசா பிரயோஜனப் பட்டிருந்தா நம்ம நாடும் மக்களும் எப்பவோ
பல மடங்கு பெரிசா முன்னேறி இருக்கலாமே? இன்னும் நம்ம ஜப்பானையும் சிங்கப்பூரையும் பாத்து
மூக்கு மேல விரலை வைக்க வேண்டாமே?
இப்ப
சொல்லுங்கோ. ஜனங்களே பாங்க் உள்ள புகுந்து கொள்ளை அடிக்கறதுக்கும், அது நடக்காம ஒரு
அரசாங்கமே கஜானாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, மக்களுக்கு ஒரு கணக்கோ கட்டுப்பாடோ இல்லாம
பணம் பொருள் இலவசமா விநியோகம் பண்றதுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? மிலிட்டரி உடையைப் போட்டுண்டு, முறைப்பா முகத்தை
வச்சுண்டு, சூடான்ல சில பேர் ராஜாங்கம் பண்ணி
அவா மட்டும் அனுபவிக்கறா. நம்ம நாட்டுல வெள்ளை
டிரஸ் போட்டுண்டு, சிரிச்ச முகத்தோட சிலர் ராஜாங்கம் பண்ணி ஓகோன்னு இருக்கா. ஜனங்களுக்குக் கிடைக்க வேண்டிய முன்னேற்றத்துல பத்து
பர்சன்ட் கிடைச்சாலே பெரிசு. வேற பர்சன்ட் வேற எங்கயோ போறதே!
நாட்டுக்காக
பிரார்தனை பண்ணுங்கோ. ஏற்கனவே நிறைய பண்ணிருப்பேள். கொஞ்ச வருஷமா பலன் தெரியறது, இல்லையா?
* * * * *
சூடானை முன்நிறுத்தி நம்ம அரசியல்வாதிகளை கட்டிவைத்து சவுக்கால் அடித்திருக்கிறீர்கள். நன்றாகவே உள்ளது.
ReplyDeleteநல்ல கட்டுரை
ReplyDeleteசூடான விஷயத்தை சுட்டிக்காட்டி தட்டி எழுப்பிள்ளீர்கள். கொள்ளை அடிக்கும் சுயநல அரசியல்வாதிகளிடமிருந்து நாடு மீண்டு வர ப்ரார்த்தனை ஒன்றே வழி.
ReplyDelete