Wednesday, 28 October 2026

கேள்வி-பதில் (28.10.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "உலகத்தைச் சில தலைவர்கள் வென்று காட்டியுள்ளனர். ஆனால் காலத்தை யாராலும் வெல்ல முடியாது. காலத்தை வென்று காட்டியவர், தவெக தலைவர் விஜய் மட்டுமே" என்று வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருக்கிறாரே?

 

பதில்: விஜய் காலத்தை வென்று காட்டியவரா? காலம் என்றால் 'தேர்தலில் போட்டியிட்ட திமுக' என்றா அர்த்தம்?

 

விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் ஆசையில் ஒரு சீனியர் அமைச்சர் பிதற்றித் தள்ளினால் நாம் என்ன செய்வது? தலையில் கைவைத்து முனகலாம்: 'கஷ்ட காலம்!'

 

 

2. கேள்வி: "கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த அனைத்து சட்டசபைத் தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும். இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் ஓட்டுச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும்" என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி இருக்கிறாரே?

          

பதில்: ஜன்னிக் காய்ச்சல் வந்தால் ஒரு மனிதர் ஏதேதோ உளறுவார். பன்னிரண்டு வருடங்களாக மத்தியில் பதவியின்மை என்ற ஜன்னிக் காய்ச்சல், ராகுல் காந்தி கட்டுப்படுத்தும் காங்கிரஸ் கட்சியை வாட்டுகிறது. அதன் அறிகுறி இந்த உளறல். அடுத்த 2029 லோக் சபா தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி தோல்வியுற்றால், மக்களின் விருப்பம் காங்கிரசுக்கு உறைத்த நிலையில் அக்கட்சியைப் பிடித்த ஜன்னி அடங்கலாம். அவ்வாறு காங்கிரஸ் குணமாகட்டும்.

 

 

3. கேள்வி: "சர்வதேச அரங்குகளில் காஷ்மீர் பிரச்சனையைத் தொடர்ந்து எழுப்புவதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் மக்களைப் பாகிஸ்தான் பாதுகாத்து வருகிறது" என்று ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியிருக்கிறாரே?

 

பதில்: அரசியலமைப்பு சட்டம் ஆர்டிகிள் 370-ன் பல் பிடுங்கப் பட்டுவிட்டது. ஆகையால் வேறு வழியின்றி பரூக் அப்துல்லா மனதளவில் இந்தியாவுடன் ஒன்றிவிட்டதாகப் பாகிஸ்தான் தீவிரவாதிகள் - அதாவது அவர்களை இயக்கும் அரசு எந்திரம் - நினைக்கலாம். அதன் விளைவாக, பரூக் அப்துல்லாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரலாம் என்பதால் 'நான் நல்ல பிள்ளை' என்று அவர் பாகிஸ்தானுக்கு உணர்த்துவதற்காக, ஒரு தற்காப்பு உணர்வில், ஏதோ சொல்லியிருப்பார். அவர் கவலை அவருக்கு.

 

 

4. கேள்வி: "ஒவ்வொரு தேர்தலிலும் மொத்த ஓட்டுப் பதிவில் பெண்களின் பங்கு 51 சதவிகிதம், ஆண்களின் பங்கு 49 சதவிகிதம். ஆனால் பெண்களுக்கான அதிகாரம், 5 முதல் 10 சதவிகிதம் தான் உள்ளது. எனவே, பெண்களின் கரங்களை உயர்த்தி, அவர்களை முதலாளிகளாக, தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் இலக்கு" என்று வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். இது சாத்தியப்படுமா?

 

பதில்: தொழில்துறையில், வியாபாரத்தில், பெண்களுக்கான வாய்ப்புகள் சட்டப்படி  மறுக்கப்படவில்லை. அவர்களின் தன்மைக்கு ஏற்றபடி அந்தத் துறைகளில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். தேர்தல்களில் ஆண்களின் ஓட்டுப்பதிவு 49 சதவிகிதம் இருப்பதால், வீட்டைக் கவனிப்பது, வளரும் குழந்தைகளைக் கவனிப்பது ஆகிய முக்கிய பணிகளில் அந்த சதவிகித அளவு ஆண்களும் ஈடுபடவேண்டும் என்று ஆண்களின் தன்மைக்கு மாறாக நாம் நினைப்பதில்லை - பெண்களே அவ்வாறு கேட்பதில்லை. மற்றபடி, உரிய பாதுகாப்பும் ஊக்குவிப்பும் அரசிடமிருந்து பெண்களுக்குக் கிடைத்து வரவேண்டும் என்பது அவசியம்.

 

 

5. கேள்வி: "கடவுள் ராமர் வனவாசம் சென்றபோது, அவரது செருப்பு அயோத்தியை எப்படி ஆண்டதோ, அதேபோல் ஸ்டாலின் அவிழ்த்து வைத்த செருப்புதான் இன்று தமிழகத்தை ஆட்சி செய்கிறது" என்று திமுக-வின் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசி இருக்கிறாரே?

 

பதில்: தலைவருக்கு ஜால்ரா தட்டவேண்டும் என்றால், அவர் செருப்பை எடுத்தும் தட்டலாம் என்று நிரூபிக்கிறார் லியோனி.

 

பகுதி 147 // 28.10.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment