-- ஆர். வி. ஆர்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், திரையில் பல வேஷங்களில் தோன்றித்
தனது அபார நடிப்பை வெளிப்படுத்தியவர். இப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தியைக் குஷிப்படுத்த காக்கா வேஷத்தில் வந்து, "கா கா" என்று கரைந்து
தள்ளி விட்டார் கமல். என்ன இயல்பான நடிப்பு!
நடந்து முடிந்த கர்நாடக மாநிலத் தேர்தலுக்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
பிரச்சாரம் செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியும் சிறந்த வெற்றி பெற்று, இப்போது
அங்கு ஆட்சி அமைக்கப் போகிறது. பார்த்தார் கமல் ஹாசன். 2024-ம் வருடம் நடக்கப் போகும் லோக் சபா தேர்தலில் தனது கட்சிக்கு
கௌரவமாக ஒன்றிரண்டு கூட்டணி சீட் வேண்டும் என்றால், திமுக திரும்பிப் பார்க்குமோ இல்லையோ,
காங்கிரஸின் தயவு அதற்குக் கிடைக்கும் போலிருக்கிறது. அந்தத் தயவை உறுதியாக்கிக் கொள்ள,
இப்போதைய கர்நாடக தேர்தல் வெற்றிக்கு ராகுல் காந்திதான் மிகப் பெரிய காரணம் என்று பாராட்ட விரும்பினார்
கமல் ஹாசன். அந்த நோக்கத்துடன் ராகுல் காந்தியை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு சம்பந்தா
சம்பந்தம் இல்லாமல் புகழ்ந்திருக்கிறார் மனிதர். இரண்டு நாட்கள் முன்பு, தேர்தல் முடிவுகள்
வெளியான தினமே, ராகுலைக் காக்கா பிடித்து
"கா கா" என்று ட்விட்டரில் கரைந்து தள்ளி விட்டார் கமல்.
ட்விட்டரில் கமல் ஹாசன் எழுதி இருக்கும் வார்த்தைகள்
இவை:
“ராகுல் காந்தி அவர்களே,
இந்த முக்கிய வெற்றிக்காக எனது உளம் கனிந்த பாராட்டுக்கள்.”
“காந்திஜி மாதிரி, நீங்களும் நடந்தபடி மக்கள் மனதிற்குள் நுழைந்து விட்டீர்கள். அவர் மாதிரியே, அன்பு மற்றும் பணிவின் வழியாக நீங்களும் உலகின் சக்திகளை உங்கள் மென்மையான போக்கில் அசைக்க முடியும் என்று காட்டினீர்கள்”
இந்த வார்த்தைகளோடு,
ட்விட்டரில் ஒரு போட்டோவையும் வெளியிட்டார் கமல் ஹாசன். அது,
நாட்டின் பல பகுதிகளில் ராகுல் காந்தி சமீபத்தில் நிகழ்த்திய 'பாரத் ஜோடோ யாத்ரா' நடைப் பயணத்தின் போது
தில்லியில் அவர் ஆதரவாளர்கள் சூழ நடக்கும் படம் - கமல் ஹாசனும் அருகில்
இருக்கிறார். ‘ராகுல் காந்தியின் நடைப் பயணம், சுதந்திரத்திற்காக
காந்திஜி மேற்கொண்ட நடைப் பயணங்களை நினைவு படுத்துகிறது. காந்திஜி சென்ற வழியில் ராகுலும்
மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்’ என்று சொல்ல வருகிறார்
கமல் ஹாசன்.
நேரு, படேல், ராஜாஜி, ஜெயபிரகாஷ் நாராயண், காமராஜ், போன்றவர்கள்
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பெரும் தலைவர்களாக இருந்தவர்கள். கமல் ஹாசன் அவர்களை
எல்லாம் விட்டார். அந்தத் தலைவர்களுக்கும் தலைவராக, நாட்டின் அனைத்து மக்களுக்கும்
தலைவராக, இருந்தவர் மகாத்மா காந்தி. நேராக
மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லி, ராகுல் காந்தியும் அவர் மாதிரியானவர், அவரைப் போல்
இந்திய மக்களின் மனதைப் பிடித்தவர், என்று
ஒரே போடாகப் போட்டார் கமல். அதோடு அவர் நிறுத்தவில்லை.
மகாத்மா காந்தி மாதிரி “அன்பு மற்றும் பணிவை”க் காட்டுபவராம் ராகுல். அப்படிக் காண்பித்து,
“உலகின் சக்திகளை அசைத்து” விட்டாராம் ராகுல். என்ன ஒரு நவரச நகைச்சுவைக் காக்கா!
ராகுல் காந்தி பணிவானவர் என்று காங்கிரஸ்காரர்களே நம்ப
மாட்டார்கள். பணிவுக்கும் அவருக்கும் வெகு
தூரம் என்று அவர் நடையும், உடல் மொழியும், பேச்சும், செய்கையும் நன்றாக உணர்த்தும்.
2013-ம் வருடம், மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்து ஜனாதிபதியின் கையெழுத்துக்கு அனுப்பப் பட்டிருந்த ஒரு அவசரச் சட்ட நகலைப் பொது
வெளியில் ராகுல் காந்தி கிழித்துப் போட்டுத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார் – பிறகு
அவரது பணிவான செய்கையால் அந்த அவசரச் சட்டம் கைவிடப்பட்டது. 2019-ம் வருடம் மேடையில் பேசும்போது,
“ஏன் எல்லாத் திருடர்களின் பெயர்களும் மோடி என்ற பெயரில் முடிக்கின்றன? நீராவ் மோடி,
லலித் மோடி, நரேந்திர மோடி என்பதாக?” என்று பணிவின் சிகரமாகப் பேசியவரும் ராகுல் காந்திதான்.
பணிவு இலாதவரிடம் அன்பும் இருக்காது. இருந்தாலும் ராகுல்
காந்தி காங்கிரஸில் மதிக்கப் படுகிறவர், துதிக்கப் படுகிறவர். ஏனென்றால் காங்கிரஸ்
இப்போது ஒரு பண்ணைக் கட்சி. அதில் பெரிய பண்ணை சோனியா காந்தி. சின்னப் பண்ணை அவரது
மகன் ராகுல் காந்தி – பெரிய பண்ணையே அபரிதமான தாய்ப் பாசத்தால் சின்னப் பண்ணைக்கு வழி
விடக் காத்திருக்கிறார், பின்னவரும் அப்படியே நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டார். அப்புறம்,
ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி குட்டிப் பண்ணையாக வலம் வருக்கிறவர். பண்ணை செருக்கு,
அதிகாரம் தவிர இவர்களுக்கு வேறு தலைமைப் பண்புகள் இல்லை. இப்படியான ராகுல் காந்தியை
மகாத்மா காந்திக்கு ஒப்பிட்ட கமல் ஹாசனை கோட்ஸேவுக்கு அடுத்த இடத்தில் வைக்க வேண்டும்.
அன்பு, பணிவு, தவிர ராகுல் காந்தியிடம் யாரும் காணாத ஒரு
புதிய பெருமையைக் கண்டிருக்கிறார் கமல் ஹாசன். அதாவது, தனது பணிவாலும் அன்பாலும், காந்திஜியைப்
போல “உலக சக்திகளை அசைக்க முடிகிற”வர் அண்ணல் ராகுல்
காந்தி என்கிறார் கமல் ஹாசன் (கமல், ராகுலிடம் ட்விட்டரில் சொன்ன ஆங்கில வரிகள்: “As Gandhiji did, ….. you have demonstrated that in
your gentle way you can shake the powers of the world – with love and humility”).
கல கல காக்கா!
தனக்குத் துளியும் பொருந்தாத புகழ் மாலைகளை ஒரு தலைவர் ஏற்கிறார், மறுக்காமல் அவற்றை நினைத்து ரசிக்கிறார், என்றால் அவர் மனதளவில் கோழையானவர் என்று அர்த்தம். அவரைச் சுற்றி இருப்பவர்கள் தங்களுக்குத் தேவைபடும்போது அவரைப் புகழ்ந்து, அவருடன் உள்ள நெருக்கத்தை துஷ்பிரயோகம் செய்து, தங்களை, தங்கள் சுய நலன்களை, பெரிதாக வளர்ப்பார்கள். அப்படியான தலைவருக்கு, அவரது கோழைத்தனத்தால், அவரது சிறுபிள்ளைக் குணத்தால், அவரது கட்சியின் பெயர் சரிகிறது என்பதை உணர முடியாது. அத்தகைய தலைவர் ஆட்சி நடத்தினால், அரசும், அரசு நலனும், அரசு கஜனாவும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும்.
கோழையாக இருப்பவர்கள் வெளியில் வீராப்பாகப் பேசுவார்களா? பேசுவார்கள். இந்த உண்மையைத் திரையில்
மிகைப்படுத்தி நடிகர் வடிவேலு நன்றாக உணர்த்தி இருக்கிறார். ஆகையால் சில தலைவர்கள்
வீராப்பாக வெளியில் பேசினாலும் மனதளவில் அவர்கள்
கோழைகள்.
ராகுல் காந்தியைப்
போல, தகுதி இல்லாத புகழையும் பாராட்டையும் நன்றாக ரசிப்பவர், தமிழக முதல்வர் மு. க
ஸ்டாலின். செப்டம்பர் 2021-ல் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே மேடையில் பேசிய மூத்த
அமைச்சர் துரை முருகன், “கலைஞர் பல்லாண்டுகளில் பெற்ற புகழை, 100 நாட்களில் பெற்றவர்
முதல்வர் மு. க ஸ்டாலின்” என்று கரைந்தார். ஸ்டாலினும் அதை ரசித்தார்.
இத்தகைய தலைவர்கள் எப்படிக் கட்சியின் தலைவர்கள் ஆகிறார்கள்?
அப்பாவி மக்கள் அதிகமான இந்தியாவில் இது சாத்தியம் என்பதுதான் எளிதான பதில். நமது நாட்டில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, வழியில்
வம்சாவளித் தலைமையை ஏற்ற, அல்லது ஏற்கப் போகும், கட்சித் தலைவர்கள் இப்படி முன்னுக்கு
வர வாய்ப்பு அதிகம். சந்தேகம் உள்ளவர்கள் உதயநிதி
ஸ்டாலினையும் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். பிறகு என்ன? துரை முருகன், கமல் ஹாசன் போன்ற தலைவர்களுக்குக்
கொண்டாட்டம்தான். இவர்கள் தவிர, பெரிய தலைவர்களைக்
கமுக்கமாகப் பயன்படுத்தி, பல வழிகளில் அவர்களுக்குப் பிரதி உபகாரம் செய்து, தன் நலம்
வளர்த்து முன்னேறும் இரண்டாம் மட்ட தலைவர்கள் பல கட்சிகளில் உண்டு.
தூய சிந்தனை பெரிதாக இல்லாமல் வெற்றுப் புகழுக்கு மயங்கி
இணங்கும் தலைவர்கள் உள்ளதாகப் பெரிய கட்சிகளே இருந்தால், அவர்கள் அரசாங்கம் நடத்தினால், நாடு என்னாவது என்று கேட்கிறீர்களா? அதற்கும் பதில்
வைத்திருப்பார்கள் நமது அரசியல்வாதிகள். தேசத்தின் உண்மை நிலை எப்படி இருந்தாலும்,
“பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு” என்று போலிப் பெருமையுடன் அப்போதும் முழங்கினால்
போயிற்று! இல்லை, ஒரு படி மேலே சென்று “திக்கெட்டும் புகழ் எட்டும் திராவிட மாடல்”
என்று கர்ஜனை செய்தால் ஆயிற்று!
*
* * * *
உண்மை
ReplyDeleteகமலஹாசன் தலை சிறந்த நடிகர் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.தயாரிப்பார்களைப் பிழிந்து நல்ல பணமும் சம்பாதித்துவிட்டார். இன்னமும் Big Boss போன்ற தொலைக்கட்சித் தொடர்கள் மூலம் நிறைய சம்பாதித்துக் கொண்டும் இருக்கிறார்.ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒருவருக்கு இது போதாதா? வயதும் ஆகிவிட்டது.இவருக்கு கட்சி எதற்கு? அரசியல் எதற்கு?
ReplyDeleteமானம் பெரியதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன்னென்று போற்றி புகழ வேண்டும்
என்கிற MGR திரைப்படப் பாடல் வரிகள்தாம் நினைவுக்கு வருகின்றன.
அல்ப பதவிகளுக்கும் ரொட்டித் துண்டுகளுக்கா என்ன வேண்டுமானாலும் செய்ய சற்றும் கூசமாட்டார்கள்.
ReplyDeleteகமல்ஹாசனை ஒரு பொருட்டாக மதித்து அவர் உளருவதெற்கெல்லாம் ஒரு பதில் பதிவு தேவையா ?
ReplyDelete