Friday, 9 October 2026

கேள்வி-பதில் (09.10.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அனுமதியின்றிப் பொது இடத்தில் தர்ணா செய்து கைதான ராகுல் காந்தி, "என்மீது நூறு எப்.ஐ.ஆர் பதிவாகட்டும். ஒவ்வொன்றும் எனக்கு மெடல்" என்கிறார். அவரது வழியில் தங்கள் மேல் நூறு எப்.ஐ.ஆர்-கள் பதிவாகும்படிச் செயல்படும் அரசியல்வாதிகளுக்கும் அவரவர் மீதான எப்.ஐ.ஆர்கள்

மெடல்களா?

 

பதில்: ராகுல் காந்தி வழியைப் பின்பற்றும் அந்த அரசியல்வாதிகளுக்கு தனிச்சிறப்பு சேரவேண்டும். அவர்களுக்கு, 'ராகுல் காந்தி எப்.ஐ.ஆர் விருது' என்ற ஒரு புதிய விருதைக் காங்கிரஸ் கட்சி வழங்கலாம். அவர்களில் அதிக பட்சம் கன்னா பின்னாவென்று பேசுகிறவர்களுக்கு, 'ராகுல் காந்தி எஸ்.ஐ.ஆர் விருது' எனும் மேலும் உயரிய விருதை அக்கட்சி அளிக்கலாம்.

 

 

2. கேள்வி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே பெங்களூருவில் இப்படிப் பேசி இருக்கிறார்: "ஓரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷம், 'ஒரே நாடு ஒரே கட்சி'  என்பதற்கானது. ஹிட்லரின் நோக்கமும் அதுவே. ஹிட்லருக்கு என்ன ஆனது என்பதைப் பார்க்குமாறு நான் மோடியைக் கேட்டுக் கொள்கிறேன். ஹிட்லர் தன்னைத் தானே சுட்டுக்கொள்ள வேண்டி இருந்தது". இதுபோக, "வாக்குகளை நீக்கியும் திருடியும் தான் நரேந்திர மோடி பிரதமர் ஆனார் " என்றும் அபிஜித் திப்கே பேசியிருக்கிறார். இதைப் பற்றி மோடி என்ன நினைப்பார்?

 

பதில்: மோடி அலட்டிக் கொள்ள மாட்டார். ஆனால் ராகுல் காந்தி அச்சம் கொள்வார். இப்படி ஒரே அபத்தமாக, படு கிறுக்குத்தனமாக, அபிஜித் தொடர்ந்து பேசினால் தேசிய அளவில் ராகுலின் மதிப்பு குறைந்து அபிஜித்தின் மதிப்பு விர்ரென்று உயரலாமே! மீடியாவும் ராகுலுக்குப் பதில் அபிஜித்தை அதிகம் கொண்டாடலாமே!

 

 

3. கேள்வி: "வாக்குகளை நீக்கியும் திருடியும் தான் நரேந்திர மோடி பிரதமர் ஆனார் " என்று கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் அபிஜித் திப்கே பேசியிருக்கிறார். அப்படியானால் அவர் 'பிரதமர் மோடி பதவி விலகவேண்டும்' என்று போராடாமல், மோடிக்கு உதவினார் என்று சொல்லி தலைமைத் தேர்தல் கமிஷனரின் ராஜினாமாவை மட்டும் என் கோருகிறார்? தலையைச் சுற்றி மூக்கையும் தொடாமல் காதை மட்டும் ஏன் தொடுகிறார்?

 

பதில்: மோடி ராஜினாமா செய்யவேண்டும் என்று அபிஜித் கோரினால், அவர் பிரதமர் பதவியிலிருந்து மட்டும் விலகவேண்டுமா அல்லது அவரது எம்.பி. பதவியையே ராஜினாமா செய்யவேண்டுமா என்பதை அபிஜித் விளக்க வேண்டி இருக்கும். தலைமைத் தேர்தல் கமிஷனர் விஷயத்தில் இந்தச் சிக்கல் இல்லை.

 

இரண்டாவது: மோடி பதவி விலகவேண்டும் என்று அபிஜித் என்ன அர்த்தத்தில் கோரினாலும், அது அரசியல் ஆகிவிடும். அப்படியென்றால், மோடி பதவி விலகக் கூடாது என்று கேட்டு லட்சக் கணக்கான பாஜக-வினரும் அக்கட்சியின் வாக்காளர்களும் வீதிக்கு வரலாம். அதன் விளைவுகளைச் சந்திக்கும் தெம்பும் திராணியும் அபிஜித்திடம் இல்லை. மாறாக, தலைமைத் தேர்தல் கமிஷனரின் ராஜினாமாவை மட்டும்  கோரிப் போராடினால், தூய்மையான தேர்தலுக்காக, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக, அபிஜித் போராடுகிறார் என்ற தோற்றம் தனக்குக் கிடைக்கலாம் என்று அபிஜித் குயுக்தியாக நினைக்கிறார்.

 

அபிஜித் ஏமாற்றுக்காரர். பித்தலாட்டம் செய்கிறவர். அவர் பின்னால் மறைவாகச் சதிகாரர்கள் இருக்கலாம்.

 

 

4. கேள்வி: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் விடுத்துள்ள அறிக்கையில், "தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான நடவடிக்கையில், மக்களுக்கு நம்பிக்கை குறைந்து, சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைகளை மாற்ற வேண்டும்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: ஜி.கே. வாசனின் அரசியலுக்கு அவரே 'சிறப்பு தீவிர திருத்தம்' செய்துகொண்டு விட்டார். திருத்தம் மேற்கொண்ட அவரை மத்தியில் ராகுல் காந்தியும் மாநிலத்தில் முதல்வர் விஜய்யும் கவனித்து, தயை கூர்ந்து அவரைத் தூக்கிப் பிடிப்பார்கள் என்று நம்புகிறார். பாவம்.

 


5. கேள்வி: "முதல்வர் விஜய்யின் கவனம் மொத்தமும், தன் நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: மு.க. ஸ்டாலினின் கவனம் மொத்தமும், அவர் காப்பாற்றமுடியாத நாற்காலியின் மீதே இருக்கிறது. இருவரின் முழுக் கவனமும் இருப்பது ஒரே நாற்காலியின் மீது.


பகுதி 141 // 09.10.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment