|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: ராஜ்ய
சபா எம்.பி கமல் ஹாசன், தாடி சகிதமாக அந்த
சபைக்குச் சென்று முதன் முதலில் பேசினார் - ஆங்கிலத்திலும் தமிழிலும். அவரைப்
பாராட்டிய கவிஞர் வைரமுத்து, "அன்புள்ள கமல் எம்.பி
அவர்களே! கன்னிப் பேச்சல்ல; காளைப்
பேச்சு.....நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது, தாடிச்
சிங்கத்தின் தமிழ் கேட்டும்; ஆங்கிலம் கேட்டும்..... காடு
அதிரட்டும், களிறே பிளிறு " என்றெல்லாம் எழுதி
இருக்கிறார். சிங்கம், களிறு, பிளிறு,
நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது, என்ற
பெரிய வார்த்தைகளுக்கு இங்கு என்ன அர்த்தம்? பதில்: பெரிய
அர்த்தம் ஒன்றுமில்லை. பரிதாபமான அர்த்தம் தான். ஈ.வெ.ரா தமிழை
இகழ்ந்து எழுதியதை ("தமிழ் படித்தால் பிச்சை கூடக் கிடைக்காது")
அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டி, அப்படியான மனிதரைத் திமுக-வினர் தொழுகிறார்கள் என்று விமர்சனம்
செய்தார். அமைச்சர் அவ்வாறு பேசியது 11 மாதங்கள் முன்பு.
அதை அரையும் குறையுமாகக் கேட்டிருந்த கமல் ஹாசன், முதன்முதலில்
ராஜ்ய சபாவில் பேசியபோது, நிர்மலா சீதாராமன் முன்பு
மேற்கோள் காட்டியது அவரது சொந்தக் கருத்து, ஈ.வெ.ரா-வுடையது
அல்ல, என்பது போல் பித்துக்குளித்தனமாக அமைச்சரை அந்த
அவையில் பரிகசித்தார். 'வெண்தாடி
வேந்தர்' எனப் பல அபிமானிகள் போற்றும் ஈ.வெ.ரா எழுதியதை -
அது அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எண்ணமாகச் சொன்னது போல் - இகழ்ந்த கமல்
ஹாசனைத் 'தாடிச் சிங்கம் ' என்று
சிலாகிக்கிறார் அசட்டு வைரமுத்து. அதோடு, ஈ.வெ.ரா எழுதிய
வரிகளை - அதை யார் சொன்னது என்றே அறியாமல் - நாடாளுமன்றத்தில் விளாசிய கமல்
ஹாசனை நோக்கி, "களிறே பிளிறு!" என்று
குதூகலிக்கிறார் வைரமுத்து. அதாவது, எதுவும் புரியாமல்
எதையும் அறியாமல் கமல் ஹாசன் தொடர்ந்து கோமாளித்தனமாகப் பிதற்றவேண்டும், கேவலப்பட வேண்டும், என்று வைரமுத்து கமல் ஹாசனை
வாழ்த்துகிறார். கவியே உளறு! கலைஞனே கேவலப்படு! |
|
2. கேள்வி: ஒரு
பாராட்டு விழாவில் கல்லூரி மாணவிகளிடையே பேசிய முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்தின் ஒரு வசனத்தை
நினைவுபடுத்தி, "கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.
கஷ்டப்படாம கிடைச்சா அது நிலைக்காது. கடின உழைப்பு வேண்டும்" என்று
மாணவிகளுக்கு அறிவுரை சொல்லி இருக்கிறாரே? பதில்: ஸ்டாலினின் மகன்
உதயநிதி ஸ்டாலின், அயராமல்
எவ்வளவு கஷ்டப்பட்டுத் திமுக எம்.எல்.ஏ ஆகிப் பின்னர் துணை முதல்வராக ஆனார்
என்பது தமிழகம் அறிந்தது. ஸ்டாலின் பேசிய பொன்னான வார்த்தைகளை உதயநிதியே மேடை
ஏறிச் சொல்லி இருந்தால் அதன் நம்பகத் தன்மை தகதகவென்று ஒளிரும். அப்போது
மேடையில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் பெருமையுடன் அமர்ந்திருந்தால்,
"கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது" என்ற ஸ்டாலின் அறிவுரை
இன்னும் பிரகாசிக்கும். |
|
3. கேள்வி: வரும்
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் படிவங்களைத் தங்கள்
கட்சியினருக்கு விற்பனை செய்யத் தேமுதிக பந்தல் அமைத்துத் தயாராக இருந்தும்
அவற்றை வாங்க அதிகம் யாரும் வராமல் போனது ஏன்,
எதனால்? பதில்: விஜயகாந்த்
நினைவைப் போற்றும் அவரது எண்ணற்ற ரசிகர்கள், அவரது அரசியலால் ஈர்க்கப் பட்டவர்கள், இன்றும்
உண்டு, ஆனால் அவர் தொடங்கிய தேமுதிக-வை வழிநடத்தும் அவரது
குடும்பத்தினர் மதில்மேல் பூனையாக நிற்பது, வழவழா கொழகொழா
அரசியல் செய்வது, விஜயகாந்த் அபிமானிகளை தயங்கச்
செய்கிறது. இன்னொன்று.
திமுக-வோடு அல்லது அதிமுக-வோடு அல்லது தவெக-வோடு கூட்டணி வைத்தாலும், அல்லது தனித்தே போட்டியிட்டாலும், அதில் எது
நடக்கும் என்று இப்போது தெரியாவிட்டாலும், தேமுதிக
வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட நாங்கள் தயார் என்று அந்தக் கட்சியினரை எண்ணச்
செய்யும் வசீகரத் தலைமை பிரேமலதாவிடம் இல்லை. |
|
4. கேள்வி: 'தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் எங்களுக்குப் பங்கு வேண்டும்' என்று தமிழக காங்கிரஸில் பல குரல்கள் பலத்து ஒலிக்கின்றன. ஆனால்,
"ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. அது
எங்களுக்கும் தெரியும், காங்கிரஸுக்கும் தெரியும்"
என்று திமுக தலைவர் ஸ்டாலின் இந்தியா டுடே பேட்டியில் இப்போது கூறி இருக்கிறார்.
திமுக ஏன் நிகழ்கால யதார்த்தத்தைப் பார்க்க மறுக்கிறது? பதில்: ஒரு பிரதான கட்சி
தலைமை தாங்கும் ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் நிர்வாகம் நேராகத்தான் நடக்கும்
என்றால், கூட்டாகத் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கத் துணை
செய்த முக்கிய கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில்
பங்களிப்பது நியாயம், அவசியம், என்று அந்தப் பிரதான
கட்சியின் தலைமை நினைக்கும். 'நமது நிர்வாகம் இப்படி அப்படி இருக்கும். எதுவோ
எங்கிருந்தோ பெறப்பட்டு எங்கேயோ போய்ச் சேரும், நாம்
நம்பிக்கை வைத்துள்ள நமது கட்சி அமைச்சர்களுக்கு மட்டும் சில விஷயங்கள் சிறிதளவு
தெரிந்தால் போதும், மற்ற கட்சியினரை அமைச்சரவையில்
சேர்த்தால் வேண்டாத விஷயங்கள் வெட்டவெளிச்சம் ஆகும், நமக்கும்
நஷ்டங்கள் ஏற்படும்' என்று அந்தப் பிரதான கட்சியின் தலைமை
நினைத்தால், அது பிற கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு
அளிக்கத் தயங்கும். திமுக முடிவாக என்ன கணக்குப் போடுகிறது - ஆட்சிப் பலன் ஆசைகள்
முக்கியமா, அல்லது
தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பது முக்கியமா - என்று
பார்க்க வேண்டும். |
|
5. கேள்வி: சூரியனிலிருந்து
பெறும் ஒளியைச் சந்திரன் பிரதிபலிக்கிறது. ஆனால் கவிஞர்களிடம் நிலவொளி பெயர்
பெறுகிறது, சூரிய ஒளி அல்ல. ஏன்
இப்படி? பதில்: தமிழகத்தில்
செயல்படுத்தப் படும் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, அவற்றைத் தன்னுடையதாகக் காண்பித்து மாநிலத்தில் பெயர் வாங்குகிறது திமுக
அரசு. நிலவொளி, கவிஞர்களின் போற்றுதலைப் பெறுவதும் அவ்வகை.
கவிதைக்குப் பொய் அழகு. அரசியலுக்குப்
பொய் அமிர்தம். |
|
பகுதி 49 // 11.02.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment