|
கேள்வி-பதில்
|
|
1. கேள்வி: பாஜக
தலைவர் அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ் என்ற
தலைப்பில் வெளியிட்ட சில தகவல்களுக்காக அவர் மீது திமுக எம்.பி-யான டி.ஆர்.பாலு
கிரிமினல் அவதூறு வழக்குப் போட்டிருக்கிறார். இது பாலுவுக்கு எந்த வகையில் பயன்
தரும்?
பதில்: எந்த வகையிலும் பயன் தராது.
அண்ணாமலை மீது அவதூறு வழக்குப் போட்டதால் டி. ஆர். பாலு என்ன
சொல்ல நினைக்கிறார்? பாலு இந்த வழக்கைப்
போடாமல் இருந்தால், அவர் மீது அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று பொதுமக்கள் நினைப்பார்கள், ஆனால்
வழக்கைப் போட்டுவிட்டால் பாலு அப்பழுக்கற்றவர் என்று அதே மக்கள் நினைத்து
விடுவார்களா?
இந்த வழக்கின் முடிவு என்ன ஆனாலும் பாலு பாலுதான், அண்ணாமலை அண்ணாமலைதான். ஒரு அரசியல்வாதியாக, பாலு
பலே கில்லாடி; வழக்குப் போட்டவராக, படு
அசடு.
|
|
2. கேள்வி: திமுக
எம்.பி-யான டி.ஆர். பாலு அண்ணாமலை மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், அண்ணாமலையே பாலுவைக் குறுக்கு
விசாரணை செய்து வருகிறார். பதில்கள் அளிக்கும் பாலு, "எனக்கு 1.46 கோடி ரூபாய் கடன் உள்ளது. எனக்குக் கடன் தந்த
நிறுவனத்தின் உரிமையாளர் என் மகனா என்று கேட்டால், அது
எனக்குத் தெரியாது" என்று சொல்கிறாரே?
பதில்: 'டாடா
கம்பெனியில் வேலை செய்யலாம், டி.வி.எஸ் அல்லது பஜாஜ்
கம்பெனி பைக் வாங்கலாம்' என்று சாதாரண மக்களே
நினைக்கிறார்கள். இரண்டு கப்பல் வாங்கத் தெரிந்த பாலுவுக்கு, தான் கடன் கேட்ட நிறுவனத்தின் உரிமையாளர் தன் மகனா இல்லையா என்று
தெரியவில்லையா?
போகட்டும். தனக்கு ஓட்டுப் போட்டவர்கள் தமிழக மக்கள் என்பதையாவது
பாலு கண்டறிந்து, கப்பல் வாங்குவதில் அவர் காண்பித்த
ஆழ்ந்த அக்கறையை அந்த மக்கள் நலனிலும் செலவிடலாம்.
|
|
3. கேள்வி: "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசு. அதற்குத் திமுக சொந்தம்
கொண்டாடுவதா?" என்று சட்டசபையில் அதிமுக தலைவர்
எடப்பாடி பழனிசாமி ஆவேசம் காட்டி இருக்கிறாரே?
பதில்: இதன் உண்மை நிலை ஒருபுறம் இருக்கட்டும்.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே,
"நாங்கள் மக்களுக்கு இதையும் அதையும் தூக்கிக் கொடுத்தோம்,
அள்ளித் தந்தோம்" என்று அரசுப் பணத்தை, அரசு சலுகைகளை, தாங்கள் காரண காரியமாக வழங்கியதைப்
பறை சாற்றுவார்கள். மக்களுக்குச் சுய கௌரவம் அளிக்கும் தரமான கல்வி, போதிய வருமானம், நல்ல இருப்பிடம், தூய்மையான குடிநீர் போன்றவை பரவலாகக் கிடைக்கத் திட்டமிட்டு வழிவகை
செய்ய மாட்டார்கள்.
குரங்குகள் ஆட்சி செய்தால் அவை தேங்காயைத் தின்றுவிட்டு, மிஞ்சிய தேங்காய் ஒட்டிய கொட்டாங்கச்சியை விநியோகம் செய்யும். தின்று தீர்த்தது தெரியாது. கொட்டாங்கச்சி பேசப்படும்.
|
|
4. கேள்வி: "தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்பதில்
தவறில்லை" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறாரே?
பதில்: ஒரு கூட்டணிக்
கட்சியாக, ஆட்சியில்
காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை என்றால், கேட்பது சரி
என்று அர்த்தம். கேட்பது சரி என்றால், திமுக கொடுக்க
மறுப்பது தவறு என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கிடைக்கும்
போது, மற்றொரு கூட்டணிக் கட்சி விசிக கைகட்டி ஓரமாக
நிற்காது, அப்போது விசிக-வுக்கும் ஆட்சியில் பங்கு
வேண்டும் என்று அர்த்தம்.
தன் கட்சிக்காக நினைத்ததைக் காங்கிரஸ் தோளில் நின்று திருமா சொல்லி
விட்டார் – ஆட்சியில் பங்கு கேட்டுத் திமுக-வுக்கு விசிக அழுத்தம் தராது என்று
அவர் அர்த்தமில்லாமல் சொல்லி வந்தாலும்.
|
|
5. கேள்வி: மணிசங்கர்
அய்யர், காங்கிரஸ் கட்சியை 'முட்டாள் கட்சி' என்று ஒரு பேட்டியில் விமர்சனம்
செய்துவிட்டு, "நான் இன்னும் காங்கிரஸில் தான்
உள்ளேன்" என்று அதே பேட்டியில் சொல்லி இருக்கிறாரே?
பதில்: மணிசங்கர் அய்யர் ஒன்றைப் படாரென்று பேசுகிறார். இன்னொன்றைப்
பூடகமாகச் சொல்கிறார். இரண்டுமே சரிதான்.
|
|
பகுதி 53 // 18.02.2026
|
|
- ஆர். வி. ஆர் –
Author: R. Veera Raghavan, Advocate,
Chennai
blog address: rvr-india.blogspot.com
email: veera.rvr@gmail.com
Username in Arattai: @veera_rvr
|
No comments:
Post a Comment