Thursday, 22 October 2026

கேள்வி-பதில் (22.10.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "பெண்கள் என்பவர்கள் ஆண்களின் உடமை என்ற எண்ணத்துடன், நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான கோட்பாட்டைக் கொண்டது ஆர்.எஸ்.எஸ்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: பொறுப்பில்லாத்தனம், அசட்டுத்தனம், கிறுக்குத்தனம், இவை எதையாவது வெளிப்படுத்தாமல் ராகுல் காந்தியால் பேச முடிவதில்லை. அதுவும் ஆர்.எஸ்.எஸ் அல்லது பிரதமர் மோடியைப் பற்றி ஏதாவது சொல்லவந்தால் ராகுல் ஆனந்தமாக உளறுகிறார்.

 

ஆர்.எஸ்.எஸ் இருக்கட்டும். இன்றைய காங்கிரஸ் சிந்தனையில் ஆண்-பெண் பேதம் உண்டா என்று கேட்டால், இல்லை எனும் பதில் நூற்றுக்கு நூறு பொருந்தும். எப்படியென்றால்: ஆணோ பெண்ணோ, அவர் நேரு குடும்பத்தவர் என்றால் அவரிடம் காங்கிரஸ் கட்சி கைகட்டி வணங்கிப் பரிதாபமாய் நிற்கும்.

 

 

2. கேள்வி: "காங்கிரஸ் மீது திமுக-விற்கு சில மனஸ்தாபங்கள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறேன். மாநில அளவில் எதிரெதிராக இருந்தாலும், மத்திய அளவில் ஒன்றுபட்டு செயல்படலாம். கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இரு துருவங்களாகச் செயல்பட்டாலும், மத்தியில் இண்டி கூட்டணியில் காங்கிரசுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து செயல்படுவது போல செயல்படலாம்" என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சொல்லி இருக்கிறார். திமுக ஏன் இதை ஏற்கவில்லை?

 

பதில்:  2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் திமுக-வை உதறியதால் காங்கிரஸ் கட்சிக்கு லாபம் - காங்கிரஸ் தவெக-வுடன் கைகோர்த்து மாநில அமைச்சரவையில் இடம் பிடித்துவிட்டது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி தலைமை தாங்கும் இண்டி கூட்டணியைத் திமுக பதிலுக்கு உதறியதால், அடுத்த லோக் சபா தேர்தல் மூலம் அதிக தமிழக எம்.பி-க்கள் துணையுடன் ராகுல் காந்தி பிரதமர் ஆகும் மெலிதான வாய்ப்பில் ஒரு ஓட்டையைப் போட்டிருக்கலாம் திமுக.

 

தற்போது சைஸ் கணிக்கமுடியாத அந்த ஓட்டையை முன்னெச்சரிக்கையுடன் அடைக்க, 'இண்டி கூட்டணிக்கு வாங்க, வாங்க' என்று திமுக-விடம் கேட்கிறது காங்கிரஸ். "நீ என் முதுகுல குத்தினா, நான் உன் மூஞ்சில குத்துவேன்" என்று காங்கிரசிடம் சொல்ல நினைக்கிறது திமுக. ஆகையால் காங்கிரஸின் அழைப்பைத் திமுக ஏற்கவில்லை.

 

 

3. கேள்வி: சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை,"சி.ஜே.பி. அமைப்பின் போராட்ட உத்திகளுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்களின் பல செயல்பாடுகள் தவறான வழிகாட்டுதலுடன் இருப்பதாகவும் நான் கருதுகிறேன். ஆனால், தங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும் ஒரு விவகாரத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கவும், வாதிடவும், போராட்டம் நடத்தவும் அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயமாக இருக்கிறது என்றே நான் பதிலளிப்பேன்" என்று கூறியிருக்கிறார். அவர் பார்வை சரியானதா?

 

பதில்: தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் மூலமாக அநியாயமாக, மோசடியாக, இந்திய அளவில் பதிமூன்று கோடி நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கச் செய்தார்; அதன் காரணமாக, பிறகு நடந்த சில மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாஜக வேட்பாளர்களை அதிக அளவில் செயற்கையாக ஜெயிக்க வைத்தார்; ஆகையால் அவர் பதவி விலகவேண்டும் என்பது சி.ஜே.பி எனும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பிரதான கோரிக்கை. அதற்காக அவர்கள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆனால் தங்கள் குற்றச்சாட்டிற்கான எந்த ஆதாரத்தையும் சி.ஜே.பி முன்வைக்கவில்லை.

 

தேர்தல் கமிஷன் ஒரு அரசியலமைப்பு நிறுவனம். அதன் தலைவர் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டைச் சுமத்தி, அதை என்ன ஏது என்று யாரும் கேட்காமல், சட்டரீதியான விசாரணை இல்லாமல், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாமல், அவர் ராஜினாமா செய்யவேண்டும், இல்லையேல் அவர் ராஜினாமா செய்யும்வரை வீதியில் இறங்கித் தொடர்ந்து போராடுவோம், என்று சி.ஜே.பி சொல்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எவரும் இத்தகைய கோரிக்கை, இதற்கான போராட்டம், உள்நோக்கம் கொண்டது, கேலிக்கூத்தானது என்று உடனே சொல்லவேண்டும். அதுவல்லாமல், இந்தக் கோரிக்கையும் போராட்டமும் அவர்களின் ஜனநாயக உரிமை என்பதாக அனுமதிக்கத் தக்கது, அதற்காக ஏற்கத் தக்கது என்றால், உயர் பதவியில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரி மீது கூட எவரும் ஒரு தீவிரக் குற்றச்சாட்டைக் கூறி அந்த அதிகாரியின் ராஜினாமாவைக் கோரலாம், அதற்காகப் போராடலாம் என்று ஆகுமே? ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு இது புரியாதா?

 

ஒரு அரசியலமைப்பு நிறுவனத்தை எளிதாக நிலைகுலைய வைக்கவேண்டும், அதன் மூலம் இந்திய அரசுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும், என்ற நோக்கில் கரப்பான்பூச்சிகள் முன்வைக்கும் கிறுக்குத்தனமான கோரிக்கையை அண்ணாமலை உறுதியாகக் கண்டனம் செய்யவில்லை. இதனாலேயே, தெளிவான தீர்க்கமான அரசியல் செய்பவர் என்று பெயரெடுத்த அண்ணாமலையின் நற்பெயர் சரிகிறது. அதே சமயம், அண்ணாமலை சி.ஜே.பி-யின்  போராட்டத்தை ஆதரிப்பதாகவும் தெரியக்கூடாது என்பதற்காக, "சி.ஜே.பி. அமைப்பின் போராட்ட உத்திகளுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்களின் பல செயல்பாடுகள் தவறான வழிகாட்டுதலுடன் இருப்பதாகவும் நான் கருதுகிறேன்" என்ற வழவழா கொழகொழா வார்த்தைகளில் அந்த அமைப்பை அவர் மயிலிறகால் அடிக்கிறார். என்ன சொல்கிறார் அண்ணாமலை? சி.ஜே.பி போராடுவதற்கான காரணம் சரி, அதன் நோக்கம் சரி, அதன் 'போராட்ட உத்திகள்'தான் அண்ணாமலைக்குப் பிரச்சனையா? சி.ஜே.பி-யின் செயல்பாடுகள் வெறும் 'தவறான வழிகாட்டுதலுடன்' உள்ளன, அவ்வளவுதானா? அவர்களுக்குச் 'சரியான வழிகாட்டுதல்' கிடைத்துவிட்டால் அவர்கள் எதற்காகப் போராடினாலும் ஓகே-வா? ஒரு ஆதாரமும் காண்பிக்காமல் தலைமைத் தேர்தல் கமிஷனர், சி.பி.ஐ டைரக்டர், பிரதம மந்திரி ஆகியோரின் ராஜினாவைக் கோரித் தெருக்களில் வந்து சி.ஜே.பி போராட முயன்றாலும் அதற்குச் 'சரியான வழிகாட்டுத'லை அவர்கள் பெற்றிருந்தால் எல்லாம் சரியா? அண்ணாமலை ஏன் தெளிவில்லாமல், ஏதேதோ அர்த்தம் தொனிக்கிற மாதிரி, பேசுகிறார்?

 

பாஜக-வுக்கு சங்கடம் தரும் விதமாக அண்ணாமலை அவ்வப்போது பேசினால்தான், அவர் பாஜக-வை விட்டு வெளிவந்து தனியாக அரசியல் செய்வதற்கான நியாயம் இருக்கிறது என்பது மக்களுக்கு அழுத்தமாகப் புலப்படும் என்று அவர் நினைக்கிறார். அவ்வப்போது அண்ணாமலை தெளிவில்லாமல் பேசுவதற்கான காரணம் இதுவாக இருக்கும்.

 

 

4. கேள்வி:  தசராக் கொண்டாட்டத்தின் போது டெல்லியின் உத்சவ் மைதானத்தில் மேடையேறிய பிரதமர் மோடி, "தேசத்தை சீரழிக்க நினைப்பவர்கள், சமூகத்தில் பிளவு ஏற்படுத்தத் துடிப்பவர்கள், நம் கலாசாரத்தின் மீது வெறுப்புணர்வு கொண்டவர்கள் அனைவருமே நம் தேசத்தின் எதிரிகள். அவர்களுக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும்" என்று கூறி இருக்கிறார். யாரைக் குறித்து பிரதமர் அவ்வாறு பேசினார்?

 

பதில்: ஏகப்பட்ட எதிர்க் கட்சிகளின் பெயர்களை ஒவ்வொன்றாகச் சொல்லி நீட்டி முழக்கவேண்டாம் என்று அவற்றின் குணாதிசயங்களைச் சொல்லி அக்கட்சிகள் அனைத்தையும் எளிதில் குறிப்பிட்டு விட்டார் மோடி.

 

 

5. கேள்வி: டெல்லியில் தசராக் கொண்டாட்டத்தின் போது, அசுத்தம் மற்றும் சுகாதாரமின்மையை ஒழிக்கும் விதமாக அவற்றின் குறியீடாகக் கரப்பான்பூச்சியைக் கருதி அதன் உருவபொம்மையை சிலர் தீயிட்டுக் கொளுத்தினர். அது குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கே ‘எக்ஸ்’ தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில், “இலவச விளம்பரத்திற்கு நன்றி’ என்று கூறி இருக்கிறார்.  அந்தக் கட்சிக்கு அது நல்ல விளம்பரம் ஆகுமா?

 

பதில்: ராவணன் செய்த தீய செயல்கள் ராமாயணத்தில் விவரிக்கப்பட்டு, ராவண வதமும் அதில் சொல்லப்படுகிறது. ராமாயணத்தால் ராவணனுக்கு இலவச விளம்பரம், இலவச பிரபல்யம், கிடைத்தது என்று அர்த்தமா?

 

பகுதி 145 // 22.10.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment