Saturday, 21 February 2026

கேள்வி-பதில் (20.02.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: பிரேமலதா தலைமையிலான தேமுதிக, சட்டசபைத் தேர்தலுக்காகத் திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டது. வைகோ, திருமாவளவன் போன்றோர் தங்கள் கட்சிகளைத் திமுக கூட்டணியில் இணைத்ததைப் போல் தானே இந்தச் சேர்க்கையும்? இதில் சரி-தப்பு என்று என்ன இருக்கிறது?

 

பதில்: விஜயகாந்தின் அரசியல் முகம் விசேஷமானது. அரசுத் துறைகளில் காணப்படும் லஞ்ச லாவண்யத்தை எதிர்ப்பவராகத் திரையில் தோன்றியவர் விஜயகாந்த். மக்களுக்கு அரசு இழைக்கும் அநீதியைத் தனது அரசியல் மேடைகளிலிருந்தும் அவர் ஆக்ரோஷமாகக் கண்டித்தார். அதனால் அவருக்குத் தனியான மக்கள் செல்வாக்கு உருவாகியது.

 

வைகோவும் திருமாவளவனும் - மற்ற திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் - பொதுவாழ்வில், அரசுத் துறைகளில், காணப்படும் அநீதி அக்கிரமத்தை விஜயகாந்த் மாதிரி இதய சுத்தியோடு எதிர்ப்பவர்கள் அல்ல. எந்த அநீதி அக்கிரமத்தை விஜயகாந்த் சீறி எழுந்து எதிர்த்தாரோ, அவற்றின் மொத்த உருவாகத் திமுக இருக்கிறது. ஆகையால் விஜயகாந்த் தோற்றுவித்த கட்சி திமுக-வுடன் தேர்தல் கூட்டணி வைப்பது, அநேக விஜயகாந்த் அபிமானிகளுக்கு நெருடலாக இருக்கலாம், சங்கடம் தரலாம்.

 

 

2. கேள்வி: பிரேமலதா, விஜயகாந்தின் மனைவி. அவர்கள் ஒருவரை மற்றவர் புரிந்தவர்களாக இருந்திருப்பார்கள். விஜயகாந்த் தோற்றுவித்த தேமுதிக, தற்போது திமுக-வுடன் தேர்தல் கூட்டணி வைப்பதை விஜயகாந்த் விரும்பி இருப்பாரா மாட்டாரா என்று பிரேமலதா சரியாகக் கணித்திருக்க மாட்டாரா?

 

பதில்: தனிப்பட்ட வாழ்க்கை வேறு; அரசியல் வாழ்க்கையும் பொது வாழ்க்கையும் வேறு. அரசுத் துறைகள் மக்களுக்கு இழைக்கும் அநீதியை எதிர்த்த விஜயகாந்தின் நியாய உணர்வும் உத்வேகமும் சீற்றமும் அவரது மனைவியிடம், மகன்களிடம், இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. ராஜீவ் காந்தி கொண்டிருந்த அரசியல் பார்வை அவர் மனைவி சோனியா காந்திக்கு இல்லை.

 

இன்னொன்று. திமுக-வுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கு முன்பாக, தேமுதிக தலைவர் பிரேமலதா, "எந்தக் கூட்டணி மக்கள் நலனுக்காக அதிகம் உழைக்குமோ, அந்தக் கூட்டணியில் நாங்கள் இணைவோம்" என்று சொல்லவில்லை. மாறாக, "எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி வைப்போம்" என்று சொன்னார். 'உரிய மரியாதை' என்றால், அதிக சட்டசபைத் தொகுதிகள், ராஜ்ய சபா சீட், மற்ற ஏதோ என்று ஆகும். அதாவது, தேமுதிக-வை எந்தக் கூட்டணி அதிக ஏலத் தொகைக்கு எடுக்குமோ, அந்தக் கூட்டணியில் தேமுதிக சேரும் என்கிற மாதிரி பிரேமலதா அறிவித்துவிட்டார். இதில் விஜயகாந்த் எந்தக் கூட்டணியை விரும்பி இருப்பார் என்ற கேள்வி முக்கியத்துவம் இழந்தது.

 

 

3. கேள்வி: என்ன இருந்தாலும், விஜயகாந்த் தோற்றுவித்த தேமுதிக என்ற கட்சி, திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டது. தேமுதிக ஆதரவாளர்களின் ஓட்டு அனைத்தும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்குத் துணை செய்யும் அல்லவா?

 

பதில்: இதில் தெளிவாகக் கணிக்க முடியாத சில விஷயங்கள் உள்ளன. திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கு முன்பு, தேமுதிக நடத்திய பொதுக்கூட்டத்திற்கு விஜயகாந்த் அபிமானிகள் நிறையப் பேர் வந்திருப்பார்கள். ஆனால் இப்போது விஜயகாந்த் அபிமானிகளில் கணிசமானோர் திமுக கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா, விஜயகாந்த் அந்தச் செய்கையை ஏற்கமாட்டார் என்று கருதி வேறு கட்சி வேட்பாளர்களுக்கு - அதிமுக கூட்டணி அல்லது தவெக வேட்பாளர்களுக்கு - வாக்களிப்பார்களா என்று நமக்குத் தெரியாது.

 

 

4. கேள்வி: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை, "விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது" என்று தமிழக பாஜக சொல்கிறது. சரியா?

 

பதில்: ஒரு வகையில் பிரேமலதா அனுதாபத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர். எப்படியென்றால்: தனி வாழ்க்கையிலும் அலுவல் வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும், ஒரு மனிதர் சில நேரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும் இடத்தில் இருப்பார். அப்போது சரியான முடிவுகளை எடுக்கும் சமநிலை, சுற்றுமுற்றுப் பார்வை, தெளிவான சிந்தனை அவரிடம் இருக்கவேண்டும். பிரேமலதாவிடம் அது அதிகமில்லை. ஆகையால் தன் மனைவியின் பரிதாப நிலையை உணர்ந்த விஜயகாந்தின் ஆன்மா, அவரை அனுதாபத்துடன் மன்னிக்கலாம்!

 


5. கேள்வி: விஜயகாந்த் இருந்தபோது, தேமுதிக 2016-ல் திமுக-வுடன் கூட்டணி சேரவேண்டும் என்று சிலர் எண்ணினார்கள். அதை விரும்பிய திமுக தலைவர் கருணாநிதியும் "பழம் நழுவிப் பாலில் விழலாம்" என்று அப்போது சொன்னார். "அன்று அது நடக்கவில்லை. பத்து வருடங்கள் கழித்து இன்று நடந்திருக்கிறது" என்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த பிறகு பிரேமலதா கூறி இருக்கிறாரே?

 

பதில்: அந்தப் பழம் இப்போது பாதி அழுகிவிட்டது. அந்தப் பால் இப்போது இன்னும் புளிக்கிறது.


பகுதி 55 // 20.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment