Wednesday, 18 February 2026

கேள்வி-பதில் (17.02.2026)

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையைக் கொடுக்க வேண்டும். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம்" என்று திமுக-வை நோக்கிக் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேசி இருக்கிறாரே?

 

பதில்: காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தேய்ந்து போன நிலையில், மற்ற பல மாநிலங்களிலும் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு சரிந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்களைத் திமுக பெரிதாக மதிக்காது.

 

சுதந்திர சமூகத்தில் ஒருவருக்கான மதிப்பு என்பது அவர் தானாக சம்பாதித்துக் கொள்ளும் சக்தி. அதன் விளைவாக அடுத்தவர் அந்த சக்தியை அங்கீகரிப்பார். இந்தப் பொது நியதியை - அதுவும் ஒருவர் காலை மற்றவர் வாரும் அரசியல் உலகில் - காங்கிரஸ் உணர்ந்து தனக்கான மரியாதையை வெல்ல வேண்டும். மக்கள் செல்வாக்கைப் பெற வாய்ப்புள்ள இளைஞர்கள் கட்சிக்குள் முன்னேற, தலைவர்களாக மத்தியிலும் மாநிலங்களிலும் பரிணமிக்க, முதலில் காங்கிரஸ் வழி செய்துகொடுக்க வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் மிஞ்சி மிஞ்சி செய்யத் தக்கது: முக்கல், முனகல், பொருமல்.

 

 

2. கேள்வி: "வரும் சட்டசபைத் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாட்டு அணிக்கும் நடக்கும் போட்டி. வெல்லப் போவது டெல்லி அணியா, தமிழ்நாட்டு அணியா என்பது கேள்வி" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?


பதில்:
'திராவிடம்' என்று மர்ம அர்த்தத்தில் முழங்கும் திமுக, தமிழகத்தில் மட்டும் பிரதானமாக இயங்குகிறது. தேசியத்தைப் போற்றும் பாஜக-வின் மத்தியத் தலைமை டெல்லியில் இருக்கிறது, தற்போது அக்கட்சி தமிழகத்திலும் ஸ்திரமாக நின்று வளர்கிறது. திமுக-வை மொத்தத் தமிழக அணியாகக் கற்பனை செய்து, தமிழக பாஜக-வை டெல்லி அணி என்று அந்நியப்படுத்திப் பிதற்றுகிறார் ஸ்டாலின்.

 

பாரதத்திலிருந்து தமிழகத்தைத் தனிமைப்படுத்த நினைக்கும் கட்சி திமுக. அதைத் தீர்க்கமாக எதிர்க்கிற கட்சி பாஜக என்கிற உண்மை ஸ்டாலின் உள்மனதில் கசந்து அதுவே தொண்டை வரை வந்து அவர் அடக்கிவைத்த வார்த்தைகள்: 'வெல்லப் போவது தமிழ்நாட்டு அணியா, இந்திய அணியா?'

 

 

3. கேள்வி: தவெக தலைவர் விஜய், திமுக அரசின் முறைகேடுகளை எதிர்க்க வல்லவராகத் தெரிகிறார். மேடைகளில் அவ்விதம் பேசுகிறார். அவர் கட்சியை விட, பாஜக எந்த வகையில் சிறந்தது?


பதில்:
ஆட்சியில் முறைகேடுகள் செய்த திமுக-வை, அந்தக் காரணங்கள் சொல்லி எதிர்ப்பது எந்த எதிர்க் கட்சிக்கும் சுலபம். இதுவரை எங்கும் ஆட்சியில் அமராத தவெக-வுக்கு அது வெகு சுலபம். ஆனால் மோடியின் கீழ் மத்தியில் 11 ஆண்டுகளுக்கு மேல் ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்து, தேசத்திற்கு அசாத்திய நன்மைகள் செய்து உலகளவில் பாரதத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்த பாஜக-வை எதிர்க்கிறார் விஜய். ஊழல் செய்யாத, மத்திய அரசில் சாதனைகள் புரிந்த, கட்சியையும் விஜய் எதிர்த்தால் என்ன அர்த்தம்?


இன்னொன்று. மத்திய அரசு நிர்வாகத்தில் மெகா முறைகேடுகள் நிகழ்த்திய கட்சி, காங்கிரஸ். தனது தலைமையிலான மத்தியக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக-வை, பகாசுர முறைகேடுகள் புரிய அனுமதித்து அரவணைத்த கட்சி, காங்கிரஸ். அந்தக் காங்கிரஸ் கட்சியுடன் தமிழக சட்டசபைத் தேர்தலுக்காகக் கூட்டணி வைக்கக் காத்திருக்கிறார் விஜய். ஊழல் காங்கிரஸுடன் கைகோர்த்து, காங்கிரஸ் அரவணைத்த திமுக-வின் ஊழலை எதிர்ப்பாரா விஜய்?


விஜய் கட்சி, பாஜக மாதிரியானது அல்ல. விஜய்க்கு ஊழல் எதிர்ப்பு பிரதானம் அல்ல. முதல் அமைச்சர் ஆவது மட்டும்தான் அவர் குறி. ஆட்சியில் அமர்ந்தால் விஜய் என்ன செய்வார், எதை அனுமதிப்பார், எதற்குப் பாராமுகமாக இருப்பார் என்பது தெரியாது.

 

 

4. கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தலுக்காகக் காங்கிரஸ் கட்சியோடு தேர்தல் கூட்டணி வைக்க முயலும் தவெக, ஊழலோடு கை கோர்க்க நினைக்கிறது என்றால் அதிமுக-வுடன் தேர்தல் கூட்டணி அமைத்த பாஜக அதைச் செய்தே விட்டது என்று அர்த்தமில்லையா?


பதில்:
தவெக காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால், கூட்டணிக்குள் எப்போதும் தவெக-வின் கை ஓங்கி இருக்கும். அதுதான் இன்றைய நிலை. எதிர்காலத்தில் அதில் மாற்றம் ஏற்படுகிற மாதிரியான தலைமை காங்கிரஸ் கட்சியில் இல்லை.

 
பாஜக தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தாலும், அதை ஒரு யுக்தியாக வைத்து எதிர்காலத்தில் பாஜக மாநிலத்தில் தனியாக வலிமை பெறும், மாநிலத்தில் நல்லாட்சி அமைக்க வழி கிடைக்கும். 'எங்க பாட்டன் சொத்தாக' மட்டும் தற்போது நடத்தப்படும் அதிமுக போகப் போக நலிவுறும். அதுதான் இன்றைய நிலை.

 

செஸ் ஆட்டம் மாதிரி, தனது நகர்வுகளில் ஒரு தற்போதைய சமரசம் செய்துகொண்டு தமிழகத்தை மீட்டு எதிர்காலத்தில் மாநிலத்தில் நல்லாட்சி வழங்கும் பெரும் வெற்றியைக் கணக்கிடுகிறது பாஜக. தவெக செய்ய நினைப்பது வேறு, பாஜக செய்திருப்பது வேறு.

 


5. கேள்வி: வீடுகளில் விளக்கேற்ற நாம் தனியாகப் பயன்படுத்தாத எண்ணைக்கு, ஏன் விளக்கெண்ணை என்ற பெயர்? அந்தப் பெயரில் விளக்குக்கு என்ன வேலை?


பதில்:
அது விளக்க முடியாத விளக்கு!


பகுதி 52 // 17.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 


No comments:

Post a Comment