|
1. கேள்வி: "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி
என்பதை முழுமுதல் கொள்கையாக ஏற்றுக் கொண்ட திமுக ஆட்சி, இந்தியாவுக்கே
வழிகாட்டும் முன்னெடுப்பைத் துவங்கி உள்ளது...... அனைத்து மாநிலங்களும் சுயாட்சி
பெற்றவையாக இருக்கவேண்டும். அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி
அரசாக, மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பது நம்
கொள்கை" என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இருக்கிறாரே?
பதில்: அரசியல் சட்டப்பிரிவு 370 முழு
உயிர்ப்போடு இருந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனுபவித்த
விசேஷ அந்தஸ்தும் விசேஷ உரிமைகளும் இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் தரப்பட
வேண்டும் - இல்லை, அதற்கும் மேலாக உரிமைகள் தரப்பட
வேண்டும் - என்கிறாரா ஸ்டாலின்? அவர் எண்ணப்படி, சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத்
துறை போன்ற மத்திய அமைப்புகள் ஒரு மாநிலத்தில் நிகழும் குற்றங்களை விசாரிக்கலாமா,
கூடாதா? கூடாது என்றால், அரசு கஜானாக் கொள்ளையர்கள் கும்மி அடிப்பார்களே?
இன்னொன்று. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது,
சாலைகள் பல்லிளிக்கின்றன, குடிநீருக்காக
ஆங்காங்கே மக்கள் காத்திருந்து குடம் சுமக்கிறார்கள். இதற்கான மாநில அரசுத்
துறைகளின் அவல நிலைக்கு, மத்திய அரசிடம் தங்கிவிட்ட
அதிகாரங்களா காரணம்?
அடுத்ததாக, ஸ்டாலின் கருத்துப்படி
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்
மத்தியில் அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அமைய வேண்டுமா,
அது மட்டும் ஒத்துவருமா?
சிந்தனை ஒரு இன்ஜின் என்றால், ஸ்டாலினிடம்
உள்ளது டப்பா இன்ஜின், டுபாக்கூர் இன்ஜின்.
|
|
2. கேள்வி: "விளையாட்டை விடப் பெரிய தியானம் இருக்க முடியாது. விளையாட்டை விட,
கவனக் குவிப்புக்கு உதவும் நல்ல யுக்தி இருக்க முடியாது"
என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?
பதில்: ஸ்டாலின்
விளையாட்டுத்தனமாகப் பேசுகிறார்.
தியானம் என்பது, ஆதி
காலத்திலிருந்து ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் தமது மன அமைதிக்காகவும், தமது செயல்பாடுகளில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆயத்தப் பயிற்சியாகவும்
மேற்கொள்ளும் வழி. ஒரு அம்சத்தில் இப்போது தியானம் என்பது கடவுள் நினைப்பைக்
கடந்து நின்று, எந்த மதத்தவரும், எந்த
தேசத்தவரும், தமது மனநலனுக்காக மேற்கொள்ளலாம் என்றாகி
விட்டது. அது யோகாவுக்கு இணையாகவும் பயன் தருகிறது. இருந்தாலும், ஏதாவது ஆதியில் துளி ஹிந்துமதம் சம்பந்தம் கொண்டிருந்தாலும் அதை நேராகவோ
மறைமுகமாகவோ தாழ்த்திக் கருத்து சொல்வது ஸ்டாலினுக்கு ஒரு குதூகல விளையாட்டு.
அதை ஆடியிருக்கிறார்.
|
|
3. கேள்வி: வருகின்ற
சட்டசபைத் தேர்தலுக்காக, திமுக கூட்டணியில்
தேமுதிக இணைந்து விட்டதே?
பதில்: பிரேமலதா தலைமையிலான தேமுதிக அவ்வாறு இணைந்தது எதிர்பாராதது
அல்ல. விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக அவ்வாறு இணைந்தது, அதுவும் இன்றைய திராவிட மாடல் திமுகவு-டன் கூட்டணி அமைத்தது, விஜயகாந்தின் தேசிய எண்ணத்தைப் போற்றியவர்களுக்குச் சற்று அதிருப்தி
தரும். இருந்தாலும், நல்லதை நோக்கி நடப்பவர்களுக்கு
எல்லாத் தடைகளையும் கடந்து செல்லும் பொறுமையும் முனைப்பும் அவசியம். அது
இந்தியாவில் ஒரு பிரதான கட்சியிடம் இருப்பது பற்றி நாம் திருப்தி கொள்ளலாம்.
|
|
4. கேள்வி: "மகளிருக்கு அரசு உரிமைத் தொகை அளிப்பது மக்களைக் கையேந்த வைக்கும்,
நாட்டைக் கடன்கார நாடாக்கும். நான் அதை எதிர்க்கிறேன். நான்
வந்தால் அதை ஒழித்து என் மக்களின் வருவாயைப் பெருக்குவேன்" என்று நாம்
தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறாரே?
பதில்: அவர் மனதில் அந்த
எண்ணம் இருப்பது உண்மை. அந்த எண்ணம் நல்லது, அர்த்தமுள்ளது.
ஆனால் ஒரு கட்சியின் தலைவர் அதைப் பட்டவர்த்தனமாக வெளியில் சொல்வது, ஆட்சி அமைப்பதற்கான அதன் வெற்றியைப் பாதிக்கும்.
திமுக-வை ஆட்சியிலிருந்து ஒரு கட்சி வெளியேற்ற நினைத்தால்,
அந்தக் கட்சி தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ தேர்தலில் திமுக
கூட்டணியை முதலில் தோற்கடிக்க வேண்டும். அந்தப் பெரிய நோக்கத்திற்குப் பழுது
ஏற்படுத்தும் ஒன்றைப் பேசாமல் இருப்பது விவேகம்.
ஆளுகின்ற ஒரு கட்சி, அப்பாவி மக்களைப் பாதி
பிச்சைக்காரர்களாக வைத்திருந்து அவர்களுக்கு இலவசங்களையும் ரொக்கத்தையும் அரசு
கஜானாவிலிருந்து கொடுத்து வந்தால், அந்த விநியோகத்தைப்
பலமாக மக்கள் மத்தியில் எதிர்த்துப் பேசி அந்தக் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற
முடியாது. அதைப் பற்றி எதிர் அணியினர் பொதுவெளியில் விரிவாகப் பேசாமல், அதைக் குறிப்பாக எதிர்க்காமல், மக்கள்
நம்பிக்கையைப் பெற்றுத் தேர்தலில் வென்றாக வேண்டும். அதுதான் ஜனநாயகம் தரும்
சாய்ஸ். அதைச் செயலாற்றுவது ஒரு கலை.
|
|
5. கேள்வி: "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று சுதந்திரப் போராட்ட
காலத்தில் மகாகவி பாரதி பாடினார். இதே பாணியில், இன்று
தமிழ்நாட்டின் ஒரு பிரதான அரசியல் கட்சி தனது செயல்பாடுகளை எவ்விதம் எண்ணிப்
பார்க்கும்?
பதில்: "நமக்குத் தொழில் கதை விடுதல், நாட்டைச் சுரண்டுதல்,
தேசியத்தில் சேராதிருத்தல்."
|
No comments:
Post a Comment