Thursday, 15 January 2026

கேள்வி-பதில் (13.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-வின் வஜ்ராயுதம், உதயநிதி" என்று அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே அக்கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் பேசியிருக்கிறாரே?

 

பதில்: இந்திரனின் ஆயுதமான வஜ்ராயுதம் சக்திமிக்க எதிரிகளையும் அழிக்க வல்லது. உதயநிதி டைப் வஜ்ராயுதம் வேறு. மாற்றுக் கட்சி எதிரிகளைப் பெரிதாக எதுவும் செய்யாது. சொந்தக் கட்சி திமுக-வின் சீனியர் தலைவர்களையும் உதயநிதியின் காலடியில் கிடத்தி அவரை வணங்கிப் புகழச் செய்யும்.

 

 

2. கேள்வி: ஜல்லிக்கட்டு வீர விளையாட்டா?

 

பதில்: ஒரு ஆட்டத்தில் பங்கு பெறும் இரு தரப்பினரும், பங்கேற்கும் அனைவரும், ஆர்வத்தோடு பங்கு கொண்டால் அது விளையாட்டு. நீங்கள் ஒரு நாயுடன் ஓடியாடினால் அதில் இருவருக்கும் ஆர்வம் இருக்கும், அது இருவருக்கும் விளையாட்டு. ஜல்லிக்கட்டு அப்படியல்ல.

 

ஜல்லிக்கட்டு காளைமாட்டை மற்ற நேரத்தில் பாருங்கள். அதன் உடல் உயர்ந்து வலுவாகத் தெரியும். அதன் கண்களில் சாந்தம் இருக்கும், திமிர் இருக்காது. தனது உடல் வலிமையை அது மனிதர்களிடம் காட்ட விரும்பாது.

 

ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைமாடுகள், மிரட்சியுடன் மனிதர்களிடமிருந்து தப்பி ஓடுகின்றன. அதற்குத் தடையாக மாடுபிடி வீரர்கள் குறுக்கே வந்தால் அவர்களை முட்டி விலக்கித் தப்பி ஓட முயல்கின்றன. ஜல்லிக்கட்டில் வீரம் இல்லை. விளையாட்டு இல்லை. மற்றது உண்டு.

 

 

3. கேள்வி: அயலகத் தமிழர் தின விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் விதைத்தது" என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: திராவிட மேடைகளிலிருந்து மக்களிடம் சொல்லப்படும் வெற்று அலங்கார வார்த்தைகள் அவை.

 

தமிழகத்தில் திமுக ஆட்சிகளின் லட்சணம் நாம் அறிந்தது. அதன் பரவலான தாக்கத்தில் மக்களிடம் சாதாரணத் தமிழ் தடுமாறுவதும் நம் செவிகள் அறிந்தது. ஆக, திமுக ஆட்சியாளர்கள் தங்களைப் பற்றி, தமிழ் வளர்ச்சிக்குத் தாங்கள் செய்தது பற்றி, ரகசியமாக இப்படிச் சொல்லிக் கொள்ளலாம்: 'தாழ்வது நாமாக இருந்து தவழ்வது தமிழாக இருக்கட்டும்.'

 

 

4. கேள்வி: "தற்போது இன்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் என வெளிநாடுகளில் தமிழர்கள் குடும்பத்தோடு வசிக்கின்றனர். இதுதான் திமுக அரசின் சாதனை" என்று துணை முதல்வர் உதயநிதி பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒருவேளை, 'தமிழ்நாட்டு இன்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற நன்கு படித்த சமூகம் பெரும்பாலும் திமுக-வுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள், அவர்கள் தமிழ்நாட்டில் ஓட்டுப்போட முடியாமல் குடும்பத்துடன் வெளிநாடுகளில் இருக்கட்டும்' என்ற நினைப்பை உதயநிதி இப்படிச் சொல்கிறாரோ? என்ன இருந்தாலும் அசட்டுப் பேச்சு.  

 

 

5. கேள்வி: சிரிப்பதற்கு ஒன்று சொல்ல முடியுமா?

 

பதில்: ஒன்று


பகுதி 38 // 13.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (11.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சீமான், விஜய், எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், அண்ணாமலை - இந்த ஐவர் இன்று மேடையில் நின்று அரசியல் பேசுவதற்கு உறுதுணையாக இருப்பது என்ன?

 

பதில்: சீமான், தொண்டைத் தண்ணி; விஜய், நடிப்புப் பயிற்சி; ஸ்டாலின், மக்கள் மறதி; எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் சிறைவாசம்; அண்ணாமலை, அறச் சீற்றம்.

 

 

2. கேள்வி: "உங்க கனவை சொல்லுங்க" என்று தமிழக அரசு சார்பில் பொதுமக்களிடம் கேட்கப்படுகிறது. உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

 

பதில்: உணவு, உடை மற்றும் இருப்பிடம் என் வருமானத்தில் கிடைப்பதற்கான வேலை வாய்ப்பு; அதோடு தரமான சாலைகள், பஸ் வசதி, சுத்தமான குடிநீர், சிறந்த அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவ சேவைகள் - இவை அனைத்தும் மக்களுக்குக் கிடைக்கும் வகையில், வீடு வீடாகச் சென்று சர்வே எடுக்காமல், தன் பொறுப்பை உணர்ந்து வேலை செய்யும் மாநில அரசு என் கனவு.

 

 

3. கேள்வி: தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், சென்ஸார் போர்டு சான்றிதழ் தொடர்பான சிக்கலால் திரைக்கு வருவது தாமதமாகிறது. அதனால் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்து - அதனால் விஜய் படத்துக்கு ஆதரவாக - குரல் கொடுத்திருக்கிறாரே?

 

பதில்: ஒன்று: திமுக-வில் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பார்கள், ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ரசிகர்கள் இருக்க மாட்டார்கள்.

 

இரண்டு: திமுக-விற்கு, தவெக மற்றும் பாஜக இரண்டும் எதிரிகள். ஆனால் தவெக போல் அல்லாமல், பாஜக பழம் தின்று கொட்டை போட்ட கட்சி, நிலையான கட்சி, லாலு பிரசாத் மற்றும் உத்தவ் தாக்கரே கட்சிகளை அடக்கியது போல் பாஜக திமுக-வின் பலத்தைக் குறைக்க அரசியல் நகர்வுகள் செய்ய வல்லது.

 

மூன்று: ஜனநாயகன் விஷயத்தில் பாஜக-வைத் திமுக ஒரு இடி இடித்தால், திமுக-வில் இருக்கும் பல விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுஜன விஜய் ஆதரவாளர்கள் பலர், விஜய்க்காகக் குரல் கொடுத்த திமுக-விற்கு ஓட்டுப் போடலாம் என்பது ஸ்டாலினின் நப்பாசை - அரசியலில் இது இயல்பு.

 

 

4. கேள்வி: "எனக்கு நிதி நிலைமை பற்றித் தெரியவில்லை. ஆனால், நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் மகளிர் உரிமைத் தொகையாக, மாதம் ஆயிரத்துக்குப் பதிலாக 2,000 ரூபாய் நிச்சயமாகக் கொடுப்பேன்" என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறாரே?

 

பதில்: அரசின் நிதி நிலைமை பற்றித் தெரியாவிட்டாலும் அவர் முதல்வராக இருந்தால் மகளிருக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்குவாரா? கார்த்தியின் உரிமைப் பிதற்றல்.

 

 

5. கேள்வி: ஆண்களிடம் பெண்கள் நல்ல பெயர் எடுப்பது கடினமா, பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் எடுப்பது கடினமா?

 

பதில்: இரண்டையும் விட, ஆண்கள் ஆண்களிடம் நல்ல பெயர் எடுப்பதும், பெண்கள் பெண்களிடம் நல்ல பெயர் எடுப்பதும் கடினம். பாம்பின் கால் பாம்பறியும்.


பகுதி 37 // 11.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 


கேள்வி-பதில் (09.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "என்னை எதிர்ப்பவர்கள் எல்லோரும் என் எதிரிகள் அல்ல. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்தான் என் எதிரி. அந்த வகையில் தம்பி விஜய் என் எதிரி அல்ல" என்று தவெக குறித்து சீமான் பேசியிருக்கிறாரே?

 

பதில்: இது ஜோராகக் காதில் ஒலிக்கிறது. ஆனால் வெத்துப் பேச்சு. 2026 தேர்தலின் போது, ஒரே தொகுதியில் நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக வேட்பாளர்கள் போட்டியிட்டால், அங்கு பிரசாரம் செய்யும் நா.த.க வேட்பாளரோ, சீமானோ தவெக-வை எதிர்த்து, விஜய்யை எதிர்த்து, மூச்சே விடமாட்டார்களா?

 

 

2. கேள்வி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற அப்பீல் கோர்ட் உத்தரவு பிறப்பித்த உடன், "முதலில் சட்டத்தை மீறி நீதி மன்றத்தை அவமானப்படுத்தியது போலீஸ் கமிஷனரும் கலெக்டரும்தான். குறைந்த பட்சம் இருவரும் மன்னிப்பாவது கேட்கவேண்டும்" என்று பாஜக-வின் எச். ராஜா சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: தமிழக அரசின் பல உயர் அதிகாரிகளை பொம்மலாட்ட பொம்மைகளாக ஆட்டுவிக்கிறது குரூர திராவிட மாடல் அரசு. அதற்கு ஏற்ப, அந்த அதிகாரிகள் தனி நீதிபதியின் முந்தைய உத்தரவை மதிக்காமல், தீபத் தூணில் தீபம் ஏற்றத் தடை செய்தனர்.

 

பொம்மைகள் தானாக மன்னிப்புக் கேட்பதை பொம்மலாட்டக்காரன் எப்படி அனுமதிப்பான்? கோர்ட் அவமதிப்பு வழக்கை சந்திக்கையில், தங்கள் பொம்மை உத்தியோகம் நிலைக்க அந்த பொம்மைகள் மன்னிப்புக் கேட்டால்தான் உண்டு. அப்போது பொம்மைகள் மீது நீதிபதி கருணை காட்டுவாரா என்று இப்போது தெரியாது.

 

 

3. கேள்வி: "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று மதிமுக சார்பில் தப்பித் தவறி ஒரு சொல் கூடப் பேசியது கிடையாது. நேற்று வரையிலும் இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை; இனியும் வைக்க மாட்டோம்" என்று திமுக-விடம் தனது கட்சியின் எதிர்பார்ப்பு குறித்து வைகோ பேசி இருக்கிறாரே?

 

பதில்: பாஜக தலைவர் அமித் ஷா, 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம்' என்று சொல்கிறார். அந்தக் கூட்டணிக்குத் தமிழகத்தில் தலைமை தாங்கும் அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்' என்று கூறுகிறார். அதாவது, பாஜக-வை ஆட்சியில் சேர்க்கமாட்டோம் என்கிறார் எடப்பாடி. அந்த மனிதரை 'பாஜக-வின் அடிமை' என்று சொல்லி வருகிறார் ஸ்டாலின்.

 

வைகோ இப்போது பேசியதைப் பார்த்தால், ஸ்டாலின் அகங்காரத்துடன் வழங்கும் அடிமைப் பட்டத்திற்குத் தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி அல்ல, அது மற்றொருவர்.

 

 

4. கேள்வி: "சுடுகாடு இருக்கும் இடத்தில்தான் பிணத்தை எரிப்பார்கள். வேறு எந்த இடத்திலும் பிணத்தை எரிக்க மாட்டார்கள். அதுபோல், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும். புதிய இடமான தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை அனுமதிக்க முடியாது" என்று அமைச்சர் ரகுபதி பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு மதிப்பான இடத்தில் தகுதியான மனிதர் இருந்தால்தான் அவரது பேச்சும் செயலும் அவர் இடத்திற்குப் பொருத்தமாக இருக்கும். சுடுகாட்டு வெட்டியானை சங்கீத வித்வான் மேடையில் அமர்த்தினால் அபஸ்வரம் அதிகமாகக் கேட்கும்.

 


5. கேள்வி: நாயின் குழந்தை நாய்க் குட்டி, பூனையின் குழந்தை பூனைக் குட்டி, ஆட்டின் குழந்தை ஆட்டுக் குட்டி. ஆனால் மாட்டின் குழந்தை மாட்டுக் குட்டி இல்லை, கன்றுக் குட்டி. ஏன் இந்த வேறுபாடு?

 

பதில்: இதை ஆராய வேண்டாம். இது பெரிய விஷயமில்லை. குட்டி விஷயம்!


பகுதி 36 // 09.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (06.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: 2026 திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளைச் சேர்க்கும் நோக்கில், பொதுமக்களின் நேரடி கருத்துகளைப் பெற முதல்வர் ஸ்டாலின் ஒரு மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்திருக்கிறாரே?

 

பதில்: போதிய உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை மக்களுக்குச் சாத்தியமாக்குவது அரசின் கடமை. இதில் கால் பகுதி கூட நிறைவேறாமல் நமது அப்பாவி மக்கள், வழி தவறிய குழந்தைகள் மாதிரி நடுரோட்டில் நிற்கிறார்கள். அப்போது, பிள்ளை பிடிக்கும் ஒருவர் அவர்களிடையே வந்து புதிதாக ஒரு கிளுகிளுப்பையை ஆட்டுகிறார் - அதுதான் ஸ்டாலின் அறிமுகப் படுத்தும் மொபைல் போன் செயலி.

 

 

2. கேள்வி: "தமிழகத்தில் ஏதாவது பணி செய்யவேண்டும் என்றால் 'முதலில் 20 சதவீதம் கமிஷன் கொடுங்கள்' என்கிறார்கள்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வந்து பேசி இருக்கிறாரே?

 

பதில்: தமிழகத்தில் கமிஷன் வாங்கப்படுகிறது என்பது, பகுதி உண்மை. அதைக் குறிப்பிட்டு, கமிஷன் சதவீதம் எவ்வளவு என்பதையும் அமித் ஷா சொல்லியிருக்கிறார். அந்தக் கமிஷன் சதவீதத்தை யார் நிர்ணயித்துக் கறாராக வசூல் நடைபெறச் செய்கிறார் என்பது, இன்னொரு பகுதி உண்மை. அமித் ஷா அதைச் சொல்லவில்லை. அது அனைவரும் அறிந்த உண்மை.

 

 

3. கேள்வி: எண்ணை வளம் மிக்க வெனிசுலா நாட்டைத் தாக்கி அந்நாட்டு அதிபரைக் கைது செய்து அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து, அவர்மீது அமெரிக்க நீதிமன்றத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கை அமெரிக்கா நடத்தும் என்கிறார் டிரம்ப். இது சரியா?

 

பதில்: வெனிசுலாவின் எண்ணை வளத்தை அபகரிக்க அராஜகம் செய்கிறார் டிரம்ப். 'இன்னொரு நாடு எங்கள் நாட்டுக்குள் போதைப் பொருட்களைக் கடத்துகிறது' என்ற சாக்கில், உலகில் வேறு எந்த நாடும் அமெரிக்கா போல மற்றொரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க முடியாது.

 

முன்பு டிரம்பே வெட்கமில்லாமல் கேட்டாலும், அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு வழங்காமல் தனது மானம் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டது நோபல் கமிட்டி. 

 

 

4. கேள்வி: 20 லட்சம் அரசு கல்லூரி மாணவ மாணவியருக்குத் தமிழக அரசு இலவச லேப்டாப் தரும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். இது பயன் தருமா?

 

பதில்: பொதுவாகத் தமிழக அரசுக் கல்லூரிகளில் மேன்மையான ஆசிரியர்களோ, மாநிலத்தில் சிறந்த கல்விச் சூழலோ இல்லை. நமது கல்லூரி மாணவர்களின் கல்வி ஆர்வமும் அதை ஒட்டி இருக்கிறது. ஆகையால் இலவச லேப்டாப்கள் பெறுகின்ற மாணவர்களில் 1 சதவீதம் பேருக்கு மட்டும் அதில் கல்விப் பயன் கிடைக்கலாம். மீதி 99 சதவீத மாணவர்களுக்கும் இன்றோ நாளையோ ஓட்டு உள்ளதால், இலவச லேப்டாப் திட்டத்தை எந்தக் கட்சியும் எதிர்க்க முடியாது. செலவுக்கேற்ற பயனில்லாமல் நாம் மேலும் வரி அழவேண்டும்.

 

அரசு லேப்டாப்கள் தங்களுக்கு 20 லட்சம் ஓட்டுகளைக் கொண்டு வரும் என்று திமுக எதிர்பார்க்கும். அதுவும் 1 சதவீதம் நிறைவேறலாம்.

 


5. கேள்வி: கையெழுத்து, தலையெழுத்து. இரண்டிற்கும் ஒற்றுமை, வேற்றுமை என்ன?

 

பதில்: ஒற்றுமை: இரண்டையும் புரிந்துகொள்வது கடினம். வேற்றுமை: நீங்கள் உங்களின் பெயரை மாற்றிவைத்துக் கையெழுத்தை எப்படியும் மாற்றலாம். தலையெழுத்திடம் அந்தப் பாச்சா பலிக்காது.


பகுதி 35 // 06.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr