Wednesday, 25 February 2026

கேள்வி-பதில் (25.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: 'இந்த சட்டசபைத் தேர்தல், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்" என்று தவெக தலைவர் விஜய் வேலூரில் பேசியிருக்கிறாரே?

 

பதில்: விஜய் பிதற்றுகிறார். ஸ்டாலினைத் தீவிரமாக எதிர்த்து வரும் அதிமுக-வுக்கும், பாஜக-வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தேர்தல் களத்தில் மதிப்பே இல்லையா?

 

இன்னொன்று: கடந்த பல தேர்தல்களில் திமுக-வுடன் ஒரு கூட்டணிக் கட்சியாக அதன் கூடவே வரும் காங்கிரஸை விஜய் ஏன் எதிர்க்கவில்லை? திமுக எனும் 'தீய சக்தி'க்குப் பக்கபலமாக இருந்து வரும் காங்கிரஸ், இந்தத் தேர்தலில் விஜய் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்று அவர் காத்திருப்பதால், காங்கிரஸை விஜய் தற்காலிகமாக மன்னித்து விட்டாரா?

 

விஜய்யின் மேடைப் பேச்சில் முன்பைவிட இப்போது சினிமாத்தனம் கொஞ்சம் - கொஞ்சம் தான் - குறைந்திருக்கிறது. ஓட்டைகள் கொஞ்சமும் குறையவில்லை.

 

 

2. கேள்வி: தங்கள் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பதிற்கும் கருணைத் தொகையாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஒரு சட்டசபைத் தேர்தல் வாக்குறுதியை அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி புதிதாக அறிவித்துள்ளாரே?

 

பதில்: அவர் அப்படி அறிவித்த பின், "திமுக அரசு ஐயாயிரம் ரூபாய் வழங்கியது சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. எதிர்க் கட்சிகள் நிலைகுலைந்து போய் உள்ளன" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

 

மிகுந்த ரொக்கத்தையும் இலவசங்களையும் பல தரப்பட்ட மக்களுக்குத் தங்கள் அரசு வழங்கும் என்று அறிவித்திருக்கும் திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும், வரும் சட்டசபைத் தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போவது நல்லது. அப்படியானால் வாக்காளர்கள் அந்த இரு கட்சிகளும் தனியாக ஆட்சி செய்வதை அங்கீகரிக்கவில்லை என்றாகும். அப்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால், அதற்குத் தலைமை வகிக்கும் திமுக-வோ அதிமுக-வோ அளித்த தேர்தல் வாக்குறுதிகள் - அவற்றின் இலவச அறிவிப்புகள் - கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் ஆகாது, அவற்றை அந்தக் கூட்டணி அரசு அப்படியே முழுதாகச் செயல்படுத்த தார்மீக அவசியமும் இல்லை. இந்த வழியிலாவது திமுக-வையும் அதிமுக-வையும் பிடித்த இலவசப் பைத்தியம் தெளியட்டும். இந்த நல்லெண்ணம், தவெக-வின்  பைத்தியக்கார தேர்தல் வாக்குறுதிகளுக்கும் பொருந்தும்.

 

 

3. கேள்வி: ஒரு அரசியல் கட்சியானது தீய கட்சி, குறுகலான கண்ணோட்டம் உடைய கட்சி என்று சொன்னால், அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுகிற மக்கள் அப்படியானவர்களா?

 

பதில்: இல்லை.

 

ஒரு அரசியல் கட்சி தனது பேச்சினாலும் செயலினாலும், ஓரளவு நடுநிலை எண்ணம் கொண்ட பொதுமக்கள் பலரை ஈர்க்க முடியும். பின்னாளில் இன்னொரு கட்சி, தனது மாறுபட்ட பேச்சினாலும் செயலினாலும் அந்த மக்களில் பலருக்கு மனமாற்றம் ஏற்படுத்தி அவர்களைத் தனது பக்கம் ஈர்க்க முடியும். அந்த அந்தக் கட்சிகளின் தலைமைப் பண்புகளுக்கு,  யுக்திகளுக்கு, இதில் பெரிய பங்கு உண்டு. சரியான கூட்டணி சேர்க்கைகளும் இதில் வேலை செய்யும்.

 

ஒரு தீய கட்சியின் தலைவர்களைப் போல், கெடுதல் செய்து கொழிக்க நினைப்பவர்கள் அல்ல பொதுமக்கள். அவர்கள் கெடுதல் செய்யப்பட்டு ஏமாற்றப் படுகிறவர்கள். அந்த மக்கள் மாற்றி ஓட்டுப் போட முடியும் - படிப்பறிவு பெரிதாக இல்லாது, அரசியல்வாதிகளின் வஞ்சகத்திற்கு அவ்வப்போது இரையாகும் மக்கள் உள்ள நம் நாட்டிலும். ஆகையால் நமது ஜனநாயகத்தின் மீது இறுதி நம்பிக்கை வைக்க முடிகிறது. அந்த நம்பிக்கை, 2014-ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் தோற்றபோது பளிச்சென்று நிறைவேறியது, அங்கு இன்னும் நிலைநிற்கிறது.

 

 

4. கேள்வி: "ராமாயணம் மஹாபாரதம் போன்ற கதைகளை, ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களாக மக்கள் திரும்பத் திரும்பப் படிக்கிறார்கள், அதே கதைகளைப் படிக்கிறார்கள்.

ராமாயணம் மஹாபாரதம் போல, ஸ்டாலின் அரசின் காரியங்களை மக்களிடம் நாங்களும் திரும்பத் திரும்பச்  சொல்கிறோம்" என்று அமைச்சர் கே.என். நேரு பொதுமக்கள் முன் நின்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: ராமனின் வீரத்தையும் உயர் பண்புகளையும் மையமாக வைத்து சொல்லப் படுவது ராமாயணம். பாண்டவர்கள் தம் பக்கம் இருந்த தர்மத்திற்காகப் போராடியதை, அவர்கள் இறுதியில் வென்றதை, விவரிக்கும் கதை மஹாபாரதம். அவை இரண்டும் மக்களுக்குத் திரும்பத் திரும்ப சொல்லப்படுவது, மக்கள் அவற்றைப் படிப்பது, நல்லது.

 

ராவணன் அணி போன்ற ஒரு அக்கிரமக் கட்சி, "வெல்வோம் அதர்மமாக" என்பதை ஒரு தேர்தல் முழக்கமாகத் தன் மனதிற்குள் சொல்கிற கட்சி, ராமாயண மஹாபாரதக் கதைகளைப் பொதுமக்களிடம் குறிப்பிடவே கூடாதே? சரி, சரி. தேர்தல் ஜன்னியில் ஒருவர் வேண்டாததையும் பேசுவாரே!

 


5. கேள்வி: "உலகில் எட்டு போர்களை நான் நிறுத்தி இருக்கிறேன்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் பேசி வருகிறாரே?

 

பதில்: அமைதிக்கான நோபல் பரிசு மீது டிரம்புக்கு நேர் கண், ஓரக் கண், இரண்டும் உண்டு. அந்த நோபல் பரிசைப் பெறுவது, இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான தகுதி மாதிரி என்று டிரம்ப் நினைக்கிறார். அந்தப் பரிசு கிடைக்க, எப்படியோ எட்டு போட்ட மாதிரிக் காண்பித்தால் மட்டும் போதாது!


பகுதி 59 // 25.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment