Sunday, 15 February 2026

கேள்வி-பதில் (15.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழக அரசின் "உங்க கனவைச் சொல்லுங்க" திட்டத்தின் கீழ், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கான தன் கனவை எப்படி விவரிப்பார்? சுருக்கமாகச் சொல்லவும்.

 

பதில்: உதயநிதி, இன்பநிதி.

 

 

2. கேள்வி: "போன மீட்டிங்ல நான் ஒரு பொலிடிகல் பாம் (political bomb) சொன்னேன். அதாவது, ஆட்சிலயும் பங்கு, அதிகாரத்திலயும் பங்குன்னு சொன்னேன். இப்ப அந்த பொலிடிகல் பாம் எல்லாக் கூட்டணிலயும் வெடிக்குது" என்று விஜய் பேசி இருக்கிறாரே?

 

பதில்: உண்மை. திமுக கூட்டணிக்குள், விஜய் போட்ட குண்டு வெடித்து, அதை ஒட்டி 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என்ற காங்கிரஸ் பிரமுகர்களின் கோரிக்கைச் சத்தம் பெரிதாக ஒலிக்கிறது. அதிமுக கூட்டணிக்குள், "கூட்டணியாகத் தேர்தலைச் சந்திப்போம், ஆட்சியை அதிமுக மட்டும் அமைக்கும்" என்று எடப்பாடி பழனிசாமி முதலில் உரத்து எழுப்பிய குரலை, மோடி மற்றும் அமித் ஷாவின் "என்.டி.ஏ ஆட்சி" முழக்கம் பெரிதாகவும், விஜய் குண்டு அடுத்ததாகவும், அமுக்கி வைத்து விட்டன.

 

 

3. கேள்வி: "தமிழகத்தில் திமுக அரசு கொண்டுவந்த மகளிர் உரிமைத் திட்டம் மட்டுமே தேர்தல் வெற்றியை உறுதிப் படுத்தும் என்று நம்புவது மூட நம்பிக்கை" என்று காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: 'தமிழகத்தில் திமுக-வுக்கு வால் பிடித்து மட்டும் காங்கிரஸ் அரசியல் செய்தால் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் வளரும் என்று நம்புவது மூட நம்பிக்கை' என்று அவர் சொல்வதாகப் பொருள் காண்க.

 

 

4. கேள்வி: "ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?

 

பதில்: யார் அதிமுக-வின் தலைவராக இருந்து இதைச் சொன்னாலும் அதற்குப் பெரிய மதிப்பும் நம்பகத் தன்மையும் கிடைக்காது என்பது வருத்தம் தரும் உண்மை.

 

அதிமுக-வை விடவும் பாஜக-வைத் தீவிரமாக திமுக எதிர்க்கிறது. காரணம்: மோடி தலைமை வகிக்கும் பாஜக ஊழலைத் திடமாக அனுமதிக்காது, தமிழகத்தில் பாஜக-வும் பெரிதாக வளர வாய்ப்புண்டு என்பதால். வரும் சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி வைக்கக் காரணம்: அப்படிக் கூட்டணி வைக்காவிட்டால் முதலுக்கே மோசம் என்பது நிச்சயம். அதாவது, தமிழகத்தில் ஆட்சிக்கு வராவிட்டால் - அல்லது கணிசமான எம்.எல்.ஏ-க்களைப் பெறாவிட்டால் - கட்சி மேலும் தேயும், என்ற நிலைக்கு அதிமுக வந்துவிட்டதால். மற்றபடி, இதுவரை அதிமுக ஊழல் எதிர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியல்ல.

 


5. கேள்வி: புறநானூறு காலத்தில், நெற்களத்தில் நெல் தூற்றிக் கொண்டிருந்த ஒரு தமிழ்ப் பெண், அப்போது வந்த புலியை வெறும் முறத்தால் வீரத்துடன் விரட்டியதாக மரபுவழிக் கதைகள் சொல்கின்றன. ஒரு தமிழ்ப் பெண்ணின் முறமா புலியைத் திரும்பிப் போகச் செய்திருக்கும்?

 

பதில்: 'நிராயுதபாணியாக இருக்கும் ஒருவரை, அதுவும் ஒரு பெண்ணை, தாக்க வேண்டாம், அவருக்கும் அவரது ஓங்கிய கையில் இருக்கும் முறத்திற்கும் பெருமை கிடைத்தாலும் பரவாயில்லை, திரும்பிவிடலாம்' என்று அந்தப் புலியும் நினைத்திருக்கலாம். ஒரு தமிழ்ப் புலியின் அறம்!


பகுதி 51 // 15.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment