Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (22.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: கொசு, டெங்கு, மலேரியா மாதிரித் தமிழகத்தில் ஒழிக்க வேண்டியது என்ன?


பதில்:
சாலைகளில் மழைநீர் வெள்ளமும் மரணப் பள்ளமும்.

 

 

2. கேள்வி: தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி அதன் பல நிலைகளில் உள்ள நிர்வாகிகளுக்கு தீபாவளிப் பரிசாக தலா பத்தாயிரம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை வழங்கி இருக்கிறது. இது அவர்களைக் கட்சிப் பணியில் ஊக்கப் படுத்தும் அல்லவா?


பதில்: அதைவிட, சம்பாத்தியம் கொழிக்கும் பதவிகளுக்கு அவர்களை மேலும் ஆசைப்பட வைக்கும்.

 

 

3. கேள்வி: அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி செய்வது கடினமா, இந்தியாவில் மோடி ஆட்சி செய்வது கடினமா?


பதில்:
பல முன்னோடிகள் பொருளாதாரத்திலும் ராணுவ சக்தியிலும் வளர்த்த அமெரிக்காவை நிர்வாகம் செய்கிறார் டிரம்ப். ஊழல் மலிந்த, நம் தேவைக்கான பொருளாதார வளர்ச்சி இல்லாத, இந்தியாவை மோடி உயிர்ப்பிக்கிறார். மோடியின் வேலை இன்னும் கடினமானது. இதுபோக, ராகுல் காந்தி, டொனால்ட் டிரம்ப் போன்ற அசட்டுத் தலைவலிகளை அமெரிக்க ஜனாதிபதி சமாளிக்க வேண்டியதில்லை!

 

 

4. கேள்வி: "ஒரு கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுக்கக் கண் இருக்க வேண்டும். நிறைய சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும்" என அமைச்சர் துரைமுருகன் பேசி இருக்கிறார். சரிதானே?

 
பதில்:
அவர் சொல்லாத இரண்டு மிக முக்கியம்: சுத்தமான கை. கனமில்லாத பை.

 

 

பகுதி 5 // 22 .10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (21.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் இப்படிப்  பேசுகிறார்: "தீபாவளி சமயத்தில் என்னைப் பார்க்க வருகிறவர்களுக்கு என்னிடம் தீபாவளி வாழ்த்து சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.  எனக்கு தீபாவளி வாழ்த்து சொன்னால் நான் கோபித்துக் கொள்வேனோ என்றும் நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் சொல்கிறேன்." உதயநிதியின் வெளிப்படையான பேச்சு பற்றி உங்கள் கருத்தென்ன?


பதில்:
உதயநிதி இப்படிப் பேசி இருந்தால் வெளிப்படைத் தன்மை அதிகம் இருக்கும். "ஹிந்துக்கள் திமுக-வுக்கு அளிக்கும் ஓட்டுக்களில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஆனால் அவர்கள் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்காக அவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்வதில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் நான் அந்த சமயத்தில் ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் போனால், அதை பாஜக மக்களிடம் பெரிதாகப் பேச முற்பட்டு அதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக எத்தனை ஓட்டுகளை இழக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. அதுபற்றி உள்ளூரக் கொஞ்சம் பயம் இருக்கிறது. அதே சமயம், இது திராவிட மாடல் அரசு. ஆகையால் நான் ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்னதாகத் தெரிய வேண்டும், சொல்லாததாகவும் இருக்க வேண்டும். இந்த நினைப்புடன், உணர்வே இல்லாமல் மரக்கட்டைத் தனமாக ஒரு அரைகுறை தீபாவளி வாழ்த்தை அவர்களுக்குச் சொல்லித் தொலைக்கிறேன்!" இதுதானே உதயநிதி உள்மனதில் எண்ணியதாக இருக்கும்?

 

 

 

பகுதி 4  // 21.10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (19.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "நான் மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை" என்று டிரம்ப் பேசி இருக்கிறார். காரணம் டிரம்பின் திமிரா பெருந்தன்மையா?


பதில்:
பித்துக்குளித்தனம்.

 

 

 

2. கேள்வி: தந்தையிடம் அரசியல் கற்கும் நிலையில் ஸ்டாலின் எப்படி இருந்தார், உதயநிதி எப்படி இருக்கிறார்?


பதில்: ஸ்டாலினிடம் இருந்தது அடக்கம். உதயநிதியுடன் இருப்பது ஆட்டம். இரண்டிற்கும் முக்கிய காரணம், மகன் மீதான தந்தையின் பிடி முன்னே பின்னே இருப்பது.

 

 

 

3. கேள்வி: சுந்தர் பிச்சைக்கும் ஶ்ரீதர் வேம்புவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?


பதில்:
தான் அமெரிக்கர்களுக்கு நிகர் என்று முக்கியமாக அமெரிக்கர்களிடம் நிரூபித்தவர் சுந்தர் பிச்சை. தான் அமெரிக்கர்களுக்கு நிகர் என்று முக்கியமாக இந்தியர்களிடம் காண்பிப்பவர் ஶ்ரீதர் வேம்பு.

 

 

 

4. கேள்வி: மக்களிடம் பிரதமர் மோடி பேசும் வானொலி நிகழ்ச்சியின் பெயர், 'மனதின் குரல்'. சில எதிர்க் கட்சித் தலைவர்கள் தங்கள் பாணியில் அவ்வாறு உரையாற்றினால் அதற்கு நீங்கள் என்ன பெயர் தருவீர்கள்?

 
பதில்:
ராகுல் காந்தி: மனதின் கடுப்பு.

 

மன்மோகன் சிங்: என் குரலில் சோனியாஜி மனது.

 

மு.க. ஸ்டாலின்: திராவிட மாடல் மனது.

 

கமல் ஹாசன்: மனதின் மனதில் மனதோ மனது.

 

 

 

5. கேள்வி: "சமத்துவத்தை உண்டாக்க அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கினோம்" என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். சரியா?


பதில்:
அவர் இன்னும் ஒரு படி மேலே செல்லலாம். அனைத்து ஜாதியினரையும் ஒவ்வொருவராக வருடா வருடம் தனது கட்சியின் தலைவராக்கி, இன்னும் சிலரை ஆறு ஆறு மாதங்களுக்குத் தனது ஆட்சியில் துணை முதலமைச்சராகவும் ஆக்கினால் சமத்துவம் உயர்ந்த நிலையைச் சென்றடையுமே!

 

 

 

6. கேள்வி: "திமுக-வை கண்மூடித்தனமாக எதிர்க்கும் பிராமணர்களை நான் எதிர்க்கிறேன்" என்று நடிகர் எஸ். வி.சேகர் சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: திமுக-வை கண்மூடித்தனமாக  ஆதரிக்கும் ஒருவர் தன்னை மறைக்கப் பார்க்கிறார்.

 

 


7. கேள்வி: "சுதந்திரமாக,  விஞ்ஞான ரீதியாக, சிந்திப்பது என்ற எண்ணமே இந்தியாவில் பெரிதாக எதிர்க்கப்படுகிறது" என்று சிலி நாட்டிற்குச் சென்ற ராகுல் காந்தி, மாணவர்கள் மத்தியில் மோடி அரசைக் குற்றம் சாட்டிப் பேசி இருக்கிறாரே?

 

பதில்: ராகுல் காந்தியிடம் சிந்தனா சக்தி குறைவு. அந்த உண்மையைத் திசை திருப்ப, 'மக்கள் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு மோடி அரசு முட்டுக்கட்டை போடுகிறது' என்று ஆரம்பித்து, தனது சிந்தனைக் குறைவுக்கான பழியை மோடி மீது தள்ளிவிடப் பார்க்கிறார் ராகுல் காந்தி. கில்லாடி!


 

பகுதி 3 // 19 .10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (15.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: அண்ணாமலை தற்போது தமிழக பாஜக தலைவராக இல்லை. அது அவர் கட்சிக்கு நன்மையா இழப்பா?


பதில்:
நன்மையாக ஆக்கிக் கொள்ளலாம். 2026 மாநிலத் தேர்தலுக்காக அதிமுக-வுடன் கூட்டணியில் இருப்பது பாஜக-வுக்கு நல்லது.  அதற்காக, எடப்பாடியுடன் சிரித்துக் கைகுலுக்க பாஜக பக்கம் நயினார் நாகேந்திரன் பொருத்தமானவர்.  ஸ்டாலினையும் திமுக-வையும் விமரிசனத்தில் புரட்டி எடுக்க அண்ணாமலை சரியானவர். இப்போது இரண்டும் ஜோராக நடக்கிறதே?

 

 

 

2. கேள்வி: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் எல்லாக் கட்சிகளும் தமக்கான தேர்தல் கூட்டணியை விரும்புகின்றன. சீமான் மட்டும் தனது கட்சி எல்லாத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்கிறாரே, ஏன்?


பதில்: சீமான் முதல் அமைச்சராக விரும்புகிறார். ஆனால் சீமானை முதல்வர் வேட்பாளராக அங்கீகரித்து அவர் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்தப் பெரிய லெவல், மீடியம் லெவல், கட்சியும் தயார் இல்லை. அதனால் அவருக்கு நஷ்டமில்லை. அவர் பாணியில் அரட்டல் ஆவேசம் காட்டி அரசியல் செய்வதின்  பயன் அவருக்குத் தெரியும்.

 

 

 

3. கேள்வி: "சி.பி.ஐ-க்கு  மட்டும் மூணு மூளையா?" என்று சீமான் கேட்கிறாரே?


பதில்:
தமிழக போலீஸ் மாதிரி, சி.பி.ஐ-க்கும் ஒரு மூளைதான். ஆனால் தமிழக போலீசின் மூளையில் மூன்றில் இரண்டு பங்கை  யாரோ லாக்-அப்பில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

 

 

 

4. கேள்வி: ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்தும் என்று மோடி தன்னிடம் கூறியதாக டிரம்ப் சொல்ல, "டிரம்பிடம் மோடி பயப்படுகிறார்" என்று ராகுல் காந்தி கமென்ட் செய்தது சரியா?

 
பதில்:
டிரம்ப் ஒரு அடாவடி. ராகுல் காந்தி ஒரு அசடு. எதற்கோ பயப்பட்டுப் பேசுவது, இந்த இருவரும் தான். ஆழமாக அமைதியாக இருக்கும் மோடி அல்ல.

 

 

 

5. கேள்வி: தான் ஏழு போர்களை நிறுத்தியதாகச் சொல்லி அமைதிக்கான நோபல் பரிசு கோரிய டிரம்ப்புக்கு அந்தப் பரிசு கிடைக்கவில்லையே?


பதில்:
நோபல் பரிசுக் கமிட்டியுடன் டிரம்பே புரிந்த ஒரு போரை, அந்தக் கமிட்டி சுபமாக முடித்து விட்டது.

 

 

 

6. கேள்வி: எகிப்தில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பைப் பார்த்து டிரம்ப், "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்க, அவரும் மைக் முன்வந்து, "டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று ஆஹா ஓஹோவென்று டிரம்பைப் புகழ்ந்திருக்கிறாரே? நாம் நிம்மதியின் உறைவிடமாக மாற வழி உண்டா?

 

பதில்: செந்தில் கவுண்டமணிக்குள் ஒரு இயல்பான அண்டர்ஸ்டான்டிங் இருக்கும். அது பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கும்.

 

 

பகுதி 2 // 15.10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (08.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: ரஜினி, கமல், விஜய் ஆகியோரின் அரசியல் முயற்சிகளை ஒப்பிடவும்.


பதில்:
அரசியல் ஆற்றின் ஆழம், ஆபத்துகள் தெரியாமல் கிட்ட வந்தவுடன் அவற்றை உணர்ந்து திரும்பியவர் ரஜினி.

 

ஆற்றங்கரையில் மட்டும் நின்று, உடம்பில் எண்ணை தேய்த்து பஸ்கி எடுப்பவர் கமல்.

