|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 2006ல்
நடைபெற்ற ஆட்சியைவிட சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்"
என அமைச்சர் கே. என். நேரு பேசி இருக்கிறார். எந்த வகையில் ஸ்டாலின் ஆட்சி
அதிகம் சிறந்தது? பதில்: அமைச்சர்
நேருவை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நேருவுக்கு எதிராக 1,000
கோடி ரூபாய்க்கு அதிகமான லஞ்சப் புகாரை அமலாக்கத் துறை தமிழக
அரசிடம் அளித்திருக்கிறது. ஒருவருக்குத் தாங்கமுடியாத சோதனைகள் ஏற்படும்போது,
"கடவுளே! நீ மிகப் பெரியவன். ஈடு இணையற்றவன். சர்வ வல்லமை
படைத்தவன். நானும் உனக்கு நிறைய நைவேத்தியங்கள் செய்திருக்கிறேன். என்னைக்
காப்பாற்று!" என்று ஒருவர் வேதனையுடன் உரத்து வேண்டிக் கொள்ளலாம். 20
வருடங்களுக்கு முன் அவர் தொழுத கடவுளை அன்று அவர் இப்படிப்
போற்றவில்லையே என்று கேட்டால், அப்போது அந்த ஆசாமிக்குப்
பெரும் சோதனைகள் வந்திருக்காது என்று அர்த்தம். |
|
2.கேள்வி: இந்திய
கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர், "சாதியவாதம், வகுப்புவாதம், பெரும்பான்மை வாதம், எதேச்சாதிகார வாதம் ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஒற்றுமையோடு ஓரணியில்
நின்று பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான தோழமைதான் நம்முடைய
தோழமை" என்று பேசி இருக்கிறார். அந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான தோழமை
அத்தகையதா? பதில்: ஸ்டாலின் பேசியது
அர்த்தமில்லாத வார்த்தைகள். ஆட்சியில் வாரிசுவாதம், சட்டம்-ஒழுங்கு பல்லிளிக்கும்வாதம், நிர்வாகம் குறட்டைவிடும்வாதம், கஜானா போண்டிவாதம்,
குடும்பத்தினர் மாயவளர்ச்சிவாதம் போன்ற கேடுகள் நிகழாமல் இருக்க,
நேர்மை, நிர்வாகத் திறன் மற்றும் மக்கள்
நலனுடன் ஆட்சி செய்பவர்கள் தோழமை கொள்ள வேண்டும். ஸ்டாலின் அதில் கோட்டை
விட்டிருக்கிறார். |
|
3. கேள்வி: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "நானும்
ராணுவ தளபதி ஆசிம் முனீரும் பண உதவி கேட்டு உலகம் முழுவதும் யாசகம்
எடுக்கும்போது நாங்கள் வெட்கப் படுகிறோம். எங்களது தலைகள் அவமானத்தால்
குனிகின்றன" என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறாரே? பதில்: தாங்கள்
அடக்குமுறை ஆட்சி செய்து, தனிப்பட்ட
முறையில் கொழிக்க வேண்டும் என்பதற்காகப் பாகிஸ்தான் ராணுவத் தலைமையும் அதன்
பொம்மையாகப் பிரதமரும் செயல்படும்போது, அந்த நாட்டில்
தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம் அதல
பாதாளத்தில் இருக்கும். அதற்குத் தொடர் காரணமாகத் தாங்கள் இருக்கிறோம்
என்பதற்காக ஷெபாஸ் ஷெரீப்பும் ஆசிம் முனீரும் உண்மையில் வெட்கப்பட வேண்டும். "நான்
இரவில் திருடப் போகும் நேரங்களில் போலீசிடம் மாட்டிக் கொள்வேனோ என்ற அச்சத்தில்
பயந்து பயந்து என் வேலையைச் செய்கிறேன்" என்று பேசும் திருடனுக்கு அனுதாபம்
கிடைக்காது. |
|
4. கேள்வி: "தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை கட்சிகளும் எங்களுக்குத் தோழமைக்
கட்சிகள்தான். பேசுவது, பழகுவது வேறு, அரசியலில் சேர்வது வேறு. எங்களுக்கு உரிய மரியாதை, எங்களுக்கு உரிய நியாயம் எங்கு கிடைக்கிறதோ அங்குதான் கூட்டணி” என்று
தேமுதிக தலைவர் பிரேமலதா கூறியுள்ளார். அவர் என்ன சொல்கிறார்? பதில்: தேர்தல் கூட்டணி
அமைப்பது ஒரு டீலிங்தான். இருந்தாலும் பிரேமலதா தனது கட்சியை அதிகத்
தொகுதிகளுக்கும் மற்ற பலன்களுக்கும் ஏலம் விடுவது மாதிரி அப்பட்டமாகக் காட்டிக்
கொள்ளாமல் இருக்கலாம். தேமுதிக இணையும் கூட்டணி, தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று அதன்
தலைமைக்கட்சி தனித்தோ அல்லது கூட்டணிக் கட்சிகளுடனோ ஆட்சி அமைத்தால், அப்போது எதிர் அணியினர் தேமுதிக-வுக்கு சிறந்த கூடுதல் 'மரியாதை' வழங்க முன்வந்தால், அப்போதுள்ள ஆட்சிக்குத் தேமுதிக அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொண்டு
தேமுதிக மேலும் உரிய மரியாதைகள் பெற அந்தக் கட்சி எதிர் அணியுடன் கூட்டு சேருமா?
தனது பகிரங்க ஏலத்தின் மூலம் எல்லா பிரதான கட்சிகளுக்கும் இந்த
அச்சத்தைப் பிரேமலதா அட்வான்ஸாகத் தருகிறார். |
|
5. கேள்வி: மனைவி
முக்கியமானவள் என்று புதுமொழி சொல்ல வந்து, 'மண்ணானாலும் மனைவி, பூண்டானாலும் பொஞ்சாதி'
என்கிறீர்கள். மனைவியை மண், பூண்டு
என்றெல்லாம் சொல்வது சரியா? பதில்: சரியா
என்று பார்க்கலாம். 'கல்லானாலும்
கணவன், புல்லானாலும் புருஷன்' என்பதற்கு
இணையாகச் சொன்னது, மனைவி பற்றிய புதுமொழி. அவர் கல்,
இவர் மண்; அவர் புல், இவர்
பூண்டு. சரிக்கு சரி! |
|
பகுதி 46 // 03.02.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |