Friday, 27 March 2026

கேள்வி-பதில் (25.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்:

 

அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் இலவச பிரிட்ஜ்;

 

அனைத்து குடும்பங்களுக்கும் விசேஷ உதவித் தொகையாக, ரூபாய் பத்தாயிரம்;

 

ஒவ்வொரு தீபாவளிக்கும், குடும்ப அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு இலவச உயர்தரப் புடவை; ஆண்களுக்கு இலவச உயர்தர வேட்டி;

 

ஆகிய தேர்தல் வாக்குறுதிகளையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த, வேலை வாய்ப்பை அதிகரிக்க, தொலைநோக்கும் முனைப்பும் இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி. ஆகையால் கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை அவர் அள்ளி வீசியிருக்கிறார். இதில் அவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நிகரானவர்.

 

அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேறு எந்த விதத்தில் பழனிசாமி ஸ்டாலினுக்கு அருகில் வருவார், எவ்வளவு அருகில் வருவார், என்பதைத் தற்போது கணிக்க முடியாது.

 

பாஜக-வைப் பொறுத்தவரை, அது ஒரு புறம் வெளிப்படையாக ஸ்டாலினை எதிர்க்க வேண்டும். இன்னொரு புறம், பின்னணியில் பழனிசாமியைச் சமாளிக்க வேண்டும். வேறு வழி இல்லை.

 

 

2. கேள்வி: "கனிமொழியை மாநில அரசியலுக்கு வரவிட மாட்டார்கள். அவரை மாநில அரசியலுக்கு வரவிடாமல் தடுப்பது யார் என அனைவருக்கும் தெரியும்" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசி இருக்கிறாரே?

 

பதில்: 'கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால், அவர் நாம் தமிழர் கட்சியை ஓரம் கட்டுவார், அதனால் நாம் தமிழர் கட்சி பலவீனப் படும், அதனால் திமுக மேலும் வலிமை பெறும்; அப்படி ஏதும் நல்லது நடக்காமல் இருக்க, கனிமொழி மாநில அரசியலுக்கு வருவதை யாரோ தடை செய்கிறார்கள்' என்று கவலைப் படுகிறாரா சீமான்?

 

திமுக-வை எப்போதும் கடுமையாக எதிர்க்கும் சீமானைப் பொறுத்தவரை, கனிமொழி திமுக-வின் எம்.எல்.ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன? கனிமொழி திமுக-வின் தலைவராகவே ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன?

 

சீமான் பேச்சில் அவ்வப்போது 'போகஸ்' என்பது ஜூட் விட்டு ஓடுகிறது. ஸ்டேண்ட்-அப் காமெடியன் மாதிரி அவர் எல்லா விஷயங்களையும் பேசுகிறார். ஒரு சீரியஸ் அரசியல் தலைவருக்கு இது அழகல்ல.

 

 

3. கேள்வி: சரத்குமார் தோற்றுவித்த சமத்துவ மக்கள் கட்சியை அவர் பாஜக-வுடன் இணைத்துவிட்டார். பின்னர், "கட்சியில் எனக்குப் பதவி வழங்கப் படாததில் என் ஆதரவாளர்களுக்கு ஆதங்கம் இருக்கிறது. எனக்கும் ஆதங்கம் இருக்கிறது" என்று காமிரா முன்பாகப் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார், அது பற்றிக் கட்சியிடம் கடிதமும் கொடுத்திருக்கிறாரே?

 

பதில்: ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர் கட்சிக்குள் முன்னுக்கு வரமுடியவில்லை, கட்சிப் பதவிகளைப் பெற முடியவில்லை, என்றால் அது பற்றிய மனக்குறையை அவர் பத்திரிகையாளர்களிடமா பேசுவார், அதுவும் காமிரா முன்பாக? கட்சிக்குள் தொண்டர்களும் நிர்வாகிகளும் அவர் ஒரு கட்சிப் பதவிக்கு வரவேண்டும் என்று விரும்புகிற மாதிரி சரத்குமார் நடந்துகொண்டாரா, அதற்கான திறமையும் சாமர்த்தியமும் சரத்குமாரிடம் இருக்கிறதா? தெரியவில்லை.

 

சரத்குமாரின் போக்கு சரியில்லை. 'கட்சியில் எனக்குப் பதவி கிடைத்தால் நான் கட்சியில் இருப்பேன். இல்லையென்றால் லெப்ட், ரைட், ஸ்ட்ரெயிட், ரிவர்ஸ் என்று நான் எந்தப் பக்கமும் கால் வைத்து நகரலாம்' என்ற செய்தியைச் சரத்குமார் அனைவருக்கும் உணர்த்திவிட்டார். அவர் எப்போது நகர்ந்தாலும், 'முன்பே என் ஆதங்கத்தைத் தெரிவித்துக் கட்சியிடம் கடிதம் கொடுத்தேன்' என்று சொல்லிக் கொள்ளலாம். கட்சியில் அவர் தொடர்ந்தாலும், கட்சிக்கு எதிராகத் தன் மனக்குறையைக் காமிரா முன் பேசியது - அது எந்தக் கட்சியாக இருந்தாலும் - கட்சிக்குள் அவருக்கு என்றும் சுமையாக அமையும்.

 

 

4. கேள்வி: "ஆப்பரேஷன் சிந்தூர்  வாயிலாக இந்தியா ராணுவ ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், பாகிஸ்தானின் ராஜதந்திர ஈடுபாடும், செய்திகளைக் கையாளும் விதமும், மத்திய அரசின் முயற்சியை விட மிகவும் சிறப்பாக உள்ளது" என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ்  தற்போது அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: ஜெய்ராம் ரமேஷ் இப்படியும் ஒரு அறிக்கை தரலாம்: "ராகுல் காந்தி லோக் சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதை விட, பாகிஸ்தான் நாட்டின் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினால் சிறப்பாகச் செயல்படுவதற்கு வாய்ப்பு கிடைக்கும், அதற்காக அங்கு மதிக்கப் படுவார்." ராகுல் காந்தியை மகிழ்விக்கப் பாதி மறையைக் கழட்டிய ஜெய்ராம் ரமேஷ், அதை முழுதாகக் கழட்டி விடலாம்.

 


5. கேள்வி: வரும் சட்டசபைத் தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது; திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்கும் என்று அவர் அறிவித்து விட்டார்.

 

கமல் ஹாசன் தன்னை விளக்கி வெளியிட்ட நீண்ட அறிக்கையில், "நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதிகள் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை .... நாட்டுக்கான போராட்டத்தில், தமிழகம் முன்னணியில் நிற்கிறது. அதற்கு உறுதுணையாக நிற்கவேண்டியது என் கடமை. எனக்கு அரசியல், தொழில் அல்ல; கடமை" என்று  சொல்ல, அதற்கான பதில் அறிக்கையை ஸ்டாலினும் உடனே வெளியிட்டு, "அவருக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு, என்னை நெகிழ வைத்துவிட்டது .... அவரது பெருந்தன்மையான முடிவை, வரலாறு பாராட்டும்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: இரண்டு ஹீரோக்கள் ஒரு கிளைமேக்ஸ் காட்சியில் தோன்றுகிறார்கள். "உனக்கு உன் வழி, எனக்கு என் வழி" என்று சொல்லி இருவரும் முடிவில் பிரிவதுதான் அசல் கதை. ஆனால் அந்தக் காட்சியை நாசுக்காக நகர்த்தி, அவர்கள் இருவரும் ஒரே பாதையில் இணைந்து பயணிப்பது போல் அவர்கள் இருவருக்கும் டயலாக் எழுதிய வசனகர்த்தா  பாராட்டுக்கு உரியவர். இரண்டு ஹீரோக்களில் ஒருவர் தனக்கான வசனத்தை அவரே நீள நீளமாக எழுதுபவர்.

 

உயிரோட்டத்துடன் நடித்த இரண்டு நடிகர்களுக்கும் சபாஷ். சிறந்த நடிகருக்கான விருதை இரண்டு நடிகர்களுக்கும் கூட்டாக அளிக்கலாம்.


பகுதி 71 // 25.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

 

Sunday, 22 March 2026

கேள்வி-பதில் (21.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: 'நாட்டின் நலனைக் கருதி இந்தியா கூட்டணியில் தொடர்கிறேன்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறாரே?

 

பதில்: கமல் ஹாசன் ஒரு மஹான். நாட்டுடன் தன்னை முற்றிலும் ஐக்கியப்படுத்திக் கொண்டு, இரண்டில் யாருடைய நலன் எதனுடையது என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி திணறுகிறார். அனுதாபப் படலாம்.

 

 

2. கேள்வி: வைரமுத்துவின் எழுத்துகளுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டதின் நன்மை தீமைகள் என்ன?

 

பதில்: இனி ஞானபீட விருது தனக்குக் கிடைக்கவில்லையே என்று எந்தத் தமிழ் எழுத்தாளரும் கவலைப்பட மாட்டார். இது நன்மை.

 

வைரமுத்துவுக்கு வழங்கிய ஞானபீட விருதைத் தனக்கும் கொடுத்து விடுவார்களோ என்று சில தமிழ் இலக்கிய கர்த்தாக்கள் இனி அச்சப்படலாம். இது தீமை.

 

 

3. கேள்வி: வைரமுத்து ஞானபீட விருது பெற்றதற்காக, அவரிடம் நேரடியாக வாழ்த்து சொன்னவர்கள், அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்கள், என்று 168 பெயர்கள் கொண்ட ஒரு பட்டியலை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அத்துடன், பெயர் குறிப்பிடாத 'ஆயிரக்கணக்கான வாழ்த்தாளர்களுக்கும்' அவர் நன்றி சொல்லி இருக்கிறார்.

 

தனக்கு வாழ்த்து சொன்னவர்களின் பெயர்களை, கனகாரியமாக எதற்கு வைரமுத்து பகிரங்கமாக வெளியிடுகிறார்?

 

பதில்: வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் சிலர், அவர் ஞானபீட விருதுக்குத் தகுதியானவர் என்று நினைத்திருக்கலாம். இன்னும் சிலர் - அநேகமாக இவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் - அது பற்றிக் குறிப்பாகச் சிந்திக்காமல் சம்பிரதாயமாக, அவருடன் பரிச்சயம் ஏற்பட்ட நாகரிகத்திற்காக, அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கலாம்.

 

'வைரமுத்து ஞானபீட விருதுக்குத் தகுதியற்றவர்' என்று பொதுவெளியில் பல தமிழ் எழுத்தாளர்கள் வலுவான கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் வைரமுத்து இப்படிச் சொல்ல முனைகிறார்: 'ஞானபீட விருது எனக்குக் கிடைத்ததற்காக, குறிப்பிட்ட 168 நபர்கள் - அதோடு, நான் பெயர் வெளியிடாத பலர் - என்னை வாழ்த்தி இருக்கிறார்கள். ஆகவே எனக்கு வந்த வாழ்த்துச் செய்திகள் எனக்கெதிரான எதிர்ப்புக் குரல்களை அடக்கி, எல்லா எதிர்ப்பையும் கரைத்து விட்டன.' இப்படி ஒரு நாலாம் கிளாஸ் லாஜிக்கை மறைமுகமாக எடுத்து வைப்பதற்காக, தன்னை வாழ்த்தியவர்களின் பெயர்களை - அவர்களில் சிலர் நீதிபதிகள், ஐ. ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் - வைரமுத்து வெளியிட்டிருக்கிறார்.

 

தனிப்பட்ட முறையில் ஒரு நாகரிகத்திற்காகத் தனக்கு வாழ்த்துச் சொன்னவர்களின் பெயர்களை வைரமுத்து இப்போது - தனக்கு அறிவிக்கப் பட்ட விருதுக்கு பலத்த எதிர்ப்பு வந்த சூழ்நிலையில் - பட்டியலிட்டு வெளியிடுவது நாகரிகம் அல்ல.

 

தனக்கு ஞானபீட விருது அளிக்கப்படுவதற்கு இவ்வளவு நியாயமான வலுவான குரல்கள் வரும் என்று வைரமுத்து எதிர்பார்த்திருக்க மாட்டார். அவற்றுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், முகம் திருப்பி ஈனஸ்வரத்தில் ஏதோ நன்றி அறிக்கை விட்டிருக்கிறார் வைரமுத்து.

 

"எனக்கு ஞானபீட விருது அளிக்கப்படுவதற்குத் தமிழ் எழுத்தாளர்கள் பரவலான எதிர்ப்பு காட்டுவதால், நான் அந்த விருதை ஏற்காமல் இருக்கிறேன்" என்று வைரமுத்து ஒரு அறிக்கை வெளியிட்டு அமைதியாக ஒதுங்கலாம். இல்லாவிட்டால், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கருணாநிதிக்கு அளித்த டாக்டர் பட்டத்தின் மதிப்புதான், வைரமுத்து கைக்கு வரும் ஞானபீட விருதுக்கு வாய்க்கும்.

 

 

4. கேள்வி: "தமிழ்நாடு வளர்ச்சி அடைய, அடுத்த ஐந்தாண்டுகளும் திமுக ஆட்சி தொடர வேண்டும்" என்று அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

 

பதில்: எந்த நிலையில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்ததாக ஸ்டாலின் கருதுவாராம்? மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் முப்பதாயிரம் ரூபாய், இந்தியாவில் அனைத்து மொழித் திரைப்படங்களும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாயிலாக விநியோகம், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு நூறு ரூபாய் வசூல், என்று திமுக ஆட்சியில் நாம் காணும் நாளிலா?

 

நமது ஜனநாயகம் தவழ்கிறது, வளரவில்லை. அந்த தைரியத்தில் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

 


5. கேள்வி: "அமெரிக்கா இல்லாமல் நேட்டோ பாதுகாப்பு அமைப்பு (NATO) ஒரு காகிதப் புலி" என்று, ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ராணுவ ஒத்துழைப்பு தராத நேட்டோ நாடுகளை எச்சரிக்கும் விதமாக அதிபர் டிரம்ப் அறிக்கை விட்டிருக்கிறாரே?

 

பதில்: தலைமைப் பண்புகள் இல்லாமல், தோழமை நாடுகளிடம் கூடத் தன் மதிப்பையும் மரியாதையையும் இழந்தவர் அமெரிக்க அதிபர்  டிரம்ப். யாரும் உள்ளூர மதிக்காத பித்துக்குளி டிரம்ப் தலைமையில் அமெரிக்கா செயல்படுவதால், நேட்டோ அமைப்பு தனது புலி சொரூபத்தை இழந்து வேறு காட்சியைத் தருகிறது. கழுதைப் புலி.


பகுதி 70 // 21.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr