Sunday, 15 February 2026

கேள்வி-பதில் (14.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் இணைந்தே தேர்தலைச் சந்திப்போம். அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என் சகோதரரைப் போன்றவர்" என்று இந்தியா டுடே ரவுண்ட் டேபிள் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?

 

பதில்: ஸ்டாலின் பேசியது உண்மை என்றால், அதை மற்ற சகோதரர் ராகுல் காந்தி ஏன் சமீப காலமாகச் சொல்லவில்லை? அதுவும், திமுக-வின் நிலைப்பாட்டுக்கு மாறாகக் காங்கிரஸ் கட்சியில் பலரும் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நெடு நாட்களாகப் பொதுவெளியில் கேட்கும் போது?

 

காங்கிரஸ், திமுக இரண்டு கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரம் பெரிய சொத்து மாதிரி - அது தித்திக்கும் பலன்கள் தரும் என்று இரு கட்சிகளுக்கும் தெரியும். அந்த இரு கட்சிகள் கூட்டணியாகத் தமிழக சட்டசபைத் தேர்தலில் வென்றால், அமையப் போகும் ஆட்சி பொதுச் சொத்து மாதிரி. பொதுச் சொத்தில் பங்குள்ள இரண்டு சகோதரர்களில் ஒருவர் மற்றவருக்குப் பங்கு தரமாட்டேன், ஆனால் மற்றவர் தனக்குப் பிரியமான சகோதரர் என்று சொன்னால் ஊர் மட்டுமல்ல, மற்ற சகோதரரே சிரிப்பார் - முன்பு அவர் சொத்து விஷயத்தில் அசமஞ்சமாக இருந்தாலும். ஒரு வேளை அந்தச் சகோதரர் இப்போதும் அசமஞ்சமாக இருப்பாரா என்று கேட்டால் - யாருக்கும் தெரியாது.

 

 

2. கேள்வி: பிப்ரவரிக்கான மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயுடன் மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கு இரண்டாயிரம் சேர்த்து, அத்துடன் 'கோடைக்கால சிறப்புத் தொகுப்பு' என்ற பெயரில் கூடுதலாக இரண்டாயிரத்துடன் மொத்தம் ஐந்தாயிரம் ரூபாயை மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளுக்கு இந்த பிப்ரவரி மாதமே தமிழக அரசு அனுப்பிவிட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்வது கடினம் என்று ஸ்டாலினே நினைப்பார். அதற்கு ஒரு புதுக் காரணம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

 

சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுக-வுக்கு வாக்களித்தவர்கள், கடந்த ஐந்தாண்டுகளில் ஓட்டுரிமைை வயதடைந்த பின் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் சாதாரணமாகத் திமுக-வுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் - இவர்களில் பலர் இம்முறை தவெக-வுக்கு ஓட்டுப் போடலாம். சில அதிமுக வாக்குகளையும் இந்த முறை தவெக ஈர்க்கும். அதிமுக-வை விட, அநேகமாகத் திமுக அதிக வாக்குகளைத் தவெக-விடம் பறிகொடுக்கும்.

 

விஜய் விஷயம் தவிர, திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் திமுக கூட்டணிக் கட்சிகள் இம்முறை மேலும் சில வாக்குகளை இழக்கும். எல்லாவற்றையும் சரிக்கட்ட, மனதிற்குள் 'தேர்தல் கால சிறப்புத் தொகுப்பு' என்று சொல்லியபடி, அரசுப் பணம் ஐயாயிரத்தை - மொத்தம் 6,550 கோடி ரூபாயை - விநியோகம் செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கட்சிப் பணம் நைஸாகப் பாதுகாக்கப் படுகிறது.

 

 

3. கேள்வி: "தமிழ்நாட்டில் தவெக-வுக்கு ஆதரவு 30 சதவிகிதத்தைக் கடந்துவிட்டது" என்று தவெக தலைவர் விஜய் சேலம் கூட்டத்தில் பேசி இருக்கிறார். எந்த அடிப்படையில் இந்தப் புள்ளி விவரத்தை அவர் சொல்கிறார்?

 

பதில்: இன்னும் சட்டசபைத் தேர்தல் நடந்து வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்ற அடிப்படையில்.

 

தவெக-வுக்கு வாக்களிப்பவர்களில் அதிகமானோர், விஜய்யை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் அவர் பேசும் கூட்டங்களுக்கு வரலாம். திமுக, அதிமுக மற்றும் பாஜக-வுக்கு வாக்களிப்பவர்களில் அவ்வளவு அதிக சதவிகித மக்கள் அக் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு நேரில் வரமாட்டார்கள். இது கவனிக்கத் தக்கது.

 

விஜய்யின் ஓட்டு வங்கியைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது. அது 15, 18, கூடக் குறையவா, துல்லியமாக எவ்வளவு, என்பது வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்தான் தெரியும். அதுவரை விஜய் கூடுதலாக ஆர்ப்பரிப்பார்; திமுக அவரை நினைத்து எவ்வளவு அச்சம் கொள்வது என்று தெரியாதிருக்கும்.

 

 

4. கேள்வி: "ஆயிரம், ரெண்டாயிரம், மூவாயிரம், அஞ்சாயிரம்னு உங்களுக்குப் பணம் கொடுப்பாங்க. எல்லாத்தையும் வாங்கிக்குங்க. அது உங்க பணம்தான். வாங்கிட்டு, தவெக-வுக்கு ஓட்டைப் போடுங்க"ன்னு விஜய் அவர் கட்சி பொதுக் கூட்டத்தில் பேசி இருக்கிறார். இப்படிப் பேசலாமா?

 

பதில்: பணம் வாங்கிய மக்களில் கணிசமானோர், பணம் கொடுத்த கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று பணம் விநியோகிக்கும் கட்சி நினைக்கிறது. இதுபோக, போன தேர்தல் சமயத்தில் நமக்குப் பணம் பொருள் கொடுத்த கட்சி இம்முறை தரவில்லை என்றால் அது நம்மை உதாசீனம் செய்கிறது என்று பணம் பொருளுக்குப் பழக்கமான மக்கள் அக்கட்சி மீது அதிருப்தி கொள்ளலாம். ஆகையால் ஓட்டுக்குப் பணம் பொருள் தரும் கட்சி அதை நிறுத்த விரும்பாது - தேர்தல் முடிவு என்னவாக அமைந்தாலும், அதுபற்றி விஜய் இப்போது என்ன பேசினாலும்.

 

விஜய் பேசியது பற்றிக் கேஸ் வந்தால், "மக்களே, உங்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பணம் உங்களுக்குத் திரும்பி வந்தால் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இதை நான் சொல்வது தப்பு என்றால் இதுபற்றி இனி பேசவில்லை. வருகின்ற பணம் பற்றி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்" என்று சொல்லி விசில் ஒலியை மேலும் கிளப்புவார். திமுக-வும் கேஸ் போட்டு இந்த விஷயம் அதிக வெளிச்சம் பெற விரும்பாது.

 


5. கேள்வி: "காலனித்துவ மனநிலையைக் கைவிடவேண்டும்" என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார். இது நடக்குமா?

 

பதில்: நடந்துவிட்டது - நம்மைக் காலனியாக ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் இப்போது இந்தியாவை அணுகும் விதத்தில். ஆனால் இந்திய அரசியல் தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்து மக்களைச் சுரண்டும் சுதேசி காலனித்துவம் பல கட்சிகளிடம் வேரூன்றிவிட்டது - அந்தக் கட்சிகள் வெள்ளையர்களை மிஞ்சிவிட்டன.


பகுதி 50 // 14.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment