|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "ஹிந்தி படித்துவிட்டுத் தமிழகம் வரும் வட
இந்தியர்கள் ஒன்று கஞ்சா விற்கிறார்கள், அல்லது பானி பூரி
விற்கிறார்கள்" என்று திமுக எம்.பி கனிமொழி சோமு பேசி இருக்கிறாரே? பதில்: தமிழகத்தில்
சிறிதும் பெரிதுமான தொழிற்சாலைகள், கடைகள்
என்று எல்லா இடங்களிலும் வட இந்தியர்கள் வேலை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள்.
அந்தத் தொழிற்சாலைகளில், கடைகளில் அவர்கள் கஞ்சாவும் பானி
புரியுமா விற்கிறார்கள்? அன்றாடம் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் வேறு வேறு தமிழர்கள் ஈடுபடுகிறார்கள்.
இதற்காக ஒட்டுமொத்தத் தமிழர்களை இகழ்வாரா இந்தப் பேச்சாளர்? திமுக சார்பாக ஒருவர் எதைப் பேசினாலும் அபத்தம் குப்பென்று கிளம்பும்.
கனிமொழி சோமுவின் பேச்சு இதை நிரூபிக்கிறது. |
|
2. கேள்வி: அதிபர் டிரம்ப் தானாக விதித்த இறக்குமதி வரிகள்
அமெரிக்க சட்டங்களுக்குப் புறம்பானவை என்று 6:3 விகிதத்தில் அந்நாட்டு உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது பற்றிப் பேசிய டிரம்ப், "நான் சில உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் குறித்து வெட்கப் படுகிறேன், மிகவும் வெட்கப்
படுகிறேன்" என்று சொல்லி இருக்கிறாரே? பதில்: பித்துக்குளி டிரம்ப் ஒருவரை மனதாரப்
பாராட்டினால் அந்த மனிதர் என்ன ஏது என்று யோசிக்க வேண்டும். டிரம்ப் ஒருவரைப்
பற்றி மிகவும் வெட்கப் படுகிறார் என்றால், அதைவிட அந்த மனிதருக்கு வேறு பெருமை
கிடையாது. சம்பந்தப்பட்ட அமெரிக்க நீதிபதிகள் உள்ளூர மகிழ்ச்சி கொள்ளலாம். |
|
3. கேள்வி: "குருவை வணங்குபவர்களை அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி
எனச் சொல்லும் பகுத்தறிவாளர்கள் தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள்"
என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசி இருக்கிறாரே? பதில்: பொதுமக்கள்
அல்லது விமர்சகர்கள் 'பகுத்தறிவு பிராண்ட்' பகுத்தறிவாளர்களை இவ்வாறு எதிர்த்துப் பேசுவது வேறு.
நீதிபதி பதவி வகிக்கும் ஒருவர் இப்படிப் பொதுவில் பேசுவது - அரசியல் சாயம்
கொண்டுவிட்ட சில கருத்துகளை அவர் அரசியல் நோக்கம் இல்லாமல் ஆத்மார்த்தமாகச்
சொன்னாலும் - வேறு. அவரைப் போன்ற ஒரு நீதிபதி இதைத் தவிர்த்தால், அவர் வழங்கியிருக்கும் சில தைரியம் மிக்க அரிதான
தீர்ப்புகள், சட்ட உலகில் அதிக மதிப்பைப் பெறும். |
|
4. கேள்வி: "தேர்தலுக்குள் நீங்கள் ஒவ்வொருவரும் 100 வாக்காளர்களை, ஐந்து முறையாவது
நேரில் சந்திக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லி
வாக்கு சேகரிக்க வேண்டும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின்
தேர்தல் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். ஒரு முறை போதாதா, ஏன் ஐந்து முறை? பதில்: வாழ்க்கையில் உங்களுக்கு நேர்ந்த சில
சம்பவங்கள் மூலம் நீங்கள் பெரிய நன்மைகள் பெற்றிருந்தால், அந்தச் சம்பவங்களும் நன்மைகளும் தாமாக
உங்களுக்கு எப்போதும் நினைவிருக்கும். ஏதோ சம்பவங்கள் மூலம், உங்களுக்குக் கிட்டாத பெரிய பலன்கள்
உங்களுக்கு வந்துவிட்டது போல் உங்களை ஒருவர் பொய்யாக நம்பவைக்க முயன்றால், அவர் உங்களுக்கு ஐந்து முறை வேப்பிலை
அடித்துப் பார்க்க வேண்டும். |
|
5. கேள்வி: "21-ம் நூற்றாண்டின் காமராஜராகத் திமுக தலைவரும் தமிழக
முதல்வருமான ஸ்டாலின் உருவெடுத்து வருகிறார்" என்று காங்கிரஸ் கட்சியைச்
சார்ந்த மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியிருக்கிறாரே? பதில்: காமராஜின்
பெருமையை அங்கீகரித்து அவருக்கு மதிப்பளித்தவர் ஜவஹர்லால் நேரு. ஆகையால், "21-ம் நூற்றாண்டின் ஜவஹர்லால் நேருவாக
வந்திருக்க வேண்டியவர் மணிசங்கர் அய்யர்" என்று பதிலுக்கு ஸ்டாலினும்
அறிவித்தால், ஸ்டாலின்-மணிசங்கர் அய்யர் காமெடி
இன்னும் ஜோராக இருக்கும். |
|
பகுதி 58 // 24.02.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment