Sunday, 29 October 2023

நீட் விலக்குக் கோரிக்கை: மு. க. ஸ்டாலினின் புதிய கூத்து!


-- ஆர். வி. ஆர்

 

அண்மையில் சென்னை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி திரும்புவதற்காகச் சென்னை விமான நிலையத்தில் இருந்தார். அவரை வழி அனுப்ப விமான நிலையம் வந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜனாதிபதியிடம் ஒரு ஸ்டண்ட் அடித்துவிட்டுத் தான் வந்த பிரதான வேலை முடிந்ததில் திருப்தி அடைந்தார்.

 

அது என்ன ஸ்டண்ட்? தற்போதைய தமிழக சட்டசபை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தான் எழுதிய புதிய கடிதத்தை ஸ்டாலின் நேரடியாக ஜனாதிபதியின் கையில் கொடுத்தார். அதுதான் அந்தக் கூத்து.

 

ஜனாதிபதி என்ன செய்வார்? நாம் பிளாட்பாரத்தில் நடக்கும்போது நம் கையில் திணிக்காத குறையாகக் கொடுக்கப்படும் விளம்பரத் தாள்களை நாம் பாவமே என்று வாங்குவது போல் அவரும் வாங்கி இருப்பார். மத்திய அரசு அநேகமாக அதைப் பைலில் தூங்க வைக்கும். வேறு நடவடிக்கை எடுக்க அந்தக் கடிதத்தில் துளியும் சாரமில்லை. 

 

மருத்துவச் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு சட்டம் விலக்குத் தரவேண்டும் என்பது திமுக-வின் நிலைப்பாடு. அந்தப் பைத்தியக்கார நிலையை, அந்தப் பித்தலாட்டத்தை, நமது மாநில மக்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள் என்று ஸ்டாலின் எண்ணுகிறார்.

 

ஒரு அப்பட்டமான சுயநலம் மிக்க மோசடிக் கோரிக்கையை இவ்வளவு வெளிப்படையாக வேறு எந்தத் தலைவர் அடிக்கடி மக்கள் முன் வைத்து மத்திய அரசிடமும் வலியுறுத்திக் கொண்டே இருப்பார்? இதைத் திமுக செய்கிறது, ஸ்டாலின் இதற்குக் குரல் கொடுக்கிறார், என்றால் என்ன அர்த்தம்?

 

தமிழர்கள் உட்பட, சாதாரண இந்தியர்கள் அப்பாவிகள்.  அரசின் ஒரு திட்டம் அல்லது செயல்பாடு நாட்டை முன்னெடுத்துச் செல்லுமா அதன் வழியாகத் தங்களின்  வாழ்வு முன்னேறுமா – என்பது பற்றித் தெளிவான புரிதல் இல்லாதவர்கள், அதனால் அதில் அக்கறை இல்லாதவர்கள். அவர்களின் ஏழ்மையும் வாழ்க்கை நிலையும் அப்படித்தான் அவர்களை வைத்திருக்கும்.  

 

நீட் தேர்வின் அவசியம், நீட் விலக்குக் கோரிக்கையின் ஓட்டைகள் ஆகியவை பற்றித் தமிழ்நாட்டின் சாதாரண மக்கள் அறிய முடியாது, அவர்கள் கவலைப்பட இடமில்லை. ஆகவே ஸ்டாலின் இப்படித்தான் நினைப்பார்: ‘நாம் நீட் விலக்கு கேட்பதால் சாதாரண மக்களிடம் நமக்குக் கெட்ட பெயர் வராது. ஒருவேளை நாம் இதில் வெற்றி பெற்றால் நமக்கு வரும் நன்மைகளும் அந்த மக்களுக்குப் புலப்படாது. இப்போதைக்கு இந்த நீட் விலக்கு விளையாட்டை நாம் தொடர்ந்து நடத்துவோம்!'  

.

நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் யாரை பாதிக்கிறது, எதனால் தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்று ஸ்டாலின் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சொல்லி இருக்கிறார் – அது அவரின் வழக்கமான புளுகு தான்.

 

“நீட் தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதால் தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழியே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது” என்று தன் கடிதத்தில் ஆரம்பிக்கிறார் ஸ்டாலின். அதாவது, நீட் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கை நடைபெற்றால் “ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்” பயன் அடைவார்கள், இப்போது நீட் தேர்வு வந்ததால் அத்தகைய மாணவர்கள் பயன் அடையவில்லை என்பதுதான் ஸ்டாலினின் ஒரே பாயிண்ட்.  இது போலியான பேச்சு, பஞ்சரான வாதம்.

 

தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகள் மற்றும் அவர்களுக்குத் துணை நிற்கும் அரசியல் தலைவர்கள் நீட் தேர்வு வந்ததால் எவ்வளவு பிரும்மாண்ட நஷ்டத்தை அடைந்தார்கள் என்று திமுக-வுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். மத்திய அரசுக்கும் தெரியும்.

 

ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் முக்கியமாக என்ன சொல்லவில்லை என்பதைப் பாருங்கள்.

 

‘நீட் தேர்வு வினாக்கள் மருத்துவச் சேர்க்கைக்கு சம்பந்தமே இல்லாதவை’ என்று ஸ்டாலின் சொல்லவில்லை.

 

‘நீட் தேர்வு சொத்தையாக, தரம் குறைந்ததாக இருக்கிறது, அதை விட தமிழகத்தின் பிளஸ் 2 தேர்வு மதிப்பானது, தரம் உயர்ந்தது’ என்றும் அவர் சொல்லவில்லை.

 

‘நீட் தேர்வு முறையை விட, தமிழகத்தில் முன்பிருந்த பிளஸ் 2 வழியிலான மருத்துவச் சேர்க்கை வெளிப்படையாக, பாரபட்சமின்றி அமைந்தது’ என்றும் ஸ்டாலின் ஜனாதிபதியிடம் பெருமைப் பட்டுக் கொள்ளவில்லை.    

 

நீட் தேர்வு முறையில் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடி மக்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்காகக் தமிழக மருத்துவச் சேர்க்கைகளில் இட ஒதுக்கீடு கடைப் பிடிக்கப் படுகிறது. ஆகையால் ஸ்டாலின் எப்போதும் பேசும் சமூக நீதிக்கு நீட்டால் நமது மாநிலத்தில் குறைவில்லை. 


வசதி குறைந்தவர்கள் மற்றும் மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களும் நீட் எழுதித் தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கை பெற்ற விவரங்கள் வருடா வருடம் பத்திரிகைகளில் போட்டோவுடன் வருகின்றன. படிப்பில் நாட்டமுள்ள ஏழைகள் நலனும் நீட் முறையில் காக்கப்படுவது தெரிகிறது. 


இதுதான் நீட் தேர்வின் வெளிப்படையான நல்ல விளைவென்பதால், ஸ்டாலின் பொதுமக்களிடம் சொல்ல விரும்பாத, சொல்ல முடியாத, ஏதோ கசமுசா விஷயம் தானே திமுக-வின் நீட் எதிர்ப்புக்குக் காரணம்?

 

இன்னொரு விஷயம். நன்கு நிர்வகிக்கப் படும் நீட் தேர்வு முறை வந்த பின், பெரிய மனிதர்களின் சிபாரிசைப் பாக்கெட்டில் வைத்திருக்கும் தகுதிக் குறைவான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப் படுவதில்லை. இந்த உண்மையைச் சில நாட்கள் முன்பு திமுக பிரமுகர் தயாநிதி மாறன் ஒரு பொது மேடையில் தன்னையும் அறியாமல் அம்பலப் படுத்தினார். அவர் பேசியது இது:

 

“என் மகளைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்கும் சமயத்தில் நான் அவளை ஸ்டேட் போர்டு பள்ளியில் சேர்க்க நினைத்தேன். என் மனைவியோ சி.பி.எஸ்.சி. பாடத் திட்ட பள்ளியை விரும்பினார் – பின்னாளில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை எளிதாகக் கிடைக்கும் என்ற எண்ணத்தில். அப்போது நான் சொன்னேன்: ‘நீ ஏம்மா கவலைப் படற? எங்க கலைஞர் எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! எங்கப்பா எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! எங்க மாமா ஸ்டாலின் எத்தனை பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! நானே மந்திரியா இருந்தபோது எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்கேன்! என்  பொண்ணுக்கு நான் வாங்கித் தர மாட்டேனா? என்று  மார் தட்டி நின்றேன். அதன்படி என் மகளை ஸ்டேட் போர்டு பள்ளியில் சேர்த்தேன். 2017 வந்தது. அப்போது என் மகள் பிளஸ் 2 முடித்தார். வந்தது பார் நீட்! என்னாச்சு? என் மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை.......”

 


முன்பு தமிழகம் கடைப்பிடித்த பிளஸ் 2 வழி மருத்துவச் சேர்க்கை முறையில் கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் எத்தனையோ நபர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்கச் செய்தார்கள் என்றால், அப்படி மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தாங்கிப் பிடித்த ஏழைகளா, பின் தங்கிய வகுப்பினரா? அனேகமாக இருக்க முடியாது.

 

முன்பு பிளஸ் 2 வழியில் சேர்க்கை நடந்த போது ஏழைகள் மற்றும் பின் தங்கிய வகுப்பினர் பாதிக்கப் படவில்லை என்று ஸ்டாலின் ஜனாதிபதியிடம் தெரிவித்தது உண்மை என்றால் – அதாவது அத்தகைய மாணவர்களுக்கு முன்பு சுலபமாக மருத்துவச் சேர்க்கை கிடைத்தது என்றால் – அப்போது திமுக பிரமுகர்கள் சீட் “வாங்கிக் கொடுத்த” எக்கச்சக்கமான மாணவர்கள் ஏழைகள் அல்ல என்றுதானே அர்த்தம் – அவர்களில்  பின்தங்கிய வகுப்பினர் இருந்தாலும்?

 

திமுக-வின் நீட் விலக்குக் கோரிக்கையில் ஒரு சத்தும் இல்லை, ஆனால் வண்டி வண்டியாக மர்மம் இருக்கிறது என்பதை தயாநிதி மாறனும் இப்போது உளறிக் கொட்டி விட்டார். ஆனாலும் ஸ்டாலின் கவலைப் பட மாட்டார். அதற்கெல்லாம் சிறிதாவது ஒருவரிடம் வெட்க உணர்வு இருக்க வேண்டுமே?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Monday, 16 October 2023

ஜாதியில் ஜோதியைக் காணும் அரசியல்


-- ஆர். வி. ஆர்

 

அநேக அரசியல் கட்சிகள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள் இவை:

 

“காங்கிரஸ் தலைமை ஏற்கும் மத்திய ஆட்சியில் நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.”

 

“பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப் பட்டவர்கள் தங்களின் மக்கள் தொகை விகிதப்படி சலுகைகள் பெற ஏதுவாக, 50-சதவிகித இட ஒதுக்கீட்டு உச்சவரம்பானது சட்டத்தின் மூலம் நீக்கப்படும்”

 

 

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “நமது நாட்டின் ஏழை மக்களை உயர்த்திவிடும்  ஒரு முற்போக்கான பலம் வாய்ந்த நடவடிக்கை, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு” என்றார்.  

 

     ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்காக ஏன் நமது அரசியல்வாதிகள் குரல் கொடுக்கிறார்கள்? அவர்கள் உள்நோக்கம் கொண்டவர்களா? ஆம், அப்படித்தான்.  

 

நாம் பிறந்த ஜாதி இரண்டு வகைகளில் நம்முடன் தொடர்புடையது. ஒன்று இயல்பானது. அதாவது,  நம் ஒவ்வொருவருக்கும் சுய-ஜாதிப் பிரக்ஞை என்பது இயற்கையாக உண்டு. நமது ஜாதி மனிதர்களோடு – அதுவும் ஒரே பொருளாதார நிலையில் உள்ள மனிதர்களோடு – இருக்கும்போது நமக்குள் ஒரு நெருக்கத்தை நாம் ஒரே ஜாதியினராய் உணரலாம். ஜாதி நம் மக்களுக்கு இதமான, அவர்கள் விரும்புகிற, ஒரு அடையாளம்.

 

ஜாதியுடனான நமது இரண்டாவது வகைத் தொடர்பு சற்று சிக்கலானது. இந்தத் தொடர்பில் ஒவ்வொருவரும் ஜாதியைத் தாண்டி ஒரு தனி மனிதன் என்றிருப்பது நல்லது. நமது ஜாதியோடு நாம் ஒன்றி இருப்பதா, தள்ளி இருப்பதா அல்லது வேறுபட்டு நிற்பதா என்றும் நாம் பார்க்க வேண்டிய தருணங்கள் இருக்கும். ஒரு குடும்பத்தில் உள்ளது போல், ஒரு குழுவில் சரியும் இருக்கும், தப்பும் இருக்கும்.  அது போலத்தான் ஜாதிகளுக்குள்ளும்.  

 

நமது ஜாதியுடன் நமக்குள்ள இரண்டாவது  வகைத் தொடர்பில்தான் அரசியல்வாதிகள் எளிதாக நுழைகிறார்கள். குறிப்பாக, பின் தங்கிய அல்லது பிற்படுத்தப் பட்ட ஜாதி மக்களைப் பார்த்து, “உங்கள் ஜாதிக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள்.  உங்களைக் கைதூக்கி விட்டு, உங்களுக்கு அதிக விகிதத்தில் கல்விச் சேர்க்கைகள், அரசுப் பணியிடங்கள்  கிடைக்க நாங்கள் வழி செய்வோம்” என்று அந்த அப்பாவி மக்களிடம் தொடர்ந்து பேசி அவர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்து ஆட்சிக்கு வருவதுதான் அரசியல்வாதிகளின் குறி.

 

இத்தகைய அரசியல்வாதிகளைப் பற்றி, அவர்கள் குறி வைக்கும் அப்பாவி மக்கள் என்ன நினைப்பார்கள், என்ன நினைக்க முடியும்? சிலர் சந்தேகம் இல்லாமல் நம்புவார்கள். சிலருக்கு இந்த விஷயமே புரியாது. இன்னும் சிலர், ‘நமது ஜாதிக்குத் துணை நிற்போம், நம் ஜாதி மக்கள் அனைவரையும் முன்னேற்றுவோம் என்கிறார்களே அரசியல்வாதிகள்? அந்த அரசியல்வாதிகளில் நமது ஜாதித் தலைவர்களும் இருக்கிறார்களே? அவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள் என்று நாம் நினைக்கலாமா? அப்படி நினைத்தால் நமது ஜாதி மக்களுக்கு எதிராகவும் நமது ஜாதி நன்மைக்கு விரோதமாகவும் நாம் செயல்படுவதாக ஆகி விடுமோ? பேசாமல் இந்த அரசியல்வாதிகளை நாமும் வரவேற்போம்’ என்று எண்ணுவார்கள்.   

 

அறியாமையும் ஏழ்மையும் நிறைந்த நம் நாட்டில் அநேகமாக அனைத்து ஜாதி மக்களும் அப்பாவி மக்கள் தான். அவர்களைப் பெரிய பெரிய குழுக்களாக வைத்து ஏய்க்கும் ஒரு கருவியாகத்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நமது அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. 

 

நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சட்டம் நான்கு வித ஜாதிகளில் வைத்துப் பார்க்கிறது.  ஒன்று, “எஸ்.சி” (SC) எனப்படும் பட்டியல் ஜாதிகள். இரண்டு, “எஸ்.டி” (ST) எனப்படும் பட்டியல் பழங்குடியினர் அதாவது,   அவர்களின் பல ஜாதிவகையினர். மூன்று, “ஓபிசி” (OBC) எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இவர்கள் பல்வேறு குறிப்பிட்ட ஜாதிகளைச் சார்ந்தவர்கள். நான்கு, இந்த மூன்றிலும் வராத பிற ஜாதிகள் – பேச்சு வழக்கில் இவை ‘முன்னேறிய ஜாதிகள்’ என்று சொல்லப் படுகின்றன. இவற்றில் முதல் மூன்று மட்டும் (எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி)  இட ஒதுக்கீட்டுப் பயன் பெறும் ஜாதிகள். அரசியல் கட்சிகள் இந்த மூன்று வித ஜாதிகளில்தான் ஜோதியை ஓட்டு வடிவில் காண்கின்றன.

 

கல்விச் சேர்க்கைகளிலும் அரசுப் பணி இடங்களிலும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறும் ஜாதிகளாக மத்திய அரசு நாடு முழுவதற்கும் அறிவித்திருக்கும் ஜாதிகள் எத்தனை தெரியுமா? மாநிலங்கள் வாரியாகப் பிரித்துச் சொல்லப் பட்டிருக்கும் அவற்றைக் கூட்டிப் பார்த்தால் எஸ்.சி ஜாதிகள் 1,248, எஸ்.டி ஜாதிகள் 781, ஓபிசி ஜாதிகள் 2,479 என்பதாக அவை ஒட்டு மொத்தமாக 4,508 என்று இன்டர்நெட்டில் தெரிகிறது. இவற்றில் சில ஜாதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் உள்ளதாகும். இருந்தாலும் மத்திய அரசின் இட ஒதுக்கீடிட்டில் இடம் பெறும் ஜாதிகள் நிச்சயம் ஆயிரக் கணக்கில் உண்டு.

 

மாநில அரசுகளும் அவற்றுக்கான பணியிடங்கள், மாநிலங்களின் கீழ் வரும் கல்விச் சேர்க்கைகள், என்பதற்காகத் தனியாக ஓபிசி ஜாதிகளை அங்கீகரிக்கும் மத்திய அரசுப் பட்டியலைவிட கூடக் குறைய இதில் ஜாதிகள் இருக்கும்.  

 

சரி, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் போட்ட தீர்மானத்தின் அர்த்தம்தான் என்ன?

 

அந்தத் தீர்மானத்தின் படி, காங்கிரஸ் தலைமையில் ஒரு புதிய ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றால், இந்தியாவில் உள்ள மனிதர்கள் அனைவரும் என்ன ஜாதியில் எத்தனை பேர்கள் உள்ளார்கள் என்பதை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது மத்திய அரசு குறிப்பெடுக்கும். அதைத் தொடர்ந்து,  மத்திய அரசின் கீழ் வரும் கல்விச் சேர்க்கை இடங்கள், மத்திய அரசுப் பணி இடங்கள் ஆகியவற்றை ஜாதி வாரியாகக் கூறு போட்டு, இட ஒதுக்கீட்டுப் பயன் பெறும் ஆயிரக் கணக்கான ஜாதிகளுக்கு அந்தப் புதிய மத்திய அரசு வழங்கும்.  

 

இட ஒதுக்கீட்டுக்கான ஜாதியினர் நமது மக்கள் தொகையில் கூட்டாக 75 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் என்று ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால், அதே சதவிகிதத்தில் கல்விச் சேர்க்கை இடங்களையும், அரசுப் பணி இடங்களையும் அந்த ஜாதி மக்களுக்கு அவர்களின் ஜாதி எண்ணிக்கை விகிதங்களின் படி இட ஒதுக்கீடாகத் தர வேண்டும் என்று சொல்கிறது காங்கிரஸ். இதைச் செய்து முடிக்க, தற்போது இட ஒதுக்கீட்டு இடங்களுக்காக சுப்ரீம் கோர்ட் விதித்திருக்கும் 50 சதவிகித உச்ச வரம்பானது புதுச் சட்டம் மூலமாக நீக்கப் படும், இதெல்லாம் சமூக நீதி என்பதும் காங்கிரஸின் நிலை. இப்படித்தான் மற்ற பல அரசியல் கட்சிகளும் சொல்ல வருகின்றன. இட ஒதுக்கீட்டை இப்படி உயர்த்தினால் சுப்ரீம் கோர்ட் ஏற்குமா என்பது வேறு விஷயம்.

 

இந்தியாவில் தொழில்துறை முன்னேற்றம் போதுமானதாக இல்லை. அதனால் நம் நாட்டினர் மேலே படிக்கவும் வேலை தேடியும் அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள் என்று பல அயல் நாடுகளுக்குப் போகிறார்கள். அந்த நாடுகளில் நம் நாட்டினருக்கு என்று இட ஒதுக்கீடு எதுவும் இல்லாமல்தான் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. அதே போல் நம் நாட்டிலும் நமது இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமலே அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் நமது பொருளாதாரத்தை நமக்கு வளர்க்கத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்?

 

காங்கிரஸ் கட்சியின் - அது போன்று குரல் கொடுக்கும் பிற கட்சிகளின் - குறுக்கு சிந்தனையைப் பாருங்கள். நாட்டிலுள்ள 75 அல்லது 80 சதவிகித இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் படியாக நாட்டின் தொழில்துறையை வளர்க்கவும் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் மாட்டார்களாம். அதற்கான நேர்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு, திட்டங்கள், திறன், திராணி, தலைமை எதுவும் இவர்களிடம் இல்லையாம். பதவியில் சுகித்தபடி இவர்களால் முடிவது என்னவாம்? யானைப் பசிக்கு சோளப்  பொறியாக துளித் துளி எண்ணிக்கையில் உள்ள அரசுப் பணியிடங்களை நாட்டின் 75 அல்லது 80 சதவிகித ஜனங்களை அழைத்து "இந்தா உன் ஜாதிக்கும் உண்டு" என்று அங்கும் இங்கும் கொஞ்சம் தெளித்து விடுவார்களாம். இதற்கு சமூகநீதி என்று பெயராம். 

 

முன்பு தேச விடுதலைக்கும் நாட்டு நலனுக்கும் பாடு பட்ட காங்கிரஸ் கட்சி, இப்படித் தீர்மானம் போட்டு மக்களை ஏய்த்துப் பிழைக்க நினைக்கும் தலைமையிடம் சிக்கியிருக்க வேண்டாமே?

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Friday, 6 October 2023

பாஜக-அதிமுக உறவு ஏன் முறிந்தது?

 

-- ஆர். வி. ஆர்

 

பாஜக-வுடன் இருந்த தோழமை உறவை முறித்துக் கொண்டு, தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக, அதிமுக அறிவித்து விட்டது.  "இரண்டு கோடி தொண்டர்களின் முடிவுப்படி கூட்டணியில் இருந்து விலகினோம்" என்று பாப்பாக்களும் நம்பாத ஒரு காரணத்தைச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. எது உண்மைக் காரணம்?

 

திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்ட எம்.ஜி.ஆர், அந்தக் கட்சியை எதிர்ப்பதற்காகத் தொடங்கிய புதுக் கட்சி அதிமுக. அன்றிலிருந்து, இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று சட்டசபைத் தேர்தலில் வீழ்த்தி மாநிலத்தில் தாங்கள் ஆட்சியில் அமர முயற்சிப்பதுதான் அவைகளின் பிரதான அரசியல். 

 

மாறி மாறி திமுக-வும் அதிமுக-வும் மாநில ஆட்சியைப் பிடித்து, தமிழகத்தின் மக்களை ஏழைகளாக, இயலாதவர்களாக வைத்திருந்து, தாங்கள் பலவிதத்தில் செழிப்பதும் அரசு கஜானாவை அம்போ என்று விடுவதும் சொல்லி மாளாது, நமக்கு முழுவதும் புலப்படாது.

 

திமுக-வும் அதிமுக-வும் எத்தகைய கட்சிகளைத் தோழமைக் கட்சிகளாக, கூட்டணிக் கட்சிகளாக வைத்துக் கொள்ளும்? மாநிலத்தில் ஆட்சித் தலைமை ஏற்க ஆசைப்படாமல், அந்த அளவிற்கு அவற்றுக்கென்று மக்கள் சக்தி இல்லாமல் செயல்படும் சிறிய கட்சிகள்தான் அத்தகைய உறவுக்கு லாயக்கு. அந்த மாதிரி சிறிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டால், பெரிய கட்சியான திமுக-வுக்கோ அதிமுக-வுக்கோ மாநிலத்தில் நிறைய எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும், அந்தச் சிறிய கட்சிகளும் கூட்டணி பலத்தில் சில தொகுதிகளில் ஜெயித்து எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆகலாம் என்ற பரஸ்பர நன்மைகள்  உண்டு.

 

பாஜக-வோடு என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இருந்தால், பாஜக-வின் ஓட்டுக்களும் சேர்ந்து அதிமுக அதிக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி. தொகுதிகளில் வெல்லலாம். குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஜெயித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க அதிமுக-வுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். இதுதான் - இந்த மட்டும்தான் - நிலவரம் என்றிருந்தால், பாஜக-வுடனான தோழமை உறவை அதிமுக முறித்துக் கொள்ளாது.  ஆனால் இப்போதய நிலவரம் வேறு.  அதுதான் அதிமுக-வுக்கு வெளியில் சொல்ல முடியாத பிரச்சனை.

 

இப்போதைய நிலவரம் என்ன, முன்பிலிருந்து அது எப்படி வேறானது?

 

 அண்ணாமலை தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழக பாஜக, மாநிலத்தில் வெறும் சிறிய கட்சியாக இருக்க விரும்பவில்லை. ஒரு பெரிய கட்சியை அண்டி நின்று அந்தப் பெரிய கட்சியின் தயவில் சில எம்.எல்.ஏ  மற்றும் எம்.பி தொகுதிகளில் ஜெயிக்கும் வாய்ப்பையும் தாண்டி அரசியல் செய்ய விரும்புகிறது, மக்கள் பணி ஆற்ற நினைக்கிறது தமிழக பாஜக. அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்கான துடிப்பும் உத்வேகமும் அசாதாரண தலைமைப் பண்பும் அண்ணாமலையிடம் பளிச் என்று தென்படுகின்றன. மாநிலத்தில் இருக்கும் அர்ப்பணிப்புள்ள அடுத்த கட்டத் தலைவர்களும் அக் கட்சியின் பலம்.

 

அண்ணாமலை தற்போது மாநிலத்தில் நடத்தும் “என் மண், என் மக்கள்” நடைப்  பயணத்தில் தாமாகக் கூடும் மக்கள் கூட்டத்தையும் அவருக்காக மக்கள் ஆர்ப்பரிப்பதையும் பாருங்கள். பாஜக-வைத் தமிழகத்தில் பெரிதாக்க நினைக்கும் அண்ணாமலையின் முனைப்பையும் அதன் ஆரம்ப வெற்றியையும் அவரது நடைப் பயணக் காட்சிகள்  பறை சாற்றும்.  இதனால் அதிமுக-விற்கு நேர்வது ஒன்றுதான். கிலி.

 

பாஜக வட இந்தியக் கட்சி, அது தமிழ் நாட்டில் பெரிதாக வளர முடியாது, நம் நிழலில் பணிவான ஒரு சிறிய கட்சியாக மட்டும் பாஜக  இருக்கும் என்று நினைத்த அதிமுக-விற்கு, பாஜக-வின் புதிய மாநிலத் தலைமையும் அதன் வீரியமும் அது ஈர்க்கும் மக்கள் சக்தியும் பேரிடி. காலப் போக்கில் திமுக-விற்கு மாற்றாக மக்கள் பாஜக-வைத் தான் முதலில் நினைக்கலாம், அப்போது என்ன ஆகும்? அதிமுக தமிழக பாஜக-வைப் பெரிய கட்சியாகப் பார்க்க வேண்டிவரும். அது நடந்தால், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் கனவும் நாற்காலிப் பயன்களும் கலையும், அவரைச் சுற்றி இருக்கும் அடுத்த கட்டத் தலைவர்களும் பெரு நஷ்டத்தை ஏற்க வேண்டும். இதற்கெல்லாமா அதிமுக கட்சியை நடத்துகிறார்கள் எடப்பாடியும் அவரது சகாக்களும்?

 

வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக-வோடு கூட்டணி வைத்தால், பாஜக-விற்கு சில தொகுதிகள் அதிகம் கொடுத்து அவற்றில் அநேக தொகுதிகளில் பாஜக-வும் ஜெயித்துவிட்டால், என்ன ஆகும் என்று அதிமுக இப்படி நினைக்கும். அந்த வெற்றியே பாஜக-வை அரசியல் களத்தில் இன்னும் பெரிதாக அடையாளம் காட்டும், தமிழகத்தில் பாஜக-வின் மக்கள் செல்வாக்கு இன்னும் சில படிகள் உயரும், பிறகு இன்னும் எளிதாக அது பெரிய கட்சியாக வளர முற்படும், பிறகு 2026-ல் வரப் போகும் தமிழக சட்டசபைத் தேர்தலின் போது வளர்ச்சி பெற்ற பாஜக, அதிமுக-விடம் சீட் கேட்குமா, அல்லது அதிமுக பாஜக-விடம் சீட் கேட்க வேண்டி இருக்குமா? இதெல்லாம் நடக்காமல் தடுக்க, அதிமுக தலைமையால் இப்போது சிந்திக்க முடிவது இதுதான்: பாஜக-வுடனான கூட்டணி உறவை உதறி விட்டால், தனித்து விடப்பட்ட பாஜக-வால் தமிழகத்தின் லோக் சபா சீட்டுக்களை அதிக அளவில் ஜெயிக்க முடியாது. அந்த அளவிலாவது  பாஜக-வின் வளர்ச்சி தமிழகத்தில் தடைப் படட்டும்.  

 

பாஜக-வுடன் கூட்டணி வைக்கா விட்டால், திமுக-வை எதிர்த்து அதிக லோக் சபா மற்றும் சட்டசபைத் தொகுதிகளில் அதிமுக ஜெயிக்க முடியுமா, தமிழகத்தில் ஒரு கூட்டணி ஆட்சியாவது அமைக்க முடியுமா? அது மிகக் கடினம் என்று எடப்பாடியே உணர்ந்திருக்கிறார். “இந்தக் கூட்டணி முறிந்ததால் திமுக-வுக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறுமா என்றால், அது வாக்காளர்களின் கையில்தான் உள்ளது” என்று அவரே சொல்லிவிட்டார். பாஜக-வின் அருகே இருந்து தங்கள் கட்சி தேய்வதை விட, நேராகத் திமுக-விடம் தோற்பதை அதிமுக ஏற்றுக் கொள்ளுமோ என்னவோ!

 

தமிழகத்தில் பாஜக வளர வளர, அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளில் யார் மற்றவரிடம் இருந்து விலகுவதாக முதலில் அறிவிப்பது என்பது இரு கட்சிகளுக்கும் பிரச்சனையாக இருந்தது. அதிமுக-வுடன் கூட்டணியில் தொடர்ந்தால் பாஜக-வின் வளர்ச்சி தடைப்படும். மக்கள் சக்தியைப் பெரிதாக ஈர்க்கும் அண்ணாமலை தலைவராக இருக்கும்போது, மத்தியில் மோடி ஆட்சி செய்யும் போது, பாஜக அதிமுக-வுடனான உறவை முறித்துக் கொள்வதாக இப்போது அறிவிக்காவிட்டால் பின்னர் இதற்கு ஒரு தோதான தருணம் வருமா என்பது சந்தேகம். பாஜக-வே இப்படி யோசிக்கையில், அதிமுக முந்திக் கொண்டு கூட்டணி உறவைத் தூண்டித்து விட்டது. 


இந்தப் பிரிவினால் பாஜக-விற்கு பெரிய நஷ்டம் வராது, தமிழக மக்களைத் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்பதுதான் அந்தக் கட்சியின் எண்ணமாகவும் இருக்கும். பல முக்கிய சந்தர்ப்பங்களில் வெற்றி நமக்கு நூறு சதவிகிதம் நிச்சயம் என்றிருக்காது. நமது திறமை, தன்னம்பிக்கை, துணிவு ஆகியவைதான் நமக்குக் கடைசி வழிகாட்டியாக இருக்கும்.

  

திமுக-வும் காங்கிரசும் இப்போது ஒரே கூட்டணியில் இருக்கின்றன. ஏதோ ஒன்றிரண்டு தொகுதிகளைக் கூடுதலாக அழுது அடம் பிடித்து திமுக-விடமிருந்து வாங்கிவிடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. “சரி, இந்தா. சாமர்த்தாக இரு” என்று திமுக-வும் ஒன்றிரண்டு தொகுதிகளை அதிகமாகக் காங்கிரசுக்கு கிள்ளிக் கொடுக்கலாம்.  ஆனால், “ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த நாங்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் பெரிதாக வளர்ப்போம். மாநிலத்தில் ஆட்சியையும் பிடிப்போம்” என்று பொதுவெளியில் பேசும் தெம்பான, மக்களை ஈர்க்கும் ஒரு தலைவர் தமிழக காங்கிரசுக்குக் கிடைத்தால், அப்போது காங்கிரசும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப் படும்.  

 

சரி, பாஜக-விடம் உறவைத் துண்டித்த அதிமுக, ஏதோ ஒரு கட்டத்தில் திமுக-விடமிருந்து சற்று கவுரமான எம்.எல்.ஏ, எம்.பி தொகுதிகளை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சேராதா? திமுக அதை நிச்சயம் வரவேற்காதா? இப்போதுதான் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் இல்லையே?

 

வளர்ந்து வரும் பாஜக-வை எதிர்த்துத்  தமிழகத்தில்  ஆட்சியைக் கூட்டாகத் தக்கவைக்க, தங்களுக்குள்ளான புதிய கூட்டணியை ஒரு யுக்தியாக திமுக-வும் அதிமுக-வும் பார்க்கலாம் – அது நடப்பது, தமிழகத்தில் பாஜக அடையும் வளர்ச்சியின் அளவைப் பொறுத்தது. அப்படியான ஒரு கூட்டணி ஏற்பட்டால் அதற்கு அவர்கள் நியாயம் சொல்வதும் எளிது.

 

 வாஜ்பாய் காலத்தை விட இந்தியாவில் இப்போது சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. மதத்தால் நாட்டைப் பிளவு செய்கிறது பாஜக. இதை எதிர்ப்பதற்காகத் திமுக-வும் அதிமுக-வும் ஒரே அணியில் சேர்க்கிறோம்” என்று அப்போது ஒரே போடாக இரண்டு கட்சிகளும் ஒரு கூட்டறிக்கை கொடுத்தால் போயிற்று. ஆட்சிக்காக, அதன் பலன்களுக்காக, திராவிடம் எதையும் பேசும், என்னவும் செய்யுமே?

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Friday, 22 September 2023

பெண்களுக்கு எம்.பி, எம்.எல்.ஏ இடங்கள் ஒதுக்கீடு. அவசியம் என்ன? அவசரம் என்ன?

          -- ஆர். வி. ஆர்


மக்களவையிலும் மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யும் அரசியல் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இதற்கு எம்.பி-க்களின் அதிக பட்ச அமோக ஆதரவும் கிடைத்தது.  இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும் – நிபந்தனையாக இதற்கு விதிக்கப்பட்ட சில நடவடிக்கைகள் நீண்ட காலம் பிடிக்கும் என்பதால்.       

 

மத்திய மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் ஆவதை எல்லா அரசியல் கட்சிகளும் பேச்சுக்கு வரவேற்கின்றன,  ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை எல்லாக் கட்சித் தலைவர்களும் உளமார வரவேற்பார்களா? நிச்சயமாக இல்லை. ஏன் என்று பார்க்கலாம்.

 

உலகெங்கும் அரசியல் என்பது ஒரு பொதுவெளி அதிகார ஆட்டம். ஆட்சியும் நிர்வாகமும் அதில் அடங்கும். திரைமறைவு வேலைகளும் அதில் உண்டு. ஒரு கட்சியின் தலைவன் என்பவன்,  அதிகாரத்தைப் பிரயோகித்து செயல்பட வேண்டியவன். அதிகார சக்தியிலும் யுக்தியிலும் கட்சிக்குள் அவனை விடக் குறைந்தவர்கள் அந்தத் தலைவனுக்குக் கட்டுப்பட்டு கட்சியில் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களாக இருப்பார்கள்.  

 

அரசியல் என்னும் அதிகார ஆட்டத்தில் அதிக  ஆர்வம் உள்ளவர்கள் ஆண்கள். பெண்களில் மிகக் மிகக் குறைவான சதவிகிதத்தினர் மட்டும் அத்தகைய ஆர்வம் கொண்டவர்கள். ஜெயலலிதா, மம்தா பானர்ஜி போன்றவர்கள் அரிது. ஆகையால் அரசியலுக்கும் சட்டசபைகளுக்கும் தாமாக வர  நினைக்கும் பெண்கள் சுதந்திரமாக வரட்டும் என்ற அளவில் சட்டம் இருந்தால் போதுமானது. அப்படியான சட்டம் ஏற்கனவே நமக்கு இருக்கிறது. அதன்படி இப்போது நமது பாராளுமன்றத்தில் சுமார் 15 சதவிகிதம், மாநில சட்டசபைகளில் சுமார் 10 சதவிகிதம், என்ற சராசரி அளவில் பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இப்படித்தான் எல்லா அரசியல் கட்சிகளின் உண்மையான எண்ணமும் இருக்கும் – அதில் தவறில்லை.

 

இயற்கையிலேயே பெண்களுக்கு இந்த அதிகார ஆட்டத்தில் ஆர்வம் இல்லை என்பதால் அவர்கள் மதிப்புக் குறைந்தவர்கள் அல்ல. அவர்களும் சமூகத்தில் ஆண்களின் அளவிற்கு முக்கியமானவர்கள்தான்.  இது ஒரு புறம்.  மற்றொரு புறத்தில், பெண்களுக்கே அந்த ஆர்வம் அதிகம் இல்லை என்றாலும் எல்லாக் கட்சிகளும் மத்திய மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதைக்  கைதட்டி வரவேற்கிறார்கள் – மனம் விரும்பி அல்ல. இந்த விஷயத்தில் கட்சிகளின் எண்ணத்திற்கும் பேச்சுக்கும் இடையே உள்ள  முரண்பாட்டிற்கு என்ன காரணம்?

 

“பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் நாங்கள் குறிப்பாகத் துணை நிற்போம்”  என்று பேசி எல்லாக் கட்சிகளும் பெண்களின் ஓட்டிற்கு வலை வீசுகின்றன. பாஜக இந்தப் பேச்சை செயலிலும் காட்டி இருக்கிறது (உதாரணம்: தகுதியுள்ள பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, வீடுகளில் டாய்லெட்டுகள் கட்ட உதவி) என்பதும் உண்மை.

 

பெண்களைக் கவரும் இந்தப் போட்டியில் முன்னேற, “மத்திய மாநில சட்ட சபைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்” என்று ஒரு கட்சி சிறிதாக மூச்சு விட்டாலும்,  மற்ற கட்சிகளும் “ஆஹா, நாங்களும் அதைத்தான் கேட்கிறோம்! முன்னரே கூட கேட்டோம்!” என்று வேறு வழி இல்லாமல் சொல்கிறார்கள் – அப்படியான இட ஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்ற வேண்டுதலோடு. அது உண்மையில்  கிடைத்து விட்டால், தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளைப்  பெண்களுக்கு அளித்துவிட்டு இதுவரை தங்கள் கட்சியில் ஆண்கள் போட்டியிட்ட தொகுதிகளை, அவற்றின் எண்ணிக்கையை, எந்தக் கட்சி மகிழ்வுடன் குறைத்துக் கொள்ளும்? 

 

நினைத்துப் பாருங்கள். தமிழகத்தில் இப்போது உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு என்பது 13. எந்தப் பெரிய கட்சி, அல்லது அது தலைமை வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் 13 இடங்களைப் பெண் வேட்பாளர்களுக்கு முழுமனதுடன் வழங்க விரும்பும்? ஆனாலும் பாராளுமன்றத்தில் அந்தக் கட்சிகள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்து ஓட்டளித்தன. இந்த இட ஒதுக்கீடு நடைமுறை ஆகும் போது, பெரிய கட்சிகள்  தங்கள் கூட்டணியில் உள்ள சிறு சிறு கட்சிகளுக்குக் கூடியவரை பெண்கள் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, தங்கள் கட்சியில் உள்ள ஆண் வேட்பாளர்களுக்கு அதிகமான பொதுத் தொகுதிகளைத் தர முயலும்!

 

பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டிற்கு  எல்லாக் கட்சிகளின் மனம் நிறைந்த ஆதரவு உண்டென்றால், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு இதுநாள் வரை நடந்த தேர்தல்களில் அந்தக் கட்சிகள் தாங்களாகவே மூன்றில் ஒரு பங்கு இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கலாமே?  அந்தப் பெண் வேட்பாளர்களில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டவர்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்குத் தேவையான பங்கையும் அந்த அந்தக் கட்சிகளின் விருப்பப்படி அளித்திருக்கலாம். அதைச் செய்ய சட்டத்தின் அனுமதியோ நிர்பந்தமோ தேவையும் இல்லையே? 

 

2024-ல் நடக்கப் போகும் மக்களவைத் தேர்தலிலும் அரசியல் கட்சிகள் பெண்களுக்கான மூன்றில்-ஒரு-பங்கு இட ஒதுக்கீட்டை அனேகமாகப் பின்பற்றப் போவதில்லை – சட்டத்தின் கட்டாயம் அப்போது வந்திருக்காது என்பதால். எல்லா அரசியல் கட்சிகளும் பெண்களின் வாக்குகளைக் குறி வைக்கப் பொதுவெளியில் பாசாங்கு செய்து, தங்கள் பாசாங்கிற்குத் தாங்களே  இரை ஆகி, இந்த அரசியல் சட்ட திருத்தத்தை இப்போது செய்திருக்கிறார்கள்.

 

ஆண்கள் பலருக்கும் இந்த சட்டத்தினால் சாதாரணப் பெண்களுக்கு விளையும் நடைமுறைப்  பயன்கள் பற்றிய சந்தேகம் இருக்கும். ஆனால் அதைப் பற்றிக் கேட்டால் தாங்கள்  பெண்களின் முன்னேற்றத்தை எதிர்க்கும் பழமைவாதிகள் என்ற பெயர் வரலாம் என்று பெரும்பாலான ஆண்கள் பேசாமல் இருப்பார்கள்.  பெண்கள் பலரும் அவர்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டை வரவேற்பார்கள். தாங்கள் சார்ந்த நாடு, மொழி, மதம், ஜாதி, பாலினம் போன்ற வகைகளில் எல்லாருக்கும் ஒரு இனப் பற்றுதல் இருக்கும். அந்த இயற்கையான இனப் பற்றுதல் காரணமாக, இந்தப் புதிய இட ஒதுக்கீட்டைப் பலதரப்பட்ட பெண்களும் வரவேற்பார்கள்.

 

இதில் ஒரு முக்கியக் கேள்விக்கு இடம் உண்டு. பாஜக எதற்கு இந்த சட்ட திருத்தத்தை இப்போது படு அவசரமாகப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் – எல்லாரும் டி.வி-யில் பார்க்கிற மாதிரி – அவர்கள் முகத்தில் சுரத்தில்லாமல் அவர்களை உள்ளூர அழ வைத்தது?  இந்த சட்டத்தையும் ஆதரிக்க  வைத்தது?  இந்த சட்ட திருத்தம் பாஜக-வின் தேர்தல் வாக்குறுதி என்பது ஒரு சிறிய காரணம் தான். இதன் உண்மையான காரணம் எதிர்க் கட்சிகள் அறிந்தது, ஆனால் அவர்களும் வெளியில் சொல்ல முடியாதது.

 

சாமர்த்திய அரசியல் செய்யாமல் ஒரு பெரிய தலைவன் தேர்தலில் ஜெயிக்க முடியாது,  நாட்டுக்கு நல்லதும் செய்ய முடியாது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த அடிப்படை உண்மையை நன்கு அறிந்தவர். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக-விடம் பெரிதாகத் தோற்ற எதிர்க் கட்சிகள் இப்போதும் ஒரு கூட்டணி அமைத்து, 2024 மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக-வைத் தோற்கடிக்க வழி தேடுகின்றன. அந்த எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் விபரீதமானவர்கள்.

 

ராகுல் காந்தி,  மம்தா பானர்ஜி, நீதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ், அரவிந்த் கேஜரிவால், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஷரத் பவார், மு. க. ஸ்டாலின், கம்யூனிஸ்டுகள் போன்றவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வருவதை நினைத்தாலே நமக்கு சித்தம் கலங்கும், குலை நடுங்கும். அவர்கள் பாஜக-வைத் தோற்கடிக்க எடுக்கும் எந்த முயற்சியையும் பாஜக உதாசீனம் செய்ய முடியாது. இந்த எதிர்க் கட்சித் தலைவர்களை ஆட்சியில் இருந்து தள்ளிவைத்து மக்கள் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும், நாட்டையும் முன்னேற்றி வலுவாக்க வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி ஒன்று நினைத்திருக்கலாம்.

 

எதிர்க் கட்சிகள் எதிர்ப்பே சொல்ல முடியாதபடி பாராளுமன்றத்தில் அவர்கள் வாயைக் கெட்டியாக அடைத்துவிட்டு, அனைத்துப் பெண் வாக்காளர்களையும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பரவலாக ஈர்ப்பதற்கு இன்னொரு யுக்தியாக இந்த அரசியல் சட்ட திருத்தத்தை மோடி எண்ணியிருப்பாரோ? அந்தத் தேர்தலில் இது பாஜக-வின் சக்தியை இன்னும் உறுதி  செய்யும், அதிகப் படுத்தும். இந்த ஒரு காரணம் போதுமே – தேச நலனில் நாம் இந்தச் சட்டத்தை வரவேற்க?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Tuesday, 5 September 2023

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: உதய் கண்ணு! நீ என்னாத்துக்கு சனாதனம் பத்தி பேசிக்கிற?

 

-- ஆர். வி. ஆர்

 

உதய் கண்ணு! நீ என்னாத்துக்கு சனாதனம் பத்தி பேசிக்கிற? பெரிய விசயம்லாம் உன் தலைக்கு மேலதான்  போவும் கண்ணு!

 

எதுக்குபா ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ன்ற கூட்டத்துக்குப் போயி, பெரிய பெரிய விசயம் பத்திப் பேசி, பேரை ரிப்பேர் பண்ணிக்கிற?

 

நாபகம் இருக்கா, நீ என்ன பேசினன்னு?

 

“சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா, இதை எல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும்.”

 

“நிலையானது, மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாதது அப்படிங்கறதுதான்  சனாதனத்துக்கு அர்த்தம்.”

 

“எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவானதுதான் கம்யூனிஸ்ட் இயக்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும்.”

 

“திராவிட இயக்கமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் வந்த பின்னாடிதான் மக்களுக்கு திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் சொல்லப் பட்டது”

 

எப்பிடிப்பா? சனாதனம் பத்தி நீ பேசிக்கினே போக, உன் பேத்தலும் கூடிக்கினே போவுது?  

 

கம்மூனிஸ்டு, திராவிட சிகாமணிங்க தமிள் நாட்ல வளந்துக்கினே இருக்க, அல்லாரும் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலைன்னு பட்சாங்க, தெரிஞ்சிகினாங்களா?  இப்ப இருக்கற உன் கட்சி அமைச்சருங்க, மாவட்ட செயலருங்க எத்தினி பேருக்கு சிலப்பதிகாரம் மணிமேகலைல வர்ற ஒரு ஆளு பேர் தெரியும், சொல்லு?  

 

இன்னும் கவனி. வள்ளுவருக்கு திமுக சிலை வெக்கிறதுக்கு முன்ன, ரண்டாயிரம் வருசமா திருக்குறள் எப்பிடி மக்கள் மத்தில இருந்திச்சு? அப்பலாம் கம்மூனிஸ்டு, திராவிடத் தலைவர் யாரும் இல்லியே? தமிள்த் தாத்தான்னு சொல்றமே, அந்த  உ. வே சாமிநாத ஐயரு ஊர் ஊரா ஓலைச்சுவடியைத் தேடி சேகரிச்சு மணிமேகலை, சிலப்பதிகாரம்னு பல காப்பியங்களை அச்சுல ஏத்துனாரு.  அவுருக்கு தமிள் ஆசான் யாருன்ற? திருவாடுதுறை  ஆதீனத்துல இருந்த மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இவுங்க ரண்டு பேரும் கம்மூனிஸ்டா, இல்லை திராவிடக் கொளுந்தா?

 

உன் கட்சிக்காரவுங்க, தமிள்நாட்டுல உன் கூட்டணிக்  கட்சி ஆளுங்க, இவுங்களுக்கு  “நிலையானது, மாற்ற முடியாதது, கேள்வி கேட்க முடியாதது” அப்பிடின்றது எது?  அம்பது வருசத்துக்கு உங்க தாத்தா கருணாநிதி, இப்ப உங்க அப்பா மு. க.  ஸ்டாலின், அடுத்து லைன்ல நிக்கிற நீ,  அடுத்தது திமுக போஸ்டர்ல இப்பவே போஸ் குடுக்கற உன் பையன், இவுங்கதான் கட்சியை கைக்குள்ள வச்சிருப்பாங்க, இவுங்கதான்  நிலையானவுங்க, மாத்த முடியாதவுங்க, யாரும் கேள்வி கேக்க முடியாதவுங்க.  நெசந்தான?

 

என்ன சொன்ன – எல்லாத்தயும் மாத்தணும், எதுவும் நிலையானது இல்லியா? கணவன் மனைவி அன்பா இருக்கறது, கொளந்தைங்களை பொறுப்பா வளக்கறது, பொய் பித்தலாட்டம் பண்ணாம அரசியல் பண்றது, இதுவும் நிலையானது இல்லை, இதையும் மாத்தணும் அப்பிடின்றயா?

 

பொதுவா இந்து மதத்துக்கு, அதோட வாள்வியல் முறைகளுக்கு, சனாதன தர்மம் அப்பிடின்னு ஒரு பேர் இருக்குபா. அது பெரிய கடல். அதைப் பத்தி தெரியணும்னா, நீ முதல்ல கம்பூட்டர் முன்னல உக்காரு. இன்டர்நெட் கனிக்சனை வைச்சு, கம்பூட்டர்ல நீ ஒண்ணு பாத்துக்கலாம். அதாவது, உலகத்துல எல்லா விசயம் பத்தி வண்டி வண்டியா எளுதிருக்கற ஒரு எடம் இருக்கே – அது பேர் என்ன,  விக்கல் பீடாவா? இல்லை இல்லை, விக்கி பீடியா! – அதுல சனாதனம் பத்தியும் கொஞ்சம் படிச்சிக்க.  புத்தகம் படிக்கிற பளக்கம் இருந்தா மேலயும் படி.  விசயம் தெரிஞ்சவன் கிட்டயும் கேளு. அப்ப சனாதனம்னா என்னன்னு உனக்கு தம்மாத்தூண்டு வெளங்கும். அப்பிடியும் வெளங்காட்டி, அதெல்லாம் உனக்கு ஆவாதுன்னு விட்டுரு. அதான் உனக்கு பொருத்தம் கண்ணு.

 

சனாதனம்னா என்னன்னு பெரியவுங்க, படிச்சவுங்க சொல்ல கொஞ்சம் கேட்ருக்கேன். அதை உனக்கு  சொல்லட்டா?

 

“சனாதனம்றது சம்ஸ்ருத வார்த்தை. சுருக்கமா, சனாதனம்னா நீடிச்சு நெலைச்சு நிக்கிற வாள்க்கைக் கோட்பாடுன்னு வச்சிக்கலாம். மனுசனோட நல்ல வாள்க்கைக்கு, நிம்மிதிக்கு, அது முக்கியம், அதுனால அந்த விசயம் நீடிச்சு நெலைச்சு நிக்கும், நிக்கணும் அப்பிடின்னு சொல்லிருக்கு. ‘உண்மையப் பேசு, பொய் பேசிக்காத, இதமாப் பேசு, தேவையில்லாததை பேசாத’ அப்பிடின்னு சனாதனம் எல்லாருக்கும் சொல்லுது”.

 

இதெல்லாம் எல்லா காலத்துக்கும் நமக்குத் தேவைதான கண்ணு? இதயே  உள்ளார வச்சு, கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு திமுக சொல்லுது. காலா காலத்துக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்றதை எல்லா மனுசனும் ஏத்துக்கணும். டெங்கு மாதிரி அதையும் அளிப்பேன், ஒளிப்பேன்னு பேசுவியா நீ?

 

பாத்துக்க – உன் உளறலைக் கேட்ட ஒரு படிச்சவரு, பெரிய மனுசன், சனாதனம்னா என்னன்னு இப்ப எடுத்து சொல்லிக்கிறாரு. சனாதனத்தோட பத்து அம்சங்கள் இதுன்னு சம்ஸ்ருதத்துல சுருக்கமா ஒரு இடத்துல சொல்லி  வச்சிருக்குன்னு புட்டு புட்டு வெக்கிறாரு. நீ கூட வாட்ஸ்-அப்புல பாத்துக்க. அந்த பத்து அம்சம் இதான். இந்தா, எண்ணிக்க. 

 

பொறுமை, சகிப்புத் தன்மை அல்லது பிறரை மன்னித்தல், கட்டுப்பாடு, திருடாமலும் பிறர் பொருளை அபகரிக்காமலும் இருத்தல், சமய ஒழுக்க வாழ்வு, புலனடக்கம், விவேகம், கல்வி, உண்மையைக் கடைப்பிடித்தல், கோபம் தவிர்த்தல்.  

 

இதே பத்து விசயத்தை வள்ளுவரும் நீட்டமா  சொல்லிக்கிறாரு. வள்ளுவர்  சொன்னதையும் கொரோனா மாதிரி ஒளிச்சுக் கட்டணுமா?

 

நீ மேடைல பேசுனதுல காமன் சென்சு இடி இடின்னு இடிக்குது. அதை மொதல்ல தெரிஞ்சிக்க. சனாதனம்னு மட்டும் இல்லை, எல்லா மதங்கள்ளயும் நிலையான கொள்கை, கோட்பாடுன்னு சிலது சொல்லி வச்சிகிறாங்க. அதை எல்லாம்  பத்து அம்பது  வருசத்துக்கு ஒரு தபா மாத்தணும்னு அந்த மதத் தலைவருங்க யாரும் இப்பவும் சொல்றதில்ல. அந்த அந்த மதத்துல இருக்கவங்க காலத்தை ஒட்டி, அவுங்க விருப்பப்படி, சிலதை கடைப்பிடிக்கலாம், கடைப் பிடிக்காம இருக்கலாம். அந்த சுதந்திரம் நம்ம அரசியல் சட்டத்துல எல்லா மதத்துக் காரவுங்களுக்கும் இருக்கு. சனாதனம்ற இந்து மதமோ வேற மதமோ, யாருக்கும் கட்டாயம் இல்லை. அப்பறம் திமுக-க்கு என்னபா பிரச்சனை? நடத்துற வேலைய நடத்திக்கினு  “வர்றது வரட்டும்”னு அதுல முனைப்பா இருந்தா போதுமே கண்ணு? சொகம்மா இருக்கலாமே?

 

நான் முன்னமே ஒண்ணு சொல்லிக்கிறேன் – அதாவது, சனாதனம் பத்தி நீ மேடைல பேசப் பேச நீ பெனாத்துறது ஏறிக்கினே போச்சு. அதுக்கு இன்னும் கூட ப்ரூப் இருக்கு. பேசிப் பேசி கடசீல நீட் தேர்வு விசயத்தைக் கைல எட்துகினு நீ சொன்னது இதான்:

 

நாமெல்லாம் படிச்சிரக் கூடாதுங்கறது சனாதனக் கொள்கை. அதுக்கு ஒரு சிறந்த உதாரணம் நீட் தேர்வு ....... தேர்தல் பிரசாரத்துல நான் வாக்குறுதி குடுத்தேன். கண்டிப்பா நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதுக்கான முழு முயற்சி எடுக்கப்படும்னு சொன்னேன். இந்த நீட் தேர்வை ரத்து செய்யணும்னா இந்த ஒரு உதயநிதி பத்தாது. சமுதாயத்து மக்கள் நீங்க ஒவ்வொருவரும், மாணவர்கள் இளைஞர்கள் ஒவ்வொருவரும் உதயநிதியா மாறி நீங்க நீட் தேர்வு போராட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக்கணும். சனாதனம் வீழட்டும். திராவிடம் வெல்லட்டும்.”

 

உதய் கண்ணு! எங்க ஆரமிச்சி எங்க வந்துட்ட பாரு! ஆனாலும் நீட் மேட்டர்ல இத்தினி தமாஸ் கூடாதுபா!

 

உனக்கே தெரியும் - கடசீல சனாதனம் விளாது, திராவிடமும் ஜெயிக்காது. ஆனா கல்லா கட்றவன் கட்டிக்கினே இருப்பான். அவ்ளதான?

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai