Tuesday, 5 September 2023

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: உதய் கண்ணு! நீ என்னாத்துக்கு சனாதனம் பத்தி பேசிக்கிற?

 

-- ஆர். வி. ஆர்

 

உதய் கண்ணு! நீ என்னாத்துக்கு சனாதனம் பத்தி பேசிக்கிற? பெரிய விசயம்லாம் உன் தலைக்கு மேலதான்  போவும் கண்ணு!

 

எதுக்குபா ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ன்ற கூட்டத்துக்குப் போயி, பெரிய பெரிய விசயம் பத்திப் பேசி, பேரை ரிப்பேர் பண்ணிக்கிற?

 

நாபகம் இருக்கா, நீ என்ன பேசினன்னு?

 

“சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா, இதை எல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும்.”

 

“நிலையானது, மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாதது அப்படிங்கறதுதான்  சனாதனத்துக்கு அர்த்தம்.”

 

“எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவானதுதான் கம்யூனிஸ்ட் இயக்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும்.”

 

“திராவிட இயக்கமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் வந்த பின்னாடிதான் மக்களுக்கு திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் சொல்லப் பட்டது”

 

எப்பிடிப்பா? சனாதனம் பத்தி நீ பேசிக்கினே போக, உன் பேத்தலும் கூடிக்கினே போவுது?  

 

கம்மூனிஸ்டு, திராவிட சிகாமணிங்க தமிள் நாட்ல வளந்துக்கினே இருக்க, அல்லாரும் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலைன்னு பட்சாங்க, தெரிஞ்சிகினாங்களா?  இப்ப இருக்கற உன் கட்சி அமைச்சருங்க, மாவட்ட செயலருங்க எத்தினி பேருக்கு சிலப்பதிகாரம் மணிமேகலைல வர்ற ஒரு ஆளு பேர் தெரியும், சொல்லு?  

 

இன்னும் கவனி. வள்ளுவருக்கு திமுக சிலை வெக்கிறதுக்கு முன்ன, ரண்டாயிரம் வருசமா திருக்குறள் எப்பிடி மக்கள் மத்தில இருந்திச்சு? அப்பலாம் கம்மூனிஸ்டு, திராவிடத் தலைவர் யாரும் இல்லியே? தமிள்த் தாத்தான்னு சொல்றமே, அந்த  உ. வே சாமிநாத ஐயரு ஊர் ஊரா ஓலைச்சுவடியைத் தேடி சேகரிச்சு மணிமேகலை, சிலப்பதிகாரம்னு பல காப்பியங்களை அச்சுல ஏத்துனாரு.  அவுருக்கு தமிள் ஆசான் யாருன்ற? திருவாடுதுறை  ஆதீனத்துல இருந்த மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இவுங்க ரண்டு பேரும் கம்மூனிஸ்டா, இல்லை திராவிடக் கொளுந்தா?

 

உன் கட்சிக்காரவுங்க, தமிள்நாட்டுல உன் கூட்டணிக்  கட்சி ஆளுங்க, இவுங்களுக்கு  “நிலையானது, மாற்ற முடியாதது, கேள்வி கேட்க முடியாதது” அப்பிடின்றது எது?  அம்பது வருசத்துக்கு உங்க தாத்தா கருணாநிதி, இப்ப உங்க அப்பா மு. க.  ஸ்டாலின், அடுத்து லைன்ல நிக்கிற நீ,  அடுத்தது திமுக போஸ்டர்ல இப்பவே போஸ் குடுக்கற உன் பையன், இவுங்கதான் கட்சியை கைக்குள்ள வச்சிருப்பாங்க, இவுங்கதான்  நிலையானவுங்க, மாத்த முடியாதவுங்க, யாரும் கேள்வி கேக்க முடியாதவுங்க.  நெசந்தான?

 

என்ன சொன்ன – எல்லாத்தயும் மாத்தணும், எதுவும் நிலையானது இல்லியா? கணவன் மனைவி அன்பா இருக்கறது, கொளந்தைங்களை பொறுப்பா வளக்கறது, பொய் பித்தலாட்டம் பண்ணாம அரசியல் பண்றது, இதுவும் நிலையானது இல்லை, இதையும் மாத்தணும் அப்பிடின்றயா?

 

பொதுவா இந்து மதத்துக்கு, அதோட வாள்வியல் முறைகளுக்கு, சனாதன தர்மம் அப்பிடின்னு ஒரு பேர் இருக்குபா. அது பெரிய கடல். அதைப் பத்தி தெரியணும்னா, நீ முதல்ல கம்பூட்டர் முன்னல உக்காரு. இன்டர்நெட் கனிக்சனை வைச்சு, கம்பூட்டர்ல நீ ஒண்ணு பாத்துக்கலாம். அதாவது, உலகத்துல எல்லா விசயம் பத்தி வண்டி வண்டியா எளுதிருக்கற ஒரு எடம் இருக்கே – அது பேர் என்ன,  விக்கல் பீடாவா? இல்லை இல்லை, விக்கி பீடியா! – அதுல சனாதனம் பத்தியும் கொஞ்சம் படிச்சிக்க.  புத்தகம் படிக்கிற பளக்கம் இருந்தா மேலயும் படி.  விசயம் தெரிஞ்சவன் கிட்டயும் கேளு. அப்ப சனாதனம்னா என்னன்னு உனக்கு தம்மாத்தூண்டு வெளங்கும். அப்பிடியும் வெளங்காட்டி, அதெல்லாம் உனக்கு ஆவாதுன்னு விட்டுரு. அதான் உனக்கு பொருத்தம் கண்ணு.

 

சனாதனம்னா என்னன்னு பெரியவுங்க, படிச்சவுங்க சொல்ல கொஞ்சம் கேட்ருக்கேன். அதை உனக்கு  சொல்லட்டா?

 

“சனாதனம்றது சம்ஸ்ருத வார்த்தை. சுருக்கமா, சனாதனம்னா நீடிச்சு நெலைச்சு நிக்கிற வாள்க்கைக் கோட்பாடுன்னு வச்சிக்கலாம். மனுசனோட நல்ல வாள்க்கைக்கு, நிம்மிதிக்கு, அது முக்கியம், அதுனால அந்த விசயம் நீடிச்சு நெலைச்சு நிக்கும், நிக்கணும் அப்பிடின்னு சொல்லிருக்கு. ‘உண்மையப் பேசு, பொய் பேசிக்காத, இதமாப் பேசு, தேவையில்லாததை பேசாத’ அப்பிடின்னு சனாதனம் எல்லாருக்கும் சொல்லுது”.

 

இதெல்லாம் எல்லா காலத்துக்கும் நமக்குத் தேவைதான கண்ணு? இதயே  உள்ளார வச்சு, கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு திமுக சொல்லுது. காலா காலத்துக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்றதை எல்லா மனுசனும் ஏத்துக்கணும். டெங்கு மாதிரி அதையும் அளிப்பேன், ஒளிப்பேன்னு பேசுவியா நீ?

 

பாத்துக்க – உன் உளறலைக் கேட்ட ஒரு படிச்சவரு, பெரிய மனுசன், சனாதனம்னா என்னன்னு இப்ப எடுத்து சொல்லிக்கிறாரு. சனாதனத்தோட பத்து அம்சங்கள் இதுன்னு சம்ஸ்ருதத்துல சுருக்கமா ஒரு இடத்துல சொல்லி  வச்சிருக்குன்னு புட்டு புட்டு வெக்கிறாரு. நீ கூட வாட்ஸ்-அப்புல பாத்துக்க. அந்த பத்து அம்சம் இதான். இந்தா, எண்ணிக்க. 

 

பொறுமை, சகிப்புத் தன்மை அல்லது பிறரை மன்னித்தல், கட்டுப்பாடு, திருடாமலும் பிறர் பொருளை அபகரிக்காமலும் இருத்தல், சமய ஒழுக்க வாழ்வு, புலனடக்கம், விவேகம், கல்வி, உண்மையைக் கடைப்பிடித்தல், கோபம் தவிர்த்தல்.  

 

இதே பத்து விசயத்தை வள்ளுவரும் நீட்டமா  சொல்லிக்கிறாரு. வள்ளுவர்  சொன்னதையும் கொரோனா மாதிரி ஒளிச்சுக் கட்டணுமா?

 

நீ மேடைல பேசுனதுல காமன் சென்சு இடி இடின்னு இடிக்குது. அதை மொதல்ல தெரிஞ்சிக்க. சனாதனம்னு மட்டும் இல்லை, எல்லா மதங்கள்ளயும் நிலையான கொள்கை, கோட்பாடுன்னு சிலது சொல்லி வச்சிகிறாங்க. அதை எல்லாம்  பத்து அம்பது  வருசத்துக்கு ஒரு தபா மாத்தணும்னு அந்த மதத் தலைவருங்க யாரும் இப்பவும் சொல்றதில்ல. அந்த அந்த மதத்துல இருக்கவங்க காலத்தை ஒட்டி, அவுங்க விருப்பப்படி, சிலதை கடைப்பிடிக்கலாம், கடைப் பிடிக்காம இருக்கலாம். அந்த சுதந்திரம் நம்ம அரசியல் சட்டத்துல எல்லா மதத்துக் காரவுங்களுக்கும் இருக்கு. சனாதனம்ற இந்து மதமோ வேற மதமோ, யாருக்கும் கட்டாயம் இல்லை. அப்பறம் திமுக-க்கு என்னபா பிரச்சனை? நடத்துற வேலைய நடத்திக்கினு  “வர்றது வரட்டும்”னு அதுல முனைப்பா இருந்தா போதுமே கண்ணு? சொகம்மா இருக்கலாமே?

 

நான் முன்னமே ஒண்ணு சொல்லிக்கிறேன் – அதாவது, சனாதனம் பத்தி நீ மேடைல பேசப் பேச நீ பெனாத்துறது ஏறிக்கினே போச்சு. அதுக்கு இன்னும் கூட ப்ரூப் இருக்கு. பேசிப் பேசி கடசீல நீட் தேர்வு விசயத்தைக் கைல எட்துகினு நீ சொன்னது இதான்:

 

நாமெல்லாம் படிச்சிரக் கூடாதுங்கறது சனாதனக் கொள்கை. அதுக்கு ஒரு சிறந்த உதாரணம் நீட் தேர்வு ....... தேர்தல் பிரசாரத்துல நான் வாக்குறுதி குடுத்தேன். கண்டிப்பா நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதுக்கான முழு முயற்சி எடுக்கப்படும்னு சொன்னேன். இந்த நீட் தேர்வை ரத்து செய்யணும்னா இந்த ஒரு உதயநிதி பத்தாது. சமுதாயத்து மக்கள் நீங்க ஒவ்வொருவரும், மாணவர்கள் இளைஞர்கள் ஒவ்வொருவரும் உதயநிதியா மாறி நீங்க நீட் தேர்வு போராட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக்கணும். சனாதனம் வீழட்டும். திராவிடம் வெல்லட்டும்.”

 

உதய் கண்ணு! எங்க ஆரமிச்சி எங்க வந்துட்ட பாரு! ஆனாலும் நீட் மேட்டர்ல இத்தினி தமாஸ் கூடாதுபா!

 

உனக்கே தெரியும் - கடசீல சனாதனம் விளாது, திராவிடமும் ஜெயிக்காது. ஆனா கல்லா கட்றவன் கட்டிக்கினே இருப்பான். அவ்ளதான?

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

5 comments:

  1. கட் அண்ட் ரைட்டு கோவிந்து எல்லா உண்மையையும் பிட்டு பிட்டு வைக்கிறாரு.அவர் சொல்வதெல்லாம் சரியாத்தான் இருக்கு. ஜனங்களுக்குத் தெரியணுமே.

    ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

    சித்தானந்தம் 

    ReplyDelete
  2. கோவிந்து !
    நீ வந்தா,
    ஆங்!
    வெங்கலக் கடையில ஆனை பூந்தா மாதிரி கீது!

    ReplyDelete
  3. சமர்த்து கோவிந்து. சரியாகத் தான் சொல்கிறாய்.

    ReplyDelete
  4. கரீட்ட பேசின கோவிந்து. இந்த கசமலா கபோதிக்கு புரிஞ்சி மாதிக்கினா சரி, இல்லேன்னா பெருசா போவும். சொல்லிபுட்டேன்

    ReplyDelete
  5. சூப்பர்! சூப்பர்! சூப்பரு!!

    ReplyDelete