Thursday, 23 July 2020

"திமுக ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல" - ஸ்டாலின் தமாஷ்


         -- ஆர். வி. ஆர்

2019 லோக் சபா தேர்தல் பிரசாரத்தின் போது  பாளையங்கோட்டையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியது காற்றோடு போயிருக்கும். அவர் சொன்னது: "திமுக ஹிந்துக்களுக்கு எதிரான அமைப்பு அல்ல. மத சார்பின்மையிலும் சமத்துவத்திலும் திமுக முழு   நம்பிக்கை கொண்டது.” - (thehindu.com, 9.4.2019).   

ஸ்டாலின் என்ன பொருளில் பேசினார் என்றால், ‘அனைத்து மதங்களையும் சமமான கண்ணோட்டத்தில், பாரபட்சம் இல்லாமல் திமுக பார்க்கும்.  ஆகையால் திமுக ஹிந்துக்களுக்கு மட்டும் எதிரானது என்ற விமர்சனம் தவறு என்று அர்த்தம் வரும்படி சொன்னார்.  திமுக இதை மறுப்பதற்கில்லை. பின்பற்றுவதும் இல்லை.       

சமீபத்தில் கறுப்பர் கூட்டம் என்ற ஒரு குழு, கந்த சஷ்டி கவசம் பாடலை ஆபாசமாக இழிவு செய்து ஹிந்துக்களைப் புண்படுத்தியது. இதற்கு திமுக-வின் மறைமுக ஆதரவு உண்டு என்ற பரவலான குற்றச்சாட்டும் எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஸ்டாலின் இப்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் (thehindu.com, 21.7.2020). அதில்,   "திமுக-வின் எதிரிகள்  தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் நமது கட்சியை ஹிந்துக்களுக்கு எதிரான வகையில் சித்தரிக்கிறார்கள். திமுக-வினர் இந்த குற்றச்சாட்டிற்கு  எதிர்வினை செய்யாமல், இதை வெறும் தமாஷாகப் பார்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல தமாஷ்தான்.

திமுக ஹிந்துக்களுக்கு எதிரானதா இல்லையா என்பது திமுக தலைவர்களின் சில பேச்சுக்களிலில் இருந்தும் சில செய்கைகளில் இருந்தும் விளங்கும். ஆனால் ஸ்டாலின் பூசி மெழுகிச் சொல்வது இதுதான்:  “திமுக ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி. ஆகவே ஹிந்துக்கள் யாரும் திமுக-வில் சேர வேண்டாம், திமுக-விற்கு ஓட்டுப் போடவும் வேண்டாம் - என்று திமுக தலைவர்கள் யாரும் அப்பட்டமாகச் சொன்னார்களா? இல்லையே! ஆகையால் திமுக ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல  என்பது நிரூபணம் ஆகிவிட்டது”.  இது ஸ்டாலின் செய்யும் தமாஷ்.

சாதாரணமாக ஒரு தமாஷை விளக்கிச் சொல்லக் கூடாது.  ஆனால் திமுக செய்யும் தமாஷ் தமிழக ஹிந்துக்களுக்கே சரியாகப் புரியவில்லை என்பதால் இதை சற்று விவரிக்கலாம்.

2011-ம் வருஷ ஜனத்தொகை கணக்கின்படி, தமிழ் நாட்டில் ஹிந்துக்கள் கிட்டத்தட்ட 88 சதவிகிதம், முஸ்லிம்கள் 6 சதவிகிதத்திற்கு சற்று குறைவு, கிறிஸ்தவர்கள் 6 சதவிகிதத்திற்கு சற்று மேல் என்று உள்ளார்கள்.  இவர்களில் எந்த மதத்தினருக்கு அவர்களின் முக்கிய பண்டிகைக் காலங்களில் ஸ்டாலின் வாழ்த்து சொல்கிறார்? ரம்ஜானுக்கு உண்டு. கிறிஸ்துமஸுக்கு உண்டு. 88 சதவிகித  ஹிந்துக்களின் தீபாவளிக்குக் கிடையாது, விநாயக சதுர்த்திக்கும் கிடையாது.

ஒருமுறை ஸ்டாலின் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லியதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வந்தது. இது நடந்தது 29.8.2014-ம் தேதி. அனைவரும் ஆச்சரியப்பட, இரண்டு நாட்களில் திமுக-வின் தலைமைக் கழகம் பத்திரிகைகளுக்கு இப்படி ஒரு செய்திக்குறிப்பு அனுப்பியது (dinamalar.com, 31.8.2014):

“மு. க. ஸ்டாலினின் இணையதளத்தை பாராமரிக்கின்றவர்களில் சிலர் ஆர்வமிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவிப்பதைப் போல மு,கஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது  மு. க. ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”  

நன்றாகக் கவனியுங்கள். விநாயக சதுர்த்திக்கு ஒருவர் வாழ்த்து சொல்வது என்பது,  “எல்லோரும் தெரிவிப்பதைப் போல” என்ற உண்மை திமுக-வின் செய்திக் குறிப்பிலேயே இருக்கிறது. தமிழ் நாட்டின் 88 சதவிகித மக்களுக்கு, தமிழ் நாட்டின் ஆட்சியில் பலமுறை இருந்த ஒரு கட்சியின் முக்கியத் தலைவர் - அப்போது ஸ்டாலின் கட்சியின் பொருளாளர் - விநாயக சதுர்த்தி வாழ்த்து சொல்வதை விரும்பவே மாட்டார், அது அவருக்குக் கசக்கும், என்பது கட்சியின் அதிகாரபூர்வ செய்தி. 

ஸ்டாலின் மட்டும் அல்ல. 2018-ல் மறைந்த அவரது தந்தையும் திமுக-வின்  தலைவராகவும் இருந்த மு. கருணாநிதியும்  விநாயக சதுர்த்திக்கோ மற்ற ஹிந்து பாண்டிகைகளுக்கோ வாழ்த்து சொன்னதில்லை – காரணம், அவரும் அப்படி வாழ்த்து சொல்வதை விரும்ப மாட்டார்.  அப்படியானால் திமுக ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்பது உதய சூரியன் மாதிரி பளிச்சென்று தெரிகிறதா இல்லையா?

நமக்குத் தெரிந்தவர்களுக்கு, நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு, ஏதேனும் கெட்டது நேர்ந்தால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதும், நல்லது நடந்தால் – அல்லது அவர்கள் கொண்டாடும் நிகழ்ச்சி வந்தால் – அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் ஒரு பண்பு, ஒரு நாகரிகம்.  தமிழ் நாட்டு ஹிந்துக்கள் திமுக-வுக்கு ஓட்டளித்து பல முறை அந்தக் கட்சியை மாநிலத்தில் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். அப்படி  அரசை நடத்திப் பலவிதமான பயன்களையும் அனுபவித்தும், அந்த மக்கள் குதூகலமாகக் கொண்டாடும் தீபாவளிக்கோ விநாயக சதுர்த்திக்கோ திமுக-வின் தலைவர் வாழ்த்து சொல்வதில்லை, ஆனால் ரம்ஜானுக்கும் கிறிஸ்துமஸுக்கும் அந்தந்த மதத்தவர்களுக்கு அவர் வாழ்த்து சொல்லுவார் என்றால்  என்ன அர்த்தம்? ஹிந்துக்களிடம் எந்த பாரபட்சமும்  காட்டாமல், ‘மத சார்பின்மையிலும் சமத்துவத்திலும் முழு நம்பிக்கை கொண்டது திமுக’ என்று அர்த்தமா? என்ன தமாஷ் இது?

நமது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் ஒரு முஸ்லிம். அவர் நாட்டு மக்களுக்கு ரம்ஜான் பண்டிகையின் போது வாழ்த்து சொன்னதுண்டு. அதே போல் தீபாவளிக்கும் கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கிறார். ஹிந்துவான பிரதமர் மோடியும் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அப்படிச் செய்கிறார்கள்.  கடவுள் நம்பிக்கை இல்லாத கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகிய மூன்று மதப் பண்டிகைகளுக்கும் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால் தமிழ் நாட்டில், திமுக-வின் பகுத்தறிவுத் தலைவர்கள் ஹிந்து பண்டிகைகளின் போது மட்டும் அடாவடியாக மௌனம் காப்பார்கள்.

வெளி நாடுகளைப் பாருங்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர்  கிறிஸ்தவர்கள். அந்த மூவரும் தங்கள் நாட்டு கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்கிறார்கள். அதோடு, தங்கள் நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்தும் இந்திய வம்சாவளி ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்தும் சொல்கிறார்கள்.   இது மட்டுமல்ல. துபாய் நாட்டு முஸ்லிம் அரசரும் முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்து சொல்வதோடு, தனது நாட்டில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்தும் தெரிவிக்கிறார். இத்தனைக்கும் அவர் ஸ்டாலின் மாதிரி தனது பிரதேச ஹிந்துக்களின் ஓட்டுக்களை தாஜா செய்து வாங்கி அவ்வப்போது பதவியைப் பிடிக்க வேண்டாம்.  இருந்தாலும் வேற்று மதத்தினாரான ஹிந்துக்களிடம் அவர் காட்டும் பண்பு, ஆட்சிக்கு அலையும் திமுக தலைவர்கள் அறியாதது.

இப்படி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, துபாய் நாடுகளில் ஆட்சி செய்பவர்கள் யாராவது தங்கள்  நாட்டிலுள்ள தம் மதத்து மக்களின் முக்கிய பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல், தமது தேசத்து சிறுபான்மை மக்களின் திருநாளுக்கு மட்டும் வாழ்த்து சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்படியானால்,  அந்தந்த நாட்டின் மக்கள் தங்களின் தலைவர்களை, அரசரை, என்ன நினைப்பார்கள்? ‘சொந்த மத வெறுப்பாளன்’ மற்றும் ‘வக்கிர புத்தி உடையவன்’, என்றுதானே வாழ்த்துக் கிடைக்காத அந்த மக்கள் நினைப்பார்கள்? அப்படியானால் அதுவும் சரிதானே? ஆனால் பல விஷயங்களில், பல நேரங்களில்,  ஹிந்துக்கள் தம் நலன் அறியாதவர்கள், மிகவும் பொறுமைசாலிகள். இதை நன்றாக அறிந்து லாபம் அடைகிறவர்கள் இந்திய அரசியல்வாதிகள் – அதில் திமுக-வினர் கில்லாடிகள்.   

    கருணாநிதி காலத்தில் அவர் ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும்.  அதாவது, ஹிந்துக்களை வேண்டுமென்றே இப்படி மலிவாகப் புறக்கணித்தால் 'சிறுபான்மை மக்கள் திமுக-வுக்கு நேசமாக இருப்பார்கள்,  அவர்கள் ஓட்டுக்களை மொத்தமாகப் பெற இதுவும் ஒரு யுக்தி' என்று கணக்குப் போட்டார். சிறுபான்மை மக்களோ அவர்களின் தலைவர்களோ அதைக் கருணாநிதியிடம் எதிர்பார்க்கவில்லை, அதற்காக மகிழவும் இல்லை. அவரது துர் சிந்தனையின் விளைவுதான் அந்த பாரபட்சம். தந்தை செய்ததை இப்போது ஸ்டாலினும் தொடர்கிறார்.

ராஜீவ் காந்தி காங்கிரஸின் பெரிய தலைவராக இருந்தபோது, “நான் ஒரு ஹிந்து” என்று உரக்கச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இப்போது ஹிந்துக்களின் ஓட்டுக்கள் தங்களுக்கு உத்தரவாதமல்ல, அவை வட இந்தியாவில் இன்னொரு கட்சிக்கு அதிகம் செல்கின்றன என்பதை காங்கிரஸும் மற்ற கட்சிகளும்  2014 லோக்சபா தேர்தல் முடிவுகளில் உணர்ந்துவிட்டன. ஆகவே 2019 லோக் சபா தேர்தலுக்கு முன்கூட்டி ஆயத்தம் செய்கிறபோது, காங்கிரஸ் கட்சியே அதன் தலைவர்  ராகுல் காந்தியைப் பற்றி “அவர் ஒரு பூணூல் அணிந்த ஹிந்து” என்று பகிரங்கமாக அறிவித்தது.  அதைத் தொடர்ந்து ராகுலும் தான் இன்ன கோத்திரம் என்பதை குறிப்பிட்டு சொல்லி, தான் ஒரு ஹிந்து, காஷ்மீர் பிராமணர்,  என்றும் விளக்கி சொல்லிக் கொண்டார்.  அப்பா செய்ய வேண்டாததைப்  பையன் செய்தார்.
  
ஸ்டாலினைப் பொறுத்தவரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அளவுக்கு வக்கிர எண்ணமும் அதை மறைக்கும் சாமரத்தியமும் அவர் மகனுக்குக் கிடையாது. அதனால்தான், “என் மனைவியே தினமும் கோவிலுக்குப் போகிறவர்” என்ற அளவிறக்காவது – அதாவது, திமுக ஹிந்து மக்களைப் புறக்கணிக்கும் கட்சி அல்ல, நான் அப்படியான தலைவர் அல்ல, என்று சொல்வதற்காக - அவர் தயங்காமல் பேச முடிகிறது. இருந்தாலும் அவர் திமுக-வின் பழைய பிம்பத்தைச் சார்ந்துதான் ஒரு கட்டாயத்துடன்  நிற்க முடிகிறது. அதைத் தாண்டி அவருக்குத் தெளிவான சிந்தனையும் இல்லை, திடமான மனதும் இல்லை.

தமிழக ஹிந்துக்கள் திமுக-வை எதிர்த்து அதிக அளவில் ஓட்டளித்தால், ஸ்டாலினும் ராகுல் காந்தி மாதிரி தந்தை பேசாதாதைப் பேசுவார். அப்போது,  “எங்கள் குடும்பம் ஹிந்து குடும்பம்தான். என் குல தெய்வம் இந்த மாவட்டத்தில் இந்த ஊரில் தான்  இருக்கிறது. என் மனைவி கோவில்களுக்கு சென்றும் நான் மானசீகமாகவும் பல கடவுள்களை வழி படுகிறேன். கழகத் தொண்டர்கள்  அனைவரையும் ‘ஒன்று தொழுவோம் வா’ என்று அன்புடன் அழைக்கிறேன்” என்ற அறிவிப்பை ஸ்டாலினிடம்  எதிர்பார்க்கலாம் அல்லவா?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020

Thursday, 16 July 2020

கந்த சஷ்டி கவசத்தைப் பழித்த வெறுப்பர் கூட்டம்


        -- ஆர். வி. ஆர்
'கறுப்பர் கூட்டம்' என்று அதிகம் பெயர் தெரியாத ஒரு அமைப்பு திடீரென்று பெரிய செய்தியாகி விட்டது. பெரிதாக எதுவும் சாதித்தோ சேவை செய்தோ அல்ல. பிக்பாக்கெட் ஆசாமி வங்கிக் கொள்ளையில் பிடிபட்டு பேர் பரவிய வகையில் அந்த அமைப்பு பிரபலம் அடைந்திருக்கிறது.

மிக அதிகமான  ஹிந்துத் தமிழர்கள் இறைவனைத்  துதிக்கும் பாடல், கந்த சஷ்டி கவசம். தங்களின் எல்லாவித நலங்களுக்காக முருகப்பெருமானின் அருள் கிடைக்க அவர்கள் உச்சரிக்கும் பிரார்த்தனை அது. 

கந்த சஷ்டி கவசத்தின் சில வரிகளை மிக வக்கிரமாக விமரிசித்து ஆபாசமாகக் கிண்டல் செய்து  யூ-டியூபில் ஒரு வீடியோ வெளியிட்டது கறுப்பர் கூட்டம். அந்த பாதகச் செயலுக்கு ஹிந்து மக்களிடைய பலமான எதிர்ப்புகள் இப்போது கிளம்பி இருக்கின்றன.  அந்த அமைப்பின் மேல் வழக்கு பதியப்பட்டு  ஒருவர் கைதாகி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஹிந்துக்களையும் ஹிந்து தெய்வங்களையும் பகிரங்கமாக இழித்துக் கேவலம் செய்வதைத் தொடங்கியவர் 'தந்தை பெரியார்' என்று அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி. அவர் தொடங்கியது திரரவிடர் கழகம். அவரது சீடர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சி தி.மு.க. இந்த அமைப்புகளின் தலைவர்கள் தங்களைப் 'பகுத்தறிவுவாதிகள்' என்று பெருமையாகச் சொல்வதுண்டு. அவர்களது பகுத்தறிவு, ஹிந்துக்களையும் ஹிந்துக் கடவுள்களையும், ஹிந்து பழக்க வழக்கங்களையும் வெறுப்புடன் இகழ்வது, கேலி செய்வது, மற்ற மதத்தவர்களின் ஒன்றுசேர்ந்த ஓட்டையும் தோள் வலிமையையும் மதித்து அவர்களுக்கு வணக்கம் சொல்வது.

ஒருவர் கற்றவராக இருக்கலாம், கெட்டிக்காரராக இருக்கலாம், திறமைசாலியாக இருக்கலாம் - அதே சமயம் நல்ல நோக்கமும் தூய சிந்தனையும் அற்றவராக இருக்கலாம், பாசாங்கு வாதங்கள் செய்யலாம். ஈ.வே.ரா-வும் தி.மு.க-வின் கலைஞர் கருணாநிதியும் அப்படியானவர்கள். அவர்கள் மறைந்தாலும் அவர்களின் போக்கும் நோக்கமும் இன்றும் தொடர்வதால் அவர்களைக் குறிப்பிடும் அவசியம் இருக்கிறது.    

ஹிந்துக்களின் ஓட்டுக்களை வாங்கி, ஆட்சியைப் பலமுறை பிடித்து  அதன் பலவாறான பலன்களைக் கண்டவர் கருணாநிதி. அந்தப் பலன்கள்  இன்று அவர் பேரன் வரை வளர்ந்து கொள்ளுப்பேரனையும் தொடுகின்றன. அவர் ஹிந்துக்களை இகழ்ந்தவாறே தலைமுறைகளுக்கும் அப்படிப் பயன் அடைந்தவர்.  இருந்தாலும்தனது 78-வது வயதில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு சென்று அந்த மதத்தினர் முன்னிலையில் ஹிந்துக்களை பழித்துப் பேசினார். அதாவது,   "இந்து என்றால் திருடன்" என்று ஏதோ ஒரு அகராதியில் இருப்பதாக நாக்கு கூசாமல் பேசியவர், வழக்கு வந்தவுடன் “உள்ளம் கவர்ந்த கள்வன்” என்ற விதத்தில் பேசியதாக தப்பிக்கும் விளக்கத்தை கொடுத்தார்.  பின்னர் அவரது மகன் ஸ்டாலின்ஒரு திருமணத்திற்குச் சென்று, ஹிந்து திருமண மந்திரங்களை இழிவு செய்து அவற்றைக்  ‘கேவலம்’ என்று  மைக்கில் வர்ணித்தார். ஹிந்துக்களின் அமோக ஆதரவுடன் அடுத்த முதல் அமைச்சர் ஆக ஆசைப்படும் தற்போதைய தி.மு.க தலைவர் இவர்.

கறுப்பர் கூட்டத்திற்கு தி.க-வின் ஆதரவு உண்டு. தி.க-விற்கு தி.மு.க-வின் நேசமும் பாசமும் உண்டு. மூன்று அமைப்புகளுக்கும் ஹிந்து மதத்தின் பால் உதாசீனம் அல்லது  இகழ்ச்சி உண்டு. அப்படியானால் கறுப்பர் கூட்டத்தின் இழிச் செயலுக்கு ஆதரவும் பாதுகாப்பும் எதுவரை நீளும் என்று ஊகிக்கலாம்.

எல்லா மதங்களிலும் கடவுள் நம்பிக்கைகள், புராணக் கதைகள், ஸ்தோத்திரங்கள், பழக்க வழக்கங்கள் என்று உண்டு. அவைகள் நமது தர்க்க வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் தர்க்க ரீதியான பதில்கள் தராது. ஒரு மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள், மற்றவர்களைப் புண்படுத்தாமல் தங்கள்  மார்க்கத்தில்  தங்கள் வாழ்க்கையில் கவலைகளையும் துயரங்களையும் எதிர் கொள்கிறார்கள், அமைதி தேடிக் கொள்கிறார்கள் என்றால் மற்ற யாரும் அதில் குறுக்கீடு செய்யக் கூடாது. இது போக, போலீஸ்காரர்கள் இல்லாமல் மக்களிடையே ஓரளவிற்கு  இணக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கூட கடவுள் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.   

பல மொழிகள் பேசும் பரந்து விரிந்த இந்தியா ஒரே தேசமாக மக்கள் மனதில் நிலைத்து நிற்பதற்கான காரணம், அதன் அரசியல் சட்டம் அல்ல - மிகப் பெருவாரியான ஹிந்துக்கள், நாட்டின் பல பகுதிகளில் நிறைந்திருக்கும் புண்ணிய ஸ்தலங்கள், புண்ணிய நதிகள் மற்றும் புண்ணிய கடல்பகுதிகளில் நாட்டம் கொண்டு ‘அந்தப் பிரதேசங்களை உள்ளடக்கிய நாடு எம் நாடு’ என்று மனதில் போற்றுகிறார்கள். அதனால்தான் இந்தியா எளிதாக ஒன்றுபட்டு நிற்கிறது.

மதத்தின் துணை இல்லாமல், வழிபாடுகள் செய்யாமல்,  ஒருவர் தன் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை சந்திக்க முடியும் என்றால் அவர் அப்படி இருக்கலாம். அப்படிப்பட்ட எவரையும் ‘கோவிலுக்கு வா, தெய்வ நம்பிக்கை வை, பிரார்தனை செய்’ என்று ஹிந்து மதம் சொல்வதில்லை, ஹிந்துக்களுக்கும் அப்படி விலகி இருக்கும் மனிதரை சட்டை செய்வதில்லை. இவ்வளவு பெருந்தன்மையான மதத்தினரின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியில் அமர்ந்து வேண்டியதை அனுபவித்து அந்த மக்களின் மதத்தையும் மத நம்பிக்கைகளையும் இழித்துப் பேசுவது அற்பமானது, அநாகரிகமானது, அயோக்கியத்தனமானது. சமீப காலம்  வரை இதை சுருக்கென்று உணராத பெருந்தன்மை கொண்டவர்களாக ஹிந்துக்கள் இருந்தார்கள்.

ஹிந்துக்களின் மத நம்பிக்கையை தி.க-வும், தி.மு.க-வும் அவர்கள் தாங்கிப் பிடிக்கும் எந்தக் கூட்டமும் குலைக்காது. தமிழக ஹிந்துக்களும், தங்களின் நம்பிக்கைகளை ஏளனம் செய்பவர்களை எதிர்க்கும் உணர்வை இப்போது பரவலாகப் பெற்றுவிட்டார்கள். இது வாக்குச் சாவடியிலும் காட்டப் பட்டால்தான் ஹிந்து மத எதிர்ப்பின் அரசியல் பின்புலம் உடையும். 

தீவிரமான எதிர்ப்புகளைப் பார்த்து, கறுப்பர் கூட்டம் தனது ஆபாச விமரிசன விடியோவிற்காக மன்னிப்பு கேட்டுவிட்டது, தனது வீடியோவை யூ-டியூபிலிருந்து அகற்றிவிட்டது என்ற செய்தி வருகிறது. ஆனால் தமிழகத்தின்  ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் சீன தேசம் மாதிரி. இவர்களின் பின்வாங்கல் எதுவும் நிரந்தரம் அல்ல. இவர்களின் அரசியல் ஆதரவாளர்களுக்கு, ஹிந்து மத வெறுப்பினால் பதவிகளும் கிடைக்காது, அதன் பலன்களும் கிட்டாது என்று உறுதியாகத்  தெரிய வைத்தால்தான், அவர்களின் பகுத்தறிவு வாலைச்   சுருட்டும்.

ஹிந்துக்கள் நிரம்பிய இந்தியா, சட்டத்தினால் மட்டும் ஒன்றாக நிலைப்பதில்லை. அது போல, ஹிந்து மதத்தை எதிர்ப்பவர்களையும் வெறும் சட்ட நடவடிக்கையால் மட்டும் வீழ்த்த முடியாது. ஒன்று பட்ட அதே ஹிந்து மத உணர்வால்தான் முடியும். அதற்கான வேளை விரைந்து வருகிறது.  

ஹிந்து மத எதிர்ப்பை ஒரு அரசியல் கட்சி வெளிப்படையாகக் காட்டிய மாதிரி, ஹிந்து மத ஆதரவையும் ஒரு அரசியல் கட்சி பகிரங்கமாக  வெளிப்படுத்தி அதற்காகப்  பாடுபட்டால் சமாதானத்தை எப்போதும் விரும்பும் ஹிந்துக்களுக்கு நல்லது. இதுவும் நடக்கிறது.  இன்னமும் நல்லது நடக்கட்டும்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020



Wednesday, 8 July 2020

நண்பன் மறைந்தாலும் நட்பு ஏன் மரிப்பதில்லை?


        -- ஆர். வி. ஆர்

உங்கள் வயதை ஒட்டிய நீண்ட கால நண்பரை, உங்கள் இருவருக்கும் உடல் சக்தியும் தெம்பும் இருக்கும்போது இழந்திருக்கிறீர்களா? அப்போது நீர் கோர்த்த கண்களும் கனத்த இதயமும் உங்கள் வெட்கத்தை விலக்கி உங்கள்   நட்பை உணர்த்தும். சமீபத்தில் எனது நாற்பத்தி-ஐந்து ஆண்டுகால நண்பரின் அகால மறைவு  அப்படி எனக்கு உணர்த்தியது.   

கல்லூரி நாட்களில் இருந்தே மணிவண்ணன்  மதுரையில் நடைபெற்ற பல கவியரங்கங்களில் மேடை ஏறிப்  பாராட்டு பெற்றவர்.  நல்ல கவிஞர்.  வசீகர மேடைப் பேச்சாளர்.  இந்த அடையாளங்கள் இன்னும் சிலருக்கு இருந்தாலும், தேசப் பற்றும் தேசிய சிந்தனைகளும் கொண்டு  தனியாகத் தெரிந்தவர் அவர். காமராஜர் மீது அபிமானம் பெருகி அவர் பிறந்த ஊரையும் சிலாகித்து, “விருதுநகர்ப் புழுதி நம் திருவெண்ணீறு” என்று மேடையில் பாடியவர்.    

மணிவண்ணனின் தமிழ் அறிவும், எனது தமிழார்வமும், எங்கள் இருவரது பொதுநல நோக்கமும் எங்களை ஒன்று சேர்த்தன. அப்போது மதுரை சட்டக் கல்லூரியின்   மாணவர்கள் நாங்கள் - அவர் எனக்கு அடுத்த வருடம்.  வகுப்புகள் முடிந்தவுடன் பல நாட்கள்  நாங்கள்  இருவரும் கல்லூரியில் இருந்து பேசிக்கொண்டே மத்தியப்  பேருந்து நிலையம் வரை 6 கி.மீ நடந்தோம். நட்பும் வளர்ந்தது.  

அந்த நாட்களில் எனக்குத் தமிழ் மொழியின் அழகு அவர் மூலம் தெரிந்தது.  தமிழில் எனக்குத் துளிர்விட்ட ஆரவத்தை அவர் மேலும் தூண்டினார்.

கல்லூரி வருடங்கள் முடிந்த பின், 'ஜன்னல்' என்ற பெயரில்  மாத அச்சுப்  பத்திரிகை ஆரம்பித்து அதற்கு ஆசிரியராக இருந்தார் மணிவண்ணன். ஒரு வருட காலம் பத்திரிகை நடந்தது. அதற்கான கடைசிப் பக்கத்தை 'கடைசிக் கம்பி' என்று பெயரிட்டார். அதை நான் எழுதினேன்.  பத்திரிகையின் சிறிய வாசகர் வட்டத்தில் அந்தப் பக்கத்திற்குப் பரவலான அங்கீகாரம் கிடைத்தது. அந்த வாய்ப்பைத் தந்த  ஆசிரியரையும் நான் மறக்கவில்லை.

சமீபத்திய வருடங்களில்,  நாங்கள் இருவரும் நரேந்திர மோடியைப் போற்றுதலுக்கு உரிய அரிய பெரிய தலைவராகப் பார்த்தோம், அது பற்றிப் பேசினோம்.   

இள வயதில் எனக்கு எழுதுகின்ற வாய்ப்புத் தந்தவர் என்பதைத் தவிர்த்து, மணிவண்ணனிடம் ஒரு உண்மையான சிறப்பு உண்டு. எங்கள் நட்பு உருவான காலத்திலேயே கவிஞர், மேடைப் பேச்சாளர் என்று அவர் அறியப்பட்டவர், ஆனால் எனக்கு அது போன்ற சிறப்பு கிடையாது. நிறைய  பத்திரிகைகள் படிப்பேன், அரசியலையும் பொது விஷயங்களையும் ஆர்வமாக விவாதிப்பேன், அவ்வளவுதான்.   அந்த குணங்களும்  அவரிடம் உண்டு.  ஆனால் தனக்கிருந்த அதிகத் தகுதிகள் காரணமாக என்னிடமும் பிற  நண்பர்களிடம் மணிவண்ணன் ஹோதா, தலைதூக்கல்  என்று காட்டியதில்லை. நட்பில் நேராக எளிமையாக இருந்தார்.  அதனால்தான் அவரது நட்பு வட்டம் விரிந்து பலர் மனதையும் அவர் கவர்ந்தார். கடைசி வரை அப்படி இருந்தார்.

ஒருவரின் புத்தியும் திறமையும் இயற்கை கொடுப்பது. படித்து ஆராய்ந்து அறியும் விஷயங்கள் கூட, அதற்கான புத்தியும் திறமையும்  இல்லாமல் நடக்காது. இருக்கும் திறமையை  எப்படி வெளிக்  கொண்டுவருவது என்பதும் ஒரு திறமைதான், அதுவும் இயற்கையின் பரிசுதான். இதற்கு அப்பால் எதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும் என்பது வேறு விஷயம். ஆகையால், ஒரு திறமைசாலிக்கு மூன்று   வினாடிக்கு மேல் சுய பெருமை காண்பதற்கு ஒன்றும் இல்லை – மூன்று வினாடிக்குள், தன் திறமைக்குத் தான் காரணம் இல்லை என்பது புரிந்துவிடும்.  இதை உணர்பவருக்கு உள் மனதில் பணிவு இருக்கும். மணிவண்ணன் அப்படித் தெரிந்தார்.        

சிலருடன் அறிமுகங்கள் சந்தர்ப்ப வசத்தில் கிடைத்து,  ஒரு வசதிக்காக இரு பக்கமும்  நிலைத்திருக்கும்.  அதில் ஒருவர் வேலை மாறி, வீடு மாறி, ஊர் மாறி, உலகம் மாறிப் போனால் மற்றவருக்கு  வருத்தம் இருக்காது.  இருப்பவர்கள், விட்ட வசதியை வேறு இடத்தில் பார்த்துக் கொள்வார்கள் – பழைய உடையை விட்டுப் புது உடை உபயோகிப்பது போல்.  ஆனால் மனதுக்கு இதமான நண்பர் அப்படி அல்ல.  நினைவிருக்கும் வரை உங்கள் மனது  அவரை மறக்காது. அவர் மறைந்து போனாலும் அவரது நினைப்பே உங்கள் மனதை நிரப்பும். அந்த உணர்வை நீங்கள் இன்னொருவரிடம் சரியாகப் பகிர்ந்து கொள்ள முடியாமல்  போகலாம். ஆனால் உங்களுக்குள் அவரது நட்பிற்கு முடிவு கிடையாது. ஏனென்றால், இதமளிக்கும் எதையும் மறக்குமா மனது?
* * * * *

Copyright © R. Veera Raghavan 2020

Saturday, 27 June 2020

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: இந்தியாவின் மோடியும் சீனாவின் ராகுலும்


          -- ஆர். வி. ஆர்

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைல ராகுல் காந்தி சொல்றதைப் படிச்சேளா? உடனே, 'இந்த படவா காதைப் பிடிச்சு பொடனில  ஒண்ணு கொடுக்கணும்'னு உங்களுக்கு தோண்றதா? ஆமான்னா நீங்க தேசத்தை நேசிக்கறவர்னு அர்த்தம்.

சீனா சர்வாதிகார நாடு.  அங்க கம்யூனிஸ்ட் கட்சிதான் ஒரே அரசியல் கட்சி. எதிர்க்கட்சி கிடையாது. சீனா நம்ம இந்தியாட்ட என்ன அக்கிரமம் பண்ணினாலும், சீன அரசாங்கத் தலைவர்களுக்கு உள்நாட்டு விமர்சகர்களை சமாளிக்கற அவசியமே இல்லை.  

இந்தியா ஜனநாயக நாடு, ஆனா முதிர்ச்சிக்கு வரணும்.   இங்க வருஷக்கணக்கா, அதுவும் இந்திரா காந்தி காலத்துலேர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைமையோட போக்கு என்னன்னா, கட்சிலயோ ஆட்சிலயோ தர்ம-நியாயம், ஜனநாயகப் பண்பு, திறமைக்கு அங்கீகாரம்னு அலட்டிக்கறது இல்லை.  சோனியா காந்தி பட்டத்து ராணியா வந்தப்பறம் கோல்மால் கோலோச்சினது. அவாளோட பொறுப்பில்லாத பிள்ளை ராகுல் காந்திக்கு கட்சில எல்லாரும் சலாம் போட்டா. அது சோனியா காந்திக்கு ரசிச்சது. அதுவே நமக்கும் ஆதாயம்னு, போடறவா ரண்டு கைலயும்  சலாம் போடறா.

இப்படி இருக்கற காங்கிரஸ் கட்சிக்கு, பாரதிய ஜனதா கட்சிலேர்ந்து நரேந்திர மோடின்னு ஒரு தலைவர் சத்ருவா வந்தார். அதுவும் எப்படி? நேர்மை, நியாயம், நெஞ்சுரம், தேசப்பற்று, அரசியல் சாதுர்யம்னு சோனியா காங்கிரஸ்  பார்க்காத ஆயுதங்களோட வந்தார்.

2014, அப்பறம் 2019-ன்னு அடுத்தடுத்து ரண்டு லோக் சபா தேர்தல்ல காங்கிரஸ், அதோட சேர்ந்த உதிரிக் கட்சிகள், எல்லாத்தையும் ஒரு கூட்டணி தலைமைல தோக்கடிச்சு பிரதமர் ஆனார் மோடி. இப்படி பத்து வருஷம் ஆட்சி கைல இல்லைன்னா காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்னு உங்களுக்கும் எனக்கும் என்ன தெரியும், எவ்வளவுதான் தெரியும்?

இப்ப சோனியா காந்தி, பையன் ராகுல், பொண்ணு பிரியங்கா, மாப்பிளை ராபர்ட் வத்ரான்னு அவா அவா ஏகப்பட்ட நஷ்டத்துலயும் கஷ்டத்துலயும்  புழுங்கிண்டிருக்கா.  அதோட,  அவாளோட   தப்புத் தண்டாவை மோடி அரசாங்கம் புலன் விசாரணை பண்ணி கேஸ் மேல கேஸா போடறா.  நேர்மையான மோடி ஆட்சில இதெல்லாம் எப்படி முடியுமோன்னு சில பேர்க்கு பக் பக்னு இருக்கும்.

இவ்வளவு சிக்கல்ல, சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ நிதானமா இருக்க முடியுமா? அதுவும் அறைகுறை புத்தி, அச்சுப் பிச்சுப் பேச்சு, அம்மா செல்லம்னு ஜொலிக்கற   ராகுல் காந்திக்கு புத்தி பேதலிச்சே போயிடுத்து.

2017-ம்  வருஷம் ஜூன்  மாசம் இந்தியா-சீனாவுக்கு  ஒரு பிரச்சினை வந்தது. அப்ப ராகுல் காந்தி என்ன வேலை பண்ணினார் தெரியுமா? சொல்றேன்.

சீனாவுக்கு, பூட்டான் நாடும் ஒரு அண்டை நாடுதான்.  பூட்டான்  நாடு டோக்லம்  பகுதில, 2017 ஜூன் மாசம் சீனா தனக்கு ரோடு போட ஆரம்பிச்சது. இந்தியா-பூட்டான் பாதுகாப்பு ஒப்பந்தப் படி இந்தியப் படைகள் அங்க போய் பூட்டானுக்கு ஆதரவா ரோடு வேலையை நிறுத்தினது.  அப்ப சீனா முரண்டு பிடிச்சது.   ரண்டு மாசத்துக்கு மேல இந்தியா  சீனா துருப்புகள் எதிரும் புதிருமா டோக்லம் பகுதில முறைச்சது.  இந்தியா-சீனா யுத்தம் வருமோன்னு ஒரு உணர்வு இந்தியால பொதுவா பரவி இருந்தது. ஆனாலும், கூச்சல் போட்டுண்டிருந்த சீனாவை அதிகம் பேசாம, திடமா அமைதியா கையாண்டார் மோடி. அந்த வருஷம் ஆகஸ்ட் கடைசில அந்தப் பிரச்சனை ஒரு வழியா ஓய்ஞ்சது.  நாம தடுத்த ரோடு வேலையை சீனா நிறுத்தினது.   

சீனா டோக்லம் பகுதில பிரச்சினை உண்டாக்கின போது, ராகுல் காந்தி ஏதோ பேருக்கு அரை குறையா சீனாவை கண்டிக்கறது, மோடியை அப்பப்ப மட்டம் தட்டி ஏதாவது பேசறது, ட்வீட் பண்றதுன்னு பொழுதைப் போக்கினார்.  ஆனா அதோட நிக்கலை.  

ஜூலை 2017-ல, நம்ம அரசாங்கத்துக்குத் தெரியாம இந்தியாவுக்கான சீன தூதரை திடீர்னு சந்திச்சார் ராகுல். அந்த செய்தி வெளில கசிஞ்சு வந்தது. அப்பறம் ராகுல் காந்தியே சீன தூதரை பாத்துப் பேசினேன்னு வெக்கமில்லாம ட்வீட் விட்டார், “முக்கிய விஷயங்கள் பத்தி எனக்கு தெரிஞ்சாகணும். அதுனால நான் சீன தூதரை சந்திச்சேன், பூட்டான் தூதரையும் பாத்தேன், முந்தைய தேசிய  பாதுகாப்பு ஆலோசகரையும் பாத்தேன், வட கிழக்கு காங்கிரஸ் தலைவர்கள் கிட்டயும் பேசினேன்”  அப்படின்னு அந்த எல்லாரையும் அவியலா போட்டு, ஏதோ பத்தோட பதினொண்ணா சீன  தூதரை பாத்தா மாதிரி கெக்கே பிக்கே விளக்கம் சொன்னார் ராகுல்.

நம்ம பிரதமர் என்ன சொல்றார்னு கேட்டு அவருக்கு முழுசா தோள் குடுக்காம, எதிரி நாட்டு தூதரைப் பாத்து “எப்படி இருக்கேள் சார்! சௌக்கியமா? நம்ம நாட்டு ராணுவ வீரர்கள் ஏன் சார் உரசிண்டிருக்கா? நீங்கதான் தகவல் சொல்லணும்!” அப்படின்னு பேச இந்தியாலேர்ந்து ஒரு மட சாம்பிராணி போவானா?  ராகுல் காந்தி போனார்.          

இப்ப மூணு வருஷம் கழிச்சு நம்ம லடாக் நிலப்பரப்புல, கல்வான் பள்ளத்தாக்குல சீன ராணுவம் பிரச்சினை பண்றது. நம்ம பகுதிக்குள்ள வந்து கட்டுமானம் எழுப்பினது. அதுக்கு நம்ம ராணுவம் எதிர்ப்பு சொன்னது. இந்த ஜூன் 15-16 தேதில,  ரண்டு பக்கத்துக்கும் அந்த இடத்துல கைகலப்பு கட்டை வீச்சுன்னு ஆகி, ரண்டு நாட்டு ராணுவத்துக்கும் உயிரச் சேதம் ஏற்பட்டது. நமக்கு 20, சீனாவுக்கு 40-ன்னு தகவல் வந்திருக்கு.

டோக்லம் பிரச்சினையை விட இப்போதைய எல்லைப் பதட்டம் சீரியஸான விஷயம்.  சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து நம்ம ஜவான்கள் உயிர் துறந்தது நமக்கு பெரிய துயரம்தான். இருந்தாலும் மோடி அமைதியா,  உறுதியா, தம்பட்டம் இல்லாம, வீர வசனம் பேசாம  இந்த எல்லைப் பிரச்சினையை கையாள்றார்.   ஆனா ராகுல் காந்தி தினமும் ஏதாவது பெனாத்திண்டே இருக்கார்.

“பிரதமர் ஏன் மௌனமா இருக்கார்? அவர் ஏன் ஒளியறார்? என்ன நடந்ததுன்னு நமக்கு தெரியணும். சீனா எப்படி நம்ம ஜவான்களை கொல்லத் துணிஞ்சது? அவா எப்படி நம்ம நிலத்தை எடுத்துக்கறது?” அப்படின்னு சீனாவை லேசா ஒரு தட்டு தட்டி, அந்த ஜோர்ல நம்ம பிரதமரை கேவலமா இழிவு பண்ணி  ட்வீட் குடுத்தார் ராகுல். இது ஜூன் 17-ம் தேதி.

“நம்ம படை வீரர்களை ஆயுதம் இல்லாம ஆபத்தை நோக்கி அனுப்பினது யாரு? யார் இதுக்கு பொறுப்பு?” அப்படின்னு அடுத்த நாள் 18-ம் தேதி ராகுல் ட்வீட் பண்ணினார்.

அப்பறம் ஒரு நாள் “மத்திய அரசாங்கம் தூங்கிடுத்து”ன்னு கமெண்ட் அடிச்சார்.   அடுத்த நாள், “பிரதமர் இந்திய நிலத்தை சீனாக்கு தாரை வாத்துட்டார்” அப்படின்னு மோடிக்கு ஒரு இடி குடுத்தார். அதுக்கு அடுத்த நாள், “நரேந்திர மோடி சரண்டர் மோடியாக்கும்” அப்படின்னு மலிவா கீழ்த்தரமா தேசப் பிரதமரை கேலி பண்ணி சீனாவை குளிர்விச்சார் ராகுல். 

நேத்திக்கு, ஜூன் 26-ம் தேதி கூட ராகுல் சும்மா இல்லை. “பிரதமர் சார்! தைரியமா பேசுங்க. பயப்படாதீங்க. ‘ஆமா, சீனா நம்ம நிலத்தை எடுத்துண்டிருக்கு.  நாம அதன் பேர்ல நடவடிக்கை எடுப்போம்’னு சொல்றதுக்கு பயப்படாதீங்க.” அப்படின்னு ட்வீட் பண்ணிருக்கார்.  ஒரு நாசூக்கு, இங்கிதம், கௌரதை எதுவும் இல்லாம கன்னா பின்னான்னு காமெடி வில்லன் மாதிரி பேசறார் ராகுல் காந்தி.      

மோதல் களத்துல நாளுக்கு நாள், மணிக்கு மணி, என்ன நடந்தது, அதோட பின்னணி என்னன்னு ராகுலுக்கு தெரியாது. நம்ம ராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் மட்டும்தான் எல்லா விவரமும் தெரியும். இந்த மாதிரி எல்லைப் பிரச்சினைல, அதுவும் சீனா சம்பத்தப்பட்ட  பிரச்சினைல, அரசாங்கமே பொதுவுல எந்த அளவு பேசணும், எந்த அளவு ரகசியமா  காரியங்கள் பாக்கணும், உலக நாடுகள் கிட்ட தனியா எப்படி  நம்ம பக்க நியாயத்தை எடுத்து சொல்லணும்னு ஒரு வரைமுறை, விவஸ்தை இருக்கு. ஒரு மண்ணும் தெரியாம, சகட்டு மேனிக்கு மோடியை குத்தம் சொல்லிண்டே இருந்தா அடுத்த தேரதல்ல ஜெயிக்கறதுக்கு இப்பவே அடி போடலாம்னு ராகுல் அல்பமா நினைக்கறாரா இல்லையா, சொல்லுங்கோ.   

இந்தியாவுக்குள்ள, ராகுல் காந்தியை விட சீனாக்கு ஒரு நண்பர், அதுவும் இந்திய நலனை ரண்டாம் பட்சமா பாக்கற ஒரு சினேகிதர், வேற யாராவது இருப்பாளா?

தேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்த காங்கிரஸ் கட்சியோட பிரதான தலைவர், அதுவும் நேருவோட கொள்ளுப் பேரன், ராகுல் காந்தி. அவர் எப்படி இந்த அளவு தறி கெட்டு, தேச ஒற்றுமை உணர்வே இல்லாம, எதிரி சீனாவே நம்மளைப் பாத்து சிரிக்கற மாதிரி பேசறார்? இந்த மகா அக்கிரமத்துக்கு கட்சிக்குள்ளயும் ஏன் எதிர்ப்பு இல்லைன்னா,  அதுக்கான பதில் சீனாவைப் பாத்தா புரியும்.

"சீனாவோட அடாவடி, அக்கிரமம், அராஜகத்தைப் பத்தி பேசினா அந்த நாட்டு அப்பாவி மக்களைக் குறை சொல்றதுன்னு ஆகாது. மக்களை  அடக்கி ஆட்சியைப் பிடிச்சு வைச்சிருக்கிற சீன கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் சீனான்னு சொல்றோம்" அப்படின்னு அரசியல் விமர்சகர்கள் எடுத்துச் சொல்றா. அது கரெக்ட். அதே மாதிரி, இன்னி தேதிக்கு காங்கிரஸ் கட்சின்னா என்ன அர்த்தம்? கட்சியைக் கைக்குள்ள  போட்டுண்டு,  கால்ல நசுக்கற சோனியா காந்தி, ராகுல் காந்தி ரண்டு பேர் மட்டும்தான் காங்கிரஸ் கட்சின்னு அர்த்தம். இதுவும் ரொம்ப  கரெக்ட், இல்லையா?   

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020

Friday, 19 June 2020

The Murder of George Floyd


        -- RVR

US police officer Derek Chauvin stands charged with second degree murder for killing George Floyd at Minneapolis. Chauvin (44) is a white American and Floyd (46) was an African American. 

An unarmed George Floyd was arrested without resistance on 25th May 2020 from a parked car, on a charge of using a $20 counterfeit note for a purchase. Moments after arrest, being hand-cuffed behind and shoved, Floyd fell near a pavement face down with his chin touching the ground sideways. Then Chauvin knelt on Floyd's neck, while two other police officers were restraining Floyd to the ground, pressing on his torso and legs. Another officer stood guard, keeping horrified bystanders from interfering.

Pinned to the ground, Floyd groaned in agony, cried out again and again, "I can't breathe" – sixteen times, reports say – and begged for his life. Onlookers too asked Chauvin to remove his knee, but he didn't relent. He just kept kneeling, ignoring the pleas of Floyd, for nearly nine minutes till the man below became silent and lifeless.

Some eye witnesses had filmed Chauvin's violence, and there were also security cameras around, and he was aware of the video recording.  Footages of the tragic event soon went viral. The world was shaken. Chauvin and the other three officers were dismissed from service the next day. Chauvin is to be tried for second degree murder, and the other three for aiding and abetting the murder.  Meanwhile, protests and demonstrations over police racism and the killing of Floyd erupted in more than 2000 cities and towns across the US and elsewhere.

Floyd lost his life weeks ago, but a message coming out from his death seems relevant for all time.

Let's start with some basics. Police officer Derek Chauvin was stupid first and racist next. He didn't kill George Floyd secretly with no one looking. Most probably he didn’t really intend to kill Floyd. He was stupid to not know that if he pressed his knee long and hard on the neck of Floyd held to the ground, the poor man could die nine out of ten, and then the police officer could tell no lies against video evidence and his future could be doomed in prison for up to 40 years. Still he did the horrible thing. The law must punish him.

Why is Chauvin seen racist too? It is not just that he happened to be white and the dead man black. If Floyd was also white, there was a 99% chance the white police officer would not be so insane and brutal with a quiet man in secure custody - or at any rate he would take off his offending knee on hearing repeated cries of "I can't breathe".  Here Chauvin was heartlessly racist, and so never relaxed on his cruel deed that gave him racist pleasure. Next, Chauvin would have had racist inclinations against blacks for this reason - a large number of whites around him are racist in their minds in varying degrees and from a young age he instinctively took it from his community, though all of them wouldn't be so devilish like Chauvin.

We come from different races, nations, religions and religious sects, and we speak one or the other of world’s many languages as our mother tongue. We have an innate affiliation to these social groups, which gives us distinct identities unifying us within our groups. Not just that. We instinctively see others with a different group identity, especially strangers, as ranged against us in some way, depending on the occasion and our mettle. We can neither escape the unifying force of our group identities nor deny their divisive appeal.

The killing of George Floyd showed us the divisive part of a group identity in one man. Succumbing to negative influences of their group identities is instinctive for most people, since evil attracts us quicker than good. What sets apart the others in the same group is their ability to see themselves as conscious individuals first, and as group members next.

Be with your social group, but keep yourself secretly aloof to judge people and issues, including members of your group, on their merits. Know your group history and learn its ways and beliefs, but if you have to do a thing right and different at any time so you don’t hurt yourself or others – that is a fine art of balancing - do it. That way, any faults of your social group do not weigh much on you, you resolve your social conflicts quickly and you don't fall into extreme wrong acts in the belief of showing up your group identity. On the day Derek Chauvin engaged with George Lloyd, the officer could not take himself out of his group identity. Worse still, he lost his mind and committed a gruesome act that now magnifies a historical blemish on white Americans. 

So, we better keep in check the play of our group identities which are double-edged swords. We may fairly benefit from them but not let them detract or degrade us. Sorry, George, you had to die to remind us on this powerfully.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020

Sunday, 7 June 2020

கொரோனா டீச்சர் பாடம் சொல்கிறார்

-- ஆர். வி. ஆர் 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, அதிலிருந்து நம்மைப் பாதுகாக்க, அரசாங்கம் நாடு தழுவிய ‘லாக்டௌன்’  அமல் செய்தது. நமக்கு சில சுகாதார அறிவுரைகள்  சொல்கிறது – அவற்றைப் பொதுமக்கள் பெரிதாக அனுசரிப்பதில்லை.  என்னவென்றால்:

1. வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணிய வேண்டும் (பாதிப்பேர் கவசத்தைக் காதில் மாட்டி மோவாய்க் கட்டைக்கு குல்லா போடுகிறார்கள்);

2. வெளி மனிதர்களிடம் இருந்து மூன்று அடி விலகி இருக்க வேண்டும் (நீங்கள் தள்ளி நின்றாலும் நெருங்கி வந்து இடிக்கிறார்கள். சாரியும் சொல்வதில்லை);

3. அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் உபயோகித்து இரு கைகளையும் முழுதாக 20 வினாடிகள் தேய்த்துக் கழுவ வேண்டும் (சாப்பிட்ட கையை சரியாகக் கழுவத் தெரியாதவர்களே நிறைய உண்டு)

கொரோனாவைத் தொடர்ந்து வந்த லாக்டௌன், பரவலான பொருளாதார பாதிப்பைத் தந்தது, அரசாங்கம் அதை எதிர்கொள்கிறது. இது ஒரு பக்கம்.   இன்னொரு பக்கம், லாக்டௌன் நாட்களில் கொரோனா பலரையும் வீட்டுக்குள்ளே வைத்திருந்து ஒரு அனுபவத்தைக் கொடுத்தது.  ஒரு பாடத்தையும் சொல்லியது.  

லாக்டௌன் சமீபத்தில் நன்றாகத்  தளர்த்தப்படும் முன், பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருந்தோம். நம்மில் பலருக்கும் சொந்தக்காரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், சக ஊழியர்கள் என்ற அனைவரிடமும் நேருக்கு நேரான தொடர்புகள் பாதியாக, கால் பங்காக, அரைக்கால் அளவாக, அதற்கும் கீழாகக் குறைந்தன. அதை ஈடு கட்ட அவர்களுடனான டெலிஃபோன் பேச்சுக்களை யாரும் பெரிதாக அதிகரிக்கவில்லை. பேசாமல் இருப்பதும் பரவாயில்லை என்று இரண்டு பக்கத்திலும் மிகப் பலர் நினைத்தார்கள். ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால் மற்றொருவர் பார்த்து விசாரிக்கலாம். இருவருக்கும் உடம்பு சரியில்லை என்றால் இருவருமே அடுத்தவரை அப்பறம்  பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பதைப் போல பலரும் இருந்தார்கள். அப்போது நம்மை அறியாமல் இன்னொன்றும் நேர்ந்தது, கவனித்தீர்களா? அதுதான், நம் மன அமைதி சட்டென்று  இரட்டிப்பாக அல்லது அதற்கும் மேலாக அதிகரித்தது. என்ன காரணம்?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து இல்லை, அது வந்தால் அதற்கு சரியான நிவாரணமும் இல்லை. அது மெள்ள மெள்ள உலகெங்கும் லட்சக்கணக்கில் உயிர்ப்பலி வாங்குகிறது. அதில் அவதிப்பட்டு பிழைத்தவர்களும் அதிகம்தான்.  இருந்தாலும், நாம் அதன் தாக்குதலில் அகப்படாமல் இருக்க முடியுமா, அது வந்தால்  நம் உயிர் தங்குமா என்பது பற்றி நமக்கே லேசாக சந்தேகம் எழுந்தது.  இதனால், வெளி மனிதர்களுடன் கொண்டிருந்த உறவு நம் உணர்வில் சுருங்கியது.

எந்த உறவிலும் ஒரு உரசல் இருக்கும். பாதிப்பேர் அதை வெளிப்படுத்தாமல் இருக்க முயல்வார்கள். மீதிப்பேர் அதை மறைக்க மாட்டார்கள் அல்லது மறைக்கத் தெரியாதவர்கள். லாக்டௌனில் அந்த உறவே மழுங்கியபோது,    உள்மனதில் மற்றவர்களுடன் இருந்த உரசலும் அனைவருக்கும் தானாகக் குறைந்தது. அதோடு, ‘யார் எத்தனை நாளோ’ என்ற நினைப்பில், வீட்டில் இருக்கும் மற்றவர்களுடனான அபிப்பிராய பேதங்களும் தேய்ந்தன. எனக்குத் தெரிந்து, ஒரு அபார்ட்மெண்ட் பில்டிங்கில் சண்டையும் பூசலுமாக இருந்தவர்கள் அதன் சுவடு தெரியாமல் அமைதி ஆனார்கள் – அடுத்த வீட்டுக்காரர்களைப் பற்றிய நினைவே போனதால்.  

மற்றவர்களுடன் கொண்டிருந்த உரசல் மறைந்த உடன், மனதில் நமக்கு அமைதி தானாக ஊறியது, அவ்வளவுதான்.  மற்றபடி கொரோனா காலத்தில் எவரும் மன அமைதியை நாடிப் போகவில்லை, தேடி அலையவில்லை.  

கொரோனாவுக்கு முன்னர், பலரும் இன்னொரு மனிதரை முன்னிட்டு, அவரை நினைத்து, அவரது மாறுபட்ட அபிப்பிராயங்களை ஏற்க முடியாமல், அவர்பால் கோபத்தை உண்டாக்கி உரசலை வளர்த்துக் கொண்டவர்கள்.  இதில் நமது அலுவல் அல்லது குடும்பக் கடமைகள், நமது சொத்து  சம்பத்தமான அதிருப்திகள், அதன் விளைவான சூடான பேச்சுக்கள், கோபங்கள் என்பவை தவிர்க்க முடியாதவை – இவை பத்து பதினைந்து சதவிகிதம் இருக்கலாம். இவற்றுக்காக இருவரும் சமாதானமாகப் போகலாம் அல்லது சட்டத்தில் தீர்வு காணலாம். அரசியல் மற்றும் வியாபார உரசல்கள் வேறு ரகம்.  இவை தவிர்த்து, ‘நீயா நானா’ பாணியில் நம் அமைதியைத் தின்று தீர்க்கும் மனச் சண்டைகளும், எதிராளியிடம் சவால் விடும் சிந்தனைகளும் பேச்சுக்களும்தான் அதிகம்.  

உங்களுக்கு இருபது வயதுக்கு மேலா? அப்படியானால் உங்கள் எண்ணங்களை யாரும் விவாதித்து மாற்ற முடியாது.  நீங்களாக ஒரு கட்டத்தில் உங்களுக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்து ஒன்றிரண்டு விஷயத்தில் மாறினால் உண்டு.  அதுவும் விதிவிலக்குதான். இது புரிந்தால்   யாரும் பிறருடைய  எண்ணங்களோடு, அது தொடர்பான விஷயங்களோடு, மனதளவிலும் சண்டை போட மாட்டோம்.  

கொரோனா பாதிப்பு படிப் படியாகக் குறைந்து நாம் பலருடனும் நேரடித் தொடர்புகளை மீண்டும் வைத்திருக்கும் நாட்கள் வரும். அப்போது, கொரோனா டீச்சர் கற்றுக் கொடுத்த பாடத்தின் அடுத்த கட்டமாக, நம் மன அமைதி கெடாமல் இருக்க, மற்றவர்களை வெட்டித்தனமாக முன் போல மிக சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அவர்களை ஒதுக்கித் தள்ளவும் வேண்டாம்.  ஒரு புன்னகையைக் காட்டி அவர்களுக்கு வணக்கம் சொல்லி நலம் விசாரித்து டாட்டா  சொல்லி வழியனுப்பி விடலாம். 

கொரோனா காலத்தில் மற்றவர்களை இயற்கையாக மறந்து அவர்களுடனான உரசலைத் தவிர்த்த மாதிரி,  இப்போது   உரசல் உறவுகளை ஒரு யுக்தியாக மனதளவில் விலக்கி வைக்கலாம். அப்படியானால் நமது அன்றாட உறவுகளும் மென்மையாக நிலைக்கும். அதுவும் தேவை.  நாமும் பைசா பெறாத கருத்து வேற்றுமைகளிலும் அதன் சண்டைச் சிக்கல்களிலும் மாட்டாமல் இருக்கலாம்.  இதனால் நமது இயற்கையான மன அமைதி பெரிதும் நழுவாமல் இருக்கும்.  என்ன டீச்சர், பாடம் படிச்சேனா?  

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020