-- ஆர். வி. ஆர்
பாவம்பா,
தமிள் நாட்டுல 22 ஆளு கள்ளச் சாராயம் குடிச்சு கண்ணை மூடிட்டான். அவன் குடும்பத்துக்கு
அரசாங்கம் பத்து லட்சம் குடுத்திருக்கு. போவட்டும். நான் பேசற மேட்டர் வேற.
கள்ளச் சாராயம்னா என்ன தெரிமா? நீ சாராயம் தயாரிக்கணும்னா, மொதல்ல கவர்மென்டோட லைசென்ஸ் கைல வச்சிருக்கணும். அது இல்லாம எவன் சாராயம் தயாரிச்சாலும், அது கள்ளச் சாராயம்தான். இந்த லைசென்ஸ்லாம் தமிள் நாட்டுல எவனுக்கும் சுளுவா கிடைக்காது.
உனக்கு அந்த சாராய லைசென்ஸ் வேணும்னா, அதுக்கு நீ கவர்மென்டை அப்பிடி இப்பிடி அட்ஜஸ்ட் பண்ணி வச்சிருக்கணும். ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கணும். இதுக்கு மேல நான் சொல்லத் தேவையில்ல.
தமிள் நாட்டுல சாராய லைசென்ஸ் அஞ்சாறு
பேர்ட்ட தான் இருக்கு. அவனுங்க எல்லாம் கவர்மென்ட்டுக்கு தோஸ்த். அதுல கெட்டியான தோஸ்த்துக்கு நெறைய ஆர்டரு, மத்த தோஸ்த்துக்கு கம்மி ஆர்டருன்னு குடுத்து கவர்மென்டு
சாராயத்தை வாங்குது. வாங்கி, டாஸ்மாக் கடைன்னு முக்குக்கு முக்கு அரசாங்க நிறுவனம்
நடத்துதே, அது மூலமா எல்லா ஊர்லயும் சாராயத்தை அரசாங்கம் விக்குது. இதுல என்ன பிரச்சனைன்னா கேக்குற? சொல்றேன்.
மனுசன்
வாள்க்கை நடத்த எதுப்பா முக்கியம்? சாப்புட
சோறு, உடுக்கறதுக்கு டிரஸ்ஸு, தங்குறதுக்கு வீடு, சம்பாரிக்க எதுனாச்சும் வேலை. இதான?
எல்லாரும்
என்ன பண்றான்? அவன் அவன் வருமானத்துக்கு ஏத்த மாதிரி சாப்புடறான். அது கூளோ, கஞ்சியோ, சுடு சோறோ, எதுவோ.
அப்பறம், வருமானத்துக்கு ஏத்த மாதிரி
டிரஸ் போடறான். புதுசோ, பளசோ, கிளிசலோ, ஒட்டுப் போட்டதோ. அவனுக்கு ஏத்த வீட்லதான் அவன் இருக்கான் – கெட்டி
மச்சு, ஓட்டு வீடு, சீட் வீடு, ஓலைக் குடிசைன்னு.
ஒண்ணும் இல்லைன்னா
பிளாட்பாரம். இப்பிடித்தான் ஊர் இருக்குது.
ஊர்
பாட்டுக்கு இப்பிடி இருக்குன்னா, கவர்மென்ட் ஜனங்க கிட்ட "நீ இந்த மாதிரியான உணவு
சாப்பிடணும், இந்த ரகத் துணில டிரஸ் போடணும், இந்த தரத்துல உன் வீடு இருக்கணும், அப்பிடின்னு ரூல் பேசுதா? இல்லைல்ல? அந்த மாதிரி ரூல் போட முடியாதில்ல?
இதெல்லாம்
போக, ஒவ்வொரு மனுசனுக்கும் உடம்புக்கு, மனசுக்குன்னு ஒரு தேவை இருக்கு. காப்பி டீ குடிக்கறதையே எடுத்துக்கயேன். அதுக்கு
பளக்கப் பட்டா அதை நிறுத்த முடியாது. ஜனங்க என்ன பண்ணும்? முடிஞ்ச விலைக்கு, கெடைக்கிற தரத்துல, காப்பித் தூள்
டீத்தூள்னு வாங்கி வச்சிக்கும். ரேட்டுக்கு ஏத்தபடி பாலும் கெடைக்குது. தண்ணிப் பால்லேர்ந்து கெட்டிப் பால் வரைக்கும், ஆவின்லயே
குடுக்கறான். நீலக் கலரு ஜிங்கிச்சா, மஞ்சக்
கலரு ஜிங்கிச்சான்னு, வேற வேற கலர் பாக்கெட்ல,
கம்மி விலை அதிக விலைன்னு ஆவின்ல பால் கெடைக்குது. உனக்குத் தோதான பால் வாங்கி காப்பி
டீ போட்டுக்க. அவ்ளதான்.
வீட்டுக்கு வெளிய இருக்கியா? அப்ப உன் வசதிக்கு ஏத்தபடி ஸ்டார் ஓட்டல்ல போய் காப்பி டீ குடிக்கலாம். இல்லை, ஊர்ல அங்க இங்க பேமஸ் ஓட்டலுங்க இருக்கே, அங்க போய் காப்பி டீ குடிச்சுக்க. இல்லை, சாதா ஓட்டல் இருக்கு, அங்க போய்க்க. அதுவும் இல்லை, டீக்கடைக்கு போய் கிளாஸ்ல குடி. இதுலயும் பாரு, “நீங்க அல்லாரும் கவர்மென்ட் ஓட்டலுக்கு வந்து இன்ன விலை குடுத்து கவர்மென்ட் குடுக்கற காப்பி டீயைத்தான் குடிக்கணும்”னு ரூல் வெக்க முடியுமா? அப்பிடி ரூல் போட்டாலும் அதை எவன் ஏத்துப்பான்? அதெல்லாம் நடக்காதுல்ல?
இப்ப
வரேன் சாராய மேட்டருக்கு. ஊருக்கு ஓரமா ஒருத்தன்
சாராயம் காச்சி விக்கறது இருக்கட்டும். பப்ளிக்கா
அங்க இங்கன்னு தெருவுலயே டாஸ்மாக் கடை வச்சி, குடியைப் பாக்காத நெறைய மனுசனுக்கும்
புதுசா குடிக்கற ஆசைய கெளப்பி விட்டது அரசாங்கம்தான். குடிப் பளக்கம் இப்ப பரவிப்
போச்சு. ஏளையோ பணக்காரனோ, இருவது வயசுக் காரனோ எம்பது வயசு ஆளோ, இப்ப நெறையப் பேர்
குடிக்கிறான்.
“எல்லா
மனுசனோட போதைய நான்தான் தீர்ப்பேன். என் கடைல மட்டும்தான் அல்லாரும் சாராயம் வாங்கணும்”னு
கவர்மென்டு சொன்னா யார் கேப்பான்? கள்ளச் சாராயம் வித்து சம்பாரிக்க வளி இருக்குன்னா,
காச்சுறவன் காச்சுவான், விக்கறவன் விப்பான். பெரிய அளவுல முதல் போடறவன்,
அரசாங்கத்துல லைசென்ஸ் வாங்க முடியிறவன், அதுக்கு
அட்ஜஸ்ட் பண்றவன் மட்டும்தான் சாராய உற்பத்தி பண்ணுவான், டாஸ்மாக் மட்டும்தான் அதை விக்க முடியும்னா அது எப்பிடி நடக்கும்?
நீ
காப்பிக் கடை நடத்தணுமா? வேணும்னா பெருசா செலவு பண்ணி “காப்பி டே”ன்னு சோக்கா கடை வையி. முடியலைன்னா
சின்ன ஓட்டல் நடத்து. அதுக்கும் காசு இல்லைன்னா டீக்கடை நடத்திக்க. மூணு வித கடைக்கும் மூணு வித கஸ்டமருங்க வந்து, ஒவ்வொண்ணுலயும்
ஒவ்வொரு விலைல காப்பி டீ குடிப்பான். அது மாதிரித்தான சாராயமும்?
யாரும்
மது குடிக்கலாம்னு சட்டம் இருந்தா, வசதிக்கு ஏத்தபடி எங்கயும் குடிக்கலாம்னுதான் மனுசன்
போவான். அந்த சூள்நிலைல கள்ளச் சராயமும் விக்கும். அப்ப போலீசுக்கு வருமானம் வரதைத் தடுக்க முடியாது.
டாஸ்மாக்
வியாபாரத்துல, ரெகார்டுல வராத வருமானம் எங்க எங்க போகுதுன்னு போலீஸ்காரனுக்கு நல்லாத் தெரியும். கணக்குல வராத
வருமானத்தை எல்லாரையும் சம்பாரிக்க விட்டு, கடமையா அந்த சம்பாத்தியத்துக்கு பாதுகாப்பு
குடுக்கற மனுசனா மட்டும் எப்பிடி போலீஸ்காரனோ மத்த அதிகாரியோ இருப்பான்? அவனும் மனுசன்
தான? இதுல போலீசை, மத்த அதிகாரிய, கெடுத்தது யாருன்ற? “என்னை மாதிரி தப்பா சம்பாரிக்க
உனக்கும் வளி இருக்கு”ன்னு தன்னோட நடத்தைலயே தெனாவெட்டா காமிக்குதே ஒரு கூட்டம் - அதான், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோட கும்பிடு போடுதே ஒரு கூட்டம் - அந்தக் கூட்டம்தான். சர்தான?
நான் என்ன சொல்றேன்னா, மது விலக்கை முளுசா கொண்டு வா. சரியா அமல்படுத்து. அப்பத்தான் புதுசாக் குடிக்கறவன் குறைவான். ஜனங்க நிறைய பேர்ட்ட, மெள்ள மெள்ள குடி ஆசையும் குறையும்.
அப்பன் குடிக்கிறது குறைஞ்சா, பிள்ளைங்க ஒளுங்கா இருக்கும்,
படிக்கும். அவுங்க படிச்சு நல்ல வேலைக்குப்
போய் சம்பாரிக்கணும். அதுக்கு இடைஞ்சலா, அப்பன்காரன் எப்ப வேணா டாஸ்மாக், சராயக் கடைன்னு
போய் குடிச்சிட்டு வந்து வீட்டு நிம்மதிய கெடுக்கக் கூடாது. தமிள் நாடு இப்பிடியே
கெட்டுப் போய், சாதாரண ஏளை வீடுகள்ள பொண்ணுங்களும் குடிக்க ஆரம்பிச்சா, பிள்ளையாரே நம்ம பிள்ளைங்களை காப்பாத்த முடியாது.
மதுவிலக்கு வந்து, குடிப் பளக்கம் குறைஞ்சா கள்ளச் சாராய விற்பனையும் குறையும், ஆனா அப்பவும் கொஞ்சம் இருக்கும். கள்ளச் சாராயத்தை கண்ணுலயே காணாம முளுசா எப்பவும் தடுக்க முடியாது.
டாஸ்மாக் பின்புலத்துல பரவுற கூடிப் பளக்கம் இருக்கே, அதான் பெரிய தீ. மொதல்ல பெரிய தீயை அடக்கு. இல்லாட்டி அது பக்கத்துல பத்திப் பத்தி இன்னும் பெருசா பரவும். மது விலக்கு மூலமா பெரிய தீயை அடக்கிட்டா, கள்ளச் சராயம்னு இங்க அங்க சின்னத் தீ மட்டும் இருந்தா பரவால்ல. அதை அந்த அளவுல கட்டுப்படுத்தி வச்சுக்கலாம்.
என்ன
நான் சொல்றது?
* * * * *
Author: R. Veera Raghavan
No comments:
Post a Comment