Monday, 24 June 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: சுதா ரகுநாதன், உனக்கு நான் கை தட்டறேன்!



சங்கீதத்தை ரசிக்கற தமிழ்க்காராளுக்கு சுதா ரகுநாதன் யாருன்னு தெரியும். அந்த மாமி கர்நாடக சங்கீதத்துல பேர் வாங்கின பாடகி. அவாளை பத்தி கேள்விப்படாத மத்தவாளும், இப்ப ஒரு சம்பவத்துல சுதா ரகுநாதன் சங்கீத வித்தகர்னு வாட்ஸ்-அப் வழியா தெரிஞ்சிண்டிருக்கா. இப்படியே கர்நாடக சங்கீதமும் புதுசா நாலு பேருக்கு பரிச்சயமானா நன்னா இருக்குமேன்னு ஒரு நப்பாசை. சரி, மெயின் விஷயத்துக்கு வரேன்.

சுதா ராகுநாதனும் அவ ஆத்துக்காரரும் ஹிந்து மதம்னு எல்லாருக்கும் தெரியும். அவாளுக்கு ஒரு பொண்ணு - அவளும் பிறப்புல ஹிந்துதானே? அந்தப் பொண்ணு, ஒரு கிருஸ்தவ பெயர் உள்ள பையனை கல்யாணம் பண்ணிக்கப் போறா. அதுக்கு சுதா ராகுநாதனும் அவ ஆத்துக்காரரும் சேர்ந்து ஒரு கல்யாண ரிசப்ஷன் அழைப்பிதழ் அடிச்சிருக்கா. சில பேர் அந்த இன்விடேஷனை வாட்ஸ்-அப்புல படமா போட்டு, "தன் பொண்ணு ஒரு கிருஸ்தவனை கல்யாணம் பண்ணிண்டாலும், சுதா மாமி அதுக்கு ரிசப்ஷன் வச்சு அழைக்கறாளே! இது அடுக்குமா? இனிமே ஹிந்து கடவுள்கள் மையமான கீர்த்தனைகளை சுதா ரகுநாதன் பாடலாமா? அது தப்பாச்சே!"ன்னு கண்டனம் பண்ணி சுதாவை வறுக்கறா. சுதாட்ட முதல்ல ஒண்ணு சொல்றேன். "வருத்தப்படாதம்மா. நான் உனக்கு வக்காலத்து வாங்கறேன்."

அந்நிய தேச முஸ்லிம் ராஜாக்கள் இந்தியவுல படையெடுத்து ஆட்சி பண்ணின போது, அவா ஹிந்துக்களை இம்சை பண்ணினா, கத்தி முனைல மதம் மாத்தினா, ராமர் கோவிலை இடிச்சு மசூதி கட்டினா, ஹிந்து மதத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தினா. அப்பறம் வெள்ளைக்காரன் ஆட்சி வந்தது, போனது. இப்ப சுதந்திர நாட்டுல நம்மளே விசித்திரமான மத சட்டங்களை வச்சிருக்கோமே? அதையும்  சாதகமா பயன்படுத்தி வக்கிர அரசியல்வாதிகள் என்ன பண்றான்னா, பொறுமையான ஹிந்துக்களை உதாசீனம் பண்றா, சிறுபான்மை ஜனங்களை  தாஜா பண்ணி ஓட்டு வாங்கறா, முஸ்லிம் ராஜாக்கள் ஆரமிச்ச ஹிந்து மத சரிவையும் தீவிரம் ஆக்கறா.  இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கத்துல சிறுபான்மை மத தலைவர்கள், அதுவும் கிறிஸ்தவ பாதிரியார்கள், சாதாரண ஹிந்துக்களை ஏமாத்தி மதமாற்றம் பண்றா. இதெல்லாம் இந்தியாவோட உயிர் அடையாளமான ஹிந்து மதத்துக்கும் ஹிந்து கலாசாரத்துக்கும் பெரிய இடி. தன்னோட மதத்தை பெருமையா நினைக்கற ஹிந்துக்களுக்கு ரணம். அதுனால, பேரிழப்புல தவிக்கற ஹிந்துக்களுக்கு, தங்கள்ள ஒருத்தர் தானாவே, யார் கட்டாயமும் இல்லாம,  இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாலும்  அதை ஏத்துக்கறது கஷ்டமா இருக்கு.  தானா அப்படி மதம் மாறினவாளை, அவா அம்மா அப்பா தள்ளி வைக்காம இருந்தா, அந்த அம்மா அப்பாவும் பல ஹிந்துக்கள் கோபத்துக்கு ஆளாகலாம்.

வாட்ஸ்-அப்புல வம்பு கிடைக்கும். உண்மை கிடைக்குமான்னு யாருக்குத் தெரியும்? சுதா ரகுநாதன் வீட்டு விஷயத்துலயும், அவாத்து பொண்ணுக்கு இப்படி கல்யாணம் நடக்கப் போறதுங்கறது உண்மை - மத்த சமாசாரங்கள் நமக்கு முழுசா தெரியாது. ஆனா அவா வீட்டுலயும் கல்யாணப் பொண்ணு மதம் மாறிருக்கா, அதை சுதாவும் அவா ஆத்துக்காரரும் ஏத்துண்டாச்சுங்கற அனுமானத்துல வாட்ஸ்-அப் கண்டனங்கள் பறக்கறது. இது உண்மையா இருந்தாலும், கோபிக்கறவா கொஞ்சம் யோசிக்கணும்.

இந்தக் காலத்துல பதினாறு-பதினேழு வயசு பொண்ணு பையன்களையே அம்மா அப்பா வார்த்தை கட்டுப்படுத்தறதா? ஏதோ குறைச்சலாத்தான் இருக்கும். அதைத் தாண்டி, கல்யாண விஷயம் எப்படி இருக்கு? ’பொண்ணு பையன் இஷ்டப்பட்டா நம்ம வரன் பார்ப்போம். இல்லை, அவாளே ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணி வைக்கச் சொன்னா பண்ணி வைப்போம். ஆனா நாமளே முனைஞ்சு யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி, அது சரியில்லாம போயி, பழி நமக்கு வரவேண்டாம்’னு பெத்தவா பரவலா கவலைப் படறா. இதுவும் பெத்தவாளோட நல்ல மனசுலேர்ந்து வர்ற எண்ணம்தான். ஏன்னா, குழந்தைகளுக்கு அவா விருப்பப்படி வாழ்க்கைத்துணை கிடைக்கும்போது, அவாளோட மண வாழ்க்கைல ஒரு பிரச்னை வந்தா  அதை அவாளே தன் பொறுப்புல சரி பண்ணிப்பா. ஆனா, வீட்டுல பார்த்த வரனை கல்யாணம் பண்ணிண்டு சின்னதா கணவன்-மனைவி பிரச்சனை வந்தாலும், அம்மா அப்பா நமக்கு சரியா பார்த்து வைக்கலையோன்னு குழந்தைகள் நினைக்கலாம்’ அப்படின்னுதான் பெத்தவா அக்கறையோட நினைக்கறா. கால நிலவரம் இப்படி இருக்கு. இந்த விஷயத்துல, அம்மாக்காரி ஒரு பிரபல பாடகியா இருந்தாலும் அவாளும்  அவ ஆத்துக்காரரும் இப்படித்தான் நினைப்பா.

          எந்த அம்மா அப்பாவும் தன் பொண்ணுக்கோ பையனுக்கோ வரன் பார்க்கணும்னா தன்னோட மதத்துல, தன்னோடா ஜாதில பாக்கறதுதான் சுபாவம். அந்த மாதிரி குடும்பங்கள்தான் அவாளுக்கு நம்பிக்கையா அறிமுகம் ஆகும், சுலபமா பரிச்சயம் பண்ணிக்க முடியும். பொண் பிள்ளைகள் தானா விருப்பப் பட்டு வேற ஜாதி, மதத்துலேர்ந்து ஒரு துணையை தேர்வு பண்ணிண்டா அம்மா அப்பா என்ன பண்ணுவா? ரகசியமா வருத்தப் பட்டாலும், அந்த கல்யாணத்தை ஏத்துண்டு புது ஜோடியை ஆசீர்வாதம் பண்றதுதான் அனேகமா நடக்கும். இந்த மாதிரி கல்யாணத்துக்காக, அம்மா அப்பா தன்னோட குழந்தையை உதற முடியாது.  அதுதான் அம்மா அப்பா.

எந்த நாட்டுலயும், எந்தக் காலத்துலயும் அம்மா அப்பாக்கள் வேற, பொண் பிள்ளைகள் வேற. அதுவும் அம்மாக்கள் அவா பொண் பிள்ளைட்ட காட்டற அரவணைப்பு அலாதி. ராஜிவ் காந்தியோட கொலைக்காக ஜெயில்ல ஆயுள் தண்டனை அனுபவிக்கறானே பேரறிவாளன், அவனோட அம்மாதான் அற்புதம்மாள். அந்த அம்மா தன்னோட பையன் முன்கூட்டியே விடுதலை ஆகணும்னு தினமும் துடிக்கறா. பொது நன்மைக்காக அரசாங்கம் அவனை விடுதலை செய்யக் கூடாதுன்னு நாம நினைக்கலாம். ஆனா ஒரு அம்மாவா அற்புதம்மாள் ஆசைப்படறதை நீங்க குறை சொல்லக் கூடாது, அவாளை நீங்க அனுதாபத்தோட புரிஞ்சுக்கணும். அதுனால, எல்லா விஷயத்துலயும் அம்மாக்களோட பாசத்துக்கும் பரிவுக்கும் வந்தனம் சொல்லுங்கோ. அவா நன்னா பாடுவான்னா அதை கைதட்டி பரிபூரணமா ரசிங்கோ. நான் சொல்றது ரைட்டா?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019



Sunday, 9 June 2019

அரசியலுக்கும் அழுக்கென்று பேர்!


"தமிழுக்கும் அமுதென்று பேர்". இது பாரதிதாசனின் கவிதை வரி. 

நமது   ஜனநாயகத்தின் பல அம்சங்களுக்கு 'வேறு என்ன பேர்?' என்ற கேள்வியை, ஏதோ கவிதை பாணியில் கேட்டு வைக்கிறேன் (கவிதை ரசனை உள்ளவர்கள் மன்னிக்கவும்!). இதில் கவிதை தெரியாவிட்டாலும் உங்கள் கோபத்தையாவது பார்க்கலாம்.
                                                                                                                                                                                  


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தம்மைத் தொழும் மக்களை 
        சிதைக்கின்ற அரசியலார்
        சிறுமைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தம்தேச கஜானாவை
        கொள்ளையிடும் மந்திரிமார்
        கொடுமைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தாய்மொழிக் காதலென்று
        கபடத்தில் ஊரேய்க்கும்
        கீழ்மைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தம் சக்தி உணராத
        மக்களெனும் எஜமானர்
        மடமைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தன்னாட்சி கண்ட நம்
        பொல்லாத ஜனநாயக
        பொய்மைக்கு வேறென்ன பேர்?


Wednesday, 5 June 2019

தமிழ் வாழ்க! தமிழன் தவழ்க!


தமிழர்களுக்கு அவ்வப்போது தமிழ் ஜுரம் ஏறவைத்து, அதில் பயன் அடையும் திராவிட அரசியல் தலைவர்கள் உண்டு. இந்த முயற்சியில் இப்போதைய ஆட்டத்தில் வெற்றி கண்டவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின். தோல்வி யாருக்கு என்று கேட்கிறீர்களா? வழக்கப்படி தமிழனுக்குத்தான்.

ஸ்டாலின் நம்மை நம்பவைப்பது போல், உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் இப்படி நினைக்கிறார்களா?: ’நான் பின் தங்கினாலும் தமிழ் வாழட்டும். ஹிந்தி வேண்டவே வேண்டாம். தமிழ் நாட்டில் ஹிந்தி எப்படி நுழைந்தாலும் அது ஹிந்தி திணிப்புதான். வேண்டுமானால், அரசியல்வாதிகளின் குடும்பங்கள் நடத்தும்  உயர் கட்டண பள்ளிக்கூடங்களில் கட்டாயமாகக் கூட ஹிந்தி கற்றுக் கொடுக்கட்டும். ஆனால் இலவசமாக, கட்டாயப் பாடமாக அரசுப் பள்ளிகளில் ஹிந்தி சொல்லித் தரக் கூடாது.’ தொலைக்காட்சியை பரவலாகப் பார்க்கும் தமிழக மக்கள் இப்படி அடிமுட்டாள்தனமாக நினைக்க மாட்டார்கள். அப்படியானால் தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு  ஏன் அரசியல் ரீதியாக எடுபடுகிறது, அதுபோல் ஏன் தோற்றம் தெரிகிறது? சற்று உன்னிப்பாக பார்க்கலாம்.

மக்கள் நலம் விரும்பும் அரசியல் தலைவர்கள், அரசு மூலமாக என்ன செய்வார்கள்? வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் எனப்படும் சுகாதாரமான இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ சேவை, சுத்தமான குடிநீர், தரமான சாலைகள், போக்குவரத்து வசதி, திடமான சட்டம் ஒழுங்கு ஆகியவை மக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்வார்கள். இவற்றில் ஒன்றாவது, 50-ஆண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ் நாட்டில் பாராட்டும்படி நிறைவேற்றப் பட்டிருக்கிறதா? இல்லை. இந்தத் தேவைகளுக்காக அனேக மக்கள் இன்றும் அரசாங்கத்திடம் கைகூப்பி நிற்கிறார்கள், அல்லல் படுகிறார்கள். அரசாங்கத்தை வழிநடத்தும் அரசியல் தலைவர்களின் பிடியில் தாங்கள் சிக்கி இருப்பது அவர்களுக்குத் தெரியும். அந்தப் பிடியிலிருந்து தாங்கள் சுலபமாக விடுபட முடியாது, அதற்கான சக்தி தங்களுக்கு இல்லை, அரசியல் தலைவர்கள் அராஜகமும் செய்து நம்மை அடக்குவார்கள்,  அவர்கள் பெரிய மனது வைத்தால் மட்டுமே தங்களின் கஷ்டங்கள் குறையலாம் என்பதும் ஜனங்களுக்குப் புரியும்.  

இப்படியான நிலையில், "தமிழர்களே, மத்திய அரசு  உங்கள் மீது ஹிந்தியை திணிக்கப் பார்க்கிறது! நமது உயிர் மூச்சான தமிழுக்கு ஆபத்து! நீங்கள் போராட்டத்திற்குத் தயாராகும் நாள் வருகிறது!" என்று பலம் மிக்க ஒரு தமிழ்நாட்டு அரசியல் தலைவர் குரல் கொடுத்தால், அவலத்தில் இருக்கும் மக்கள் இப்படி நினைக்கிறார்கள்: 'ஹிந்தி படித்த தமிழன் தமிழ்நாட்டை விட்டு வெளியே வேலைக்குப் போய்விட்டான். அவன் இந்த மாநிலத்தைப் பற்றி கவலைப்பட மாட்டான். ஹிந்தி படிக்காத நமக்கு தமிழ்நாடுதான் கதி, நாம் அண்ணாந்து பார்க்கும் தலைவர்தான் நமக்கு விமோசனம்.  இவர் தயவு நமக்கு வேண்டும். இவர் விருப்பப்படி, தமிழுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று நாமும் காட்டிக் கொண்டால் நம்மை ஆட்டுவிக்கும் தலைவர் மனம் மகிழ்ந்து, அவர் நமது வாழ்க்கைத்தரம் உயர ஏதாவது செய்யலாம். ஆகையால், நமது வாழ்க்கை வசதி எப்படி சீரழிந்து இருந்தாலும், அதைவிட தமிழ் மொழிதான் இப்போது நமது எண்ணம், அதன் பெருமைதான் நமது குறிக்கோள் என்று நாமும் தோற்றம் தருவோம். காசா பணமா? நாம் படிக்காத ஹிந்திக்கு, நமக்கு தமிழ்நாட்டில் தேவைப்படாத மொழிக்கு எதிர்ப்பு, அவ்வளவுதானே? போடச் சொன்ன கோஷத்தை நாமும் போட்டு வைப்போம்! எப்படியோ தலைவரின் உள்ளம் கனிந்து நமக்கு நல்லது கிடைக்கட்டும்!’

ஸ்டாலினின் அரசியல் சக்தியைப் பார்த்து மற்ற பெரிய சிறிய கட்சித் தலைவர்கள் 'தாங்களும் தமிழ் உணர்வில் சளைத்தவர்கள் இல்லை' என்று அவரவர் வழியில் ஹிந்தி எதிர்ப்பு அறிக்கைகள் விட, ஏதோ தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக தீர்மானமாக "ஹிந்தி படிக்க மாட்டோம்" என்று நினைப்பதாக ஒரு பிரமை தோன்றி இருக்கிறது. இப்படியாக, ‘தமிழ்ப் பற்று’ என்ற களத்தில் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற, அனேக மக்களும் அதை ஏற்பது மாதிரி நடிக்க, ‘ஹிந்தி எதிர்ப்பு’ நாடகம் அவ்வப்போது தமிழ் நாட்டில் அமோகமாக நடக்கிறது. இது ஒரு நாடகம்தானா என்பதை பரிசோதிக்க ஒரு கற்பனை  செய்து பாருங்கள்.

ஸ்டாலினே இப்போது ஒன்று செய்வதாக நினைத்துப் பாருங்கள். அதற்கு அ.தி.மு.க-வும் மற்ற பல திராவிட அரசியல் கட்சிகளும் ஆதரவு தருகிறார்கள் என்றும் நினைத்துக் கொண்டால் இன்னும் நல்லது. அதாவது, ஸ்டாலினும் மற்ற அரசியல் கட்சி தலைவர்களும், “தமிழ் நாட்டு மக்கள் இந்தி கற்பது அவர்களின் எதிர்காலத்துக்கு நன்மை செய்யும். தமிழைத் தாயென தொழுவோம்! இந்தியை சித்தியாக நேசிப்போம்! நம் சித்தியிடம் நேசம் காட்டுவதால், நம் தாயுடனான பாசப் பிணைப்பு மங்கிப் போகுமா என்ன? தமிழைக் காப்போம்! இந்தியை கற்போம்! தமிழ் உனர்வில் வாழ்வோம்! வடக்கிலும் வளர்வோம்!” என்று அறிக்கை விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழுந்து, “எங்களுக்கு ஹிந்தி வேண்டாம். வேண்டவே வேண்டாம்!” என்று சாராயக் கடைகளுக்கு பெண்கள் எதிர்ப்பு காட்டியது போல் வீதிக்கு வந்து போராடுவார்களா, அல்லது சிரித்துவிட்டுப் போய் தங்கள் வேலையைப் பார்ப்பார்களா? இதில் சிரிப்பு விஷயம்தான் நடக்கும் என்பது உங்களின் ஊகமாக இருக்கும். இந்த சரியான ஊகம், ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தையும் உணர்த்துகிறதா?  நமது போலி ஜனநாயகத்தையும் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறதா?

          இன்னொரு விஷயமும் பாருங்கள். அறியாமல் தெரியாமல் அந்தக் காலத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு, அந்த மொழி கற்காமல் வாழ்க்கையில் வாய்ப்புகளை இழந்த தமிழ்நாட்டு பெரியவர்கள் இன்று மௌனமாக வருந்துகிறார்கள். தாங்கள் செய்த தவற்றை தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு அவர்கள் சொல்லி எச்சரிப்பார்கள். இந்த நாளின் தமிழ்நாட்டு இளைஞர்களும் ஹிந்தி படிப்பதின் அவசியத்தை தாங்களாகவே பல வழிகளில் உணர முடியும். இன்றைய ஸ்டாலின் நேற்றைய கருணாநிதி அல்ல. இன்றைய தமிழ்நாட்டு  மாணவர்களும் அவர்களின் அப்பா தாத்தா மாதிரி கண்கட்டப்பட்ட நிலையில் இல்லை. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்பு பூதமாக இருந்த தி.மு.க,   வெறும் பூச்சாண்டியாக மாறிப் போகுமோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019


Friday, 24 May 2019

வாக்காளர் பா.ஜ.க-விற்கு கொடுத்தது: தேசிய அளவில், மாங்கா. தமிழ் நாட்டில் கடுக்கா

நிம்மதி, மகிழ்ச்சி. இந்த இரண்டையும் நேற்றைய லோக் சபா தேர்தல் முடிவுகள் உங்களுக்கு அள்ளிக் கொடுத்ததா?  ஆம் என்றால் நீங்கள் இந்தியாவை நேசிப்பவர்.

அரசியல் பற்றி அதிகம் விவாதிக்காதவர்களும் பா.ஜ.க லோக் சபா தேர்தலில் அடைந்த அமோக வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.  அடக்கத்துடன் கருத்துக்களை தெரிவிக்கிற  பலர்கூட, எதிர்க்கட்சிகளின் படுதோல்வியை வாங்கு வாங்கென்று நக்கல் செய்யும் மீம்களை வாட்ஸ்-அப்பில் முன் நகர்த்துகிறார்கள். பாரதியின் 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' பாடல் வரிகளை  சற்று மாற்றி, பிரதமர் நரேந்திர  மோடியை சிலாகித்து நாட்டு வளர்ச்சியை எதிர்நோக்கி, தான் பாடிய குரல் பதிவை அனுப்புகிறார் அரசியல் பேசாத ஒரு பெண்.  இவர்களையும் மனதில் குதியாட்டம் போட வைத்திருக்கும் மகத்தான தேர்தல் வெற்றி, பா.ஜ.க கூட்டணிக்கு நேற்று கிடைத்தது. தனியாக 300 இடங்களுக்கு மேல், கூட்டணியாக 350-க்கு மேல், வென்றது பாரதிய ஜனதா கட்சி. இந்த உயர்ந்த சாதனைக்கு காரணங்கள் உண்டு.

பேச்சில், தோரணையில் பலமானவராக தோன்றும் மனிதரைத்தான் சாதாரண இந்திய மக்கள் அரசியல் தலைவராக ஏற்பார்கள். அவர்தான் அந்த மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவார். அவர் குறைவாக யோசிக்கலாம். குயுக்தியாக சிந்திக்கலாம். கெட்டவராக இருக்கலாம். என்னென்னவோ செய்யலாம்.  அதெல்லாம் சட்டம் தலை தூக்காத, முதிர்ச்சி அடையாத,  ஒரு ஜனநாயக நாட்டில் பொருட்டில்லை. மம்தா பானர்ஜி, மாயாவதி, முலயாம் சிங், லாலு பிரசாத் போன்றவர்கள் இப்படி பாதுகாப்பு உணர்வு அளித்து தலைவர்களாக எழுந்தவர்கள்.

இப்படியான தலைவர்கள் ஏழைகளின் காப்பாளன், ஒரு மொழியின் காவலன், ஒரு ஜாதியின் தலைவன், ஒரு நிலப்பரப்பின் அடிதடி ராஜா,  போன்ற தோற்றங்களில் தங்களை  நிலை நிறுத்தியவர்கள். இவர்களின் குணாதிசயங்கள் பொது வெளியில் பலரும் உணர்ந்ததுதான். இவர்கள்  ஜெயிலுக்குப் போனால் அங்கிருந்தும் அதிகாரம் செய்வார்கள். 

இத்தகைய தலைவர்கள் பேட்டை வஸ்தாத்கள் மாதிரி. வஸ்தாதை எதிர்த்தால் நமக்கு திண்டாட்டம் என்று பேட்டைவாசிகள் ஐயாவுக்கு சலாம் வைத்து பணிவு காட்டி ஜே போடுவார்கள். ஐயா மறைந்தால், அல்லது கைகாட்டினால், அவர் அறிமுகம் செய்த வாரிசு அல்லது சொந்த பந்தத்திற்கு சலாம் வைப்பார்கள். இல்லை என்றால் தலைவரின் நிழலாக இருந்த ஒரு கூட்டாளி அவர் இடத்திற்கு வரலாம். வெறும் நல்லவர்கள், புத்திசாலிகள் இந்தத் தலைவர்களை அரசியல் களத்தில் எதிர்த்து நிற்க முடியாது. சமூக வலைத்தளங்களில் கத்தலாம், எத்தலாம். அதோடு சரி.

இன்றைய இந்தியாவில், காலத்தின் பரிசாக வந்த ஒரு தலைவர்தான் இந்த வஸ்தாத்-தலைவர்களை நிமிர்ந்து எதிர்த்து வெல்ல முடியும், மக்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் காண்பிக்க முடியும். அத்தகைய ஒருவருக்கு, வஸ்தாத்-தலைவர்களுக்கும் மேலான மனோ பலம் இருக்கும். அவர் அரசியல் சூது வாதில் அத்துப்படியாக இருப்பார். சாதுரியமான பேச்சிலும் காரியத்திலும் கைதேர்ந்தவராக இருப்பார். பலரையும் அணைத்துச் செல்வார்.  தேசத்தை ஆழ்ந்து நேசிப்பார். சாதாரண மக்களின் பரிதாபத்தை உணர்ந்து அவர்களை கைதூக்கிவிட முயல்வார், அவர்களின் மனங்களைத் தொடுவார். பலராலும் பெரிதாக மதிக்கப் படுவார். அந்த ஒருவர் நரேந்திர மோடி. அதனால்தான் மோடியைப் பார்த்தாலே ஜனங்கள் சல்யூட் வைப்பது என்றில்லாமல் குதூகலத்தில் 'மோடி மோடி' என்று அடிமனதிலிருந்து குரல் எழுப்புகிறார்கள்.

கட்சியில் மோடிக்கு உறுதுணையாக நிற்கும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்களில் 99 சதவிகிதம் நாட்டின் நலனை மட்டும் அரசியலில் நினைப்பவர்கள். ஏனென்றால் மோடியும் அதை தீர்க்கமாக பேச்சிலும் செயலிலும் பிரதிபலிப்பவர். இவர்களும் மோடியின் பலம்.

பல எதிர்க் கட்சிகளின் தலைவர்களுக்கு நேரான அரசியல் எண்ணங்களோ செயல்களோ கிடையாது. கட்சிக்குள் இருக்கும் அவர்களின் ஆதரவாளர்களில் 99 சதவிகிதத்தினர், அவர்கள் முன்னர் செய்த முறைகேடுகளை மறைக்கவும், ரகசியமாக வளம் பெறவும் மோடியை எதிர்த்தாக வேண்டும். அதற்கு அவர்கள் தங்களின் தலைவர்களை அண்டி இருக்க வேண்டும். அவர்களின் செயல்களை ஊக்கப் படுத்தி அதே வழியில் அவர்களை விட பயன் அடைபவர்கள் அந்த கட்சித் தலைவர்கள். அவர்களும் மோடியை எதிர்துத்தான் அரசியல் செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும்  தேச நலனுக்கு ’டூ’ விட்டவர்கள்.  நாட்டில் நிறைய கட்சிகள் இந்த கதியில் இருக்கின்றன. ஏன் இருபத்தி இரண்டு கட்சிகள் மோடியை எதிர்ப்பதற்காகவே கூடுகின்றன என்று புரிகிறதா?

எப்படி வஸ்தாத்-தலைவர்கள் பொது மக்களை வஞ்சித்தார்களோ, அதன் மறு பக்கமாக மோடி என்ற அரசியல் மாமனிதர் மக்களின் மனம் தொட்டு அவர்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறார்.  அவர் பிரதமராக இருந்த ஐந்தாண்டு காலத்தில், அவர் நல்ல மனிதர், தேசத்துக்கு நன்மை செய்ய அரசியலில் இருக்கிறார் என்ற என்ணம் மக்களுக்கு இன்னும் ஆழமாக பதிந்து விட்டது.   இத்தகைய மனிதர் தனக்கு நேரடி அரசியல் எதிரியாக இருந்தால், அவரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. சாதாரண மக்களிடம் அவர்கள் ஆர்வம் காட்டாத ரஃபால் போர் விமான ஒப்பந்தத்தைப் பேசி, தூய்மையான தலைவராக அவர்கள் மதிக்கும் மோடியை ‘திருடன்’ என்று எப்போதும் தேர்தல் பிரசாரத்தில் வர்ணித்தார் ராகுல். ஆனால் வாக்காளர்கள் ராகுல் காந்தியை நம்பவில்லை. இதைப் புரிந்துகொண்ட மோடி, ராகுலின் ‘திருடன்’ பேச்சுகளுக்கு பதில் சொல்லவும் இல்லை. இருவரில் யார் மக்களை சரியாக புரிந்து கொண்டவர் என்பதற்கு இதுவே உதாரணம்.

மோடியின் நேர்மை மீது நம்பிக்கை வைத்த மக்களிடம் சென்று, “நான் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு மாதா மாதம் ஆறாயிரம் ரூபாய் இலவசமாகத் தருவேன்” என்று ராகுல் காந்தி வாக்குறுதி சொன்னார். பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியே இப்படி ஒரு தேர்தல் வாக்குறுதி அளித்தது என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேறும் என்று மக்கள் நம்பலாம்.  ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் அதிர்ஷ்டம் என்று நினைக்கும் மக்கள், காங்கிரஸ் ஆட்சியின் ஆறாயிரம் ரூபாய் ’ஆஃபரை’யும் தள்ளினார்கள் என்பது தெரிந்துவிட்டது. தேசிய அளவில் வாக்காளர்கள் யார் மேல் எந்த அளவு நம்பிக்கை வைத்தார்கள், எவர் மீது பெரிய அவநம்பிக்கை கொண்டார்கள் என்பதற்கு இது நிரூபணம்.

          மோடியின் இன்னொரு பக்கமும் கோடிக்கணக்கான இந்தியர்களை வசீகரித்தது.  இந்துக்கள் கிட்டத்தட்ட 80% வாழும் நாடு இந்தியா. அவர்களின் மத நம்பிக்கைகளும் மத சம்பிரதாயங்களும் வழிபாட்டு முறைகளும் அவர்களின் வாழ்க்கைக்கு முக்கியமானவை. சுதந்திர இந்தியாவில் எந்த தேசியத் தலைவரும் இது வரை காண்பிக்காத தனது இந்து மத நம்பிக்கையை, மோடி தைரியமாக வெளிப்படுத்தினார்.  இது இந்துக்களோடு அவருக்கு உள்ளார்ந்த பிணைப்பை உண்டாக்கியது.  வேற்று மதத் தலைவர்கள் மூலமாக இந்துக்கள் பலருக்கும் ஏற்பட்ட கவலைகளுக்கு அவரது சொல்லும் செயலும் மருந்தாக இருந்தன.  இவரைப் பார்த்து ராகுல் காந்தி ’நானும் இந்துதான்!’ என்று அவ்வப்போது வேஷம் கட்டினாலும், போறாத நடிப்பில் நகைச்சுவை செய்தார்

தான் ஒரு இந்து என்பதை மோடி நேர்மையாக வெளிப்படுத்தினாலும், மற்ற மதத்து மக்கள் இந்துக்களிடம் அச்சப் படாமல் இருக்கலாம் என்கிற நம்பிக்கையை  மோடி பெரிதும் ஏற்படுத்தினார். அதாவது, அவர் ஒருவரை மற்றோருவருக்கு பயம் காட்டி அந்த மற்றோருவர் மீது சவாரி செய்யவில்லை.  எல்லா மதத்தினரின் இணக்கத்தையும் மோடி விரும்புகிறவர் என்று பல தரப்பட்ட மக்களும் உணர்கிறார்கள். இப்படி பல வகைகளில் பா.ஜ.க-வின் பிரும்மாண்டமான தேர்தல் வெற்றிக்கு மோடி காரணம் ஆகிறார்.

           இவ்வளவு உயர்ந்த அரசியல் தலைவரான மோடியின் பெருமை தமிழ் நாட்டில் ஏன் எடுபடவில்லை? இந்த மாநிலத்தில் ஒரு பா.ஜ.க வேட்பாளர் கூட நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் வெற்றியை தொடவில்லை. பா.ஜ.க-வை எதிர்த்த தி.மு.க கூட்டணிக்கு தமிழ் நாட்டில் பெரிய வெற்றி கிடைத்தது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? தமிழ் நாட்டு வாக்காளர்கள் மோடியின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களா? இதைப் புரிந்து கொள்ள வஸ்தாத்-தலைவர்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

          தமிழ் நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் கட்சித் தலைவர்கள் இருந்தார்கள். தி.மு.க-வை கருணாநிதியும் அ.தி.மு.க-வை ஜெயலலிதாவும் சக்கரவர்த்திகளாக நிர்வகித்து வந்தார்கள். இவர்கள் தலைமையை ஏற்பது தங்களுக்கு பாதுகாப்பானது என்று கருதிய பெருவாரியான மக்கள் அவ்வப்போது இந்தக் கட்சி அல்லது அந்தக் கட்சி, அல்லது அவர்கள் தலைமையிலான கூட்டணி என்று ஆட்சியில் அமர்த்தினார்கள். கடைசிவரை, அடுத்த தலைவர் என்று எவரையும் கட்சியில் வரவிடாமல் வளரவிடாமல் செய்து ஜெயலலிதா 2016-ல் மறைந்தார். அடுத்த வஸ்தாத்-தலைவர் இல்லாத அ.தி.மு.க இப்போது தள்ளாடுகிறது. ஜெயலலிதா-வின் நிஜ உருவத்துக்கு தாங்கள் காட்டிய மரியாதையை அவரின் புகைப்படத்திற்கும் காட்டி இப்போது அ.தி.மு.க-வை நடத்துபவர்களுக்கு ஓட்டு போட மக்களில் பலர் தயார் இல்லை.  

தி.மு.க-வை பொறுத்தவரை, கருணாநிதி இறப்பதற்கு  5 வருடங்களுக்கு முன்பே, தனது மகன் ஸ்டாலின்தான் தனக்கு அடுத்த தி.மு.க தலைவர் என்று உறுதியாகக் காட்டிவிட்டார்.  ஆகையால் கட்சியும் கட்சியை ஆதரிக்கும் பொது மக்களும் தி.மு.க-வின் அடுத்த வஸ்தாத்-தலைவர் ஸ்டாலின் என்று புரிந்துகொண்டார்கள். அதோடு, அவருக்கு ஈடு கொடுக்கும் எந்த வஸ்தாத்-தலைவரும் எதிர்க்கட்சியிலும் இப்போது இல்லை என்பதையும் அறிந்து ஸ்டாலினுக்கே சாதாரண மக்கள் பலரும் பாதுகாப்பாக சலாம் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வின் வேட்பாளர்களும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் சென்ற லோக் சபா தேர்தலிலில் 37 தமிழக தொகுதிகளில் வெற்றி அடைந்தார்கள். நேற்று அரசியலுக்கு வந்த கார்த்தி சிதம்பரமும், பலமான ஸ்டாலின் தலைமை தாங்கும் தி.மு.க ஆதரவால் தமிழ் நாட்டு லோக் சபா தொகுதியில் இப்போது ஜெயிக்க முடிகிறது – ஆனால் ராகுல் காந்தி, பரம்பரையாக வென்ற அமேதியில் வெட்கப்படும் தோல்வியை சந்திக்கிறார்.

மோடி எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், நேரடியாக அவர் மக்களிடம் பேசித்தான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதை செய்வதற்கு அந்த மக்களின் மொழி அவருக்குத் தெரிய வேண்டும். இந்தி பேசும் மக்களிடம் அவர் இந்தியில் பேசி அதை சாதிக்கிறார். அவரது பேச்சை நேரில் கேட்டு, அதை இயல்பாக புரிந்துகொண்டு, அந்த மக்களும் அவரோடு ஒன்று படுகிறார்கள். அதனால்தான் குஜராத்தியரான மோடி, உத்திர பிரதேசத்திலும், பிஹாரிலும், மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கூட அந்த மாநில மக்களிடம் இந்தியில் பேசி அவர்களைக் கவர்ந்து பிரமிக்கும் தேர்தல் சாதனைகள் புரிகிறார். இன்னொரு மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு சென்று அந்த மக்கள் கூட்டத்தில் இந்தியில் பேசி அந்த தொகுதியிலேயே போட்டியிட்டு பெரிய வெற்றி பெறுகிறார்.

தமிழ் நாட்டை கவனித்தால், இந்த மாநில மக்களை இந்தி படிக்காமல் செய்த தி.மு.க, அதன் பெரிய பலனை இன்று அனுபவிக்கிறது – அதாவது மோடி பேசும் இந்தி இங்கு யாருக்கும் புரியாது, அதனால் மோடியின் தாக்கம் தமிழ் நாட்டில் கொஞ்சமும் இல்லை என்று ஆகிவிட்டது. வாரணாசி தமிழ் நாட்டில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, இந்தி பேசும் மோடி அந்த தமிழ்நாட்டு தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்க முடியாது. ராமேஸ்வரம் உ.பி-யில் இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். அப்போது, அந்த வட இந்திய புனித நகரத் தொகுதியில் போட்டியிட்டாலும்  இந்தி பேசும் மோடி ஜெயிப்பார். தமிழ் நாட்டில் இந்த லோக் சபா தேர்தலில் மோடி எடுபடாமல் போனதற்கு பெரும் காரணம் இதுதான். மக்களைப் பரவலாக ஈர்க்கும் தலைவர்கள் தமிழ் நாட்டு பா.ஜ.க-வில் உருவாகவில்லை என்பது கட்சியின் மாநில வளர்ச்சி பற்றியது. அது வேறு விஷயம். ஆனாலும், அதுவும் ஓரளவு காரணம்.

நடந்த லோக் சபா தேர்தலில் பா.ஜ.க கூட்டணி  தமிழ் நாட்டில் பெரும் தோல்வி அடைந்ததால், ”தமிழ் நாட்டு மக்களுக்கு தேசிய சிந்தனை இல்லை. இந்து மத நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு, யார் அவர்களின் மத உணர்வுகளுக்கு பாதுகாவலர்கள் என்பதும் புரியவைல்லை” போன்ற விமரிசனங்கள் எழுகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் சரியில்லை.  உண்மை என்னவென்றால், நமது ஜனநாயகத்தின் குறைகளும் நமது மாமூல் அரசியல்வாதிகளின் சக்தியும் அலாதியானவை. மக்கள் நலனுக்காக மக்களுக்குப் புரியும் மொழியில் பேசும் நிஜத் தலைவர்களை தமிழ் நாடு பல மாமாங்கம் ஆகியும் பார்க்கவில்லை. பின்னடைவில் இருக்கும் தமிழக மக்களை உயர்த்திவிட முனைப்பான தலைவன் அவசரத் தேவை. தமிழ்நாடு காத்திருக்கிறது.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019



Thursday, 16 May 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: நான் மானசீக பாட்டி, கமல் ஹாசனுக்கு. படவா ராஸ்கல்!


தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பல பேர் தினுசு தினுசா உளறுவா. அதுல கமல் ஹாசனை கண்டிப்பா சேக்கணும்.

தெரியுமில்லையா?  "நான் மஹாத்மா காந்தியோட மானசீக கொள்ளுப் பேரன்"னு  கமல் ஹாசன் பேசிருக்கார். இன்னொரு பைத்தியக்கார உளறலை நியாயப் படுத்தணும்னு இப்படி ஒரு அசட்டுத்தனமான 'கொள்ளுப்பேரன்' வழிசல். சரி, அவர் வழில நானும் கொஞ்சம் அசட்டுத்தனமா போய், "நான் கமல் ஹாசனுக்கு மானசீக பாட்டி"ன்னு ஆரமிச்சு அவர்கிட்டயே பேசறேன்.

ஏண்டாப்பா கமல், மஹாத்மா காந்திக்கும் உனக்கும் கடுகளவு கூட ஒத்துமை கிடையாது. பேதம்தான் கடல் அளவு இருக்கு.  இது உனக்கே தெரியும். நீ மஹாத்மா காந்தி பேரை சொல்லித்தான் ஆகணும்னா என்ன பேசணும்? "காந்தி ஒரு மகான். அவர் மாதிரி தலைவரை பாக்க முடியாது. அவர் பாதம் பணிகிறேன்" அப்டின்னு மரியாதையா சொல்லிட்டு நாசூக்கா கழண்டுக்கணும். எதுக்குடா கண்ணா வேண்டாத பேச்சு?

ஒருத்தர் கிட்ட நேரடியா எதையும் கேட்டு தெரிஞ்சுக்காம, அவர் சொன்னதை அறிஞ்சுண்டு வாழ்க்கைக்கு முக்கியமான விஷயத்தை ஒருத்தர் கிரகிச்சுண்டா, அவர் அந்த இன்னொருத்தரை 'மானசீக குரு'ன்னு சொல்லலாம். ஆனா யாரோ யாருக்கோ தாத்தா கொள்ளுத்தாத்தான்னு இருந்தா நீ அந்த மனுஷனைக் கைகாட்டி, “நான் அவருக்கு மானசீக பேரன், மானசீக கொள்ளுப் பேரன்” அப்படின்னு பேக்கு மாதிரி பேசுவையா?

உன் குடும்பத்தையே எடுத்துக்கோ. உங்க அப்பா சீனிவாச ஐயங்கார் இருந்தாரே, அவர் காங்கிரஸ்காரர். சுதந்திர போராட்டத்துல ஜெயிலுக்கு போனவர். உங்கப்பாவே "நான் காந்தியோட மானசீக பேரன்”ன்னு சொன்னதில்லை. நீ என்ன ’காந்தியோட மானசீக கொள்ளுப் பேரன்’னு பீத்திக்கறது? உன் பொண்கள் கிட்டயாவது சொல்லி வைடாப்பா - இல்லாட்டி அவாளும் "நாங்கதான் காந்தியோட மானசீக எள்ளுப்பேத்திகள்"னு கிளம்பிடப் போறா.

உன்னோட இன்னொரு மெயின் உளறலையும் சொல்லணும். அதுக்காகத்தான நீ கொள்ளுப்பேரன் பேச்சை எடுத்து விட்ட? அது என்னன்னா, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே”அப்படின்னு பேசிருக்க. இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்றேன்.

"காந்தியைக் கொன்னவன் ஒரு ஹிந்து.  அவரைக் கொன்னதுனால அவன் தீவிரவாதி"ன்னு ஒண்ணு பிரதானமா சொல்லிருக்க. இன்னொண்ணு, "ஹிந்து மதம்னு இருக்கே, அந்த மதத்து மனுஷன்தான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி. அந்த உண்மையை மத்தவா சொன்னா தப்பாகலாம். ஆனா நான் வேற ஆளு. காந்தியோட மானசீக கொள்ளுப் பேரனாச்சே! அதுனால, காந்தி தாத்தாவை உரிமையோட கட்டிண்டு, ’கோட்சேதான் முதல் ஹிந்து தீவிரவாதி’ அப்படிங்கற கண்டுபிடிப்பை நான் சொன்னா சரி"ங்கறது உன் கட்சி. 

கோட்சே ஒரு ஹிந்துன்னு சொன்னயே, அது கரெக்ட். ஆனா அவன் காந்தியை கொலை பண்ணினதுக்காக அவனை தீவிரவாதின்னு சொன்னா அது குழப்பம் இல்லாட்டி பேத்தல் - உனக்கோ ரெண்டும் உண்டு. காந்தியோட கொள்கை ஏதோ பிடிக்காம கோட்சே அவரை சுட்டான். அது மன்னிக்க முடியாத கொலைன்னு எல்லாரும் நினைப்பா. ஆனா அதையும் தாண்டி அது தீவிரவாதம், கோட்சே தீவிரவாதின்னு நீதான் சொல்ற. ஒரு அரசியல் தலைவரையோ ஒரு அரசாங்க அதிகாரியையோ பலி வாங்கினா அது கொலையா தீவிரவாத செயலான்னு பாகுபடுத்தி பாக்க வேண்டாமா? எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு குத்தத்தை, ஒரு பயங்கர குத்தமா பெரிசு படுத்தி பேசிட்டா சமூகத்துல ரொம்ப அக்கறை இருக்குன்னு காட்டிக்கற ஏமாத்து அரசியல்தான் நீ பண்றது.

இன்னொரு விஷயம்.  இது முக்கியம். அரவக்குறிச்சில, முஸ்லிம்கள் அதிகமா கூடின இடத்துல நின்னுண்டு ஓட்டுக் கேக்கும்போது நீ இப்படி உளறிக் கொட்டின. அதாவது, அந்த மக்கள் கிட்ட ’காந்தி, கோட்சே, ஹிந்து’ன்னு நீ பேசினதுக்கு உண்மையான அர்த்தம் இதுதான். "இத பாருங்கோ. தேசத் தந்தையை கொன்னதே ஒரு ஹிந்து. அந்தக் கொலை தீவிரவாதம், அந்தக் கொலைகாரன் தீவிரவாதி. அப்ப, தேசத்துலயே முதல் பெரிய தீவிரவாதி அந்த கோட்சேதான், அந்த ஹிந்துதான். அதுனால, இந்தியாவுல முஸ்லிம் மனுஷா யாராவது தீவிரவாதியா இருந்தா அதெல்லாம் ரெண்டாம் பட்சம். அதுக்காக நீங்க ஒண்ணும் சஞ்சலப்பட வேண்டாம். உங்க மதத்துக்காரா மேல யாரும் நேராவோ மறைமுகமாவோ தீவிரவாத பழி சுமத்த முடியாது. அப்படி யாராவது பழி சுமத்தினா, 'காந்தி கொலைக்கு ஹிந்துக்கள்ளாம் முதல்ல பழி ஏத்துக்கட்டும். அதுவும் தீவிரவாதம்தான். அதுக்கான ஜவாப் ஹிந்துக்கள் முதல்ல சொல்லட்டும். அதுக்கப்பறம் மத்தவாளைப் பத்தி பேசட்டும்'னு நீங்க எதிர்ப் பேச்சு பேசுங்கோ. நான் கமல்ஹாசன், உங்களுக்கு பக்க பலமா இருக்கேன். நம்மள்ளாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. சந்தோஷம்தான? உங்க ஓட்டெல்லாம் என் கட்சி வேட்பாளருக்கே போடுங்கோ!" இதான கமல், உன் விஷமப் பேச்சுக்கு உள்ளர்த்தம்? உண்மையா இல்லையா, படவா ராஸ்கல்?

உன் பேச்சை நான் சரியான அர்த்தத்துல புட்டு புட்டு வச்சது வாஸ்தவம்னு உனக்கே தெரியும். இது எப்படி இருக்குன்னா, மூணு மாசத்துக்கு முன்னால  தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு முஸ்லிம் கல்யாண வரவேற்புல தம்பதிகளை வாழ்த்த வந்தவர், "ஹிந்துக்கள் திருமண சடங்குல, புரோகிதர் சமஸ்கிருத மொழில சொல்ற மந்திரங்கள் யாருக்குமே புரியாது. அவருக்கே கூட புரியாது"ன்னு ஹிந்துக்களை இளப்பமா பேசினார். இவர் சில தடவை தமிழ்ள பேசறது கூட தமிழர்களுக்கே புரியாதுங்கறது இருக்கட்டும். முஸ்லிம்கள் கிட்ட போய் ஸ்டாலின் ஹிந்துக்களை பரிகாசம் பண்ணினா, "நான் முஸ்லிம்கள் பக்கம், அதாவது உங்க பக்கம்தான். நான் உங்களுக்கு சப்போர்ட்டா இருந்து ஹிந்துக்கள் கிட்டேர்ந்து உங்களை பாதுகாப்பேன்! என்னை நம்பி ஹிந்துக்களும் என்கிட்ட ஏமாந்துண்டே இருப்பா! தேர்தல்ல உங்க ஓட்டெல்லாம் தி.மு.க கட்சிக்கே போடுங்கோ!" அப்படின்னு முஸ்லிம்கள் கிட்ட யாசகம் கேக்கறார்னு அர்த்தம்.  அப்பாவி முஸ்லிம் ஜனங்ககிட்ட, சுபாவத்துல சாதுவான ஹிந்துக்கள் மேல ஒரு சந்தேகத்தையும் பயத்தையும் உண்டு பண்ணி, தான் பொழைக்கணும்னு கீழ்த்தரமா பேசினார் ஸ்டாலின். அதையேதான் நீயும் அரவக்குறிச்சில பண்ணிருக்க.

சாதாரண முஸ்லிம் ஜனங்க யாரும் நீ பேசினதை எதிர்பார்த்து ஏங்கிண்டு நிக்கலை. நீயா அவாகிட்ட குழைஞ்சு, கோட்சே பேரை சொல்லி ஹிந்து சமுதாயத்தையே பழிச்சு உன் கட்சிக்கு ஓட்டு சம்பாதிக்க பாத்திருக்க, அவ்வளவுதான். உன் பொய்ப் பேச்சை பேசிட்டு, முட்டாள்தனமா ஒரு நினைப்பையும் வச்சிண்டிருக்க. அது என்னன்னா: 'என் பேச்சோட உள்ளர்த்தம் முஸ்லிம்களுக்கு சுரீர்னு புரியும். அது எனக்கு லாபம். ஆனா ஹிந்துக்கள் ஒண்ணும் புரியாம பேசாம இருப்பா. அதுவும் எனக்கு லாபம்.’  உண்மையா இல்லையா, படவா ராஸ்கல்?

சிலபேர் கேப்பா, ’கமல் ஹாசன் பேசினதை ஏன் பாட்டி சீரியசா எடுத்துக்கறேள்?’னு. உங்கிட்டயே சொல்றேன். ஆரம்பத்துல ஈ.வெ.ரா பேச்சையும் அட்டகாசத்தையும் சட்டை பண்ணாம ஹிந்துக்கள் கௌரதையா ஒதுங்கி இருந்தா. அதுனால அவர் துளுத்துப் போனார். அவருக்கப்பறம் கமல் ஹாசன் வரைக்கும் பலபேர் அவர் புகழை பாடிண்டு ஹிந்துக்கள்னா கிள்ளுக் கீரைன்னு மட்டம் தட்டறா. இனிமே ஹிந்துக்களை இழிவு படுத்தறவாளை போடு போடுன்னு போடணும். சூட்டுக்கு சூடு குடுக்கணும். அதான் உறைக்கும். அது உன் வாயைக் கூட அடைக்கலாம்னு நினைக்கறேன்.

சரி, இப்போதைக்கு கிட்ட வா கமல். ஆர்வத்துல ரகசியமா  ஒண்ணு கேக்கறேன்.  கோட்சே மேல கோபம் வச்சுக்கோ. இந்துக்கள் மேலயும் கோபத்தை காட்டிக்கோ. போய்ட்டுப் போ. தேர்தல்ல மக்கள் பாத்துக்கட்டும். ஆனா, மஹாத்மா காந்தி கிட்ட உறவு கொண்டாடற அளவுக்கு அவர் மேல என்னடா கோபம் உனக்கு?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

Saturday, 11 May 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ராகுல் காந்தி அலறுகிறார், “திருடன்! திருடன்!”


நேருவோட கொள்ளுப்பேரன், இந்திரா காந்தியோட பேரன், ராஜீவ் காந்தியோட பையன்னா சும்மாவா? ராகுல் காந்திக்கு இத்தனை லட்சணம் இருக்கு. ஆனா இதைத் தவிர அவர்கிட்ட மெச்சிக்க ஏதாவது இருக்கா? உதட்டைத்தான் பிதுக்கணும்.

நேருவுக்கு அரசியல் எதிரிகள் இருந்தா. இந்திரா காந்திக்கு நிறையப்பேர் எதிரியா இருந்தா. ராஜீவ் காந்திக்கும் உண்டு. அவா யாராவது அரசியல் எதிரிகளை 'திருட்டுப் பசங்க'ன்னு பப்ளிக்கா அநாகரிகமா திட்டிருக்காளோ? கிடையாது. ஆனா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேடைக்கு மேடை பிரதமர் மோடியை 'சோர்'ங்கற இந்தி வாரத்தைல 'திருடன்'னு திட்டிண்டே இருக்கார்.  அந்த வார்த்தை ஒரு விமரிசன வார்த்தையான்னா, இல்லை.  பொதுவுல சொன்னா, அதுவும் மோடி மாதிரி கைசுத்தத்துக்கு பேர் போன ஒரு அரசியல் தலைவரைப் பார்த்து அப்படி சொன்னா, அது வசவு வார்த்தைன்னு ஆகும். இதெல்லாம் புரியறதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணுமே?  சரி, அந்தப் பக்குவம்லாம் ராகுல் காந்திட்ட கிடையாதுதான். நாமதான் அவரை சரியா புரிஞ்சுக்கணும். எப்படின்னு சொல்றேன்.

அப்பாவி மக்களுக்கு வஞ்சனை பண்ணி, அவா கண்ணைக் கட்டி, ஏதோ கட்டாயத்தை உண்டு பண்ணி, நைசா அவா ஆதரவை வாங்கி ஒரு குடும்பம் ராஜாங்கம் பண்றதுன்னு வச்சுக்கோங்கோ. அந்த சமயத்துல, ஒரு நல்ல மனுஷன் மக்கள் மனசோட பேசி, அவா நம்பிக்கையை வாங்கிண்டு அவா கண்ணையும் மெள்ள மெள்ள அவுத்துவிட்டா ராஜங்க குடும்பத்துல புது ராஜாவா வந்தவருக்கு சுள்ளுன்னு கோபம் வருமா வராதா? இனிமே அந்தக் குடும்பத்து வண்டவாளம் ஒவ்வொண்ணா வெளில வரும். குடும்ப மானம் கப்பல் ஏறும், ராக்கெட்லயும் பறக்கும். குடும்ப வருமானமும் அதள பாதாளத்துக்கு இறங்கும். அதுவும், குடும்பத்துல மாப்பிள்ளையா வந்தவருக்கு விசேஷ வருமான வழிகள் எல்லாம் காணாம போகும். அது புது ராஜாவையும் பாதிக்கலாம். ஏன்னா அவா ரெண்டு பேருக்குள்ள என்ன அட்ஜஸ்ட்மெண்ட் உண்டோ யாருக்குத் தெரியும்? திடீர்னு குடும்பத்துல இவ்வளவு பெரிய நஷ்டம் வரும், செல்வம் குறையும்னா, புது ராஜாவும் "ஐயோ திருடன்! திருடன்! காப்பாத்துங்கோ!"ன்னு பயத்துல கத்தலாமே?  நாமதான் இதை புரிஞ்சுக்கணும். நன்னா புரிஞ்சுதா?

இன்னொண்ணு சொல்றேன். யாரையும் பொது வெளில ஒரு அரசியல் தலைவர் இப்படிப் பேசினா, பேசற மனுஷருக்கு கூச்ச நாச்சம் சுத்தமா கிடையாதுன்னு அர்த்தம். இப்ப ராகுல் காந்தியைப் பார்த்தாலோ கேட்டாலோ நேரு உங்க ஞாபகத்துக்கு வருவாரா? இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி யாராவது வருவாளா? உஹும். பின்ன யாரு? நீங்களே கரெக்ட்டா ஊகிச்சிருப்பேளே! "டேய், தீவட்டி தலையா!" அப்படின்னு தமிழ் சினிமால கவுண்டமணி ஒரு சக நடிகரை கூப்பிடுவாரே, அது மாதிரித்தான ராகுல் நடந்துக்கறார்?  இதை நான் சொன்னேன்னு கவுண்டமணி மாமா கிட்ட யாரும் சொல்ல வேண்டாம். ஏன்னா, அவரை இளக்காரம் பண்ணிட்டேன்னு என்னை கோவிச்சுப்பார். 

எந்த மனுஷனைப் பத்தியும் ஒரு கீழான அபிப்பிராயத்தை நாம மூணு பேர்கிட்ட சொல்ல வேண்டி வரலாம். ஒண்ணு, நம்ம நமக்குள்ளேயே சொல்லிக்கறது. அதாவது, மனசுல அப்பட்டமா, உள்ளது உள்ளபடியா உணர்றது. ரெண்டு, நெருக்கமா இருக்கறவா கிட்ட மட்டும் தனியா பகிர்ந்துக்கறது. இதைக் கூட, நமக்கு மனசுல தோணினதை அப்படியே கண்ணாடி மாதிரி காட்டிக்காம வார்த்தைகளை நாம கவனமா எடுத்து சொல்றதுண்டு. இதைக் கேட்டுக்கறவாளும், நம்ம சொன்னோம்னு வெளி மனுஷாட்ட கசியவிடப்பிடாது, அதுதான் நாகரிகம். மூணாவது, பொது வெளில நாம இன்னொரு மனுஷனைப் பத்தி குத்தம் சொல்லணும்னா எந்த விஷயத்தை சொல்லலாம், என்ன வார்த்தைல சொல்லலாம்னு ஒரு நியதி இருக்கு. தலைவர்களா இருக்கறவாளுக்கு இந்த நியதி கட்டாயம் தெரியணும். அது அவாளுக்கான அடிப்படைத் தகுதி.  ராகுலுக்கு புரியற மாதிரி உதாரணம் சொல்லட்டுமா?

 இப்ப, கருணாநிதி மாமாவை எடுத்துக்குங்கோ. அவர் அரசியல்ல நேர்மைக்கும் தூய்மைக்கும் பேர் போனவரான்னு கேட்டா, தலையை வலப்பக்கம் இடப்பக்கம் ஆட்டணும். அது வேற விஷயம். ஆனா ஒரு தலைவரா அவர் நன்னா பேசத் தெரிஞ்சவர். 'காங்கிரஸ் கட்சியோட கூட்டு வச்சிருக்க வேண்டாம்'னு ஒரு சமயம் சொல்ல வந்தவர் "அந்த சனியன் பிடிச்ச கட்சியோட நாங்க சேர்ந்திருக்க வேண்டாம்"னு ராகுல் மாதிரி உளறலை. "கூடா நட்பு கேடாய் முடியும்"னு இனிமையா, இன்னும் அழுத்தமா சொல்லிட்டு போய்ட்டார்.  சரியோ தப்போ, நாசூக்கா பேசிட்டார்.  இந்திலயும் ராகுல் காந்திக்கு கத்துக் குடுக்கறவா இருக்கா.  வாஜ்பாயி மாமா பேச்செல்லாம் ராகுல் படிச்சிருந்தா, படிச்சது புரிஞ்சிருந்தா, அழகான வார்த்தை வராட்டாலும் அசுத்தமான வார்த்தையாவது பேசாம இருக்கலாம்.

மோடியைப் பார்த்து "சோர்"னு ராகுல் சொல்றாரே, அதையே அவரோட கூட்டணி கட்சித் தலைவர்கள் யாராவது சொல்றாளா? இல்லை. இவ்வளவு பெரிய வார்த்தையை ராகுல் ஒரு குற்றச்சாட்டா சொல்றபோது, அதை ஏன் அந்தத் தலைவர்கள் சொல்லலை? அதுக்கு காரணம், ராகுல் எல்லை மீறி பெனாத்தரார்னு அவாளுக்கு தெரியறது. அதுனால, அவா இதுல விலகி நிக்கறா. அது மட்டுமில்ல – ராகுல் பின்னால நிக்கறது அவமானம்னு  சிலர் நினைக்கறாளோ என்னவோ?

போபோர்ஸ் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் போட்டிகள் ஊழல் இப்படின்னு வெளிவந்தது, வெளிவராததுன்னு ஏகப்பட்ட ஊழல் வியாபிச்ச ராஜ்ஜியத்தை நடத்தினது காங்கிரஸ். அப்ப நடந்த ஊழல்-திருட்டு மாதிரி மோடி அரசங்கத்துல ஒரு தப்பும் கிடையாது. யார் யாரைப் பத்தி என்ன சொல்றதுன்னு ஒரு விவஸ்தையாவது வேண்டாமா?

ராகுல் காந்தி தத்துப் பித்துன்னு பேசறார்னு சில பா.ஜ.க தலைவர்கள் கூட அவரை 'பப்பு'ன்னு கூப்பிட்டிருக்கா. ஆனா அது வசவு வார்த்தை இல்லை. ஒரு பாலகனை, 'பப்பு'ன்னு இந்தில செல்லமா அழைக்கறது உண்டு. அந்த வார்த்தையே, ஒண்ணும் தெரியாத வயசுல வெகுளியா இருக்கற ஒரு குழந்தையைக் குறிக்கும். '50 வயசு ஆனாலும், ராகுல் பிள்ளையாண்டான் மன முதிர்ச்சில அப்படித்தான்'னு சுட்டிக் காட்டறதுக்காக அவரையும் 'பப்பு'ன்னு கிண்டலா கூப்பிட்டா எதிர்க்கட்சிக்காரா. அதைக்கூட பா.ஜ.க-வோட முன்னணி தலைவர்கள் யாரும் இப்ப மேடைல சொல்றதில்லை. இருந்தாலும், அந்த 'பப்பு' பேச்சும் இந்த 'சோர்' பேச்சும் ஒண்ணு, அதுக்கு இது சரியா போச்சுன்னு ஆகாது. 

ராகுல் காந்தியும் இந்த 'சோர்' வசவு வார்த்தையை நிறுத்தறதா காணோம். அவர் இதை சொல்லிண்டே இருந்தா நாம இப்படித்தான் யோசிக்கணும். இந்த ஜென்மத்துல இந்த பப்பு வேகவே வேகாதா?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019