|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி:
"சில பேர், கமல் பேசுவது
புரியவில்லை என்பார்கள். அவர்களுக்குப் புரியாமல் இல்லை. புரிந்துகொள்ளக் கூடாது
என நினைக்கிறார்கள். மீடியா மைக் முன்பு புலம்பிக் கொண்டிருந்தவர்களை, இப்போது நாடாளுமன்ற மைக்கிலும் கமல் கமல் எனப் புலம்பவைத்து விட்டார்.
அதற்காக என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்" என்று
முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? பதில்: ஒருவருக்கும்
புரியாமல் கமல் நாடாளுமன்றத்தில் பேசியதை விமர்சிப்பவர்கள் குறித்து முதல்வர்
ஸ்டாலின் ஏதோ குத்தலாகச் சொல்ல வருகிறார். அதற்காக,
"மீடியா மைக் முன்பு புலம்பிக் கொண்டிருந்தவர்கள்",
"நாடாளுமன்ற மைக்கிலும் கமல் கமல் எனப் புலம்ப
வைத்துவிட்டார்" என்று ஸ்டாலின் ஏதோ சொல்கிறார் - ஸ்டாலின் பேசுவதும்
யாருக்குப் புரியுமோ! |
|
2.
கேள்வி: "நான் ஆளவேண்டும் எனக் கேட்பது
எனது உரிமை. எதற்காக மாநிலங்கள் பிரிக்கப் பட்டதோ,
அதன் அடிப்படையில், தாய் நிலத்தை நான்
ஆள்வது உரிமை. பிறர் ஆண்டு, நான் வாழ்வது
அடிமைத்தனம்" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியுள்ளாரே? பதில்: யாருக்கும் அவரவர்
தாய்மொழி உணர்வு, அவரவர்
பிராந்தியப் பற்று, இருக்கும். தமிழர்களிடம் உள்ள அந்த
இயல்பான உணர்வை, அந்தப் பற்றை, பிற
மொழியினருக்கும் பிற பிராந்திய மனிதர்களுக்கும் எதிராகப் பெரிய அளவில்
சித்தரித்து, தமிழர்களைப் பிற இந்தியர்களிடம் இருந்து
அந்நியப்படுத்தி, அதன் அடிப்படையில் அதிக சட்டசபைத்
தொகுதிகளில் வெல்ல நினைக்கிறார் சீமான். அதற்காக உணர்ச்சிபூர்வமாகப் பேசுவதில்
அவர் கில்லி. சீமான் என்ன சொல்கிறார் என்றால்: ஊழல் அடிப்படையில் அவர் திமுக, அதிமுக-வை
எதிர்பாராம். பாஜக-வின் டெல்லித் தலைமை தமிழர்களிடத்தில் இல்லை என்பதால்,
ஒட்டுமொத்த பாஜக-வையும் எதிர்ப்பாராம். அபாயகரமானவர். இன்னொன்று. சீமான் ஆட்சியில் அமர்ந்ததில்லை என்பதால், அவரது
பிற லட்சணங்கள் நமக்குத் தெரியாது. |
|
3.
கேள்வி: "பெரியகுளத்தில் டீக்கடை
வைத்திருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். அவரைச் சேர்மன், எம்.எல்.ஏ, முதல்வராக்கி
அழகு பார்த்த கட்சி, அதிமுக. அந்தக் கட்சிக்கு ஓ.பி.எஸ்
துரோகம் செய்துவிட்டார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு
பேட்டியில் சொல்லி இருக்கிறாரே? பதில்: துரோகம்
செய்தாரா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு மனிதர்
நாட்டுக்கு, மக்களுக்கு, சிறப்பாகப்
பணியாற்றுவார் என்று அவருக்குப் பதவிகளை, ஆட்சிப்
பொறுப்புகளை, அவர் கட்சி தரவேண்டுமா; அல்லது, அவரை வித விதமாக அழகு பார்க்கவேண்டும்
என்பதற்காக அவருக்குப் பதவிகள், பொறுப்புகள் தரப்பட வேண்டுமா? பதவிகளுக்கு, ஆட்சிப் பொறுப்புகளுக்கு, பெருமை சேர்க்கும் அரசியல்வாதிகள் திராவிட வழிக் கட்சிகளுக்கு
வேண்டாம். தலைமையின் குறிப்பறிந்து, தலைமையின் சுயநலக்
கட்டளைகளை நிறைவேற்றித் தலைமைக்குச் சேவகம் செய்கின்ற அரசியல்வாதிகள் தான்
அந்தக் கட்சிகளுக்குத் தேவை. பன்னீர்செல்வம், செல்லூர்
ராஜூ, இருவரும் அப்படியான அரசியல்வாதிகள். என்ன, ஜெயலலிதா காலத்தில் பன்னீர்செல்வத்துக்குப் பணிவோடு அதிர்ஷ்டமும்
அதிகமாக இருந்தது. |
|
4.
கேள்வி: 47 வருடங்கள் கழித்து கமல் ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து
நடிக்கும் புதிய திரைப்படத்தின் வீடியோ முன்னோட்டம் கலக்கலாக வந்திருக்கிறதே? பதில்: கமலும் ரஜினியும்
அரசியலில் தனித்தனியாகச் சொதப்பியவர்கள். அது நல்லது - அரசியல் அவர்களுக்குப்
பிடிபடாதது என்பதால். திரையில் அவர்கள் இணைந்து சிறக்கட்டும். அதுவும் நல்லது -
நடிப்பு அவர்களுக்குக் கைவந்தது என்பதால். |
|
5. கேள்வி:
ஒருவர் 'அட்டாச்டு' ஆக இருப்பதில் ஆனந்தமா, 'டீடாச்டு' ஆக இருப்பதில் ஆனந்தமா? பதில்: மற்றவர்
கொஞ்சம் அசடு என்று நினைத்து, இரு
தரப்பினரும் தமது வழியில் ஆனந்தமாக இருக்கிறார்கள். |
|
பகுதி 57 // 22.02.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment