Thursday 25 May 2023

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: திராவிட மாடல்னா என்னா?

 

          -- ஆர். வி. ஆர்

 

        நம்ம சி.எம் ஸ்டாலின் அடிக்கடி சொல்றாரு. அவரு ஆட்சி திராவிட மாடல் ஆட்சின்னு. ஆட்சிக்கு பெர்சா இப்பிடி பேர் வச்சா, அதுக்கு என்னா அர்த்தம்னு புரியிற மாதிரி வெளக்கி சொல்லணுமில்ல சும்மா “எல்லாருக்கும் எல்லாம் கெடைக்கணும். சாதி பேதம் கூடாது. பொண்ணுங்களுக்கு ஆம்பிள்ளையோட சமத்துவம் இருக்கணும். அப்பிடி இப்பிடி”ன்னா போறுமா? அதைத்தான அரசியல் சட்டம் சொல்லுது? அதெல்லாம் வேணாம்னு எந்தக் கட்சியாவுது சொல்லிச்சா? அப்பறம் என்னா திராவிட மாடலு?


      ஸ்டாலின் என்ன சொல்ல வராருன்னு சரியா புரில. விட்ர முடியுமா? நம்மளே  யோசிச்சு புரிஞ்சுக்குவோம்.

 

மொதல்ல இத சொல்லிக்கிறேன். பேரைக் கேட்டா லைட்டா சிரிப்பு வருது. மாடல் கீடல்னு பேர் வெக்க இதென்னபா, காரா பைக்கா?


பாரு, சேர ராஜா, பாண்டி ராஜா, சோள ராஜான்னு முந்தி இருந்தாங்க. அவுங்க தமிள் ராஜாங்கன்னு பெருமையா சொல்லிக்கிறோம். அதுல ஒருத்தரு ராஜ ராஜ சோளன். ஸ்கூல்ல படிச்சிருப்ப – அவருதான் தஞ்சாவூரு பெரிய கோயில கட்டினாரு. இன்ன வரைக்கும் ஆயிரம் வருசமா அது நிக்குது. ஜனங்களுக்கு அவரு பண்ண வேலைங்க, அவரு கட்டுன கோயிலு, அதான் இன்னிக்கும் அவரு பேரை நிறுத்துது.  அவரு ஆட்சிக்கு அவரே பட்டப் பேர் குடுத்துக்கினாரா? "கோயிலு மாடல் அரசாட்சி" அப்பிடின்னு கூட அவரு பேர் வச்சிக்கல.


ஆட்சில நீ ஒளுங்கா சூப்பரா வேலை பண்ணா, உன் வேலையப் பாராட்டி பெசல் பேர்லாம் மத்தவன் குடுப்பான். அப்பறம்  என்னாத்துக்கு திராவிட மாடல்?

 

        இது வரைக்கும்  திமுக-வுல  யார்  யார் சி.எம்-ஆ இருந்தாங்கன்னு பாரு. மொதல் சி. எம் அண்ணாத்துரை. ரண்டு வருசம் வரை இருந்தாரு. அவர் போனப்பறம்  நெடுஞ்செளியன் ஒரு வாரம் உக்காந்தாரு. அப்பறம் கருணாநிதின்ற கலைஞரு,  மாத்தி மாத்தி பத்தம்போது வருசம் ஆட்சி பண்ணாரு. இப்ப ஸ்டாலின் ரண்டு வருசமா தடவுறாரு.

 

 காங்கிரஸ்காரனை எடுத்துக்க. தமிள் நாட்டுல காமராஜ் ஆட்சியக் கொண்டு வரணும்னு காங்கிரஸ்காரன் நெனைக்கிறான். பேருக்காவது அப்பிடி நெனைக்கிறான். காமராஜ் ஆட்சின்னா என்னா அர்த்தம்? “காமராஜ் முதல்வரா இருந்தப்ப, ஆட்சில நேர்மை, தூய்மை, மக்கள் நலத் திட்டம், எல்லாம் இருந்துச்சு. அதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு அப்பால ஓடிப் போச்சு. அந்த நல்ல ஆட்சிய தமிள் நாட்டுக்கு திரும்பக் கொண்டாரணும்” அப்பிடின்னு அர்த்தம். இது புரியுது.

 

இப்ப, “சமத்துவம், சகோதரத்துவம், பொண்ணுங்களுக்கு சம உரிமை, எல்லாருக்கும் வளர்ச்சி, அப்பறம் தமிளன், தமிள்ப் பெருமை, அது இது”ன்னு ஸ்டாலின் சொன்னா, அதெல்லாம் கலைஞர் நடத்தின ஆட்சில இருந்துச்சா இல்லியா? இருந்துச்சுன்னா, “எங்க ஆட்சி கலைஞர் ஆட்சி”ன்னு ஸ்டாலின் சொல்லிட்டுப் போலாமே?” போன திமுக தலைவருக்கு குடுத்த மருவாதைன்னு அத எட்துக்கலாம்.

 

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இதான் கட்சியோட கொள்கைன்னு அண்ணாத்துரை சொன்னாரு. திமுக இத ஒளுங்கா கடைப்பிடிச்சா போறுமே? அத வச்சே கோளாறு இல்லாம ஸ்டாலின் ஆட்சி   பண்லாம்.  பேரும் ரிப்பேர் ஆவாது. இப்ப என்ன ஆச்சு? ஸ்டாலின் ஆட்சில உக்காந்து இப்ப வரைக்கும் அவருக்கு கட்சிக்காரங்க பிரச்சனை ஓயலை. அதப்பத்தி போன வருசம் பொதுக்குளு மீட்டிங்லயே ஸ்டாலின்  பேசிட்டாரு. “திமுக நிர்வாகிங்க, மூத்தவங்க, அமைச்சருங்க, இவுங்களே என்னைத் துன்பப் படுத்தறா மாதிரி நடந்துக்கினா நான் யார்ட்ட போய் சொல்றது?  தெனம் காலைல நம்மவுங்க புதுப் பிரச்சனை எதுவும் பண்ணிறக் கூடாதுன்னு நெனச்சிதான் நான் கண்ணு முளிக்கிறேன். சில நாளு தூங்கவே முடியலை”ன்னு மைக்குல அளுதாருல்ல? அப்பவே அவரோட ஆட்சி ஒண்ணரை வருசம் ஓடிருச்சு.   அப்பறம் என்னா திராவிட மாடலு?

 

ஆட்சின்னா என்னாப்பா? மொதல்ல சில விசயம் நடக்காம பாத்துக்கணும். அதான் முக்கியம். உதாரணம் சொல்லட்டா?

 

ஆட்சி கைல வரதுக்கு முந்தியே, ஒரு கட்சித் தலைவரு “பத்து மணிக்கு நாங்க ஆட்சிப் பொறுப்பு  ஏத்துக்கிட்டா, பத்து அஞ்சுக்கு அல்லாரும் ஆத்துல எறங்கி ப்ரீயா மணல் அள்ளிக்கலாம். அதிகாரி எவனும் கேக்க மாட்டான்” அப்படின்னு பேசக்கூடாது. அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தப்பறம், மணல் திருட்டைத் தடுக்கற வி.ஏ.ஒ-வை அவரு ஆபீஸ்லயே வச்சு ரவுடிங்க போட்டுத் தள்ளக் கூடாது. கோயிலு வாசல்ல குண்டு வெடிக்கக் கூடாது.  ஒரு அமைச்சரே தொளிலாளிய நோக்கி கல்லு கட்டையெல்லாம் வீசக் கூடாது, கட்சிக் கவுன்சிலர் பின் மண்டைல அறையக் கூடாது. மக்கள் ஏதாவது பிரச்சனை சொல்ல வந்தா, “நீ எனக்கு ஓட்டுப் போட்டுக் கிளிச்சியா?”ன்னு ஒரு அமைச்சர் கேக்கக் கூடாது. இன்னும் கூட இருக்கு.

 

சாராய பாட்டிலு டாஸ்மாக்ல பத்து ரூவா கூட்டி விக்கக் கூடாது. முதல்வர் பையன், மாப்ளைன்னு கட்சிக் காரங்க தேடிப் புடிச்சு பல்லைக் காட்டி காக்கா பிடிக்கறதை, கட்சியே வளத்துவிடக் கூடாது. முதல்வர் குடும்பத்தை நைஸ் பண்ணித்தான் கட்சில எவனும் நெலைச்சு நிக்கலாம்னு, ஒரு பெரிய அமைச்சரே, “நான் செத்தப்பறம், ‘கோபாலபுரத்து விசுவாசி இங்க தூங்கிக்கினு இருக்கான்’னு என் கல்லறைல எளுதி வச்சிருங்க” அப்பிடின்னு மானம் ரோசம் கெட்டு சட்டசபைல ஆக்ட் குடுக்கக் கூடாது, அதக் கேட்டு ஸ்டாலினும் உருகக் கூடாது.


இந்த மாதிரி அடாவ்டி அட்டூளிய அல்ப வேலையத்தான் திமுக ஆட்சில கட்சிக்காரன் பெர்சா பண்றான். அடிதடி வெட்டுக் குத்து ஆளுங்க தெனாவெட்டா இருக்கான், அர்சாங்கம் கண்டுக்காம இருக்கு. இத விட்டா, மூக்குல விரல் வெக்கிற மாதிரி ஸ்டாலின் ஆட்சில ஒண்ணும் நடக்கலை. அப்பறம் என்னா திராவிட மாடலு?


கலைஞர் விசயம் வேற. தன்னம்பிக்கை, தெகிரியம், கட்சித் தலைவருங்களை கையாள்ற மொறை, ஆட்சி லகானை கைல புடிக்கிற திறமை, அரசியல் வெளையாட்டு,  இதுலெல்லாம் அவரு கில்லாடி. ஸ்டாலின் பாவம்பா. தன் ஆட்சிய ‘கலைஞர் ஆட்சி’ன்னு சொல்லிட்டா, அப்பா பேரு கெட்டுரும்னு நெனச்சி தன்னோடது திராவிட மாடல் ஆட்சின்னு வேற பேரு வச்சிக்கினாரா, தெரில.      


கடசீல இதயும் சொல்லிக்கிறேன். கலைஞரு, ஸ்டாலின் ரெண்டு பேர் செயல்பாட்டையும் பாத்தா ஒரு விசயத்துல இப்பிடி டவுட் வருது. அவரு  விஞான ரீதியா போய்க்கினாரு. இவரு பூகோள ரீதியா போயிட்டிருக்காரோ?


* * * * *


Author: R. Veera Raghavan


1 comment:

  1. I enjoyed reading ridiculing thought provoking essy on staunch dravida tamilians "model". We use this word some time as double entendre. When everything stabilised, they must find tamil word for use in place of english word "model". திராவிட மாதிரி...திராவிட மந்தி..

    ReplyDelete