 

ஆறே தனது வீட்டுக் கொல்லைபுரத்துக்கு வரட்டும் என்று பார்க்கிறவர் விஜய்.

 

 

2. கேள்வி: திராவிட அரசியலில் ஒருவர் கற்க வேண்டிய முதல் பாடம் என்ன?


பதில்: பெரியாரைத் துணைக் கொள்.

 

 

3. கேள்வி: லாட்டரியில் அதிர்ஷ்டம் என்பது குதிரைக் கொம்பு. ஆனாலும் ஏன் பல மக்கள் அங்கு போய் ஏமாறுகிறார்கள்?


பதில்:
லாட்டரியில் அதிர்ஷ்டம் எந்தப் பக்கம் இருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியவில்லை. அது இருப்பது, டிக்கெட் அடித்து லாட்டரி பிசினஸ் செய்யும் பக்கம்.

 

 

4. கேள்வி: அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும்  இல்லை என்கிறார்கள். அரசியலில் எதுதான் நிரந்தரம்?

 
பதில்:
சம்பாத்தியம்.

 

 

5. கேள்வி: "எந்தக் கொம்பனாலும் குறை சொல்லமுடியாத ஆட்சி" என்று திமுக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் மதிப்பிடுகிறாரே?


பதில்:
திமுக ஆட்சியைக் குறை சொல்லாதவர்களுக்கு ஸ்டாலின் வாஞ்சையுடன் தரும் பெயர், கொம்பன்.

 

 

6. கேள்வி: நாம் நிம்மதியின் உறைவிடமாக மாற வழி உண்டா?

 

பதில்: நமது வீட்டின் பெயரை நிம்மதி என்று மாற்றி, திருப்தி அடையலாம்.

 

 

7. கேள்வி: ஸ்டாலின் தன் அப்பாவிடம் அடங்கி இருந்து கடைசியில் கட்சிக்குள் அப்பாவின் இடத்தைப் பிடித்த மாதிரி அன்புமணி ராமதாஸ் ஏன் பொறுமை காக்கவில்லை?

 

பதில்: ஸ்டாலினுக்கு அப்பா ஓய்ந்தால் போதும். அதன் பிறகு, திமுக ஆட்சியில் அமர்ந்த கட்சி என்பதால்,  ஆட்சியே பிற்பாடு தன்னிடம் வரும் என்று ஸ்டாலினுக்குத் தெரியும்.  சமர்த்தாகப் பொறுத்தார். அன்புமணிக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை.

 

இன்னொன்று. அப்பா திடமாக இருக்கும்போது அவரை மீறிய உள்கட்சி செல்வாக்கு ஸ்டாலினுக்கு இல்லை.  அத்தகைய செல்வாக்கு, அன்புமணிக்கு பாமக-வில் இருக்கிறது. அவரால் அப்பா இருக்கும்போதே துள்ள முடிகிறது, முயன்று பார்க்கிறார் - அகிலேஷ் யாதவ் மாதிரி.

 

 

8. கேள்வி: கொலம்பியா சென்று கார் மற்றும் மோட்டார் சைக்கிளின் எடைகளின் வித்தியாசம் பற்றிப் பேசிய ராகுல் காந்தி, அதுபோல் இந்திய மக்களிடம் என்ன பேசுவார்?

 

பதில்: "மூணு சக்கர சைக்கிளுக்கு ஏன் மூணு சக்கரம் இருக்கு, ரெண்டு சக்கர சைக்கிளுக்கு ஏன் ரெண்டு சக்கரம் இருக்கு தெரியுமா? நானே சொல்றேன். ரெண்டு சக்கர சைக்கிள்ள இருக்க வேண்டிய மூணாவது சக்கரத்தை சைக்கிள் கம்பெனிகளே திருடி, அதையும் வெச்சு புதுசா சைக்கிள் தயாரிச்சு, ஆக மொத்தம் எல்லா சைக்கிளையும் வெறும் ரெண்டு சக்கரத்தோட விக்கறாங்க. அதை மோடி அரசாங்கமும் கண்டுக்காம இருக்கு!"

 

பகுதி 1 // 08.10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr