Sunday, 7 June 2020

கொரோனா டீச்சர் பாடம் சொல்கிறார்

-- ஆர். வி. ஆர் 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, அதிலிருந்து நம்மைப் பாதுகாக்க, அரசாங்கம் நாடு தழுவிய ‘லாக்டௌன்’  அமல் செய்தது. நமக்கு சில சுகாதார அறிவுரைகள்  சொல்கிறது – அவற்றைப் பொதுமக்கள் பெரிதாக அனுசரிப்பதில்லை.  என்னவென்றால்:

1. வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணிய வேண்டும் (பாதிப்பேர் கவசத்தைக் காதில் மாட்டி மோவாய்க் கட்டைக்கு குல்லா போடுகிறார்கள்);

2. வெளி மனிதர்களிடம் இருந்து மூன்று அடி விலகி இருக்க வேண்டும் (நீங்கள் தள்ளி நின்றாலும் நெருங்கி வந்து இடிக்கிறார்கள். சாரியும் சொல்வதில்லை);

3. அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் உபயோகித்து இரு கைகளையும் முழுதாக 20 வினாடிகள் தேய்த்துக் கழுவ வேண்டும் (சாப்பிட்ட கையை சரியாகக் கழுவத் தெரியாதவர்களே நிறைய உண்டு)

கொரோனாவைத் தொடர்ந்து வந்த லாக்டௌன், பரவலான பொருளாதார பாதிப்பைத் தந்தது, அரசாங்கம் அதை எதிர்கொள்கிறது. இது ஒரு பக்கம்.   இன்னொரு பக்கம், லாக்டௌன் நாட்களில் கொரோனா பலரையும் வீட்டுக்குள்ளே வைத்திருந்து ஒரு அனுபவத்தைக் கொடுத்தது.  ஒரு பாடத்தையும் சொல்லியது.  

லாக்டௌன் சமீபத்தில் நன்றாகத்  தளர்த்தப்படும் முன், பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருந்தோம். நம்மில் பலருக்கும் சொந்தக்காரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், சக ஊழியர்கள் என்ற அனைவரிடமும் நேருக்கு நேரான தொடர்புகள் பாதியாக, கால் பங்காக, அரைக்கால் அளவாக, அதற்கும் கீழாகக் குறைந்தன. அதை ஈடு கட்ட அவர்களுடனான டெலிஃபோன் பேச்சுக்களை யாரும் பெரிதாக அதிகரிக்கவில்லை. பேசாமல் இருப்பதும் பரவாயில்லை என்று இரண்டு பக்கத்திலும் மிகப் பலர் நினைத்தார்கள். ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால் மற்றொருவர் பார்த்து விசாரிக்கலாம். இருவருக்கும் உடம்பு சரியில்லை என்றால் இருவருமே அடுத்தவரை அப்பறம்  பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பதைப் போல பலரும் இருந்தார்கள். அப்போது நம்மை அறியாமல் இன்னொன்றும் நேர்ந்தது, கவனித்தீர்களா? அதுதான், நம் மன அமைதி சட்டென்று  இரட்டிப்பாக அல்லது அதற்கும் மேலாக அதிகரித்தது. என்ன காரணம்?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து இல்லை, அது வந்தால் அதற்கு சரியான நிவாரணமும் இல்லை. அது மெள்ள மெள்ள உலகெங்கும் லட்சக்கணக்கில் உயிர்ப்பலி வாங்குகிறது. அதில் அவதிப்பட்டு பிழைத்தவர்களும் அதிகம்தான்.  இருந்தாலும், நாம் அதன் தாக்குதலில் அகப்படாமல் இருக்க முடியுமா, அது வந்தால்  நம் உயிர் தங்குமா என்பது பற்றி நமக்கே லேசாக சந்தேகம் எழுந்தது.  இதனால், வெளி மனிதர்களுடன் கொண்டிருந்த உறவு நம் உணர்வில் சுருங்கியது.

எந்த உறவிலும் ஒரு உரசல் இருக்கும். பாதிப்பேர் அதை வெளிப்படுத்தாமல் இருக்க முயல்வார்கள். மீதிப்பேர் அதை மறைக்க மாட்டார்கள் அல்லது மறைக்கத் தெரியாதவர்கள். லாக்டௌனில் அந்த உறவே மழுங்கியபோது,    உள்மனதில் மற்றவர்களுடன் இருந்த உரசலும் அனைவருக்கும் தானாகக் குறைந்தது. அதோடு, ‘யார் எத்தனை நாளோ’ என்ற நினைப்பில், வீட்டில் இருக்கும் மற்றவர்களுடனான அபிப்பிராய பேதங்களும் தேய்ந்தன. எனக்குத் தெரிந்து, ஒரு அபார்ட்மெண்ட் பில்டிங்கில் சண்டையும் பூசலுமாக இருந்தவர்கள் அதன் சுவடு தெரியாமல் அமைதி ஆனார்கள் – அடுத்த வீட்டுக்காரர்களைப் பற்றிய நினைவே போனதால்.  

மற்றவர்களுடன் கொண்டிருந்த உரசல் மறைந்த உடன், மனதில் நமக்கு அமைதி தானாக ஊறியது, அவ்வளவுதான்.  மற்றபடி கொரோனா காலத்தில் எவரும் மன அமைதியை நாடிப் போகவில்லை, தேடி அலையவில்லை.  

கொரோனாவுக்கு முன்னர், பலரும் இன்னொரு மனிதரை முன்னிட்டு, அவரை நினைத்து, அவரது மாறுபட்ட அபிப்பிராயங்களை ஏற்க முடியாமல், அவர்பால் கோபத்தை உண்டாக்கி உரசலை வளர்த்துக் கொண்டவர்கள்.  இதில் நமது அலுவல் அல்லது குடும்பக் கடமைகள், நமது சொத்து  சம்பத்தமான அதிருப்திகள், அதன் விளைவான சூடான பேச்சுக்கள், கோபங்கள் என்பவை தவிர்க்க முடியாதவை – இவை பத்து பதினைந்து சதவிகிதம் இருக்கலாம். இவற்றுக்காக இருவரும் சமாதானமாகப் போகலாம் அல்லது சட்டத்தில் தீர்வு காணலாம். அரசியல் மற்றும் வியாபார உரசல்கள் வேறு ரகம்.  இவை தவிர்த்து, ‘நீயா நானா’ பாணியில் நம் அமைதியைத் தின்று தீர்க்கும் மனச் சண்டைகளும், எதிராளியிடம் சவால் விடும் சிந்தனைகளும் பேச்சுக்களும்தான் அதிகம்.  

உங்களுக்கு இருபது வயதுக்கு மேலா? அப்படியானால் உங்கள் எண்ணங்களை யாரும் விவாதித்து மாற்ற முடியாது.  நீங்களாக ஒரு கட்டத்தில் உங்களுக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்து ஒன்றிரண்டு விஷயத்தில் மாறினால் உண்டு.  அதுவும் விதிவிலக்குதான். இது புரிந்தால்   யாரும் பிறருடைய  எண்ணங்களோடு, அது தொடர்பான விஷயங்களோடு, மனதளவிலும் சண்டை போட மாட்டோம்.  

கொரோனா பாதிப்பு படிப் படியாகக் குறைந்து நாம் பலருடனும் நேரடித் தொடர்புகளை மீண்டும் வைத்திருக்கும் நாட்கள் வரும். அப்போது, கொரோனா டீச்சர் கற்றுக் கொடுத்த பாடத்தின் அடுத்த கட்டமாக, நம் மன அமைதி கெடாமல் இருக்க, மற்றவர்களை வெட்டித்தனமாக முன் போல மிக சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அவர்களை ஒதுக்கித் தள்ளவும் வேண்டாம்.  ஒரு புன்னகையைக் காட்டி அவர்களுக்கு வணக்கம் சொல்லி நலம் விசாரித்து டாட்டா  சொல்லி வழியனுப்பி விடலாம். 

கொரோனா காலத்தில் மற்றவர்களை இயற்கையாக மறந்து அவர்களுடனான உரசலைத் தவிர்த்த மாதிரி,  இப்போது   உரசல் உறவுகளை ஒரு யுக்தியாக மனதளவில் விலக்கி வைக்கலாம். அப்படியானால் நமது அன்றாட உறவுகளும் மென்மையாக நிலைக்கும். அதுவும் தேவை.  நாமும் பைசா பெறாத கருத்து வேற்றுமைகளிலும் அதன் சண்டைச் சிக்கல்களிலும் மாட்டாமல் இருக்கலாம்.  இதனால் நமது இயற்கையான மன அமைதி பெரிதும் நழுவாமல் இருக்கும்.  என்ன டீச்சர், பாடம் படிச்சேனா?  

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020



6 comments:

  1. Exactly true.. பலவிதமான கவலை, குழப்பங்களை மீறியும், ஏதோ ஒரு விதமான மன அமைதியை உணரமுடிகிறது.

    ReplyDelete
  2. ஆஹா அருமை, மிகவும் பயனுள்ள பதிவு 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏👌👌👌🤝

    ReplyDelete
  3. Good observation and well written. We need to agree that due to the outbreak of Corona pandemic, we experienced what we had never even dreamt we would. It made us closer with families. We understood not all western influences using spoons, paper towels, shaking hands, hugging for hellos are great any more. Our namaste and maintaining distance when we meet in public are the most healthy habits. The mals, the movies, eating out when it came to a stop and we started to enjoy cooking and sharing photos in family groups and sharing recipies. The most surprising part is, when we stood on the weighing scale even after gobbling great volume of food, your weight has not increased even a bit. And, saving the best part for the last, the whatsapp family groups are finally active with personal messages and not just forwards. We enjoyed cracking puzzles with our families instead of skipping them, the interactions improved. Zoom, Skype video conferences with school, college friends, families.. We are finally using technologies and really in touch with friends rather than those virtual ones we try to please in FB or other social media.

    Corona taught as expensive lessons, nevertheless vital. Your post sir, as always well thought and well penned.

    ReplyDelete
  4. உண்மைகளைதான் கூறியுள்ளீர்கள். என்னைப் பொறுத்தவரை இந்த காலகட்டத்தில்தான் நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத பல நட்புகளை/ உறவுகளை புதிப்பித்துள்ளேன்.

    ReplyDelete